இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சமீபத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்தது. அதில் ஒவ்வொரு துறைகளுக்குமான நிதி ஒதுக்கீடு, திட்டங்கள் மற்றும் செயலாக்கங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரானது 12ஆம் தேதி தொடங்கிய நிலையில் தொடக்க நிகழ்வின்போதுதான் ஆளுநர் தனது உரையை வாசிக்காமலேயே வெளிநடப்பு செய்தார். ஆனால் அந்த உரையில் குறிப்பிடப்பட்டிருந்தவற்றின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்தார். அதில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து 19ஆம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பொது பட்ஜெட்டையும், 20ஆம் தேதி வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டையும் தாக்கல் செய்தனர். இதற்கிடையே மத்திய அரசு மாநில அரசுகளிடமிருந்து ஜிஎஸ்டி வரியை பெற்றுக்கொண்டு அவற்றை மாநிலங்களுக்கு பிரித்துக்கொடுப்பதில் பாகுபாடு காட்டுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்த போஸ்டர்களையும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே பார்க்கமுடிகிறது. குறிப்பாக, பாஜக ஆளுகிற குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாயிலிருந்து அதிக நிதி ஒதுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு கிடைக்கும் ஜிஎஸ்டி வருவாய் குறித்தும், மாநிலங்களுக்கு எதன் அடிப்படையில் பிரித்து அளிக்கப்படுகிறது என்பது குறித்தும், தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைக்காதது ஏன்? என்பது குறித்தும் இக்கட்டுரையில் சற்று விரிவாக காணலாம்.

ஜிஎஸ்டி வரி என்றால் என்ன? யாரால் எப்படி கையாளப்படுகிறது?

ஜிஎஸ்டி என்பது சரக்கு மற்றும் சேவை வரி என்பதாகும். இதுகுறித்த சட்டம் 2017ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது. மத்திய மாநில அரசுகளால் பல்வேறு வரிகள் விதிக்கப்படுவதற்கு பதிலாக ஒரே வரியாக இந்த வரி விதிக்கப்படுகிறது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு எந்த கடைகளில் என்ன பொருட்கள் வாங்கினாலும் அதற்கு தரப்படும் பில்களில் CGST மற்றும் SGST என மத்திய, மாநில அரசுகளுக்கு எத்தனை சதவீதம் வரி செல்கிறது என தனித்தனியாகவே குறிப்பிடப்படுகிறது. ஜிஎஸ்டி மற்றும் கலால் வரி என்பது இந்திய அரசின் மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் வருவாய்த்துறை, சிபிஐசி என்று சொல்லக்கூடிய மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் ஒருபகுதி. இந்த துறைகளால் விதிக்கப்படும் வரிகளை எப்படி பயன்படுத்தவேண்டும் என கொள்கைகள் உருவாக்கப்பட்டு அதன்படி வரி வசூலானது மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது.


ஜிஎஸ்டி வரி மற்றும் இந்திய அரசின் மத்திய நிதி அமைச்சகம்

இந்த நிர்வாகத்தின்கீழ்தான், கடத்தல் தடுப்பு மற்றும் சுங்கம், ஜிஎஸ்டி மற்றும் கலால் வரி, போதைப்பொருள் தொடர்பான பணிகள் அனைத்துமே கையாளப்படுகிறது. ஒரு பொருள் தயாரிக்கப்படுவதிலிருந்து அது வாடிக்கையாளரிடம் விற்பனை செய்யப்படும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கு வரி விதிக்கப்படுகிறது. இதனை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டுமானால், மூலப்பொருட்களை வாங்குதல், தயாரிப்பு, மொத்த விற்பனையாளரிடம் விற்றல், சில்லறை விற்பனையாளருக்கு விற்றல் மற்றும் வாடிக்கையாளருக்கு இறுதி விற்பனை என ஒவ்வொரு கட்டத்திலும் இந்த வரி பொருந்தும். முன்பெல்லாம் மாநிலத்திற்குள் விற்பனை செய்யப்படும் பொருட்களின் வருவாயானது மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் சமமாக பகிரப்படும். அதில் வாட் + மத்திய கலால் அல்லது சேவை வரி அடங்கும். 2017 ஜூலை மாதத்திற்கு பிறகு இப்போது சிஜிஎஸ்டி + எஸ்ஜிஎஸ்டி என பிரிக்கப்படுகிறது. இதுவே வேறு மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு, மத்திய விற்பனை வரி + கலால் அல்லது சேவை வரி அனைத்தையும் சேர்த்து ஐஜிஎஸ்டியாக விதிக்கப்படுகிறது.

தமிழக அரசுடன் இணைந்துகொண்ட பிற மாநிலங்கள்

ஒவ்வொரு மாநிலங்களும் தங்களது வரி வருவாயிலிருந்து மத்திய அரசுக்கு குறிப்பிட்ட சதவீதம் அளிக்கும். அதேபோல் மத்திய அரசும் தனது நேரடி வரி வருவாயிலிருந்து மாநில அரசுகளுக்கு பிரித்துக் கொடுக்கும். அப்படி பகிரப்படும் வரியில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டுக்கு குறைவாகவே கிடைப்பதாக குற்றஞ்சாட்டுகிறது தமிழக அரசு. கடந்த ஆண்டின் மழைக்கால பட்ஜெட்டின்போதே, 2014 -15 நிதியாண்டு முதல் - 2021-22 நிதியாண்டு வரை மத்திய அரசின் நேரடி வரியில் தமிழகத்தின் பங்களிப்பு ரூ. 5.16 லட்சம் கோடி. ஆனால் வெறும் 2.08 லட்சம் கோடிதான் வரி பகிர்வின்மூலம் தமிழகத்துக்கு கிடைத்திருப்பதாக தெரிவித்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. இதே சர்ச்சை இந்த ஆண்டும் வலுத்துவருகிறது. இந்நிலையில் இந்தியாவில் வரி வருவாயை பகிர்வதில் தென் மாநிலங்களுக்கும் வட மாநிலங்களுக்கும் இடையே மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக வேறு பல தென்மாநிலங்களும் பேச தொடங்கியிருக்கின்றன.


அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பிப்ரவரி 8ஆம் தேதி டெல்லியில் நடத்தப்பட்ட போராட்டம்

மத்திய அரசின் வரி வருவாய் பகிர்வில் இருக்கும் வட, தென் மாநில ஏற்றத்தாழ்வுகள் குறித்து கேரளா, கர்நாடகா மாநிலங்களும் கடந்த சில நாட்களாகவே குரல் எழுப்பிவரும் நிலையில் தென் மாநிலங்களுக்கு இடையே பொருளாதார கூட்டமைப்பை உருவாக்க முயல்வதாக தெரிவித்திருக்கிறார் கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவகுமாரின் தம்பியும், மக்களவை உறுப்பினருமான டி.கே சுரேஷ். இதனால் விரைவில் தனி நாடு கோரிக்கையைக்கூட எழுப்பவேண்டி இருக்கும் என்றும் பிப்ரவரி 1ஆம் தேதி இந்தியாவின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவர் கூறியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து நிதிப் பகிர்வில் கர்நாடக மாநிலம் புறக்கணிக்கப்படுவதாகவும், அதனை கண்டித்து பிப்ரவரி 8ஆம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தார் அம்மாநில முதல்வர் சித்தராமையா. தமிழ்நாடு அரசும் அதே தேதியன்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது. கேரளாவும் அதே நாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களுக்கு அழைப்பு விடுத்தது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி பிப்ரவரி 8ஆம் தேதி டெல்லியில் நடத்தப்பட்ட போராட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், திமுக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஜம்மு & காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா போன்றோர் கலந்துகொண்டனர். வரி பகிர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான எங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய இங்கு வந்துள்ளோம் எனவும், மாநிலங்களின் கருத்தைக் கேட்காமல் மத்திய அரசு முடிவுகளை எடுத்திருப்பதாகவும் அந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நிதி எதன் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படுகிறது?

ஏற்கனவே கூறியதுபோல, இந்தியாவில் மாநிலங்களிலிருந்து வசூலிக்கப்படும் நிதியை, மத்திய அரசுதான் மாநிலங்களுக்கு பிரித்தளிக்கிறது. இந்த பகிர்வானது பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் நடைபெறும். இதனை எப்படி செய்யவேண்டும் என்பதை ஐபிசி 280-இன் கீழ் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதி ஆணையங்கள் மாற்றியமைக்கின்றன. நிதி ஆணையங்களின் பரிந்துரைப்படி மத்திய, மாநில அரசுகள் நிதியை பகிர்ந்து கொள்கின்றன. 2021 முதல் 2026ஆம் ஆண்டு வரை 15-வது நிதி கமிஷன் அமலில் இருக்கும். இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ள நிலையில் 16- வது நிதி கமிஷனுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. 13வது ஆணையம் வரை 32% மட்டுமே மொத்த வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட நிலையில் 14வது நிதி ஆணையம் அதனை மாற்றியமைத்தது. அதன்படி மாநிலங்களுக்கு நிதி அளவானது 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது.


மக்கள்தொகை மற்றும் நிதி பகிர்வு

பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் வரி பகிரப்படும் என்று கூறப்படுகிறது. அது என்னென்ன என்று பார்க்கலாம். மாநிலங்களின் பரப்பு (15%), மாநிலங்களின் மக்கள் தொகை (15%), மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் மாநிலங்களின் செயல்பாடு(12.5%), வரி வசூலில் மாநிலங்களின் திறன்(2.5%), வனம் மற்றும் சுற்றுச்சூழல்(10%), மிகக்குறைந்த தனிநபர் வருவாய் கொண்ட மாநிலத்திற்கு கூடுதல் நிதி(45%) ஆகிய ஆறு அம்சங்களை கருத்தில்கொண்டே நிதி அளவும் கணக்கிடப்படுகிறது.

தென் மாநிலங்கள் கோபம் கொள்வது ஏன்?

நிதி பகிர்வுக்கான அம்சங்கள் வரையறுக்கப்பட்ட பின் 70களின் காலகட்டத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தன. இதனால் மக்கள்தொகையை வெகுவாக குறைத்தன. ஆனால் வட மாநிலங்கள் இதை கண்டுகொள்ளவில்லை. அதனால் மக்கள்தொகையும் அங்கு உயர்ந்தது. ஆனால் 14வது நிதி ஆணையம் வரை 1971ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பே பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு 15வது நிதி ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில்தான் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பயன்படுத்தப்பட்டு நிதி பகிரப்பட்டது. மக்கள் தொகை கட்டுப்பாட்டை கருத்தில்கொள்ளாததற்கு அப்போதே தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஒருவழியாக 15வது ஆணையம் அதனை மாற்றி அமைத்தது.

இருப்பினும் நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டுவதாக அப்போதிருந்தே தென் மாநிலங்கள் குற்றஞ்சாட்ட ஆரம்பித்தன. 2011 காலகட்டத்தில் ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, தென் மாநிலங்களால் அதிக வரி வருவாயை ஈட்டுகிறது மத்திய அரசு. ஆனால் அவற்றை வட மாநிலங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறது என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். மேலும் 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரையில் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு கூடுதல் புள்ளிகள் வழங்கப்படுமென தெரிவித்துவிட்டு 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை பயன்படுத்தியது. இதனால் 70 மற்றும் 80 களில் மக்கள்தொகையை வெகுவாக கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு எந்த பயனுமில்லாமல் போனது.


தென் மாநிலங்கள் அளிக்கும் வரி வருவாயும், மத்திய அரசின் வரி பகிர்வும் (உ.ம்)

தற்போது அமலில் இருக்கும் 15வது நிதி ஆணைய பரிந்துரைப்படி, மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டுக்கு ரூ. 2,12,680 கோடியும், ஆந்திராவுக்கு ரூ. 2,34,013 கோடியும் கர்நாடகாவுக்கு ரூ. 1,92,514 கோடியும், குஜராத்திற்கு ரூ. 1,84,154 கோடியும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஆனால், பீஹாருக்கு ரூ. 4,78,751 கோடியும், உத்தரபிரதேசத்துக்கு ரூ. 8,55,000 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ. 3,82,010 கோடியும் அளிக்கப்படுகிறது. இதுதான் தற்போது தென் மாநிலங்களுடைய கோபத்தை தூண்டியிருக்கிறது. எப்படியாயினும் வளர்ந்த நாடுகள் பின்தங்கிய நாடுகளுக்கு கைகொடுப்பதுபோல, வளர்ந்த மாநிலங்கள்தானே பின்தங்கிய மாநிலங்களை கைதூக்கி விடவேண்டும் என பாஜக அரசாங்கம் கேள்வி எழுப்புகிறது. ஆனால் தனக்குப்போகத்தான் தானமும் தர்மமும் என வாதாடுகின்றன தென் மாநிலங்கள். பிற மாநிலங்களின் வளர்ச்சிக்கு உதவலாம். ஆனால் எந்த அளவுக்கு உதவ வேண்டும் என வரைமுறை இருக்கிறது என்கின்றன. அவரவர் மாநிலங்களிலேயே வளர்ச்சித் திட்டங்கள் பல வகுக்கப்பட வேண்டிய சூழல் உள்ள நிலையில் அனைத்தையும் பிற மாநிலங்களுக்கு கொடுக்கும் அளவிற்கு தென் மாநிலங்களிடம் வசதி இல்லை என்கின்றன. மேலும் எவ்வளவு கொடுத்தாலும் பின்தங்கிய மாநிலங்களில் எந்த வளர்ச்சியையும் பார்க்க முடியவில்லை. பின்னர் அந்த நிதியை கொண்டு என்ன மாதிரியான திட்டங்கள் செயலாக்கப்படுகின்றன என்ற கேள்வியையும் முன்வைக்கின்றன தென்மாநிலங்கள்.

ஆனால் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் உற்பத்தி அதிகமாக இருப்பதாகவும் அவற்றை, ம.பி மற்றும் உ.பி போன்ற மாநிலங்கள் வரி செலுத்தித்தான் வாங்குவதாகவும் கூறுகிறது பாஜக. மேலும் நிதியை பகிர்ந்தளிப்பதில் மத்திய அரசுக்கு சம்பந்தம் இல்லை எனவும், அந்த அதிகாரம் முழுவதும் நிதி ஆணையத்திடம்தான் இருப்பதாகவும் கூறுகிறது. எப்படியாயினும் இதில் மத்திய அரசும் சம்பந்தப்பட்டிருக்கிறது. இதனால் மாநிலங்கள் கொடுக்கும் வரி வருவாயில் பாதிகூட திரும்ப கிடைக்காததால் பல கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றன தென் மாநிலங்கள். இதனை எந்த விதத்தில் மத்திய அரசு சரி செய்யும் என்பதே இவர்களது வாதமாக உள்ளது. அடுத்த நிதி ஆணையம் வகுக்கப்படும்போது இதற்கான தீர்வுகள் எட்டப்படுமா என்பது கேள்விக்குறியே!

Updated On 4 March 2024 6:15 PM GMT
ராணி

ராணி

Next Story