இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நிறங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை, வட இந்தியாவில் மட்டும் கொண்டாடப்பட்டுவந்த நிலையில், தற்போது அந்த மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் களைக்கட்டுகிறது. பெரியவர்களும் குழந்தைகளாக மாறி ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை பூசிக் கொண்டாடும் ஹோலியின் வரலாறு என்ன? ஏன் கொண்டாடுகிறோம்? அன்றைய தினத்தின் சிறப்பு உணவுகள் என்ன? என்பது குறித்தெல்லாம் இந்த பதிவில் வண்ணமயமாக காண்போம். மேலும் இந்த ஆண்டு ஹோலி கொண்டாட்டத்தின் வீடியோ காட்சிகளையும் பார்ப்போம்.

ஹோலி பண்டிகையின் வரலாறு

உற்சாகமான, துள்ளலான, துடிப்பான பண்டிகைகளில் ஒன்று ஹோலி. இது "வண்ணங்களின் திருவிழா" அல்லது "காதலின் திருவிழா" என்று அழைக்கப்படுகிறது. இந்து மாதமான பால்குனாவின் முழு நிலவு நாளில் அனுசரிக்கப்படுகிறது. அதாவது தமிழ் மாதமான பங்குனியில் வரும் பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டியின் படி, ஹோலி, பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வருகிறது.

ஹோலி பண்டிகை இந்தியாவில் குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் சமூக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. குளிர் காலம் முடிந்து கோடை தொடங்குவதை, மக்கள் அனைவரும் ஒன்று கூடி, வேறுபாடுகளை மறந்து, நட்பின் பிணைப்பாய் கொண்டாடி, தங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியை பரப்புகின்றனர்.


வண்ணப்பொடிகளை பூசி மகிழும் குழந்தைகள், யுவதிகள்

ஹோலியின் தோற்றம் குறித்து பண்டைய இந்து புராணங்களில் இருந்து அறியப்படுகிறது. இது அசுர மன்னர் இரணியகசிபு மற்றும் அவரது மகன் பிரகலாதன் பற்றிய கதையாகும். மன்னர் இரணியகசிபு, தன் குடிமக்கள் அனைவராலும் வணங்கப்பட வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவரது சொந்த மகனோ விஷ்ணுவை வழிபடுபவர். இதனால் கோபமடைந்த இரணியகசிபு, பிரகலாதன் குழந்தையாக இருந்தபோது, ஒரு குன்றின் மீது தூக்கி எறிந்து யானையின் காலடியில் மிதிக்க முயன்றார். ஆனால் விஷ்ணு பகவானோ எப்போதும் குழந்தையைக் காப்பாற்றியதால் குழந்தையைக் கொல்ல அவர் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இறுதியில் இரணியகசிபு தனது சகோதரியும், அரக்கியுமான ஹோலிகாவிடம் உதவி கேட்டார். ஹோலிகா, நெருப்பினால் காயமடையாமல் இருக்க சக்தி பெற்றிருந்ததால், பிரகலாதனை, ஹோலிகா மடியில் அமரவைத்து தீயில் அமர்த்தி கொல்ல திட்டமிட்டார் இரணியகசிபு. இரணியகசிபுக்கு உதவிய ஹோலிகா, தன்னால் நெருப்புக்குள் தனியாக நுழைந்தால் மட்டுமே தீயிலிருந்து எவ்வித ஆபத்தும் இன்றி வெளிவர முடியும் என்பதை மறந்துவிட்டாள். இதனால், பிரகலாதனுடன் நெருப்புக்குள் சென்ற ஹோலிகா, தன்னுடைய சக்தி வேலை செய்யாமல் தீயில் எரிந்து உயிரிழந்தாள். முழு நேரமும் விஷ்ணுவின் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்த பிரகலாதன் எவ்வித தீக்காயமும் இன்றி காப்பாற்றப்பட்டான். எனவே, அரக்கி ஹோலிகாவின் பெயரிடப்பட்ட ஹோலி, தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றியைக் கொண்டாடுகிறது. மேலும், ஹோலிக்கு முன் இரவு, மக்கள் நெருப்பைக் கொளுத்தி, தங்கள் மனதில் ஏதேனும் தீமைகள் இருந்தால் அதனை அழித்திட பிரார்த்தனை செய்கின்றனர். இந்த சடங்கு ஹோலிகா தஹன் என்று அழைக்கப்படுகிறது.


ஆத்மார்த்தமான காதல் ஜோடிகளான ராதையும், கிருஷ்ணரும் ஒருவருக்கொருவர் வண்ணம் பூசி மகிழும் நிகழ்வு

ஹோலி தொடர்பாக மற்றொரு புராண சம்பவமும் உண்டு. ராதா மற்றும் கிருஷ்ணரின் காதலும் ஹோலி பண்டிகையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்துக் கடவுளான விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ணரின் உடல் நீல நிறமாக காணப்படும். ஏனெனில் அவர் குழந்தையாக இருந்தபோது, ​​​​ஒரு உயிரினத்தின் விஷப் பாலை குடித்ததால் அப்படி ஆனதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ராதாவை காதலித்த கிருஷ்ணர், தன் உடலின் நீல நிறத்தால், ராதா தன்னை நிராகரித்து விடுவாரோ என்று பயந்தாராம். ஆனால் ராதாவோ, தனது உடல் மீதும் வண்ணம் பூச கிருஷ்ணரை அனுமதித்து, ஆத்மார்த்தமான காதல் ஜோடிகளாக மாறினார்களாம். எனவேதான் ஹோலி அன்று, கிருஷ்ணர் மற்றும் ராதையின் நினைவாக, பண்டிகைக்கு வருபவர்கள் ஒருவருக்கொருவர் வண்ணம் பூசிக்கொள்கின்றனராம்.

நிறங்களின் திருவிழா ஹோலி

ஹோலி கொண்டாட்டங்களில் வண்ணங்களின் முக்கியத்துவம் பண்டிகையின் ஆரம்பத்திலிருந்தே தெளிவாகத் தெரிகிறது. வெவ்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்த வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஹோலியின்போது பயன்படுத்தப்படும் பாரம்பரிய வண்ணங்கள் சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள். அவை வாழ்க்கை, அன்பு மற்றும் ஒளியின் ஆற்றல்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பப்படுகிறது. ஹோலியை கொண்டாடும் மக்கள், பெரும்பாலும் தண்ணீர் பலூன்கள் அல்லது மேம்படுத்தப்பட்ட கொள்கலன்களைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை பூசிக்கொள்கின்றனர். ஒருவருக்கொருவர் வண்ணங்களை வீசி எறிவதன் நோக்கம் வேடிக்கை பார்ப்பது மட்டுமல்ல, தன்னைத்தானே சுத்தப்படுத்தி, எதிர்மறை ஆற்றலை அகற்றுவதும் ஆகும். மேலும் கொண்டாட்டங்கள் வழக்கமாக பல நாட்கள் நீடிக்கும். ஆடல், பாடல் என ஹோலியை மக்கள் கொண்டாடி தீர்க்கின்றனர்.


ஹோலி கொண்டாட்டத்தின் சிறப்பு உணவுகள்

ஹோலி கொண்டாட்ட நாளின் சிறப்பு உணவுகள்

ஹோலி கொண்டாட்டத்தில் பல்வேறு சுவைமிகு உணவுகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. அந்த நாளில் பொதுவாக உண்ணப்படும் உணவுகள் மற்றும் சிற்றுண்டிகளில் சமோசா, பகோரா, பேல் பூரி, ஜிலேபி, அல்வாஸ், குலாப் ஜாமூன், லட்டு மற்றும் மிகவும் பிரபலமான குஜியா போன்ற இனிப்புகள் அடங்கும். நிறைய தண்ணீர் குடிப்பதும், பழங்கள் சாப்பிடுவதும், பாரம்பரிய விளையாட்டுகளில் ஈடுபடுவதும் வழக்கம். ஹோலியின் போது பொதுவாக உட்கொள்ளப்படும் பானங்களில் மசாலா தேநீரும், லஸ்ஸியும் அடங்கும்.

உலகளவில் களை கட்டும் ஹோலி கொண்டாட்டம்

ஹோலி என்பது மக்கள் ஒன்று கூடி நட்பு மற்றும் அன்பின் பிணைப்பை வெளிப்படுத்தவும், அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை பரப்புவதற்குமான ஒரு கொண்டாட்டம். இதுதான் ஹோலியின் சிறப்பு, அனைவரும் கொண்டாடி மகிழலாம். இப்படிப்பட்ட ஹோலி தற்போது உலகளாவிய நிகழ்வாக பிரபலமடைந்துள்ளது. நியூயார்க், லண்டன், சிட்னி என உலகெங்கிலும் உள்ள நகரங்களில் பார்ட்டிகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.


வழக்கமான உற்சாகத்துடன் களை கட்டிய ஹோலி கொண்டாட்டம்

இந்த ஆண்டு ஹோலி கொண்டாட்ட நிகழ்வுகள்

வழக்கமான உற்சாகத்துடன் இந்த ஆண்டும் (மார்ச் 25-ம் தேதி) உலகம் முழுவதும் ஹோலி கொண்டாட்டங்கள் களை கட்டின. காலை 6 மணி முதலே தொடங்கிய ஹோலி கொண்டாட்டங்களில், வடமாநிலத்தவர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கலந்துக்கொண்டு அன்புக்குரியவர்கள் மீது வண்ணப் பொடிகளை தூவியும், கலர் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் மகிழ்ந்தனர். குறிப்பாக சென்னையில் சவுகார்பேட்டை, வேப்பேரி, கீழ்ப்பாக்கம், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் ஹோலி கொண்டாட்டங்கள் ஆட்டம்-பாட்டத்துடன் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரள நடைபெற்றன.

Updated On 1 April 2024 6:19 PM GMT
ராணி

ராணி

Next Story