இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

அக்டோபர் 7ஆம் தேதி. யூதர்களின் பிரதான பண்டிகையான ‘சுக்கோட்’ என்கிற கூடாரப் பண்டிகையின் கடைசி நாள் கொண்டாட்டம் அது. இசை நிகழ்ச்சியில் இஸ்ரேல் மக்கள் லயித்துக் கொண்டிருக்க, வான், தரை மற்றும் கடல் என பல வழிகளில் ஊடுருவிய ஹமாஸ் படையினர் பொதுமக்கள்மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஸாவின்மீது இஸ்ரேல் படை தாக்குதல் நடத்தியது. அதில் கிட்டத்தட்ட 1,400க்கும் மேற்பட்ட (அக்டோபர் 12 வரை) பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் கட்டடங்கள் தகர்க்கப்பட்டதால் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேறினர். இஸ்ரேலின் இந்த தாக்குதலால் காஸாவில் 450 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் காஸாவிற்கு செல்லும் மின்சாரம், குடிநீர் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் துண்டித்திருக்கிறது இஸ்ரேல். ஹமாஸ் அமைப்பினரை அழித்து ஒழிக்கும்வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று இஸ்ரேல் சூளுரைத்திருக்கிறது. இந்தப் போரில் அமெரிக்கா, இந்தியா உட்பட பெரும்பாலான பெரிய நாடுகள் இஸ்ரேல் பக்கம் நிற்கின்றன. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் நடுவே போர் உருவானது எப்படி? இரண்டு நாட்டுக்கும் இடையேயான வரலாற்று பகை என்ன? உலகின் பெருவாரியான நாடுகள் இஸ்ரேல் பக்கம் நிற்பது ஏன்? யார் இந்த ஹமாஸ் படையினர்? இந்த போர் காஸாவின் அழிவுக்கு வழிவகுக்குமா? என்பது குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

காஸா - ஓர் பார்வை!

பாலஸ்தீன நாட்டின் ஒரு பகுதிதான் காஸா. அதாவது பாலஸ்தீன நாடானது வெஸ்ட் பேங்க் மற்றும் காஸா என இருபகுதிகளாக தனித்தனியாக பிரிந்திருக்கிறது. இந்த நாட்டை நடுவில் அமைந்திருக்கும் இஸ்ரேல் நாடானது பிரிக்கிறது. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக காஸா அமைந்திருந்தாலும் அது 41 கி.மீ நீளமும், 10 கி.மீ அகலமும் கொண்ட மிகச்சிறிய பகுதி. இங்கு சுமார் 22 லட்சம் மக்களே வசிக்கின்றனர். இப்போது பாலஸ்தீனத்தின் ஒருபகுதியாக இருக்கும் காஸா, முதல் உலகப் போருக்குப்பின் பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சொல்லப்போனால் முழு பாலஸ்தீனமுமே பிரிட்டன் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அப்போது அங்கு இஸ்லாமியர்கள் பெரும்பான்மை வகித்தனர். ஹிட்லரின் சர்வாதிகாரத்திலிருந்து தப்பிவந்த யூதர்கள் சிறுபான்மையினராக இருந்தனர்.


பல்வேறு போர்களுக்குப் பின் கையெழுத்தான ‘ஒஸ்லோ ஒப்பந்தம்’

நாட்கள் செல்ல செல்ல புனித நூல்களை அடிப்படையாகக் கொண்டு தங்கள் முன்னோர்கள் வசித்த பூமி அது என்றும், எனவே யூதர்களுக்கென்று தனி நாடு உருவாக்கப்பட வேண்டும் என்றும் யூதர்கள் பிரிட்டனிடம் கோரிக்கை வைத்தனர். பாலஸ்தீனம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், 1948ஆம் ஆண்டு ஐ.நாவின் ஒப்புதலோடு யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கென்று இஸ்ரேல், பாலஸ்தீனம் என இருநாடுகள் உருவானது. நாடு இரண்டாக பிரிக்கப்பட்டாலும் இரு இனத்தவரின் புனித பூமி மற்றும் முக்கிய ஸ்தலமாக கருதப்பட்ட ஜெருசலேம் சர்வதேச நகரமாக அறிவிக்கப்பட்டது. 1967ஆம் ஆண்டு நடந்த மத்திய கிழக்கு போருக்கு முன்பு எகிப்தின் கட்டுப்பாட்டில் இருந்த காஸா, அதன்பின்பு இஸ்ரேல் கைவசம் வந்தது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ‘ஒஸ்லோ ஒப்பந்தம்’ கையெழுத்தானது.

ஆனால் அந்த ஒப்பந்தம் நீண்டகாலம் நீடிக்கவில்லை. ஆண்டாண்டு காலமாக தொடர்ந்துவந்த பகை நீடித்தது. ஒருவழியாக 2005ஆம் ஆண்டு காஸாவில் குடிபெயர்ந்திருந்த சுமார் 7000 மக்களையும், தனது படைகளும் இஸ்ரேல் திரும்பப்பெற்றது. அதன்பிறகு வெஸ்ட் பேங்க் மற்றும் காஸா என இரு பகுதிகளாக பிரிந்திருந்த பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை வன்முறைமூலம் கட்டுக்குள் கொண்டுவந்தது ஹமாஸ் என்கிற அமைப்பு. அந்த கணம் முதல் பாலஸ்தீனத்தின் எல்லை நாடுகளான இஸ்ரேல் மற்றும் எகிப்து இரண்டுமே தங்கள் பாதுகாப்பை கருத்தில்கொண்டு கட்டுப்பாடுகளை விதித்தன. அதாவது அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களையும் உள்ளே வெளியே கொண்டு செல்வதற்கும் மக்கள் வந்து செல்வதற்குமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.


ஹமாஸ் அமைப்பினர்

யார் இந்த ஹமாஸ்?

பாலஸ்தீன நாட்டை இஸ்ரேல் ஆக்கிரமித்தது முதல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் முக்கிய அமைப்புகளில் ஒன்று ஹமாஸ். 1987-ஆம் ஆண்டில் பாலஸ்தீன அகதியான ஷேக் அகமது யாசின் என்பவரால் தொடங்கப்பட்டது ஹமாஸ் அமைப்பு. அரபு மொழியில் ஹமாஸ் என்பதற்கு ‘தணியாத அதீத ஆர்வம்’(zcal) என்று அர்த்தம். இந்த அமைப்பின் நோக்கமே வெஸ்ட் பேங்க், இஸ்ரேல் மற்றும் காஸா அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரே நாடாக உருவாக்கவேண்டும் என்பதுதான். மேலும் தங்கள் இடத்தை ஆக்கிரமித்த இஸ்ரேலை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த அமைப்பானது இதுவரை இஸ்ரேல் ராணுவம் மற்றும் பொதுமக்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.

இதனால் 1997ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பை ஒரு பயங்கரவாதக் குழு என அறிவித்தது அமெரிக்கா. இதையே ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் அறிவித்துள்ளன. சமூக சேவை குழு மற்றும் ராணுவ பிரிவு என பிரிக்கப்பட்டுள்ள ஹமாஸ் அமைப்பின் ராணுவ பிரிவை மட்டும் பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது நியூசிலாந்து. 2006ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நிறைய இடங்களில் வெற்றிபெற்ற ஹமாஸ், உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருந்த பாலஸ்தீன அரசிடமிருந்து வன்முறை மூலம் காஸாவை கைப்பற்றியது. ஃபதா இயக்கத்தின் தலைமைத்துவத்தை கொண்ட பாலஸ்தீன அரசு வெஸ்ட் பேங்க் பகுதியை மட்டும் ஆண்டுவருகிறது.

ஹமாஸின் இந்த செயலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக இஸ்ரேல் மற்றும் எகிப்து நாடுகள் எல்லைப்பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன. மேலும் ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை சேகரிக்காவண்ணம் கட்டுப்படுத்தவே இந்த கட்டுப்பாடுகள் என்று அறிவித்தன. இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் போதிலும் அக்டோபர் 7ஆம் தேதி எதிர்பாராத விதமாக இஸ்ரேல் நாட்டின்மீது வான்வெளி தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலுக்குள் ஊடுருவி பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றதுதான் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.


ஹமாஸ் அமைப்பை எதிர்க்கும் அமெரிக்கா ஆதரிக்கும் ஈரான்

ஹமாஸிற்கு கிடைத்திருக்கும் ஆதரவும் எதிர்ப்பும்

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஹமாஸ் அமைப்புக்கு தீவிர எதிர்ப்பு காட்டிவந்தாலும், இஸ்லாமிய நாடுகளான ஈரான், கத்தார் மற்றும் துருக்கி போன்ற அரபு நாடுகளின் ஆதரவை பெற்றிருப்பது ஹமாஸிற்கு ஒரு பக்கபலம் என்றே சொல்லலாம். இஸ்ரேலிடமிருந்து பாலஸ்தீன பகுதிகளை மீட்பதற்கான ஆயுதப் போராட்டத்தை கையிலெடுத்திருக்கும் ஹமாஸ் அமைப்பு திடீரென இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளைக்கொண்டு தாக்குதல் நடத்தியது எப்படி? மேலும் பலத்த பாதுகாப்பு மற்றும் ராணுவப்படை கொண்ட இஸ்ரேல் நாட்டுக்குள் ஊடுருவியது எப்படி? என்ற கேள்வி உலக நாடுகளிடையே எழுந்திருக்கிறது.

மிகக் குறுகிய நிலப்பரப்பையே கொண்ட காஸாவானது தரைக்கு கீழ் மற்றும் தரைக்கு மேல் என இரண்டு அடுக்குகளைக் கொண்டது. தரைக்கு மேல் பகுதியில் பொதுமக்கள் வசித்துவருகின்றனர். தரைக்குக் கீழே ஹமாஸ் அமைப்பினர் வசித்து வருகின்றனர். இஸ்ரேல் பொதுமக்களை ஹமாஸ் தாக்கியதால் பதிலுக்கு இஸ்ரேலும் காஸாமீது தொடர் தாக்குதல்களை நடத்திவருகிறது. மேலும் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்களை விடுவிக்கும் வரை மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிபொருள் என எதுவும் காஸாவிற்கு வழங்கப்பட மாட்டாது என திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது இஸ்ரேல்.


இஸ்ரேலின் தாக்குதலுக்கு பின் காஸாவின் நிலை

இஸ்ரேலுக்கு ஆதரவாக கடற்பகுதியில் தனது அதிநவீன போர்க்கப்பல் மற்றும் படைகளை இறக்கியிருக்கிறது அமெரிக்கா. காஸா எல்லையைச் சுற்றிலும் 3 லட்சத்துக்கும் அதிகமான படைவீரர்களை அதிநவீன ஆயுதங்களுடன் நிறுத்தியிருக்கிறது இஸ்ரேல். மற்றொரு எல்லையான எகிப்தும் காஸாவிற்கு உதவ முன்வரவில்லை.

ஒருபுறம் இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், காயம்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூட வசதிகளற்ற சூழலில் நிர்கதியாக நிற்கிறது காஸா. ஹமாஸை ஒழித்துக்கட்டும் வரை ஓயமாட்டோம் என்கிறது இஸ்ரேல். இரு படைகளின் இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ அப்பாவி பொதுமக்கள்தான். தற்போது ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே வெடித்துள்ள இந்த போரால் என்னென்ன அசம்பாவிதங்கள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளன உலக நாடுகள்.

அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் - அதற்கு இஸ்ரேலின் பதிலடி - உலக நாடுகளின் ஆதரவும் புறக்கணிப்பும் - பொதுமக்களின் நிலை என்ன? இந்த பதட்டமான சூழல் எப்படியெல்லாம் மாறலாம்? என்பது குறித்து அடுத்தப் பகுதியில் காணலாம்.

Updated On 25 Oct 2023 4:52 AM GMT
ராணி

ராணி

Next Story