இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இட்லி, சாம்பார், வடையை பெரிதும் விரும்பிய காலம் போய் இன்று அதிகளவில் பீட்சா, பர்கரைத்தான் இளசுகள் அதிகம் விரும்புகின்றனர். பீட்சா, பர்கரை பெரும்பாலும் கடைகளில் வாங்கி சாப்பிட்டாலும், அவ்வரிசையில் வரும் பாஸ்தாவை பலரும் வீட்டிலேயே எளிதாக செய்துவிடுகின்றனர். அந்த பாஸ்தாவிலும் வைட் சாஸ் பாஸ்தா, ரெட் சாஸ் பாஸ்தா, சீஸ் பாஸ்தா என்று பல வகைகள் உள்ளன. பாஸ்தாவை தனியாக சாப்பிடும்போது அதில் அவ்வளவு சத்துகள் இல்லாவிட்டாலும், அதனுடன் கீரை, புதினா, கொத்தமல்லி, முந்திரி என்று பல சத்தான பொருட்களை சேர்த்து ஆரோக்கியமான சுவையான கிரீன் சாஸ் பாஸ்தா செய்வது எப்படி என்ற ரெசிபியை பகிர்ந்துள்ளார் சமையல் கலை நிபுணர் ஐஸ்வர்யா.


செய்முறை:

கிரீன் சாஸ் பாஸ்தா செய்வதற்கு முதற்கட்டமாக அடுப்பை பற்ற வைத்து அதன் மேல் சாஸ் பேன் வைத்து அதில் 2 பெரிய டம்ளர் தண்ணீர் மற்றும் 1 ஸ்பூன் எண்ணெய் அல்லது 4 முதல் 5 துளி எண்ணெய் ஊற்றி 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து அந்த தண்ணீரை கொதிக்க விட வேண்டும். அடுத்ததாக கொதிக்கும் தண்ணீரில் பாஸ்தாவை சேர்த்து 5 - 6 நிமிடத்திற்கு வேக வைக்க வேண்டும்.

பாஸ்தா நன்றாக வெந்த பின்னர் அதை தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பாஸ்தா வேக வைத்த தண்ணீரில் பாலக் கீரையை போட்டு வெறும் 2 நிமிடத்திற்கு மட்டும் வேகவைத்து பிறகு அந்த கீரையை வடிகட்டி சாதாரண தண்ணீரில் போட வேண்டும். அடுத்ததாக கிரீன் சாஸ் பாஸ்தா செய்வதற்கு பயன்படும் முக்கியமான சாஸை தயார் செய்து கொள்ள வேண்டும்.

சாஸ் செய்வதற்கு முதலில் வேக வைத்தெடுத்து தண்ணீரில் போட்ட கீரை, புதினா, கொத்தமல்லி, பன்னீர், முந்திரி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு பேனை வைத்து வெண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அவை சூடானவுடன் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அடுத்ததாக அரைத்து வைத்திருக்கும் அந்த கீரை பேஸ்டையும், ¼ கப் தண்ணீரையும் சேர்த்து கலக்க வேண்டும். பச்சை வாசனை போகும் வரை சாஸ் தன்மை வரும் வரை பொறுமையாக கலக்க வேண்டும். அடுத்து 1 டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் மிளகு பொடி, 2 டீஸ்பூன் சில்லி பிளேக்ஸ், 2 டீஸ்பூன் ஆர்கனோ அல்லது மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை சாஸ் தன்மை வரும் வரை கலக்கி கொள்ள வேண்டும். வேண்டுமானால் இவற்றுடன் வேகவைத்த சோளம் மற்றும் குடைமிளகாயை சேர்த்து கொள்ளலாம்.

பச்சை வாசனை போன நிலையில் தனியாக வேகவைத்தெடுத்த பாஸ்தாவை இதில் சேர்க்க வேண்டும். சாசும் பாஸ்தாவும் ஒன்றுக்கொன்று சேரும்படி 1 நிமிடத்திற்கு கலக்கி கொள்ள வேண்டும். இறுதியாக மொஸரெல்லா சீஸ் விரும்புபவர்கள் அவற்றை சேர்த்து கலக்கிவிட்டு அடுப்பை அணைத்து விடலாம். அதன் சூட்டிலே சீஸ் ஆனது கரைந்துவிடும். ஹாட்டான ஆரோக்கியமான கிரீமி கிரீன் சாஸ் பாஸ்தா ரெடி!

Updated On 11 Dec 2023 6:42 PM GMT
ராணி

ராணி

Next Story