இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக சட்டம் இயற்றும் மன்றம், நிர்வாகம், நீதித்துறை, ஊடகம் ஆகியவை உள்ளன. ஆனால் நமது இந்திய ஜனநாயகத்தின் தூண்கள் தேச விரோதிகளால் அவ்வப்போது அசைத்து பார்க்கப்படுவது என்னவோ வேதனைக்குரிய ஒன்றாகிவிட்டது. அந்த வகையில் தற்போது ஊடகங்கள் அவ்வப்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன. இன்றைய நாட்களில் பெரும்பாலான செய்தி சேனல்கள் ஒரு சார்புடையவைகளாக இருப்பதாலும், தங்களது செய்தி இலக்குகளை விரைவில் அடைய முற்படுவதும் கூட இது போன்ற வேண்டாத நிகழ்வுகளுக்கு ஒரு காரணமாக அமையலாம் என்று கூறப்படுகின்றது. என்ன நேர்ந்தது திருப்பூர் பல்லடத்தை சேர்ந்த தனியார் செய்தி தொலைக்காட்சி செய்தியாளருக்கு? அவரின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய நபர்கள் யார்? விரிவான ரிப்போர்ட் உங்களுக்காக...

திருப்பூர் மாவட்ட செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில், தனியார் செய்தி தொலைக்காட்சியின் செய்தியாளராக பணியாற்றுபவர் நேசப்பிரபு. 31 வயதாகும் நேச பிரபு கடந்த ஏழு ஆண்டுகளாக இப்பகுதியில் செய்தியாளராக இருந்துவருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி இரவு காமநாயக்கன்பாளையம் அருகே பொள்ளாச்சி – பல்லடம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார் நேச பிரபு. அப்போதுதான் அவர் சற்றும் எதிர்பார்க்காத அவர் மீதான அந்த கொலைவெறித்தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.


தாக்குதலுக்கு ஆளான செய்தியாளர் நேச பிரபு

அங்கு வந்த 5-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் அரிவாள்களுடன் நேச பிரபுவை துரத்தியுள்ளனர். அச்சத்தில் அவர் தன்னை காத்துக்கொள்ள பெட்ரோல் பங்கின் அலுவலகத்திற்குள் நுழைய, அங்கும் விடாமல் துரத்திய மர்ம நபர்கள் பெட்ரோல் பங்க் அலுவலகத்திற்குள்ளேயே புகுந்து நேச பிரபுவை சரமாரியாக அவரது கை கால் தலை என மூர்க்கத்தனமாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் ரத்தம் சொட்ட சொட்ட தரையில் வீழ்ந்துள்ளார் நேச பிரபு. அவர் இறந்துவிட்டதாக கருதி அவரை தாக்கிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்துள்ளனர். கோர கொலைவெறித் தாக்குதலில் படுகாயமடைந்த நேச பிரபு அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தன்னை காப்பற்றும்படியும் அவர் காவல்துறையினரிடம் கெஞ்சிக் கேட்டதாகவும், ஆனால் காவல்துறையின் மெத்தன போக்கால் அவர் தாக்கப்பட்டதாகவும் கூறப்டுகிறது. தனக்கு பாதுகாப்பு வழங்ககோரி நேச பிரபு காவல்துறையினரிடம் கெஞ்சி கேட்ட ஆடியோ வெளியாகி நம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


செய்தியாளர் நேச பிரபு - திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகம்

காவல்துறையின் விசாரணையும், பின்னணியும்

தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு கடைசி நேரத்தில் வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 4 தனிப்படைகளை அமைத்து கொலைவெறி தாக்குதல் நடத்திய நபர்களை தேடிவந்த நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்வம் குறித்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை எனவும், ஏற்கனவே நேச பிரபுவையும், அவரது வீட்டையும் மர்ம நபர்கள் நோட்டம் விட்டதாக நேச பிரபுவே காவல்துறையில் கூறியும், பாதுகாப்பு வேண்டியும், காவல்துறை எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் திருப்பூர் செய்தியாளர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

காவல்துறை மீது தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்டதற்கு பல்வேறு ஊடக சங்கங்கள் மற்றும் செய்தியாளர்கள் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்த வண்ணம் இருந்தனர். மேலும் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் கூட தங்களது வன்மையான கண்டனங்களை பதிவு செய்தனர். இதன் விளைவாக, இவ்விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரிடையாக களத்தில் இறங்கினார். செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்ட முதலமைச்சர், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும், படுகாயமடைந்த செய்தியாளர் நேச பிரபுவிற்கு 3 லட்சம் இழப்பீடு வழங்கியும் அதிரடி காட்டினார்.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் - நேச பிரபுவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

செய்தியாளர் நேச பிரபு பணிபுரிந்து வந்த ஊடகம் சார்பில் கூறப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல்

இந்த குற்ற வழக்கு தொடர்பாக நேச பிரபு பணிபுரிந்த ஊடகத்தினர் கூறும்போது , “பல்லடம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே, அனுமதியற்ற பார்கள், தாபா என்ற பெயரில் சட்ட விரோதமாக மது விற்பனை நடத்தி வருகின்றன எனவும், தாக்குதலுக்கு உள்ளான செய்தியாளர் நேச பிரபு, தொடர்ச்சியாக சட்ட விரோத மது விற்பனை, மக்கள் பிரச்சினைகள் குறித்து செய்தி சேகரித்து வந்தார் என்றும், எனவே அவருக்கு பல அச்சுறுத்தல்கள் வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து தங்களது ஊடகம் சார்பில் 6 மாதங்களுக்கு முன்பே காவல்துறையில் புகார் கூறியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். வடமாவட்டங்களில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடப்பதை பார்த்திருப்போம். ஆனால், மேற்கு மாவட்டங்களில் குறிப்பாக கோவை, திருப்பூரில் செய்தியாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் என்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகின்றது. “நேச பிரபுவை வெட்டியவர்கள் குறிப்பாக அவரை கொலை செய்யக்கூடாது, மாறாக வாழ்நாள் முழுதும் அவர் செயல்படக்கூடாது என்ற நோக்கில்தான் வெட்டியுள்ளனர். ஏனெனில் வெட்டப்பட்ட இடங்கள் மற்றும் வெட்டப்பட்ட விதம் அப்படி இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்த செய்தியாளர்களையும் மிரட்டும் விதமாகத்தான் மர்ம நபர்கள் நேச பிரபு மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியுள்ளதன்மூலம் தெரிய வருவதாக ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.


தமிழக டாஸ்மாக் கடை

எதிர் தரப்பினர் கூறும் மாறுபட்ட தகவல்

இந்நிலையில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட நேச பிரபு மற்றும் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்கள் சிலர், டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபட்டு வந்ததாகவும், தாங்கள் பணிபுரியும் ஊடகங்களுக்கு தெரியாமல் இது போன்ற பணப்பறிப்பு செயல்களை அரங்கேற்றி வருவதாகவும். அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் நேச பிரபுவுக்கு எதிரான தரப்பினர் கூறுகின்றனர் .

எது எப்படியோ, அது எந்த ஊடகமாக இருந்தாலும் சரி, காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளாக இருந்தாலும் சரி, நீதி நேர்மையுடன் அவரவர் தாம் வணங்கும் இறைவனுக்கும், மனசாட்சிக்கும் பயந்து கடமையை மட்டுமே செய்யும் பட்சத்தில் இது போன்ற சமூக அவலங்களை தடுக்க முடியும் என்பதே உண்மை. அதேநேரம் செய்தியாளர் நேச பிரபுவின் மீது நடத்தப்பட்டுள்ள இந்த கொடூர கொலைவெறி தாக்குதல் சம்பவம் தமிழக அளவில் பெரும் பேசு பொருளாகவும், வன்மையான கண்டனத்துக்குரிய ஒன்றாகவும் மாறியிருப்பது மிகையல்ல.

Updated On 12 Feb 2024 6:18 PM GMT
ராணி

ராணி

Next Story