இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் தனது மருத்துவ துறையில் இருந்து அரசுப்பணிக்கு வந்ததன் காரணம் குறித்தும், இப்போதுள்ள மாணவர்கள் தேர்வில் தோல்வியுற்றால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும், கீழ் அடித்தட்டு மக்களின் கோரிக்கைளை எடுத்துச் செல்வதற்கான வழிமுறைகள் என்ன என்பது தொடர்பாகவும் ராணி நேயர்களுக்காக அவர் அளித்த பேட்டி பின்வருமாறு.

மருத்துவத்தில் இருந்து ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற மாற்றத்திற்கான காரணம் என்ன?

நான் என்னுடைய கால்நடை மருத்துவப் படிப்பை பெங்களுருவில் படித்தேன். அதனைத் தொடர்ந்து அப்பிரிவிலேயே மேற்படிப்பை தொடர்ந்த பொழுது ஐ.ஏ.எஸ் படிப்பிற்காக தன்னை தயார் செய்துகொள்ளும் ஒரு நபரை சந்தித்தேன். அப்பொழுது என்னுள் ஏற்பட்ட ஆர்வமே என்னை ஐ.ஏ.எஸ் பாதைக்கு அழைத்துச் சென்றது. ஒரு புறம் ஐ.ஏ.எஸ் தேர்விற்கான முயற்சிகளில் கவனம் செலுத்திக்கொண்டே, கால்நடைத்துறை மருத்துவ படிப்பையும் முடித்தேன். பின்னர் கேரளாவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, மூன்றாவது முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சிப் பெற்றேன். சிவில் சர்வீஸ் என்பது ஒரு நல்ல துறைதான. நாட்டிற்கு சேவை செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும். அதே நேரத்தில் கால்நடைத்துறையை என்னால் மறக்கவும் இயலாது, மறுக்கவும் இயலாது. கோவிட் கால கட்டத்திற்கு பிறகு ஒருங்கிணைந்த சுகாதாரம் என்ற பிரிவில் கால்நடை மூலமாக மனிதர்களுக்கு ஏராளமான நோய்கள் ஏற்படுவதால் அமெரிக்காவில் உள்ள ஜியார்ஜியா பல்கலைக்கழகத்தில் அதே பிரிவில் தற்போது மேற்படிப்பையும் படித்துக் கொண்டிருக்கிறேன்.


சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் அவர்களுக்கு நீங்கள் கூற நினைக்கும் அறிவுரைகள் என்ன?

திறமைகள் இருந்தால் உலகம் மாணவர்களின் மேடையாக மாறுகிறது. பெற்றோரும் சரி, மாணவர்களை சுற்றி இருப்பவர்களும் சரி, மாணவர்களை குத்திக்காட்டுதல் கூடாது. நமது வாழ்க்கை என்பது ஒரு வரப்பிரசாதம். கொரோனா காலத்தில் நமது தமிழகத்தில் சுமார் முப்பத்தாராயிரம் பேர் இறந்துள்ளனர். அந்த வகையில் நமது உயிர் என்பது பொக்கிஷமான ஒன்று. மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது ஒன்றுதான் வழி என்ற மனநிலையிலிருந்து வெளிவர வேண்டும். இங்கு வழிகள் ஏராளம். அதற்கு உதாரணமாக நமது ஆபிரகாம் லிங்கனை சொல்லலாம். ஏனென்றால் பலமுறை தோல்வி அடைந்த பிறகே அவர் ஜனாதிபதி ஆனார். எனவே தோல்விதான் வெற்றிக்கான முதற்படியே தவிர அது ஒரு முடிவே இல்லை. ஒருவர் மற்றவரோடு ஒப்பிடுதல் கூடாது. போட்டி பொறாமை இன்றி வாழ்தல் நல்லது.


தேர்வு எழுதும் மாணவர்கள்

சிங்கார சென்னை 2.0 பற்றிய உங்களது கருத்து என்ன?

தமிழ்நாட்டின் முதலமைச்சர் தற்போது ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதாவது இந்தியாவிலே முதல் முறையாக நாவீன முறையில் குப்பைகளை அகற்றும் திட்டம், பாலங்கள் அமைத்தல், பள்ளிகளை செம்மை படுத்துதல் போன்ற திட்டங்கள் மட்டுமின்றி சென்னையில் உள்ள அனைத்து மக்களுக்கும் பூங்காக்கள் அமைத்து தரும் திட்டம், சாலைகளை மேம்படுத்துவது, அதைப்போலவே அனைத்து மயானங்களும் ஒரே சீராக இருக்க வேண்டும் என்று அதனை சீர்படுத்துவது, கால்நடை மருத்துவமனைகள் அமைத்து தருவது போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதுதவிர சாதாரண அடித்தட்டு மக்கள் தெரு முனைகளில் மீன்கள் விற்பதை தவிர்க்கும் வகையில், பெரியளவில் ஜிந்தாதிரிப்பேட்டிலும், நொச்சிக்குப்பத்திலும் தங்களது மீன் விற்பனையை செய்யும் வகையில் இந்த சிங்காரச் சென்னைத் திட்டம் செயல்படுத்தபப்டுகிறது. இதுபோல் இன்னும் பல திட்டங்கள் எல்லா மக்களுக்கும் சென்று சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முழுவதும் கீழ்தட்டு, அடித்தட்டு மக்கள் மற்றும் மேல் வர்க்கத்தினருக்கும் ஏற்ற திட்டமாக இருக்கும். இப்படி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தான் இந்த சிங்காரச் சென்னை திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.


சிங்கார சென்னை 2.0 திட்டம்

கீழ் அடித்தட்டு மக்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் நிலையில் அவர்களின் அடுத்தகட்ட முயற்சி என்னவாக இருக்க வேண்டும்?

இருபுறமும் சரிவர செயல்படுதல் வேண்டும். எனக்கு சுகாத்துறையிலே பல ஆண்டுகள் பணியாற்றக் கூடிய வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அதற்கு முன்னரே சுனாமி தாக்கம் ஏற்பட்ட போது அங்கு பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அரசுத் துறைகளிலும் அல்லது மாநகராட்சிகளிலும் பணியாற்றுபவர்கள் ஒன்றை உணர வேண்டும். இது போன்ற துறைகள் நமக்கு சம்பளம் கொடுத்து, மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளனர். இங்கு ஏராளமான தொண்டுள்ளங்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு ஈடுபடுகிறது. அதுபோல மக்களை நேரில் சந்திக்க வேண்டும் அல்லது தொலைப்பேசியிலாவது அவர்களை எளிதில் தொடர்பு கொள்ள வேண்டும், அவர்களின் குறைகளுக்கு செவிசாய்த்து முடிவுகளை எடுத்தல் நல்லது. அதை தட்டிக் கழித்தல் நல்லதல்ல. புகார்கள் ஏதேனும் தெரிவிக்க வேண்டும் என்றால் அடுத்தகட்டமாக மக்கள் 1913 எண்ணை கூட தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அப்படி பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் சிலவற்றை நிரந்தர தீர்வுகளின் அடிப்படையில் அதிகாரிகள் தீர விசாரித்து ஆராய்ந்து முன்னெடுத்தல் வேண்டும். மருத்துவமனைகளை சீர் செய்வது, மழைநீர் வடிகால் சீரமைப்பது போன்றவற்றை தட்டிக் கழிக்காமல் உயர் அதிகாரிகள் இடத்தில் கொண்டு சேர்க்க வேண்டியது அரசு பணியாளர்களின் கடமை. அரசு அதிகாரிகளிடம் நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். பிற அரசு துறை சார்ந்த குறைகளை மக்கள் முன்வைத்தாலும் அதிகாரிகள் அதனை கவனிக்க வேண்டும். அவர்களிடம் உங்கள் வேலை, எங்கள் வேலை என்று பிரித்துக் காரணம் கூறுவது தவறு. பொது மக்களும் ஒன்றை உணர வேண்டும். பெரும் திட்டங்கள் வரும் பொழுது அதன் தாக்கமும் இருக்கத்தான் செய்கிறது. அதனை எல்லாம் ஈடு செய்வதற்கான முயற்சி தொடர்ந்து நடக்கும்.


மாநகராட்சி பணிகள்

Updated On 18 Sep 2023 6:50 PM GMT
ராணி

ராணி

Next Story