இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

96வது அகாடமி விருதுகள் விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்காக பல சிறந்த படங்கள் ஆஸ்கார் விருதை வாங்கின. அதில் குறிப்பாக கிறிஸ்டோபர் நோலனின் "ஒபென்ஹெய்ம்ர்" திரைப்படம் பல ஆஸ்கார் விருதுகளை வாங்கியது. ஆஸ்கார் விருதுகள் எப்பொழுதும் ஒரு படத்தின் தரத்தை பாதிக்காது என்றாலும், சிறந்த கலை மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு அங்கீகாரம் கொடுக்கும்போது அது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும். "ஒபென்ஹெய்ம்ர்", "புவர் திங்ஸ்" போன்ற நல்ல திரைப்படங்கள் இந்த சீசனில் விருதுகளை வாங்கினாலும் பல நல்ல படங்களுக்கு விருதுகள் கிடைக்காதது பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அந்த படங்கள் அனைத்தும் பாராட்டுக்கு தகுதியானவை என்றாலும், பல நல்ல படங்கள் எப்பொழுதும் அதே அளவிலான கவனத்தைப் பெறாது. எந்தெந்த படங்கள் ஆஸ்கார் விருது வாங்க தகுதி இருந்தும் புறக்கணிக்கப்பட்டன என்பது குறித்து இக்கட்டுரையில் காணலாம் .

பியூ இஸ் அஃப்ரைடு (Beau Is Afraid)


'பியூ இஸ் அஃப்ரைடு' படத்தின் போஸ்டர் மற்றும் திரைக் காட்சிகள்

இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும்பொழுது பல எதிர்மறையான விமர்சனங்கள்தான் வந்தன. ஹாரர் திரில்லர் படமான "பியூ இஸ் அஃப்ரைடு" ஆரம்பத்தில் யாருக்கும் பெரிதாக புரியவில்லை. ஆனால் இரண்டு மூன்று வாரங்கள் கழித்து படத்திற்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வந்தனர். இப்படத்தில் நடித்திருந்த ஜாக்கின் ஃபீனிக்ஸின் பெயர், சிறந்த நடிகருக்கான நாமினேஷனில் இடம்பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் சிறந்த திரைக்கதைக்கான நாமினேஷனிலும் இந்த திரைப்படம் இடம்பெற்றிருந்தது. படம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும், படத்திலிருந்த தொழில்நுட்பத்திற்காக இன்னும் அங்கீகாரம் கொடுத்திருக்கலாம். அந்த அளவிற்கு படத்தில் தொழில்நுட்ப வேலைகள் அருமை என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆஸ்டரின் திரைக்கதை, படைப்பாற்றலுக்கு அப்பாற்பட்டது என்றாலும், படம் ஆரம்பித்திலிருந்தே ஒருவிதமான பதற்றத்தை உருவாக்குகிறது. அதுவே திரைப்படத்தை மேலும் ஈர்க்கிறது, ஜாக்கின் பீனிக்ஸின் அற்புதமான நடிப்பு மேலும் நம்மை அசர வைக்கிறது. இத்திரைப்படம் கோல்டன் க்ளோப் விருதை வென்றாலும், ஆஸ்காரும் வென்றிருக்கலாம் என்பது மக்களுடைய கருத்தாக இருக்கிறது.

பிரிசில்லா (Priscilla)


'பிரிசில்லா' படத்தில் ஹீரோ - ஹீரோயின் இருவரும் காதல், திருமணம் மற்றும் குழந்தையுடன் இருக்கும் காட்சிகள்

அக்டோபர் 1, 2023 ஆம் ஆண்டு சோபியா கப்போலா இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் "பிரிசில்லா". துரதிர்ஷ்டவசமாக சோபியா கப்போலாவின் பிரிசில்லா, பாஸ் லுர்மனின் எல்விஸ் பட சாயலில் இருந்ததால் பெரிதாக மக்களை ஈர்க்கவில்லை. இரண்டு படங்களும் எல்விஸ் பிரெஸ்லியின் மரபு பற்றிய சிந்தனைகளை அறிவுறுத்தும். பிரிசில்லா திரைப்படத்தில் அவ்வப்பொழுது எல்விஸின் சிந்தனைகளை பற்றி கூறியிருந்தாலும், மக்களால் பிரிசில்லா படத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எல்விஸ் திரைப்படம் கடந்த ஆண்டு மிகவும் பரிந்துரைக்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தபோதிலும், 2024 ஆம் ஆண்டு ஆஸ்கார் விழாவில் பிரிசில்லா ஒரே ஒரு பிரிவில் மட்டும் நாமினேஷன் ஆகியது. அது எந்த பிரிவு என்றால், சிறந்த நடிகைக்காக கெய்லி ஸ்பைனி பரிந்துரைக்கப்பட்டிருந்தார். சொல்லப்போனால், அவர் நிச்சயம் ஆஸ்கார் வாங்குவார் என்று ஹாலிவுட் வட்டாரத்தில் பேச்சும் அடிபட்டதாம். ஆனால் கடைசி நேரத்தில் புவர் திங்ஸ் படத்திற்காக எம்மா ஸ்டோன் அந்த விருதை தட்டி சென்றார்.

தி ஐயன் கிளாவ் (The Iron Claw)


'தி ஐயன் கிளாவ்' படத்தின் போஸ்டர் மற்றும் திரைப்படக் காட்சிகள்

22 டிசம்பர் 2023 ஆம் ஆண்டு சீன் டர்கின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் "தி ஐயன் கிளாவ்'. ஸ்போர்ட்ஸ் ட்ராமா ஜானரில் வெளியான இந்த திரைப்படம் கண்டிப்பாக ஆஸ்கார் வெல்லும் என்று பரவலாக பேசப்பட்டது. அதுக்கு ஏற்றாற்போல் எல்லா பிரிவிலும் இத்திரைப்படம் நாமினேஷன் ஆனது. அழகான ஒளிப்பதிவு, ஜாக் எஃப்ரானின் அபாரமான நடிப்பு மற்றும் அற்புதமான எடிட்டிங் என்று ஆஸ்கார் பெறுவதற்கு அனைத்து தகுதியும் இந்த படத்திற்கு இருந்தது. ஆனால் ஒரு பிரிவில் கூட ஆஸ்கார் வெல்லாதது அனைவரையும் ஆதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதுமட்டுமில்லாமல் கிறிஸ்துமஸ் நேரத்தில் வெளியானதால் படம் சரியாக போகவில்லை. குறிப்பாக ஜாக் எஃப்ரானின் நாக் அவுட் காட்சியின் நடிப்பிற்காக படம் இன்னும் கொஞ்சம் அங்கீகாரம் பெற்றிருக்கலாம் என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அஸ்டெராய்டு சிட்டி (Asteroid City)


'அஸ்டெராய்டு சிட்டி' படத்தின் முக்கியமான காட்சிகள்

"தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்", "டார்ஜிலிங்" போன்ற படங்களை இயக்கிய வெஸ் ஆண்டர்சன்தான் "அஸ்டெராய்டு சிட்டி" திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். வெஸ் ஆண்டர்சனின் பணி பெரும்பாலும் அகாடமியால் புறக்கணிக்கப்பட்டு கொண்டே வருகிறது. இதற்கு முன் "தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்" திரைப்படமும் ஆஸ்காரால் புறக்கணிக்கப்பட்டது. இப்பொழுது "அஸ்டெராய்டு சிட்டி" படமும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. "அஸ்டெராய்டு சிட்டி" திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பல பாராட்டுகளை பெற்றது நினைவுகூறத்தக்கது. வெஸ் ஆண்டெர்சனின் சிறந்த படைப்பாக இந்த "அஸ்டெராய்டு சிட்டி" படம் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். 2023-இல் வெளியான இந்த படம், சிறந்த ஒளிப்பதிவு, தயாரிப்பு, வடிவமைப்பு, இசை என்று பல்வேறு பிரிவுகளில் நாமினேஷன் செய்யப்பட்டது. இருப்பினும் இந்த படம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் என்று பல ஹாலிவுட் சினிமா விமர்சகர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Updated On 25 March 2024 6:21 PM GMT
ராணி

ராணி

Next Story