இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(1.03.1981 மற்றும் 8.03.1981 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

நடிகர் சங்க நடவடிக்கைகள் பற்றி தென் இந்திய நடிகர் சங்கத்தின் புதிய தலைவர் எஸ்.எஸ். ராஜேந்திரன் கூறியுள்ள கருத்துக்களுக்கு சிவாஜி கணேசன் பதில் அளித்தார்.

இதுபற்றி "ராணி" நிருபரிடம் சிவாஜி கணேசன் கூறியதாவது:-

"நடிகர் சங்கத்தின் தலைமைப் பதவியினால் என் குடும்ப வேலைகளை பார்க்க முடியவில்லை. அப்படி இருந்தும் கலை உலகில் உள்ள ஒவ்வொருவரும் என் குடும்பத்தில் உள்ளவர்கள் என்ற எண்ணத்தில் அந்த பதவியில் நான் இருந்து வந்தேன். இப்பொழுது நான் வேறு ஏதும் சொல்ல விரும்பவில்லை. உண்மைகள் வெளிவரும் காலத்தில், யார் நல்லவர் யார் கெட்டவர் என்று தெரிந்துவிடும். எனவே, நான் இப்பொழுது விறுவிறுப்பாக எதையும் சொல்லத் தயாராக இல்லை.

எங்கள் காலத்தில் எவ்வளவோ உதவிகள் செய்து இருக்கிறோம். ஆனால். அதையெல்லாம் விளம்பரமாக்க விரும்பவில்லை. யார் வந்தாலும் நம்ம பிள்ளைகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே என் ஆசை. இதற்குமேல் இப்பொழுது நான் எதையும் சொல்ல விரும்பவில்லை” என்று சிவாஜி கணேசன் கூறினார்.

வி.கே. ராமசாமி


'குடியிருந்த கோயில்' படத்தில் வி.கே. ராமசாமி

நடிகர் சங்கத்தின் பொருளாளராக இருந்த வி.கே. ராமசாமி கூறியதாவது:-

"நாங்கள் (சிவாஜி கணேசன், மேஜர் சுந்தரராஜன், வி.கே. ராமசாமி) பதவி ஏற்றபொழுது நடிகர் சங்கம் சுடுகாடு மைதானமாக இருந்தது. அப்பொழுது சிறிது கடனும் இருந்தது. டெலிபோன் பில் கட்டாமல் டெலிபோனை பிடுங்கிவிட்டார்கள். நாங்கள் அந்த கடன்களை முடித்து பல திட்டங்கள் தீட்டியபின்தான், சுவாமி சங்கரதாஸ் கலையரங்கம் கட்ட முடிந்தது. அதற்காக ஸ்டேட் பாங்கில் கடன் வாங்கினோம். அந்த கடனுக்கு சிவாஜிதான் முதல் ஜாமீன் கையெழுத்து போட்டார். மேஜர் சுந்தரராஜனும் நானும் (வி.கே. ராமசாமியும்) கையெழுத்து போட்டு இருக்கிறோம். நடிகர் சங்கத்துக்கு இப்பொழுது ரூ.50 இலட்சத்துக்கு சொத்து இருக்கிறது. அதை பராமரிக்க ஒரு "டிரஸ்ட்” ஏற்படுத்தியிருக்கிறோம். சிவாஜி, சுந்தரராஜன், நான் (வி.கே. ராமசாமி) ஆகிய மூவரும் டிரஸ்டில் இருக்கிறோம்.

புதியவர்கள் நடிகர் சங்கத்துக்குத்தான் தலைவராக இருக்க முடியுமே தவிர, எங்கள் டிரஸ்டில் யாரும் நுழைய முடியாது. எங்களை வைத்துத்தான் கடன் கொடுத்து இருக்கிறார்கள். எங்கள் உடலில் ஒரு சொட்டு இரத்தம் இருக்கும்வரை, நலிந்த நடிகர்களுக்கு என்ன என்ன உதவிகள் செய்ய முடியுமோ அவற்றை டிரஸ்டு மூலமாக நிச்சயம் செய்வோம். நாங்கள் நல்ல நன்மைகள் செய்யும் நேரத்தில் இப்படி வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கும் எதிர்ப்போடு வேலை செய்ய மனம் இடம் தரவில்லை. இறந்தவர்களுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும், நடிகர்களின் பிள்ளைகள் கல்விக்காகவும் நாங்கள் உதவி செய்து வந்தோம்; நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்வது அபாண்டமான கேலிக் கூத்தான செயல். இன்னும் ஏராளமான உதவிகள் செய்ய திட்டம் தீட்டி வந்தோம். அதை படிப்படியாகத்தான் செய்ய முடியும். உடனே செய்ய நாங்கள் என்ன மந்திரவாதியா? அல்லது அலாவுதீனின் அற்புத விளக்கா? சி.வி.வி. பந்துலு பிச்சை எடுக்கிறார் என்று சொல்வது கொஞ்சங்கூட உண்மை அல்ல. அவர் எடுத்து இருந்தால் இப்பொழுது இலட்சக்கணக்கில் சேர்த்து இருப்பார்! அவருடைய மருமகன்கள் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். நல்ல வசதியுடன் இருக்கிறார். அவர் பெயரைச் சொல்லி இழிவு படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்' என்றார், வி.கே. ராமசாமி.

எஸ்.எஸ்.ஆர். பதில்


நடிகர் எஸ்.எஸ்.ஆர். மற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய தலைவராக எஸ்.எஸ். ராஜேந்திரன் தேர்ந்து எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில பிரச்சினைகளை சிலர் எழுப்பியிருக்கிறார்கள். இதற்கு எஸ்.எஸ். ராஜேந்திரன் விளக்கம் அளித்தார்.

இதுபற்றி "ராணி" நிருபருக்கு அளித்த பேட்டியில் எஸ்.எஸ்.ஆர். கூறியதாவது:-

"நடிகர் சங்கத்தில் அ.தி.மு.க. புகுந்துவிட்டது; நடிகர் சங்கத் தேர்தலில் எம்.ஜி.ஆர். மறைமுகமாக வேலை செய்தார்' என்று சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன. இது உண்மைக்குப் புறம்பானது. துணைத் தலைவர் டி.என். சிவதாணு இ.காங்கிரசை சேர்ந்தவர். செயலாளர் டி.என். கிருஷ்ணன் தி.மு.க.காரர். பொருளாளர் சட்டாம்பிள்ளை வெங்கடராமன் இ.காங்கிரஸ். எல்லாக் கட்சியைச் சேர்ந்தவர்களும் பொதுக் குழுவில் உள்ளனர். எனவே, நடிகர் சங்கத்தில் அ.தி.மு.க. புகுந்துவிட்டது என்பதோ, தேர்தலில் எம்.ஜி.ஆர். பெயரை சேர்த்துப் பேசுவதோ கொஞ்சமும் ஆதாரமற்றது.

போட்டியிட்டு தேர்ந்து எடுக்கப்பட்ட இந்நாள் தலைவரிடம் (எஸ்.எஸ்.ஆரிடம்), முன்னாள் தலைவர் (சிவாஜி கணேசன்) பொறுப்பை ஒப்படைத்து, "நான் தலைவனாக இல்லா விட்டாலும் தம்பி எஸ்.எஸ்.ஆருடன் ஒத்துழைப்பேன்” என்று கூறுவார் என்று எதிர்பார்த்தேன். எனக்கு ஏமாற்றந்தான் மிஞ்சியது! முன்னாள் தலைவர் (சிவாஜி கணேசன்), செயலாளர் (மேஜர் சுந்தரராஜன்), பொருளாளர் (வி.கே. ராமசாமி) ஆகியவர்களுக்கு மனந்திறந்த பாராட்டுகளை தெரிவித்து விட்டுத்தான், நான் மரபுப்படி பதவி ஏற்றுக் கொண்டேன். இந்த நேரத்தில் மற்றொன்றையும் என்னால் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

எம். ஜி. ஆர்.


தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக சிவாஜி கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டபோது எம்.ஜி.ஆருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

முன்பு நடிகர் சங்கத் தலைவராக இருந்த எம்.ஜி.ஆர்., "தொடர்ந்து நாம் தானே தலைவராக இருக்கிறோம். இந்த முறை சிவாஜி வரட்டும். விட்டுக் கொடுப்போம்" என்று என்னிடம் சொன்னார். இதை சிவாஜியிடம் போய் நான் (எஸ்.எஸ்.ஆர்.) தெரிவித்தேன். "என்னை போட்டியில்லாமல் தேர்ந்து எடுக்க வேண்டும். அப்படியானால், தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளுகிறேன். இதற்கு எம்.ஜி.ஆர். உறுதி கொடுக்க வேண்டும்" என்று சிவாஜி சொன்னார். நான் எம்.ஜி.ஆரிடம் போய் இதை சொன்னேன். எம்.ஜி.ஆரே சிவாஜியுடன் தொடர்பு கொண்டு, "வேறு யாரும் எதிர்த்துப்போட்டியிட மாட்டார்கள்" என்று உறுதி அளித்தார். அதன்படி சிவாஜி போட்டியில்லாமல் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

வீட்டில்

எம்.ஜி.ஆர். தலைவராக இருந்தபொழுது அவரது வீட்டில்தான் நடிகர் சங்கம் இயங்கி வந்தது. அதற்கு வாடகை கிடையாது. சிவாஜி தலைவராக வருவதற்கு முன்பே நடிகர் சங்கத்துக்கு நிலம் வாங்கப்பட்டுவிட்டது. புயல் நிவாரண நிதிக்கு நடிகர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டிக் கொடுத்ததால், நடிகர் சங்கத்துக்கு முதலமைச்சர் ரூ. 5 இலட்சம் மானியம் அளித்தார்.

நுங்கம்பாக்கம் ஸ்டேட் பாங்கில் முதலமைச்சர் நிதியில் ரூ. 25 இலட்சம் வைப்பு நிதியாக முதலீடு செய்யப்பட்டது. அதன்பின் நடிகர் சங்கத்திற்கு பாங்கில் இருந்து முதலில் ரூ.10 இலட்சமும், பிறகு ரூ.8 இலட்சமும் கடன் கொடுத்தார்கள். வட்டி எல்லாம் சேர்த்து, பாங்குக்கு இப்பொழுது செலுத்த வேண்டிய தொகை, ரூ.21 இலட்சத்து 9 ஆயிரத்து 200. இதற்கு ஒரு நாளைக்கு ரூ. 800 வட்டி ஆகிறது!

கடமை தவறினார்

ஒருமுறை நடிகர் சங்கக் கூட்டத்தில் சிவாஜி பேசுகையில், “அறக்கட்டளையில் (டிரஸ்டு) இருப்பவர்கள் வசதி படைத்தவர்கள். எனவே, கடனைப்பற்றி கவலைப்பட வேண்டாம்" என்று சொன்னார். அப்பொழுதே நான் (எஸ்.எஸ்.ஆர்.) கூறினேன்: "இவ்வளவு பெரிய கடனை சிவாஜி தலையில் சுமத்த நான் விரும்பவில்லை. அணுகவேண்டியவர்களை அணுகி, திட்டமிட்டு செயலாற்றி, கடனை அடைக்க வேண்டியது நமது மாபெரும் கடமை ஆகும்" என்று. “எம்.ஜி.ஆர். சில வாக்குறுதிகள் கொடுத்தார். பிறகு அதுபற்றி பேசவேயில்லை" என்று இப்பொழுது சிவாஜி சொல்லுகிறார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முன் எம்.ஜி.ஆர். ஆட்சி "டிஸ்மிஸ்” செய்யப்பட்டுவிட்டது. அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், நடிகர் சங்கத் தலைவர்தான் அவரை அணுகியிருக்க வேண்டும். ஆனால் அவர் கவனிக்கவில்லை. சங்கத்தின் கடனைப் பற்றி சிந்திக்கவும் இல்லை. பாங்கில் கடன் வாங்கியதையோ, கட்டிடம் எழுப்பியதையோ நான் தவறு என்று சொல்லவில்லை. ஆக்கப்பூர்வமான பணிகள் ஆற்றியவர்களை பாராட்டுகிறேன். இப்பொழுது சங்கத்தின் இருப்பு என்ன என்று பார்த்தேன். ஆயிரத்து சில்லறைதான்! தொடர்பு உடையவர்களுடன் கலந்து பேசி, நிதி நிலையைப் பெருக்க வழி காண இருக்கிறேன்.

மணிமகுடம்


எஸ்.எஸ்.ஆரின் 'மணிமகுடம்' படத்தின் போஸ்டர் மற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

"மணிமகுடம்" படத்துக்காக நான் நடிகர் சங்க பணத்தை ரூ.35 ஆயிரம் எடுத்து செலவு செய்து விட்டதாகவும், அதை சிவாஜி சிரமப்பட்டு சரி கட்டினார் எனவும் எனது அருமை நண்பர் வி.கே. ராமசாமி தெரிவித்தார். சிவாஜியையும் அருகில் வைத்துக்கொண்டு சொல்லியிருக்கிறார். என் மீது களங்கம் கற்பித்து இழிவுப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டே இப்பொய்ச் செய்தியை வெளியிட்டு இருக்கிறார். தான் கூறிய செய்தி தவறானது என வி.கே. ராமசாமி ஒரு வாரத்துக்குள் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல், சட்டப்படி நான் நீதிமன்றம் செல்ல வேண்டியிருக்கும் என அறிவித்துக் கொள்ளுகிறேன்.

நடக்க வேண்டியவை

நடிகர் சங்கத்தை வலுப்படுத்துவதே இப்போதைய முதல் பணி. இதற்கு நடந்தவை, கடந்தவை பற்றி சண்டை போட்டுக் கொள்ளாமல், ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிக் கொள்ளாமல். எல்லோரும் ஒன்றுபட்டு ஒத்துழைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்த ஒத்துழைப்பைத் திரட்டும் பணியில் இப்பொழுது நான் ஈடுபட்டு இருக்கிறேன்" என்று எஸ்.எஸ்.ஆர். சொன்னார்.

Updated On 15 April 2024 6:22 PM GMT
ராணி

ராணி

Next Story