இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பல்வேறு தளங்களில் இன்றும் இளமை மாறாமல் அதே உத்வேகத்துடன் சினிமாவில் பயணித்துக்கொண்டு இருப்பவர்தான் நடிகர் நிழல்கள் ரவி. இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ற மாபெரும் கலைஞரின் அறிமுகமாக தமிழ் சினிமாவில் நுழைந்த இவர், தொடக்கத்தில் நிறைய தோல்விகளை சந்தித்திருந்தாலும், கடும் முயற்சிக்கு பிறகு அடுத்தடுத்து பல ஜாம்பவான்கள் இயக்கிய படங்களில் குணச்சித்திர நடிகராக, வில்லனாக மட்டுமல்லாது நகைச்சுவையிலும் கலக்கி ஒரு நடிகராக வெற்றி என்ற இலக்கை எட்டி, பல உயரங்களை அடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் நிழல்கள் ரவி எப்படியோ அதேபோன்றுதான் சி.வி.ஸ்ரீதர், எஸ்.பி.முத்துராமன் போன்ற ஜாம்பவான்களின் இயக்கத்தில் நடித்திருந்தாலும், தொடர் தோல்விகளை சந்தித்து, கடும் முயற்சிகள், போராட்டங்களுக்குப் பிறகே மிகப்பெரிய நடிகராக உச்சம் பெற்று இன்று தென்னிந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் ஒரு ஆளுமையாக வலம் வருகிறார் சியான் விக்ரம். இவ்விரு நடிகர்களும் இப்படியென்றால், நடிகர் சித்தார்த் வேறு ரகம். மணிரத்னம் என்ற மிகப்பெரிய ஆளுமையின் உதவி இயக்குநர் என்ற அடையாளத்துடன் ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமானவர் சித்தார்த். தெலுங்கு, இந்தி, மலையாளம் என தொட்டு பார்க்காத உயரங்கள் இல்லை எனும் அளவுக்கு நடிகராக மட்டுமின்றி பாடகராக, டப்பிங் கலைஞராக என பயணித்து, தற்போது தயாரிப்பளராகவும் வெற்றிக் கண்டிருக்கிறார். இந்த மூன்று பேரும் தங்களின் திரையுலக வாழ்க்கையை வேறு வேறு பாதைகளில் ஆரம்பித்து கடந்து வந்திருந்தாலும், முயற்சி என்ற ஒன்றின் அடிப்படையில் பார்க்கும்பொழுது ஒற்றுமை உடையவர்களாகவே காணப்படுகின்றனர். அப்படிப்பட்ட புகழ் வாய்ந்த இவர்களில் மூத்த நடிகரான நிழல்கள் ரவி (இன்று) ஏப்ரல் 16-ஆம் தேதியும், மற்றவர்களான சியான் விக்ரம் மற்றும் சித்தார்த் இருவரும் (நாளை) ஏப்ரல் 17-ஆம் தேதியும், தங்களது பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். அந்த வகையில், இம்மூவரின் பிறந்தநாள் சிறப்பு தொகுப்பாக அவர்களின் திரைப்பயணம் குறித்த தகவல்கள், பெற்ற வெற்றிகள், விருதுகள் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

'நிழல்கள்' நிஜ வாழ்க்கையில் தந்த அடையாளம்


'நிழல்கள்' படத்தில் வரும் ரவி மற்றும் இயக்குநர் இமயம் பாரதிராஜா

கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட ரவி, மிகப்பெரிய குடும்பத்தில் 10-பிள்ளைகளில் கடைக்குட்டி பிள்ளையாக 1956-ஆம் ஆண்டு, ஏப்ரல் 16-ஆம் தேதி பிறந்தார். உடன் பிறந்த அனைவரும் நன்கு படித்து நல்ல உத்தியோகம், சொந்தமாக தொழில் நிறுவனம் என்று அவரவர் படிப்புக்கு ஏற்ற வகையில் செட்டில் ஆக இவருக்கு மட்டும் சினிமா என்னும் கனவு தொற்றிக்கொண்டது. அதனால் தந்தையின் விருப்பத்தையும் மீறி, நான் நடிகனாகத்தான் முயற்சிப்பேன் என்று தந்தையிடம் 2 வருட அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டு சென்னைக்கு கிளம்பி வந்துள்ளார். இங்கு முதலில் தன் அக்கா, பிறகு உறவினர் வீடு என்று தங்கி தீவிரமாக வாய்ப்புத் தேடியவருக்கு ஒரு வருடம் ஆகியும் எந்த பலனும் இல்லை. தந்தை கொடுத்த கெடு முடிய இன்னும் ஒருவருடம் மட்டுமே உள்ளது என்ற பதட்டத்தில் விடாது பெரிய இயக்குநர்கள், சிறிய இயக்குநர்கள் என்றில்லாமல் ஒவ்வொரு இடங்களாக முட்டி மோதி அலைந்து ஒருவழியாக இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் அறிமுகத்தை பெற்று ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்தில் நடிகர் விஜயனுக்கு ‘டப்பிங்’ கொடுப்பதற்கான முதல் வாய்ப்பை பெற்றார். டப்பிங் ஸ்டுடியோவில் ரவியின் குரலை கேட்ட பாரதிராஜா என்ன வாய்ஸ் சார்.. சூப்பரா இருக்கு கேக்க… மெட்டாலிக் வாய்ஸ் இவனோடது என்று பாராட்டியதும் ரவிக்கு ஒரே சந்தோஷமாம். ஆனால் பிறகு பாரதிராஜா என்ன நினைத்தாரோ ரவியின் குரலை எடுத்து விட்டு தானே விஜயனுக்கு குரல் கொடுத்துவிட்டாராம். இதனால் வருத்தமுற்ற ரவி நேரடியாக பாரதிராஜாவிடம் போய் நின்ற அடுத்த நொடியே, தப்பா எடுத்துக்காதீங்க உங்க குரல் நல்லா இருந்தது. ஆனால் விஜயன் மலையாளம் என்பதால் சரியாக பொருந்தாமல் இருப்பது போல் இருந்தது. அதனால் நானே கொடுத்துவிட்டேன். என்னோட அடுத்த படத்துல நீங்கதான் ஹீரோ. அதற்கான போட்டோ சூட் எடுக்கணும் என்று ‘நிழல்கள்’ படத்திற்கு ஒப்பந்தம் செய்தாராம்.

இப்படி 1980-ஆம் ஆண்டு பாரதிராஜாவின் 'நிழல்கள்' படத்தில் ராஜசேகர், சந்திரசேகர் ஆகியோருடன் இணைந்து மூன்று ஹீரோக்களில் ஒருவராக கோபி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானவருவருக்கு படம் சரியாக ஓடவில்லை என்றாலும், பாடல்கள் ஹிட் அடித்து ரவிக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதற்கு பிறகுதான் அதுவரை வெறும் ரவி என்ற பெயரோடு இருந்த அவரின் பெயருக்கு முன்னாள் நிழல்கள் என்ற பெயரும் சேர்ந்து நிழல்கள் ரவி என்ற அடையாளத்தினை பெற்றார். முதல் படம் பெயர் சொல்லும் படமாக இருந்தாலும் அடுத்தடுத்து தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. இதனால் வாய்ப்பு வரும் வரை காத்திருப்போம் என்றில்லாமல் மலையாள திரையுலகில் வந்த வாய்ப்பை ஏற்று நீச்சல் தெரியாது என்ற போதிலும், தேடி வந்த வாய்ப்பு கைவிட்டு போய்விடக் கூடாது என்பதற்காக தனக்கு நீச்சல் தெரியும் என்று பொய் சொல்லி பிறகு மெனெக்கெட்டு நீச்சலை கற்றுக்கொண்டு ‘கக்கா’ என்ற படத்தில் நடித்து மலையாளத்தில் அறிமுகம் ஆனார். ரகுவரன், ரோகினி ஆகியோருடன் இணைந்து நடித்த இப்படமும் நிழல்கள் ரவிக்கு நல்ல பெயரை பெற்று தர தொடர்ந்து மீண்டும் தமிழில் நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அப்படி வந்த வாய்ப்புகளில் பெரும்பாலும் நெகடிவ் கதாபாத்திரங்களாக இருக்க, நாம் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டோம், அது ஹீரோவாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. ஏதுவாக இருந்தாலும் சிறப்பாக செய்வோம் என்று கிடைத்த வேடங்கள் அனைத்தையும் ஏற்று நடிக்க ஆரம்பித்தார்.


இருவேறு தோற்றங்களில் நிழல்கள் ரவி

அப்படி அன்றைய ரஜினிகாந்துடன் 'மாப்பிள்ளை', 'தர்மதுரை', 'உழைப்பாளி', 'அண்ணாமலை' என்று மட்டும் அல்லாமல், கமல்ஹாசனுடன் 'நாயகன்' துவங்கி 'இந்தியன்' வரை மிக முக்கியமான திரைப்படங்கள் அனைத்திலும் நடித்தவர், விஜய், அஜித், சூர்யா என தொடர்ந்து இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை அனைவரது படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இதுதவிர பின்னணி குரல் கொடுப்பதிலும் வல்லவரான நிழல்கள் ரவி தமிழில் அமிதாப்பச்சனின் விளம்பர படங்கள் தொடங்கி, அவரது டப்பிங் படங்கள் வரை அனைத்திற்கும் குரல் கொடுத்து வருகிறார். இதுதொடர்பாக நிழல்கள் ரவியை தொடர்புகொண்டு பேசிய அமிதாப்பச்சன் இதுவரை தெலுங்கு, கன்னடம், மலையாளம் என எந்த மொழியிலும் எனது குரலுக்கு பொருத்தமான பின்னணி குரல் அமையவே இல்லை. தமிழில் மட்டும்தான் அது மிகச்சரியாக பொருந்திப்போயிருக்கிறது. உங்கள் குரலை கேட்கும் போது நானே பேசியதுபோல் உணர்கிறேன் என்று பாராட்டியிருந்தாராம். இப்படி ஹிந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாராக அறியப்படும் அமிதாப்பின் இந்த பாராட்டு அவரை மேலும் உற்சாகப்படுத்த கன்னட ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் யாஷ் நடித்து வெளிவந்த கேஜிஎப் 2 படத்திற்கும் பின்னணி குரல் கொடுத்து ஒட்டுமொத்தமாக ரசிக்க வைத்திருந்தார். இப்படி பல திறமைகளை உள்ளடக்கிய ஆளுமையாக இருக்கும் நிழல்கள் ரவி தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

தங்கம் என ஜொலிக்க காத்திருக்கும் விக்ரம்

தமிழ் திரையுலகில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு, எந்த வேடங்களை ஏற்று நடித்தாலும் அதில் அப்படியே பொருந்திப் போய்விடும் ஒரு நடிகர் யாரென்றால் அது சியான் விக்ரமாக மட்டும்தான் இருக்கும். விடா முயற்சிக்கு எப்போதும் எடுத்துக்காட்டாக இருக்கும் விக்ரம், 1990 ஆம் ஆண்டு வெளியான 'என் காதல் கண்மணி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதற்கு பிறகு இயக்குநர் ஸ்ரீதர், எஸ்.பி முத்துராமன், பி.சி ஸ்ரீராம், விக்ரமன் என எத்தனையோ உச்சங்களுடன் இணைந்து தனது திரைப்பயணத்தை துவங்கிய விக்ரம், பார்க்க அழகாக இருந்தாலும், நடிப்பும் சிறப்பாக இருந்தாலும் வெற்றி எனும் கனியை சுவைக்க ஒரு தசாப்தமே தேவைப்பட்டது. இதற்கிடையில் விபத்து, ராசியில்லாத நடிகர் போன்ற விஷயங்கள் இவரை பின்னோக்கி இழுத்தாலும், தொடர்ந்து நம்பிக்கையுடன் பயணித்த விக்ரம் திரையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள நடிகராக மட்டும் இல்லாமல், டப்பிங் கலைஞராகவும் மாறினார். இந்த நேரத்தில்தான் 10-ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 1999 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளிவந்த 'சேது' திரைப்படம் இவரது திரையுலக வாழ்க்கையையே புரட்டி போட்டது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு பிறகுதான் விக்ரமிற்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.


வெவ்வேறு சூழல்களில் எடுக்கப்பட்ட சியான் விக்ரமின் புகைப்படம்

இதனை தொடர்ந்து தன் கலையுலக வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே சுருக்கிக்கொள்ள கூடாது என்று காதல், குடும்பம், ஆக்சன் என பல தளங்களில் பலரும் பார்த்து ஆச்சரியப்படும் வகையிலான கதாபாத்திரங்களில் அதுவும் சவால்கள் நிறைந்த வேடங்களில் எல்லாம் நடிக்க ஆரம்பித்தார். அந்த நேரம் 'தில்', 'தூள்', 'ஜெமினி', 'சாமி', 'அந்நியன்' என பல மெகா வெற்றிகளும், சில சறுக்கல்களும் வந்தன. அவற்றை எல்லாம் தன் திறமையால் தவிடுபொடியாக்கிய விக்ரம், போராடி கிடைத்த வாய்ப்பை கைவிட்டு விடாமல், இன்றும் தன் விடாமுயற்சியாலும். கடின உழைப்பாலும் தக்க வைத்துக்கொண்டு இருக்கிறார். அதேபோல் காலத்திற்கு ஏற்றவாரு தன்னை அப்டேட் செய்து கொண்டு, என்றும் அதே இளமையோடு பலருக்கும் டஃப் கொடுத்து நடித்து வரும் விக்ரம், ஷங்கர், மணிரத்னம் என்று பெரிய ஆளுமைகளுடன் மட்டுமில்லாது புதிதாக வரும் இயக்குநர்களின் படங்களிலும் நடித்து தன் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இப்படி பல போராட்டங்களோடு துவங்கிய இவரது பயணம் இன்று ‘பொன்னியின் செல்வன்’ பாகம் ஒன்று, இரண்டு ஆகியவற்றில் ஆதித்த கரிகாலனாக நீண்டு 'தங்கலான்' வரை மின்னிக்கொண்டு இருக்கிறது என்றால் அது முழுக்க முழுக்க விக்ரம் எனும் மகா கலைஞனின் உழைப்பிற்கு கிடைத்த பலனாகவே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட பெருமைமிகு கலைஞனான விக்ரம் தனது 58-வது பிறந்தநாளை நாளை (17.04.2024) கொண்டாடுகிறார்.

சித்தாவாக பதிந்துபோன சித்தார்த்

ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி சாக்லேட் பாயாக பலராலும் ரசிக்கப்பட்டது மட்டுமின்றி காதல் நாயகனாகவும் 2கே கிட்ஸ்களால் கொண்டாடப்பட்டவர்தான் நடிகர் சித்தார்த். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து ரசிகர்களை தன் நடிப்பாலும், அழகாலும் கட்டிப்போட்டவர். அதிலும் குறிப்பாக தெலுங்கில் இவர் நடிப்பில் வெளிவந்த 'நுவ்வோஸ்தானந்தே நேனோடந்தனா', 'பொம்மரில்லு' போன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்து நட்சத்திர அந்தஸ்து பெற்று தந்த அதேவேளையில், இந்தியில் இவர் நடித்திருந்த 'ரங் தே பசந்தி' படத்தில் வரும் பகத்சிங் கதாபாத்திரமும் இந்திய அளவில் இவருக்கு கவனத்தை பெற்று தந்தது. இருந்தும் ஒரு குறிப்பிட்ட கணத்தில் தமிழில் சாதிக்க மீண்டும் வந்தவருக்கு துவக்கம் சில சறுக்கலை தந்தாலும், சித்தார்த்துக்கு இருந்த நல்ல நடிகர் என்ற அடையாளம் மட்டும் மறையாமல் இருந்தது. இந்த நேரம் பாடகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வர ஆரம்பித்த சித்தார்த் அண்மையில் தனது இடாகி என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக ‘சித்தா’ என்ற படத்தினை எடுத்து இந்திய அளவில் கவனம் பெற்றார். சமூக கருத்துக்களை முன்வைத்து வெளிவந்த இப்படம் நடிகர் சித்தார்த்துக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் மாபெரும் வெற்றிப் படமாகவும் அமைந்தது. இதுதவிர இப்படத்தில் சிறந்த நடிகருக்கான விருதுகளையும் பெற்ற சித்தார்த் நீண்ட காலமாக தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ, திருமணம் குறித்தோ எதுவும் பேசாமல் இருந்தார். ஆனால், அண்மைக்காலமாகவே இவர், நடிகை அதிதி ராவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இருந்தும், அதுகுறித்து இருவரும் வெளியில் பேசாமல் இருந்த நிலையில், தற்போது இருவரும் பெரியோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர். இவர்கள் இருவரின் திருமண செய்தி சமூக ஊடகங்களில் பேசு பொருளாக மாறியுள்ள இந்த சூழலில் நடிகர் சித்தார்த் தனது 45 பிறந்தநாளை நாளை (17.04.2024) கொண்டாடுகிறார்.


சித்தார்த் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம்மூலம் தயாரித்து நடித்த 'சித்தா' திரைப்படத்தின் காட்சி

இந்த 3 நடிகர்களும் வந்த சினிமா என்ற பாதை ஒன்றாக இருந்தாலும், அவரவர் மேற்கொள்ளும் பயணங்கள் வெவ்வேறுதான். அந்த வகையில், வெவ்வேறு மாதிரியான கால சூழல்களில் நடிப்பு என்ற வட்டத்தில் பயணித்து வரும் நிழல்கள் ரவி, விக்ரம், சித்தார்த் ஆகிய மூன்று கலைஞர்களும் இன்றுபோல் என்றும் நிறைவான வாழ்க்கையை வாழ வாழ்த்துவோம்.

Updated On 22 April 2024 6:23 PM GMT
ராணி

ராணி

Next Story