இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

அரசாங்கம் புதிதாக ஒரு சட்டம் கொண்டு வந்தாலோ அல்லது புதிய மாற்றங்களை ஏற்படுத்தினாலோ அதில் திருப்தியடைவோரும் உண்டு; அதிருப்தி அடைவோரும் உண்டு. எப்பேர்பட்ட சிறந்த மாற்றமாக இருந்தாலும் அதை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கும், அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கும் கொஞ்ச நாட்கள் ஆகத்தான் செய்யும். அப்படித்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் அதி நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயண தூரத்தை குறைக்கவும் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தைப் போன்ற சௌகர்யம் இதில் இருக்குமா? என்ற கேள்வியை முன்வைக்கின்றனர் பொதுமக்கள். ஏற்கனவே இருக்கும் கோயம்பேடு பேருந்து நிலையத்தைவிட மிகப்பெரிய பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் சிறப்பு அம்சங்கள் மற்றும் நிறை குறைகளை சற்று விரிவாக காணலாம்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

சென்னைக்கு மிக அருகாமையில் என்று பல விளம்பரங்களில் கேட்டிருப்போம். அப்போதெல்லாம் அதை கேலி கிண்டல் செய்தவர்கள்தான் அதிகம். ஆனால் சென்னையின் முக்கியப்பகுதியான கோயம்பேட்டில் இருந்த பேருந்து நிலையத்தை செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கிளாம்பாக்கத்திற்கு மாற்றி அந்த வார்த்தையை உண்மையாக்கிவிட்டது தற்போதைய அரசாங்கம். என்னதான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இப்போது திறக்கப்பட்டிருந்தாலும் கடந்த அதிமுக ஆட்சிகாலத்திலேயே, 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தார். 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இப்பணிகள் முடிக்கப்பட்டு, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி மிக எளிமையான முறையில் தற்போதைய முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்டது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ளதைப்போலவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 88.52 ஏக்கர் பரப்பளவில் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையம் பார்ப்பதற்கே பரந்து விரிந்து பிரம்மாண்டமாக காணப்படுகிறது. இது பேருந்து நிலையமா அல்லது விமான நிலையமா என்று பார்ப்பவர்கள் அனைவரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு அதிநவீன தொழில்நுட்பங்களுடனும், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த பேருந்து முனையம்.


கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் பிரம்மாண்ட வெளித்தோற்றம்

இந்த பேருந்து முனையத்தின் சிறப்பு அம்சங்கள்

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின் உள்ளே நுழைந்தவுடன் மக்களை கவர்வது அதன் மேற்கூரைதான். சூரிய வெளிச்சம் உள்ளே வரும்படி அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் சுவர் முழுக்க வண்ண வண்ண ஓவியங்கள், பெரிய தூண்கள், அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் இங்கு செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல், பயணிகள் எளிதில் அனைத்து வசதிகளையும் பெரும்வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, படிகளில் ஏறி இறங்குவதற்கு சிரமப்படும் பயணிகளுக்கு ஏற்ப, எஸ்கலேட்டர்கள், லிஃப்ட் வசதிகள், அவசர சிகிச்சைக்கு மருத்துவ மையம், தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை, 2 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் வகையில் இரண்டு தளங்களில் பார்க்கிங் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கேயே பேட்டரி வாகனங்களை கட்டணம் செலுத்தி சார்ஜ் செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, மொபைல் ஃபோன் சார்ஜிங் வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

வெளியூர்களிலிருந்து இங்கு வரும் பயணிகள் தங்குவதற்கும், பொருட்களை பாதுகாப்பதற்கும் ஏற்ற வகையில் லாக்கர் ரூம்களும், தங்கும் அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்கள், பெண்கள் தவிர திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தனி கழிப்பறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. குளியலறை மற்றும் கழிப்பறைகள் விஸ்தாரமாகவும், அதிநவீன வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர சென்ட்ரல் ரயில் நிலையத்தை போன்றே இலவச மினி பாட்டரி வாகனங்களும் உள்ளே இயக்கப்படுகின்றன. மேலும் சிறு சிறு உணவுக்கடைகள், ஏடிஎம் மையங்கள், டிராவல் ஏஜென்சி அலுவலகங்கள் போன்ற பல்வேறு வசதிகள் இங்கு இருக்கின்றன. இதுதவிர முக்கியமாக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்கி ஓய்வெடுக்க பிரத்யேக அறைகள் அமைக்கப்பட்டிருப்பது இந்த பேருந்து நிலையத்தின் சிறப்பு என்றே சொல்லலாம்.


பேருந்து முனையத்தின் உட்புற தோற்றம் மற்றும் வசதிகள்

இந்த பேருந்து நிலையத்தில் 130 அரசு பேருந்துகள், 85 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் வகையில் நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர கிட்டத்தட்ட 300 பேருந்துகளை நிறுத்துவதற்கான தனிப்பகுதியும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து தினமும் 2,310 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டிருக்கிறது.

இதுதவிர, வெள்ளம் வராமல் இருக்க, இங்கு 13 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் தென்னக ரயில்வேயுடன் இணைந்து இப்பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது தமிழக அரசு. இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கென்று தனி காவல் நிலையம் தேவைப்படுகிறது. அதனை 13 கோடி ரூபாய் செலவில் கட்டவிருப்பதாகவும், கூடவே 14 கோடி ரூபாய் செலவில் பூங்கா வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகவும் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே முதல்வர் அறிவித்திருந்தார். மேலும் இந்த பேருந்து நிலையத்திற்கு அருகே ஊரப்பாக்கம் ரயில் நிலையம் இருப்பதால் இரண்டையும் இணைக்கும் வகையில் ஸ்கைவாக் நடை மேம்பாலம் அமைக்கவும், விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோவை நீட்டிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னை புறநகர் வாசிகளும் எளிதில் பயனடைவார்கள்.

கோயம்பேடுக்கு மாற்று ஏன்?

சரி, இத்தனை வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது மக்களுக்காகத்தான். ஆனால் ஏற்கனவே ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய பேருந்து நிலையம் என பெயர் பெற்ற கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் கூட சிறு சிறு உணவுக்கடைகள், ஹோட்டல்கள், லாக்கர் ரூம்கள், ஏடிஎம் மையங்கள், தங்கும் வசதி மற்றும் டிராவல் ஏஜென்சி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கின்றன. அப்படி இருந்தும் ஏன் தற்போது கிளாம்பாக்கத்திலும் மற்றொரு பேருந்து முனையம் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். அதற்கு அரசாங்கம் தரப்பில் முக்கிய காரணமாக சொல்லப்படுவது கூட்ட நெரிசல். 2002ஆம் ஆண்டு கோயம்பேட்டில் பேருந்து நிலையம் திறக்கப்படுவதற்கு முன்புவரை சென்னையின் முக்கிய பேருந்து நிலையம் பாரிஸ் கார்னரில்தான் அமைந்திருந்தது.


கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் விழாக்காலங்களில் ஏற்படும் வாகன நெரிசல்

அங்கிருந்து அண்ணா சாலை வழியாகத்தான் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் விளைவாகத்தான் கோயம்பேடு பேருந்து நிலையம் உருவானது. கோயம்பேடு, சென்னை மாநகரின் மையப்பகுதியாக இருப்பதுடன், வட மற்றும் தென் சென்னை பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதற்கும் வசதியாக இருந்தது. ஆனால் நாளடைவில், ஜவஹர்லால் நேரு சாலை, ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. குறிப்பாக விழாக்காலங்களில் வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் பெருங்களத்தூர் வரை ஸ்தம்பித்து நிற்பதை ஒவ்வொரு முறையும் பார்க்க முடிந்தது. அது போலவே துரைப்பாக்கம், ஈசிஆர் சாலைகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இந்த பிரச்சினைக்கு முடிவுகாண உருவாக்கப்பட்டதுதான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். இதனால் வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் எந்தவித இடையூறுமின்றி செல்லமுடியும். குறிப்பாக, விழுப்புரம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு இந்த பேருந்து முனையம் வசதியாக இருக்கும்.

பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்கள்

என்னதான் இத்தனை வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வரும் மக்கள் இறங்குவது என்னவோ செங்கல்பட்டு மாவட்டத்தில்தான். அங்கிருந்து சென்னைக்கு வர மாநகர பேருந்துகளில் பயணிக்க வேண்டி இருக்கும். அப்படி வந்தாலும் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் நடந்தால்தான் வெளியூர் பேருந்துகள் இருக்கும் இடத்தை அடையமுடியும். ஆனால் இப்போது கோயம்பேட்டிலிருந்து வெளியூர்களுக்கு டிக்கெட் பதிவு செய்திருக்கும் பயணிகளும் கிளாம்பாக்கம் சென்றுதான் தங்களுடைய பேருந்துகளை பிடிக்கவேண்டி இருக்கிறது. அப்படி நகர பேருந்துகளில் ஏறி அங்கு சென்றாலும் லக்கேஜ்களை தூக்கிக்கொண்டு நீண்டதூரம் நடக்கவேண்டி இருக்கிறது என வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் இதுகுறித்த தெளிவான அறிவிப்பை அரசு முன்பே வெளியிட்டிருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர் பொதுமக்கள். மேலும் வெளியூர்களிலிருந்து வரும் பலருக்கு எஸ்கலேட்டர்கள் மற்றும் லிஃப்ட்களில் பயணிப்பதற்கு சிரமமாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.


கோயம்பேடு - கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களுக்கு இடையேயான தூரம் - பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம்

கோயம்பேட்டில் இறங்கினால் சென்னையின் எந்த பகுதிக்கும் எளிதாக செல்லமுடியும். ஆனால் இந்த பேருந்து நிலையம் வெகு தூரத்தில் இருப்பதாகவும் இதனால் இரண்டு மூன்று பேருந்துகள் மாறி செல்லும்போது கடினமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். குறிப்பாக, வட சென்னையிலிருந்து கோயம்பேட்டிற்கு வருவதே சற்று தொலைவாகத்தான் இருக்கும். இப்போது கிளாம்பாக்கம் என்றால் சுமார் 50 கி.மீ பயணிக்கவேண்டி இருக்கும். மேலும் திருவொற்றியூர் போன்ற பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் வரை செல்ல போதிய பேருந்து வசதிகள் இல்லை என்கின்றனர் வட சென்னைவாசிகள். அப்படியே மின்சார ரயிலில் பயணித்தாலும் வண்டலூர் அல்லது ஊரப்பாக்கத்தில் இறங்கி சென்றால் தனியாக ஆட்டோ பிடித்து செல்லவேண்டி இருப்பதாகவும் கூறுகின்றனர். இதுதவிர, பேருந்து நிலையத்துக்குள் விற்கப்படும் உணவுகளின் விலை மற்றும் பார்க்கிங் கட்டணம் போன்றவை சற்று குறைக்கப்பட வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இதுபோன்று பயணிகள் முன்வைக்கும் குறைகள் அனைத்தும் விரைவில் ஒவ்வொன்றாக தீர்க்கப்படும் என்கிறது சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம். தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பகுதிகளிலிருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கென குத்தம்பாக்கத்தில் மற்றொரு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட திட்டமிடப்பட்டு வருகிறது. இப்படி பேருந்து நிலையங்கள் மாற்றப்படுவதால் அதிநவீன வசதிகள் ஒருபுறம் செய்துகொடுக்கப்பட்டாலும் மற்றொரு புறம் பொதுமக்கள் மாற்றங்களை பழக்கப்படுத்திக்கொள்வதற்குள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர் என்பதில் சந்தேகமில்லை.

Updated On 15 Jan 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story