இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சிபுரிந்து வருகிறது. இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேசிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரசாரங்களில் மும்முரம் காட்டி வருகின்றன. குறிப்பாக எதிர்க்கட்சிகள் கடந்த ஆண்டே ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்து பாஜகவுக்கு எதிராக யுக்திகளை வகுத்தன. ஆனால் அக்கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது தற்போது பாஜகவுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலான வட மாநிலங்களில் பாஜக-தான் மாநில கட்சியாகவும் இருக்கிறது. இந்நிலையில் தென் மாநிலங்களையும் கைப்பற்றி ஒரே நாடு ஒரு கட்சி என்ற கொள்கையை நிலைநிறுத்த பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டை குறிவைத்திருக்கும் பாஜக இங்கு தனது இருப்பை காட்ட அவ்வப்போது பேரணிகளை நடத்துதல், யாத்திரைகளை மேற்கொள்ளுதல், மீட்டிங்குகள் என செயல்களில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் பெரும்பான்மை வகிக்கும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக-வின் கொள்கைகளை விமர்சித்து அதற்கான கண்டனங்களையும் சந்தித்து வருகிறார். அதிலும், கூட்டணியில் இருந்தபோதே அதிமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் கொள்கைகளை விமர்சித்து பேசியதால் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது அதிமுக. ஆனால் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கவேண்டும் என்பதே தனது நோக்கம் என கூறிய அண்ணாமலை, அதற்கான பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளார். அதில் ஒன்றுதான் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை. இந்த யாத்திரையால் பாஜகவிற்கு பலன் கிடைத்ததா? நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக வாக்கு வங்கி அதிகரிக்குமா? தமிழகத்தில் பாஜகவின் நிலை குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? சற்று விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் பாஜக

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் பாஜக வளர்ச்சி என்பது அசுர வேகம் எடுத்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்தே தென் மாநிலங்கள்மீது, குறிப்பாக தமிழகத்தின்மீது அவரது பார்வை இருக்கிறது என்பதே உண்மை. குறிப்பாக, காங்கிரஸ் தலைவரின் மகளான தமிழிசை சௌந்திரராஜன் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றபோதிருந்தே பலரின் கண்களும் பாஜக பக்கம் திரும்பியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்ட பிறகு அப்பொறுப்பை எல்.முருகன் ஏற்றார். என்னதான் சாதி, மத பேதம் இல்லையென்று சொன்னாலும் பல கட்சிகளில் சாதி, மதம் இரண்டும் கலந்திருக்கையில் பாஜக தாழ்த்தப்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. அதாவது அனைத்து தரப்பு வாக்குகளையும் சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டுகிறது என்பதற்கு எல். முருகனை தலைவராக்கியது ஓர் சிறந்த உதாரணம்.


தமிழிசை சௌந்திரராஜன் - எல்.முருகன் - அண்ணாமலை

அதேசமயம் இந்துத்துவா கட்சியாகவும் பார்க்கப்படுகிறது. எல்.முருகன் மத்திய இணையமைச்சரான பிறகு தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை. தமிழகத்தில் மாற்று அரசியலை உருவாக்குவோம் என்றும், ஏற்கனவே இருக்கும் கட்சிகளை அவர் வெளிப்படையாக விமர்சித்து பேசியதும் இளைஞர்கள் பலரை ஈர்த்தது. தமிழகத்தில் 50 ஆண்டுகால திராவிட ஆட்சியைப் பார்த்து சலித்த பலர் பாஜகவில் இணைந்தும் வருகின்றனர். எந்தவொரு திராவிட கட்சியின் ஆதரவும் இல்லாமல் தமிழகத்தில் பாஜகவை ஒரு தனிபெரும் கட்சியாக நிலைநிறுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறார் அண்ணாமலை.

அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை

தமிழிசைக்கு பிறகு தமிழ்நாட்டில் பாஜக குறித்த பேச்சு அதிகரித்ததற்கு முக்கிய காரணம், ‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’ என்ற அவரது கூற்றுதான். அவரைத் தொடர்ந்து எல்.முருகன் தலைவராக பதவி வகித்தபோது 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் ‘வேல் யாத்திரை’யை நடத்தினார். நவம்பர் 6ஆம் தேதி திருத்தணியில் தொடங்கிய அந்த யாத்திரை டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவடைந்தது. ஆனால் அது எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் இப்போது தமிழக பாஜக தலைவராக பதவி வகிக்கும் அண்ணாமலை, தனது ஒவ்வொரு அடியையும் வெளிப்படையாகவே எடுத்துவைக்கிறார் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். காரணம், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், ஏன் ஒரு ப்ரஸ் மீட்டாக இருந்தாலும்கூட தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களை விமர்சிக்க தவறுவதில்லை. இந்நிலையில் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் பாஜக பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளதுடன், பல்வேறு திட்டங்கள் மற்றும் வளர்ச்சி குறித்தும் பேசிவருகிறது. தமிழகத்திலும் பாஜக சார்பாக அண்ணாமலை முன்னிலையில் பல்வேறு கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றன.


‘என் மண் என் மக்கள்’ யாத்திரையில் அண்ணாமலை ஈடுபட்டபோது...

தமிழகத்தில் பாஜக வாக்கு வங்கியை அதிகரிக்கும் நோக்குடன் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாத யாத்திரையை தொடங்கினார். அப்போது ‘ஊழலில் ஊறித்திளைக்கும் திமுக அரசுக்கு முடிவுரை எழுத, ராமேஸ்வரத்தில் முதல் அடியை எடுத்து வைப்போம்! #EnMannEnMakkal' என தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார் அண்ணாமலை. இந்த பாத யாத்திரைக்காக காவி நிற சொகுசு கேரவன் ஒன்றும் தயார் செய்யப்பட்டிருந்தது. அதில் பெரிய மோடி படத்துடன், தமிழ் கலாசாரத்தை காட்டும் வகையில் கோவில் கோபுரம், திருவள்ளுவர் படம், ஜல்லிக்கட்டு காளை, சிங்க முத்திரை என பதியப்பட்டிருந்ததுடன், கேரவனில் ஏசி, ஓய்வறை, கேப்டன் சேர், ஃப்ரிட்ஜ், கழிப்பறை மற்றும் குளியலறை போன்ற வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

கடந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் தொடங்கி வைக்கப்பட்ட யாத்திரையானது மதுராந்தகத்தில் பிப்ரவரி 25, 2024 அன்று முடிவுற்றது. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் மொத்தம் 5 கட்டங்களாக நடைபெற்ற இந்த யாத்திரையில் முதல்கட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் தலைமை வகித்தார்கள். மக்கள் வசிக்கும் பகுதிகளில் கால்நடையாகவும், மக்கள் வசிக்காத பகுதிகளில் வாகனம் மூலமும் சென்றனர். நகரப்பகுதிகளில் நடந்தே 1,700 கி.மீ தூரமும், பிற பகுதிகளில் 900 கி.மீ தூரமும் இந்த யாத்திரை நடைபெற்றது. இந்த யாத்திரையின் நிறைவு விழா அண்ணாமலையின் சொந்த மண்ணான திருப்பூரில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த யாத்திரை முடிவதற்குள் அண்ணாமலை பேசிய பேச்சுக்கள்தான் சமூக ஊடகங்களில் சுற்றிவந்தன. தமிழகத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் இந்த யாத்திரை நடந்தது. அனைத்து ஊர்களிலும் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர் மக்கள். ஒவ்வொரு இடத்திலும் ஆளும் கட்சியான திமுகவை வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என விமர்சித்ததுடன், கூட்டணி கட்சியாக இருந்த அதிமுக மூத்த தலைவர்களும் ஊழல் செய்து சிறைக்கு சென்றவர்கள் என கடுமையாக விமர்சித்தார். மேலும் மாநில அமைச்சர்களின் ஊழல் பற்றியும் பேசினார். இதனாலேயே தங்களது மூத்த தலைவர்களை இழிவுபடுத்தியதாகக் கூறி பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது அதிமுக. ஆனால் ஜெயலலிதா மேல் தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும், அதேசமயம் உண்மைக்கு மாறாக தான் எதுவும் பேசவில்லை எனவும் உறுதியாக கூறினார். இதனாலேயே அதிமுகவுக்கும் அண்ணாமலைக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.


‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் நிறைவுவிழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி

தமிழகத்தில் பாஜகவை வளர்த்தே தீருவேன் என தீவிரமாக யாத்திரை பிரசாரங்களில் ஈடுபட்டார் அண்ணாமலை. அவர் எந்தெந்த தொகுதிகளுக்கு சென்றாரோ அங்கெல்லாம் பிரதமர் மோடியின் திட்டங்களால் பயனடைந்த 100 பேரை தேடி கண்டுபிடித்து அவர்களில் 10 பேரை மேடையில் ஏற்றி பேசவைத்து மக்களுடன் மக்களாக ஒன்றியதுடன், யாத்திரை சென்ற வழி நெடுகிலும் பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்ததாக தெரிவித்தார். இந்த யாத்திரையின் பலனாக மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவதுடன், தமிழக அரசியலிலும் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார். அதுபோக, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலுள்ள அரசியல் தலைவர்களின் புள்ளிவிவரங்களை எடுத்து பல்வேறு ஆதாரங்களையும் மக்கள்முன்பு காட்டி பேசினார். கூடவே பாஜக மக்கள் நலனுக்காக மட்டுமே உழைப்பதாகவும் கூறினார்.

மோடி பேச்சு

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓரிரு முறை பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்தாலும் கோவை பகுதிக்கு செல்லாததால் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழாவானது பல்லடம் பகுதியில் வைத்து நடத்தப்பட்டது. ‘மீண்டும் மோடி, வேண்டும் மோடி’ என்ற கோஷத்துடன் மக்களவை தேர்தலை முன்னிட்டு, மத்திய அரசின் சாதனைகளை தமிழக மக்களிடம் எடுத்துச் செல்லவே இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிறைவுவிழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, “டெல்லியில் இந்தியா கூட்டணி வெற்றிபெறாது என தெரிந்துவிட்டதால் தமிழகத்தில் கொள்ளையடிக்க அக்கூட்டணி முயற்சிக்கிறது. 2024-இல் அந்த கொள்ளையடிக்க நினைக்கும் கடையை மூடவேண்டும். ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மூலமாக அதற்கான பூட்டை நாம் உருவாக்கி இருக்கிறோம். இந்தியாவின் வளர்ச்சியில் கொங்கு மண்டலம் முக்கியப்பங்கு வகிக்கிறது. இங்கு ஏராளமான தொழில்முனைவோர்களும், சிறு, குறு நிறுவனங்களும் உருவாகி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுகின்றன. தமிழகம் எப்போதும் தேசியத்தின் பக்கம்தான் நிற்கும். இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் பாஜக குறித்து அதிகமாக பேசப்படுகிறது. 2024ஆம் ஆண்டில் தமிழகம் ஒரு புதிய சாதனையை படைக்கும் என்பதற்கு சான்றாக இந்த ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை அமைந்திருக்கிறது. இந்த யாத்திரையை முன்னெடுத்துச் சென்ற அண்ணாமலையின் ஆற்றலுக்கும், துணிவுக்கும் எனது பாராட்டுகள்” என பேசினார். எங்கு சென்றாலும் திருக்குறளை சொல்ல தவறாத மோடி இந்த கூட்டத்திலும் வணக்கம் என்று தமிழில்தான் ஆரம்பித்தார். மேலும் தனக்கும் தமிழகத்துக்குமிடையே நெருக்கமான உறவு இருப்பதாகவும், 32 ஆண்டுகளுக்கு முன்பு 1991-இல் கன்னியாகுமரியில் ஒற்றுமை யாத்திரையை தொடங்கி லால் சவுக்கில் நிறைவு செய்ததாகவும் கூறினார். குறிப்பாக, தமிழகத்தில் பாஜக என்றைக்கும் ஆட்சியில் இருந்தது இல்லை எனவும், ஆனால் பாஜகவின் இதயத்தில் என்றுமே தமிழகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.


பாஜகவின் வாக்கு வங்கி அதிகரிக்க சாத்தியக்கூறுகள்

நிபுணர்களின் கருத்து

‘என் மண் என் மக்கள்’ யாத்திரை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், இதனால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பாஜகவின் குறிக்கோள் தமிழ்நாட்டை கைப்பற்றுவதில் இருப்பதை யாத்திரை நிறைவு விழாவில் மோடியின் பேச்சு தெளிவாக காட்டியிருப்பதாகவும் கூறுகின்றனர். எப்போதும் பாஜக அல்லாத மாநிலங்களில், அங்கு ஆட்சியிலிருக்கும் கட்சியின் குறைகளை மேற்கோளிட்டு சுட்டிக்காட்டும்போது மத்திய அரசின் சாதனைகளை கூடவே சேர்த்து பேசும் யுக்தியை பாஜக கையாளுகிறது என்கின்றனர். மோடியின் பேச்சுத்திறமை குறித்து அனைவருக்கும் தெரியும். எங்கு சென்றாலும் அங்குள்ள மக்கள் புத்திசாலிகள், சிறந்தவர்கள் எனக் கூறுவதுடன், அம்மாநில அரசுகள்தான் அவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும் கூறுவார். பாஜக என்றாலே இந்துத்துவா கட்சி என்ற கருத்து பெரும்பான்மையாக இருக்கிறது. ஆனால் அதனை உடைக்க எடுத்த முயற்சிகள்தான், அண்ணாமலை கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றது. இளைஞர் கொடுத்த குர்ரானை வாங்கி அணைத்துக்கொண்டது போன்ற செயல்கள் எனவும் கூறுகின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். எப்படியாயினும் தமிழகத்தில் பாஜக வளர்ச்சி என்பது அசுரவேகம் எடுத்திருக்கிறது. ஒவ்வொரு கட்சியிலிருந்தும், இளைஞர்களும் பாஜகவில் இணைய ஆர்வம்காட்டி வருகின்றனர். குறிப்பாக, 3 முறை விளவங்கோடு காங்கிரஸ் கட்சி எம்.பியாக இருந்த விஜயதாரணி, அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். மேலும் சில திமுக நிர்வாகிகளும் பாஜகவில் இணைந்துள்ளனர். ஏற்கனவே ஈபிஎஸ் அணி - ஓபிஎஸ் அணி என பிரிந்துள்ள அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகிறது. ஈபிஎஸ் அணி பாஜகவுடனான கூட்டணியிலிருந்து விலகிக்கொண்ட நிலையில், ஓபிஎஸ், கூட்டணி குறித்து பாஜகவுடன் பேசிவருகிறார். மேலும் அமமுக தலைவர் டிடிவி தினகரனுடன் இணைந்து அடுத்த தேர்தலை சந்திக்கவிருப்பதாக கூறிவரும் ஓபிஎஸ், தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறியிருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே என்றும் இல்லாத வகையில் பாஜக 4 இடங்களில் வெற்றிபெற்றது. இந்நிலையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து வளர்ந்துவரும் பாஜகவின் வாக்கு வங்கியானது கணிசமாக உயருமா? அல்லது குறையுமா? என்பது நாடாளுமன்ற தேர்தல் முடிவில் தெரியவரும் என்கிறனர் நிபுணர்கள்.

Updated On 11 March 2024 6:14 PM GMT
ராணி

ராணி

Next Story