இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கடந்த ஜூன் மாதம் கனடாவாழ் சீக்கியரும் காலிஸ்தான் இயக்கத்தின் சீக்கிய பிரிவினைவாதத் தலைவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா நாட்டு பிரதமர் கனேடிய நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். இதனால் இந்தியா - கனடா உறவில் விரிசல் விழுந்திருக்கிறது. வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியாமீது கனடா அரசு இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் நிலையில் இந்த சர்ச்சை குறித்து பிற நாடுகளின் நிலைப்பாடு என்ன? ஒரு பிரிவினைவாத தலைவருக்கு கனடா அரசு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? இந்த சர்ச்சை கனடா மற்றும் இந்தியத் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்துமா? போன்றவை குறித்து வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் பார்க்கலாம்.

கனடா இந்தியா பிரச்சினை எங்கிருந்து தொடங்கியது?

செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் இந்தியாவின் ஜி20 உச்சிமாநாடானது கோலாகலமாக நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் சரியான நட்புறவை மேற்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் ட்ரூடோ கனடா செல்லவிருந்த விமானம் பழுதானதால், இந்தியாவிலிருந்து விமானம் ஏற்பாடு செய்து தருகிறோம் என்று கூறியபோதுகூட, அவர் கனடாவிலிருந்து வேறு விமானம் வந்தபிறகே பயணம் மேற்கொள்வதாகக்கூறி 2 நாட்கள் தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மீண்டும் கனடா திரும்பிச்சென்ற ட்ரூடோ, கனேடிய நாடாளுமன்றத்தில் இந்தியா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். அதில், காலிஸ்தான் புலிப்படையின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்திய அரசாங்கத்தின் முகவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், இது தொடர்பான ஆதாரங்கள் அனைத்தும் நம்பும்படியாகவே உள்ளதாகவும் அதிரடியாக தெரிவித்தார் ட்ரூடோ.


ஜி20 மாநாட்டில் இந்தியா - கனடா பிரதமர்கள்

அதனைத் தொடர்ந்து கனடாவிலிருந்த இந்தியாவின் உயர்நிலை தூதரக அதிகாரியை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்தார் கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலான ஜோலி. கனடாவின் இந்த குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்த இந்தியா, அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியபோதிலும், கனடாவிடமிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. இதனால் கனடா அரசின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும்விதமாக கனடா தூதரகத்தின் அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற்ற இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்தியா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவுகிறது. உலக பொருளாதார சந்தையில் முக்கிய இடம் வகிக்கும் இந்தியாவை ஒரு தனிநபருக்காக கனடா ஏன் பகைத்துக்கொள்ள வேண்டும்?

யார் இந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரிலுள்ள பார் சிங் புரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். காலிஸ்தான் புலிப்படையின் தலைவராக இருந்த இவர், 1997ஆம் ஆண்டு கனடா சென்றார். அங்கு பிளம்பர் வேலை செய்துவந்த நிஜ்ஜார், ‘நீதி கோரும் சீக்கியர்கள்’ என்ற இயக்கத்துடன் நேரடியாக தொடர்பில் இருந்தார் என்பதை தேசிய புலனாய்வு முகமை உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலும் இந்தியாவை பொருத்தவரை பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிஜ்ஜாரின் தலைக்கு ரூ. 10 லட்சம் பரிசும் அறிவித்திருக்கிறது. நிஜ்ஜாருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.


ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட குருத்வாரா (கனடா)

மக்கள் மத்தியில் அச்சம், பதற்றத்தை ஏற்படுத்தி, அவர்களை கிளர்ச்சியெழ தூண்டி விடுதல் போன்ற குற்றச்சாட்டுகளை இந்தியா நிஜ்ஜார்மீது வைத்திருக்கிறது. ஆனால் கனடா குடிமகனான 45 வயதான நிஜ்ஜார், சர்ரேயிலுள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். காலிஸ்தானி போராளிகளுக்கு பயிற்சி அளித்தது, பாட்டியாலாவின் உள்ள சத்ய நாராயண் கோயில் அருகே வெடிகுண்டு வெடிப்பில் ஈடுபட்டது, மதத் தலைவர்களை கொல்ல முயற்சித்தது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளின்கீழ் நிஜ்ஜார் மீது இந்தியாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் 19ஆம் தேதியன்று, சர்ரேயிலுள்ள சீக்கிய குருத்வாராவிலிருந்து உள்ளூர் நேரப்படி இரவு 8. 30 மணியளவில் வெளியே வந்த நிஜ்ஜார், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.


ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஜக்மீத் சிங்

சீக்கியர்களுக்கு கனடா ஆதரவு அளிப்பது ஏன்?

ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் அவருக்கு ஆதரவாக இருப்பவர் புதிய ஜனநாயக கட்சியின் (New Democratic Part) தலைவர் ஜக்மீத் சிங். இவர் காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர். 2019-ஆம் ஆண்டு கனடாவில் தேர்தல் நடந்தபோது, ட்ரூடோ பிரதமர் ஆவதற்கு 20 சீட்டுகள் (லிபரல் கட்சி) குறைந்தன. அந்தத் தேர்தலில் ஜக்மீத் சிங் கட்சியானது 24 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில், ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சிங்கின் ஆதரவு கிடைக்கவே, ட்ரூடோ பிரதமரானார். அதனாலேயே தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும், வருகிற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்கவும் வேண்டுமானால் ட்ரூடோவுக்கு சிங்கின் ஆதரவு மிகவும் தேவை. எனவே அவரை பகைத்துக்கொள்வதை ட்ரூடோ விரும்பவில்லை.

மேலும் இந்தியாவை அடுத்து சீக்கியர்கள் அதிகம் வாழும் நாடு கனடா. 2021-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கனடாவில் 7.71 லட்சம் சீக்கியர்கள் வசிக்கின்றனர். இது அந்நாட்டு மக்கள்த்தொகையில் 2.1 சதவீதம். 1980-90-களில் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களின் கிளர்ச்சி வெடிக்கவே, அங்கு ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அதனால் 1991-க்கு பிறகு கனடாவிற்கு புலம்பெயரும் சீக்கியர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. வேலைவாய்ப்பு, மேற்படிப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்கான ஆண்டுதோறும் சராசரியாக 11,750 சீக்கியர்கள் குடிபெயர்கின்றனர். கனடா தவிர, பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பெர்டா, ஓன்டாரியோ, கியூபெக், மனிடோபா போன்ற இடங்களிலும் சீக்கியர்கள் அதிகம் வசிக்கின்றனர்.


ஜஸ்டின் ட்ரூடோ vs நரேந்திர மோடி

ஜஸ்டின் ட்ரூடோவின் பல்டி

ஜி7 நாடுகளின் கூட்டமைப்பில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தில் அமெரிக்கா, பிரிட்டன் தவிர வேறு எந்த நாடுகளும் கருத்து தெரிவிக்கவில்லை. கனடாவின் இந்த குற்றச்சாட்டால் இரு நாடுகளும் தூதரக அதிகாரிகளை வெளியேற்றியதுடன், கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதைக்கூட இந்தியா நிறுத்தி வைத்திருக்கிறது. கனடா - இந்தியா உறவில் விரிசல் விழுந்துள்ள இந்த சூழ்நிலையை சீனா சாதகமாக பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் சர்வதேச ஆதரவைத் திரட்டும் முயற்சியில் கனடா ஒருபுறம் ஈடுபட்டிருக்க, விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் கோரிக்கை வைத்துள்ளது.

நிஜ்ஜார் கொலை தொடர்பான ஆதாரங்களை அளிக்குமாறு இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில், ஆதாரம் இல்லை என்றுதான் ட்ரூடோ கூறுகிறார். அதேசமயம், ‘நம்பகமான குற்றச்சாட்டு’ என்ற வார்த்தையை ட்ரூடோ பயன்படுத்திக்கொண்டே இருக்கிறார். உலக பொருளாதாரம் மற்றும் வணிகத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ள இந்தியாவை பகைத்துக்கொள்ள பிற நாடுகள் யோசித்துவரும் நிலையில், அடுத்த தேர்தலிலும் நரேந்திர மோடியே ஆட்சியை பிடிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.


காலிஸ்தான் இயக்கத்தினர் போராட்டம்

இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இந்தியாவை சீண்டிப்பார்த்து பிரச்சினைகளை கிளப்பவேண்டும் என்பது கனடாவின் நோக்கமல்ல என்று திடீர் பல்டி அடித்திருக்கிறார். கனடாவில் பத்திரிகையாளர்களை சந்தித்த ட்ரூடோ, “வளர்ந்துவரும் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் ஒன்று இந்தியா என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. நாம் இங்கு மட்டுமல்லாது, உலகம் முழுவதுமுள்ள பிற நாடுகளுடனும் உறவாட வேண்டிய அவசியம் உள்ளது. எனவே இந்தியாவை சீண்டிப்பார்த்து பிரச்சினைகளை ஏற்படுத்துவது என்பது கனடாவின் நோக்கமல்ல” என்று கூறியுள்ளார்.

இருப்பினும், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கும் இந்தியாவுக்கு நம்பத்தக்க தொடர்பு இருக்கிறது என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கனடா - இந்தியா பிரச்சினையால் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் குடியேற்றம் போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படலாம் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இரு நாடும் மாறி மாறி விசா வழங்குவதில் கட்டுப்பாடுகளை விதித்தால் பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Updated On 9 Oct 2023 6:54 PM GMT
ராணி

ராணி

Next Story