இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

‘சிங்கார சென்னை’, ‘மெட்ரோ சிட்டி’, ‘வந்தாரை வாழவைக்கும் சென்னை’ என அனைவராலும் புகழப்படும் முக்கிய நகரமான சென்னையின் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் மழை, வெள்ளம் தவிர பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக மீனவர்கள் அவ்வப்போது சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று எண்ணெய் கசிவு. கடந்த சில நாட்களுக்கு முன்பு மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை காரணமாக வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அரசாங்கத்தின் நடவடிக்கையால் ஓரிரு நாட்களுக்குள் பல்வேறு பகுதிகளிலும் இயல்பு நிலை திரும்பியது. ஆனால் மழை வெள்ளத்தைத் தொடர்ந்து அதனுடன் கலந்து வந்த எண்ணெயால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தையே இழந்து தவித்து வருகின்றனர் சென்னையின் புறநகர் பகுதி மக்களான எண்ணூர்வாசிகள்.

எண்ணெய் கசிவால் மக்கள் சந்திக்கும் சிரமங்கள்

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் பெய்த கடும் மழை தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை உலுக்கிவிட்டது. இந்நிலையில் எண்ணூர் பகுதியிலும் மழை வெள்ளம் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. ஓரிரு நாட்களுக்குள் தேங்கியிருக்கும் தண்ணீர் அகற்றப்படும் என நம்பியிருந்த மக்களுக்கு மூன்றாம் நாள் காத்திருந்தது பேரதிர்ச்சி. வீடுகள் மற்றும் தெருக்களுக்குள் தேங்கியிருந்த தண்ணீருடன் கலந்து எண்ணெயும் வந்ததால் அங்குள்ள மக்கள் செய்வதறியாது திகைத்துப்போயினர். ஏற்கனவே வீடுகளுக்குள் இடுப்பளவு தண்ணீர் தேங்கியிருந்ததால் அவர்களால் வீட்டில் வைத்திருந்த பொருட்கள் மற்றும் வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களைக்கூட காப்பாற்ற முடியாமல் போனது. தற்போது தண்ணீர் வற்றிவிட்டாலும் எண்ணெய் படிமங்கள் வீடுகள் மற்றும் வாகனங்களின்மீது படர்ந்திருப்பதுடன், சாலைகளில் சகதிகளுடன் கலந்திருக்கிறது. இதனால் அங்கு வெளியேயும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும், கடுமையான நெடியும் வீசுவதால் மூச்சு விடுவதற்கே சிரமமாக இருப்பதாகவும், குறிப்பாக, குழந்தைகள் மற்றும் கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.


எண்ணெய் படிவால் பாதிக்கப்பட்டுள்ள கடல் பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள்

எண்ணூர் தவிர, தாழங்குப்பம், நெட்டுக்குப்பம் மற்றும் காட்டுக்குப்பம் பகுதிகளிலுள்ள கடல் பகுதிகளிலும் எண்ணெய் படிவங்கள் பரவியிருக்கின்றன. மேலும் எண்ணெயானது பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு வழியாக கடலிலும் கலந்திருப்பதால் மீனவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். இதனால் வலைகள் மற்றும் படகுகள் அனைத்துமே சேதமானதுடன், மீன்களும் செத்து மிதப்பதாக கண்ணீர் விடுகின்றனர் அப்பகுதி மக்கள். மேலும் அங்குள்ள பெரும்பான்மையான மக்கள் தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள் மற்றும் மீனவர்கள். வீட்டு உபயோகப் பொருட்கள், துணிகள் மற்றும் சிறுவர்களின் பாட புத்தகங்கள் என அனைத்திலும் எண்ணெய் படிந்துவிட்டதால் அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் உடுத்துவதற்கு துணிகளைகூட புதிதாக வாங்கவேண்டிய சூழல் இருப்பதால் பணத்திற்கு எங்கே போவது? என கவலை தெரிவிக்கின்றனர் எண்ணூர் மக்கள்.

இதற்கு முன்பு எப்போது இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டது?

தமிழகத்தில் தொழிற்சாலை அதிகமுள்ள பகுதிகளில் எண்ணூரும் ஒன்று. தொழிற்சாலைகளிலிருந்து கழிவுகளை முறைப்படி வெளியேற்ற அரசு திட்டங்களை வகுத்திருந்தாலும்கூட, இதுபோன்ற எண்ணெய் கசிவுகள் மற்றும் கழிவுகளால் அங்குள்ள மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு முன்பே 2017ஆம் ஆண்டு இதே எண்ணூர் பகுதியில் கச்சா எண்ணெய் கடலில் கலந்து கடுமையான பாதிப்பு ஏற்பட்டதை பெரும்பாலானோர் மறந்திருக்கமாட்டார்கள். இரு கப்பல்கள் மோதிக்கொண்டதால் எண்ணூர் துறைமுகம் அருகே கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடலில் கலந்ததால் அந்த பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் இறந்துபோயின. மேலும் 10 நாட்களுக்கு மேல் ஆகியும் அந்த பகுதியில் எண்ணெய் கழிவுகளை முழுமையாக அகற்ற முடியவில்லை. மீனவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து, பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனால் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், மத்திய அரசு, கப்பல்துறை இயக்குநரகம் என அனைத்திற்கும் விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பியது தேசிய பசுமை தீர்ப்பாயம். கச்சா எண்ணெய் கசிவால் ஏற்பட்ட கழிவுகளை அகற்றவும், தண்ணீர் இயல்பு நிலைக்கு திரும்பவும் நீண்ட நாட்களானது.


எண்ணெய் அகற்றும் பணியில் பொதுமக்கள் மற்றும் பேரிடர் மீட்புத் துறையினர்

நீதிமன்றத்தின் காட்டமும் அரசின் நடவடிக்கையும்

இந்நிலையில், தற்போது எண்ணெய் கசிவானது மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் ஊடுருவி இருப்பதால் தேசிய பசுமை தீர்ப்பாயமே தாமாக முன்வந்து வழக்கை எடுத்திருக்கிறது. டிசம்பர் 12ஆம் தேதி நடந்த இந்த வழக்கு விசாரணையின்போது, ‘எவ்வளவு எண்ணெய் வெள்ள நீருடன் கலந்தது? இதுவரை எவ்வளவு எண்ணெய் அகற்றப்பட்டுள்ளது? எண்ணெய் கசிவால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்? எண்ணெய் மேலும் பரவாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப்பட்டது? எத்தனை கடைகள் மற்றும் வீடுகள் இந்த எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டுள்ளன?’ என்பது போன்ற பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் அடுக்கியதுடன், அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை எனவும் சாடினார்.

பொதுவாக இதுபோன்ற எண்ணெய் கசிவு ஏற்பட்டால், பூம்ஸ் எனப்படும் தடுப்பான்கள் எண்ணெய் தேங்கியிருக்கும் பரப்பை சுற்றி அமைக்கப்பட்டு, ஸ்கிம்மர்கள் எனப்படும் பிரித்து அகற்றும் கருவிகளைக்கொண்டு எண்ணெயை அகற்றுவர். இதை 2017ஆம் ஆண்டு எண்ணெய் கசிவின்போது செய்யத் தவறிய அரசாங்கம், தற்போது போர்க்கால அடிப்படையில் இதனை செயல்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து, பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு, தேவையான ஆட்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்றும் பணிகளை துரிதபடுத்தியுள்ளதாக தமிழக சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹூ அறிக்கை வெளியிட்டார். மேலும் தமிழக அரசு சார்பில் எண்ணெய் அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, நெட்டுக்குப்பம் பகுதியில் எண்ணெய் அகற்றும் பணிகளை ஒருங்கிணைக்க, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையினரால் ஒருங்கிணைப்பு மையமும் நிறுவப்பட்டது. மேலும், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, கால்நடை பாதுகாப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக அதிகாரிகளும் அந்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டு, எண்ணெய் அகற்றும் பணிகளை கண்காணிக்க அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.


தேசிய பசுமை தீர்ப்பாயம் - தமிழக அரசு

சிபிசில் நிறுவனத்தின் தவறால் நிகழ்ந்ததா எண்ணெய் கசிவு?

இதற்கிடையே மணலி, எண்ணூர் பகுதிகளில் வெள்ள நீருடன் எண்ணெய் கலந்தது இயற்கை பேரிடர் அல்ல என்றும், செயற்கையாக நடந்தது என்றும், பசுமை தீர்ப்பாயத்தில் நடந்த வழக்கில் தமிழக அரசு, சிபிசிஎல் (சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்) மீது குற்றம் சாட்டியது. பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து வந்த தண்ணீர் சிபிசிஎல் நிறுவனத்தின் வளாகத்துக்குள் புகுந்ததால் சிபிசிஎல்லின் தெற்கு வாயில் அருகேயுள்ள மழைநீர் வெளியேறும் பகுதியின் அருகே எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் இடைக்கால நிவாரணத் தொகையை சிபிசிஎல் நிர்வாகம் வழங்கவேண்டும் எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை வைத்தது. ஆனால் ஆரம்பத்தில் சிபிசிஎல் நிறுவனத்தின் எந்த குழாயிலும் கசிவு இல்லை எனவும், இது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் விசாரணையில் அந்நிறுவனத்தின் தவறுதான் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் 40 டன் எண்ணெய் கழிவுகளை சிபிசிஎல் (டிசம்பர் 15 வரையிலான தரவுகளின்படி) நிறுவனம் அகற்றி இருப்பதாகவும், அந்நிறுவனத்தில் இருந்து மொத்தமாக எவ்வளவு எண்ணெய் கசிவு ஏற்பட்டது என்பதை கண்டறிய நிபுணர் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக, அந்த எண்ணெய்க் கழிவுகளில் நச்சுத்தன்மை இருப்பதாகவும், சுற்றுச்சூழல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சிபிசிஎல் நிறுவனம் கசிவை கண்டறிந்து அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் எனவும், சிபிசிஎல் மற்றும் அதனுடன் தொடர்புள்ள அனைத்து மையங்களிலும் கசிவு இல்லை என்பதை உறுதிபடுத்த வேண்டும் எனவும், குறிப்பாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.


சிபிசிஎல் நிறுவனம் - எண்ணெய் படிந்த ஆறுகள்

தீர்ப்பாயத்தின் தீர்ப்பு

இதற்கிடையே, மீண்டும் டிசம்பர் 14ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எண்ணெய் கழிவு படர்ந்த பகுதிகளை கணக்கிடுவதற்காகவும் , தண்ணீரில் இருந்து எண்ணெயை அறிவியல் பூர்வமாக பிரித்து எடுக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்தும், கழிவு எண்ணெய் அகற்றப்பட்ட பிறகு தண்ணீரில் ஏற்படும் நச்சுத்தன்மையை சரி செய்வது குறித்தும் தெரிந்து கொள்ள சென்னை ஐஐடியிடம் உதவி கேட்கப்பட்டுள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. உடனே மீனவர் தரப்பு, எண்ணெய் அகற்றப்படுவதில் அரசாங்கமும், சிபிசிஎல் நிறுவனமும் மனித தன்மையோடாவது நடந்துகொள்ள வேண்டும். மீனவர்களுக்கு அடிப்படையான பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்படவில்லை. அப்படி கொடுக்க முடியவில்லை என்றால் மீனவர்கள் கையில் பிளாஸ்டிக் மக் கொடுத்து எண்ணெய் அள்ள சொல்வதற்கு பதிலாக சிபிசிஎல் அதிகாரிகள் கையில் பிளாஸ்டிக் மக் எடுத்து எண்ணெயை அள்ளட்டும் என்று தெரிவித்தது.

இதற்கு பதிலளித்த சிபிசிஎல் நிர்வாகம் தரப்பு, நாங்கள் மீனவர்களை எண்ணெய் அள்ளுவதற்கு அழைக்கவில்லை. அவர்களே தாமாக முன்வந்து ஈடுபடுகின்றனர். தேவைப்படும் நபர்களை முறையான உபகரணங்கள் கொடுத்து சேர்த்துக்கொள்கிறோம் என்றது. அப்போது அரசு தரப்பில், நாங்கள் என்ன வேலை செய்ய வேண்டும் என மீனவர்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அரசு எண்ணெய் அகற்றும் பணியை முறையாக செய்து வருகிறது. வழக்கு தொடுத்தவரை திருப்திப்படுத்த வேலை செய்யமுடியாது என்று கூறியது.


எண்ணெய் அகற்றும் பணி - மீன்கள் இறப்பு

இந்நிலையில், மீனவர்கள் எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும்போது மணலி தொழிற்சாலைகள் சங்கத்தினரும் எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபடாதது அதிருப்தி அளிக்கிறது என தீர்ப்பாயம் தெரிவித்ததை அடுத்து, எண்ணெய் அகற்றும் பணிகளை முடித்து அறிக்கை அளிக்கவேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் வீடுகளுக்குள் படிந்த எண்ணெய் மற்றும் இழப்பீடுகளை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், தங்களுக்கான இழப்பீடு தொகையை நியாயமான முறையில் வழங்கவேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் அதிகப்படியான தொழிற்சாலைகள் இருக்கும் பகுதியான எண்ணூரில் அனல் மின் நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் என நிறைய இருப்பதால் ஏற்கனவே காற்று மாசுபாடு, தண்ணீர் மாசுபாடு என பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர் அப்பகுதி மக்கள். இந்நிலையில் மழை வெள்ள பாதிப்பே சற்றும் குறையாத நேரத்தில் பெட்ரோலிய எண்ணெய் கசிவு போன்றவற்றால் நிலைகுலைந்து போயுள்ளனர் எண்ணூர் மக்கள். இதுபோன்ற எண்ணெய் கசிவு மற்றும் மாசுபாட்டால் பொதுமக்கள் பாதிப்படையாமல் இருக்க அரசு சில தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் ஒரு பிரச்சினை ஓய்வதற்குள் அடுத்த பிரச்சினை என மக்களின் வாழ்வாதாரமும், இயல்பு வாழ்க்கையும்தான் கடுமையாக பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

Updated On 25 Dec 2023 7:27 PM GMT
ராணி

ராணி

Next Story