இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

“திரையுலகின் திறமைசாலிகளில் ஒருவரான அதிதி ராவ் ஹைதாரி நடிப்புத்துறையில் தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்டவர். அறிவான, அழகான நடிகையான அதிதி, இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோயினாக திகழ்ந்து வருகிறார். வெல்கம் அதிதி!” இது ஒரு நேர்க்காணலில் அதிதிக்கு அளிக்கப்பட்ட அறிமுகம். பதிலுக்கு அதிதியும், “நீங்கள் பயன்படுத்திய அறிமுக வார்த்தைகள் எனக்கு மிகவும் அதிகம். சில நேரங்களில் இதுபோன்று என்னை அறிமுகப்படுத்த வேண்டாம் என்று தோன்றுவதுண்டு. பல மொழிப்படங்களில் ஒருவர் நடிப்பது என்பது இதுதான் முதன்முறையல்ல. பல வருடங்களாக இதுபோல் நடிக்கும் நிறையப்பேரை நானே பார்த்து ஈர்க்கப்பட்டிருக்கிறேன். அதனாலேயே நானும் அதுபோல் நடிப்பதற்கு தூண்டப்பட்டிருக்கிறேன் என்று சொல்லலாம். பல மொழிகளில் நடிப்பதால் பல்வேறு கலாசாரங்கள் மற்றும் கதைகளை தெரிந்துகொள்வதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். என்னை ஒரு இந்திய நடிகையாக அறிமுகப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்” என்றார். இந்த அளவிற்கு ‘டவுன் டு எர்த்’ நபராக எப்போதும் ஒரேமாதிரி நடந்துகொள்பவர் அதிதி ராவ். நடிகை, பாடகி மற்றும் கிளாசிக்கல் நடன கலைஞர் என பன்முகத்தன்மை கொண்ட இவரும் நடிகர் சித்தார்த்தும், நீண்ட நாட்களாகவே காதலித்து வருவதாக தகவல்கள் வெளிவந்தன. அதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த இந்த ஜோடி அதனை உறுதி செய்யும்விதமாக பொதுவெளிகளில் ஒன்றாக சுற்றிவந்தனர். இந்நிலையில் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியான நிலையில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்தனர். நடிகை அதிதி ராவின் பின்னணி, திரை வெற்றி, திருமணத் தோல்வி மற்றும் காதல் குறித்து இக்கட்டுரையில் சற்று விரிவாகக் காணலாம்.


சுதந்திரத்திற்கு முன் ஹைதரபாத் பிரதமராக இருந்த அக்பர் ஹைதாரியின் பேத்திதான் நடிகை அதிதி ராவ்

ராஜ பரம்பரையைச் சேர்ந்தவரா அதிதி?

அதிதி ராவ் 1986ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். அதிதி ராவை ஒரு நடிகையாக மட்டும்தான் பலருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியாது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு ஹைதராபாத்தின் பிரதமராக இருந்த சர் முகமது அக்பர் நாசர் அலி ஹைதாரி என்பவர்தான் அதிதி ராவின் அப்பா வழி தாத்தா. வனபர்த்தி சமஸ்தானத்தின் ராஜாவாக இருந்த ஜே.ராமேஸ்வர் ராவ் என்பவரின் மகளான வித்யா ராவ் என்பவரைத்தான் அக்பர் ஹைதாரியின் பேரனான எஹ்சான் ஹைதாரி திருமணம் செய்துகொண்டார். அந்த காலத்தில் ‘மகாராஜா’ குடும்பம் என பெயர்பெற்ற புகழ்மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அதிதியின் வாழ்க்கையானது சிறுவயதிலிருந்தே மகிழ்ச்சியாக செல்லவில்லை. காரணம், அதிதிக்கு இரண்டு வயதாக இருந்தபோதே பெற்றோர் பிரிந்தநிலையில், அம்மா வித்யா ராவ் இவரை தன்னுடன் புது தில்லிக்கு அழைத்துச்சென்றுவிட்டார். அப்பா ஹைதராபாத்திலேயே தங்கிவிட்டார். இதனால் குழந்தை யாருடன் இருப்பது என மிகப்பெரிய சட்டப்போராட்டமே பெற்றோரிடையே நடந்திருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டது என்னவோ குழந்தை பிரயாயத்திலிருந்த அதிதிதான். இதனாலேயே தன்னுடைய சிறுவயது, பிற குழந்தைகளைப் போல தனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என அதிதி தெரிவித்திருந்தார். ஒருவழியாக அதிதி யாரிடம் இருக்கவேண்டும் என்ற பிரச்சினை முடிவுக்கு வந்தபிறகு ஆந்திராவிலுள்ள ரிஷி வேலி பள்ளியில் விடுதியில் தங்கி படித்தார். பின்னர் டெல்லியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.


அதிதி ராவின் தமிழ் திரை அறிமுகம் மற்றும் ஹிட்டடித்த இந்தி திரைப்பட கதாபாத்திரங்கள்

அம்மா ஒரு கர்நாடக பாடகி என்பதால் சிறுவயதிலிருந்தே அதிதிக்கு நடனம் மற்றும் இசையின்மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. 6 வயதிலிருந்தே பரதநாட்டியம் கற்றுவந்த அதிதி, புகழ்பெற்ற நடன கலைஞர் லீலா சாம்சனின் மாணவியாவார். லீலா சாம்சனின் நடனக்குழுவில் சேர்ந்து நடனம் ஆடிவந்த அதிதிக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் அதன்மூலமாகத்தான் கிடைத்திருக்கிறது. “நடனம் என்பது என்னுடைய வாழ்க்கையில், நடிப்பில், நான் சோர்வடையும் நேரங்களில் எனக்கு மிகமிக முக்கியமானது. மேலும் பல நேரங்களில் நான் நானாக இருக்க நடனம் எனக்கு உதவியிருக்கிறது. நடனத்தையும் என்னையும் பெரும்பாலான நேரங்களில் என்னால் பிரித்து பார்க்க முடிவதில்லை” என்று அதிதி கூறியிருக்கிறார். நடனம் தவிர எப்போதும் உணவு மற்றும் கார்களின்மீது அதீத ஆர்வம் கொண்டவர் அதிதி. சிறுவயதிலிருந்தே கார்களின்மீது அதிக நாட்டம் கொண்டிருந்த அதிதிக்கு அவருடைய பாட்டிதான் கார் ஓட்ட கற்றுக்கொடுத்தாராம். 18 வயதிலிருந்தே கார் ஓட்டிவரும் அதிதிக்கு SUV கார்கள்மீது பிரியமாம். ஆனால் வெளியுலகில் பலருக்கும் இதுகுறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார். முதல்முறையாக தான் சம்பாதித்த பணத்திலிருந்து ஒரு செகன்ட் ஹேன்ட் காரை வாங்கி ஓட்டினாராம். அதன்பிறகு பல கார்கள் வாங்கிவிட்டாலும் அந்த கார்மீது தனக்கு தனிப்பிரியம் இருப்பதாக கூறியுள்ளார். அதேபோல் எங்கு சென்றாலும் தனக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு விடுவாராம். அதேபோல் சமையல் செய்வதிலும் ஆர்வம் இருப்பதால் வீட்டிலிருக்கும்போது தானே சமைத்தும் சாப்பிடுவாராம். எப்போதும் இப்படி தன்னை ஒரு சுந்ததிரப் பெண்ணாக அறிமுகப்படுத்திக்கொள்ளும் அதிதி, திரை அறிமுக அனுபவம் குறித்து நேர்க்காணல்களில் பகிர்ந்திருக்கிறார்.


அதிதி ராவிற்கு தமிழில் பெயர் பெற்றுக்கொடுத்த திரைப்படங்கள்

திரை அறிமுகம் இப்படித்தான் கிடைத்தது!

“நான் பலமுறை மேடை ஏறி நடனம் ஆடியிருந்தாலும் முதன்முறை கேமராவின் முன்பு நின்றது ‘சிருங்காரம்’ படத்திற்காகத்தான். ஒரு டான்சர் கட்டாயம் வேண்டும் என்றதால்தான் அந்தப் படத்தில் நடித்தேன். ஒரு நடனக்கலைஞர் இல்லாமல் அந்த படத்தை எடுத்திருக்க முடியாது. அதிலும் குறிப்பாக, அந்த கதாபாத்திரத்திற்கு ஒரு இளம் டான்சர் தேவைப்பட்டார். அப்படித்தான் திரைத்துறைக்கு அறிமுகமானேன். ஆனால் திரையுலகில் ஒரு நடிகையாக நான் இணைந்துகொண்டது என்னவோ 2010-இல் மும்பையில்தான். வீட்டில் எனக்கும் அம்மாவிற்கும் நடிப்பு புதிதாக இருந்தது. அதுவும் அப்போது எனக்கு தமிழ்மொழி தெரியாது என்பதால் பெரிய டயலாக்குகளை பேசுவது சற்று கடினமாக இருந்தது” என்று அதிதி தனது திரை அறிமுகம் குறித்து மனம்திறந்திருந்தார். ‘சிருங்காரம்’ படமானது விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றதுடன் தேசிய விருதுகளையும் பெற்றது. இப்படம் 2007-இல் திரையரங்குகளில் அறிமுகமானது. ஆனால் அதற்குமுன்பே 2006ஆம் ஆண்டு மம்மூட்டியுடன் அதிதி இணைந்து நடித்திருந்த ‘பிரஜாபதி’ என்ற மலையாளப்படம் ரிலீஸாகிவிட்டது. அதன்பிறகு ஒரு சிறு இடைவெளி எடுத்துவிட்டு இந்தியில் ‘டெல்லி 6’ என்ற படத்தில் நடித்தார். அப்படத்தில் தனது உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்திய அதிதிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் பாலிவுட்டிலேயே கிடைத்தன. ஆனால் 2011ஆம் ஆண்டு வெளியான ‘ராக்ஸ்டார்’ திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்து விமர்சனங்களுக்கு ஆளான அதிதி, இனிமேல் முன்னணி கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க விரும்புவதாக வெளிப்படையாகவே தெரிவித்தார்.

அதன்பிறகு ஒருசில படங்கள் அதிதியின் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தன. அதிதியின் நடிப்பை பாராட்டி விமர்சித்தன முன்னணி மீடியாக்கள். நாட்டிய கலைஞர் என்பதாலும் இயற்கையாகவே அழகிய கண்கள் கொண்டவர் என்பதாலுமே உணர்ச்சிகளை தனது கண்கள் வழியாக அதிதி வெளிப்படுத்துகிறார் என விமர்சகர்களால் பாராட்டப்பட்டார். தொடர்ந்து இந்திப் படங்களில் நடித்துவந்த அதிதிக்கு 2017ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘காற்று வெளியிடை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கோலிவுட் படங்களில் கமிட்டாக ஆரம்பித்தார். அவ்வப்போது தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தினார். அடுத்து இந்திய அளவில் புகழ்பெற்ற ‘பத்மாவத்’ திரைப்படத்தில் ரன்வீர் சிங்கின் மனைவியாக நடித்தார். இந்தி படங்களுக்கிடையே தொடர்ந்து தமிழிலும் ‘செக்க சிவந்த வானம்’, ‘சைக்கோ’, ஹே சினாமிகா’ என சற்று இடைவெளி விட்டு நடித்தார். இதனிடையே தெலுங்கிலும் ‘வி’, ‘மகா சமுத்திரம்’ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார் அதிதி. தனது சிறந்த நடிப்புக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றார். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றிருந்த இவருக்கும் நடிகர் சித்தார்த்துக்கும் இடையே ‘மகாசமுத்திரம்’ படத்தில் இணைந்து நடித்தபோது காதல் மலர்ந்தது.


முன்னாள் கணவர் சத்யதீப் மிஸ்ரா மற்றும் வருங்கால கணவர் நடிகர் சித்தார்த்துடன் அதிதி

தோல்வியில் முடிந்த திருமணம் - மீண்டும் மலர்ந்த காதல்

இந்தி திரையுலகில் அறிமுகமான காலகட்டத்திலேயே, அதாவது தனது 17 வயதிலிருந்தே, நடிகரும் வழக்கறிஞருமான சத்யதீப் மிஸ்ரா என்பவரை காதலித்து 24 வயதில் திருமணமும் செய்துகொண்டார் அதிதி. ஆனால் குறுகிய காலத்திலேயே இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்துவந்தனர். ஆனால் ஆரம்பத்தில் தனது மணமுறிவு குறித்து பொதுவெளியில் பேசாமல் தவிர்த்துவந்த அதிதி, 2013ஆம் ஆண்டு தனது கணவரை பிரிந்துவிட்டதாக தெரிவித்தார். அதன்பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்திவந்த அதிதி, 2021ஆம் ஆண்டு ‘மகாசமுத்திரம்’ என்ற தெலுங்கு படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் சித்தார்த்தை டேட்டிங் செய்யத் தொடங்கினார். தொடர்ந்து பொதுவெளிகளில் ஒன்றாக சுற்றிவந்த இந்த ஜோடி, கொரோனா லாக் டவுன் சமயத்தில் ஒன்றாக புகைப்படங்களை பதிவிடத் தொடங்கினர். தொடர்ந்து ஒரே வீட்டில் லிவ்-இன்னில் வசித்துவருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டனர். அதனை உறுதி செய்யும்விதமாக ஒன்றாக ரீல்ஸ் செய்து பதிவிட்டனர். இருப்பினும் தங்களது உறவுகுறித்து இருவருமே வாய் திறக்காமல் இருந்தனர். இந்நிலையில் இருவரும் தெலங்கானாவிலுள்ள ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் “He (She) said yes! ENGAGED" என தங்களது மோதிரம் அணிந்த விரல்களை காட்டியவாறு புகைப்படம் எடுத்து நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிசெய்தனர். நடிகர் சித்தார்த்திற்கு பொதுவாக பெண் ரசிகைகள் அதிகம் இருக்கின்றனர். 44 வயதானாலும் எப்போதும் இளமையாக இருக்கும் சித்தார்த்தும் நடிகர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் சித்தார்த்தும் அதிதியும் விரைவில் தங்களது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

Updated On 15 April 2024 6:23 PM GMT
ராணி

ராணி

Next Story