இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கோவை பொள்ளாச்சியில் பகலில் போலீஸாகவும், இரவில் திருடனாகவும் மாறி பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட பலே திருட்டு காவலர் கைதான அதிர்ச்சிகரமான குற்ற நிகழ்வின் பின்னணியை விவரிக்கின்றது இந்த பதிவு.

பொள்ளாச்சியில் பெண்களிடம் அரங்கேறிய செயின் பறிப்பு சம்பவங்கள்

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி சாய்பாபா காலனியைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் தனது கணவருடன் கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதியன்று அங்குள்ள ஜோதி நகர் மினர்வா பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போதுதான் யாருமே எதிர்பார்க்காத அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியது. ஆம்... அப்போது பதிவு எண் இல்லாத புல்லட் பைக்கில், முகம் தெரியாமல் ஹெல்மெட் அணிந்து வந்த அந்த மர்ம நபர் தனது கணவருடன் சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பியுள்ளார். செயினை பறி கொடுத்த அந்த பெண்ணும் கணவரும் அதிர்ச்சியில் செய்வதறியாது அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். உடனடியாக அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகாரளித்துள்ளனர்.


திருட்டு காவலர் - பொள்ளாச்சி செயின் பறிப்பு சம்பவம்

இச்சம்பவத்தை தொடர்ந்து அதேபோன்ற ஒரு செயின் பறிப்பு சம்பவம் அப்பகுதியில் மீண்டும் அரேங்கேறியுள்ளது. ஆம் அங்குள்ள கோலார்பட்டியைச் சேர்ந்த அம்சவேணி என்ற பெண் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மீண்டும் மின்னல் வேகத்தில் தனது புல்லெட் பைக்கில் வந்த அதே மர்ம நபர் அந்த பெண் தனது கழுத்தில் அணிந்திருந்த செயினை பட்டென்று பறித்துக் கொண்டு அங்கிருந்து மாயமாய் தப்பித்துள்ளார். பட்டப் பகலில் நடைபெற்ற இந்த துணிகர சம்பவங்கள் குறித்து மற்றுமோர் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர் .

செயின் பறிப்பு திருடனாக போலீஸ் மாறியது எப்படி?

அந்த மர்ம நபரால் தங்களது நகைகளை இழந்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காவல்துறையினருக்கே பெருத்த அதிர்ச்சியும் ஆச்சர்யமும் காத்திருந்தது.


காவலர் சபரி - வழக்குப்பதிவு செய்யப்பட்ட பொள்ளாச்சி காவல் நிலையம்

காவல்துறையினரின் சிசிடிவி காட்சி ஆராய்ச்சி சோதனையில் காவலர் சபரி எனபவர்தான் அந்த செயின் பறிப்பு குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து காவலர் சபரிகிரியை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த செயின் பறிப்பு காவலரிடமிருந்து, 8 சவரன் தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக பணி புரிந்து வருவதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். காவல்துறையினருக்கு அவர் அளித்த பரபரப்பான வாக்குமூலத்தில் தனக்கு நிறைய கடன் சுமை இருந்ததால்தான் இப்படி செயின் பறிப்பில் ஈடுபட்டேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் அப்பகுதிகளில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்களில் இவருக்கு தொடர்பு உண்டா? என்றும் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


செயின் பறிப்பு மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட போலீஸ் (உ.ம்)

உண்மையாகி போன 'வேலியே பயிரை மேய்ந்த கதை'

"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்ற பாடல் வரி தற்போது காவலரை பார்த்து பாடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் வேலியே பயிரை மேய்ந்துவிட்ட கதை உண்மையாகி போனதென்னவோ கசப்பான நிஜம்.

எது எப்படியோ பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய, குற்றங்களை தடுக்க வேண்டிய காவல்துறைக்கே, அதில் பணியாற்றும் சில காவலர்கள் இப்படிப்பட்ட அவலச் செயல்களில் ஈடுபடுவது கண்ணியமிக்க காவல்துறையை களங்கப்படுத்தும் செயலாக மாறி விட்டதென்றே கூற முடியும். மேலும் ஒரு தலைமைக் காவலரே இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடம் அதிர்ச்சியையும், சக காவலர்களிடம் முக சுளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்ற பாடல் வரி தற்போது காவலரை பார்த்து பாடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் வேலியே பயிரை மேய்ந்துவிட்ட கதை உண்மையாகி போனதென்னவோ கசப்பான நிஜம்.

Updated On 19 Feb 2024 6:19 PM GMT
ராணி

ராணி

Next Story