இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

2019 தெற்காசிய விளையாட்டில் கூடைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் ஸ்ரீவித்யா வெங்கட்ராமன். இவர் உள்நாட்டு விளையாட்டு வீரர் மட்டுமல்லாமல் சர்வதேச கூடைப்பந்து வீரரும் கூட. இவர் 2019 இல் நடைபெற்ற ப்ரீ - ஒலிம்பிக் தகுதித்தேர்வில் (Pre-Olympic Qualifiers) பங்கு பெற்றிருக்கிறார். இப்படி கூடைப்பந்து விளையாட்டில் நன்கு பயிற்சிபெற்று மிளிர்ந்து வரும் ஸ்ரீவித்யா வெங்கட்ராமனுக்கு இந்த விளையாட்டின்மீதுஆர்வம் வந்தது எப்படி? பெற்றோர்கள் எப்படி துணை நின்றனர்? கூடைப்பந்தில் அவர் சந்தித்த சிரமங்கள் என்னென்ன? என்பது குறித்து சுவாரஸ்யமாக உரையாடுகிறார். அவர் அளித்தப் பேட்டியை இங்கு காண்போம்.

உங்கள் கூடைப்பந்து பயணம் குறித்து ஒரு சில வார்த்தைகள்…

நான் 7 ஆம் வகுப்பு படிக்கும்போது எனது கூடைப்பந்து பயணத்தைத் தொடங்கினேன். 5 ஆம் வகுப்பு வரை ஒரு பள்ளியில் படித்துவிட்டு 6 ஆம் வகுப்பிலிருந்து வேறு பள்ளிக்கு மாறினேன். என்னுடைய அண்ணன் என்னைவிட 2 வயது பெரியவன். அந்த புது பள்ளியில் சேர்ந்தவுடன் என் அண்ணன் கூடைப்பந்து பயிற்சிக்குச் சென்று பல போட்டிகளில் கலந்துகொண்டு கோப்பைகள் மற்றும் பதக்கங்களை பெற்று வருவான். அந்த வயதில் எனக்கும் அனைத்தும் கற்றுகொள்ள வேண்டும், வெற்றியோ தோல்வியோ அனைத்திலும் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அப்படி என் அண்ணனைப் பார்த்து எனக்கும் கூடைப்பந்து விளையாட வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. இதை என் பெற்றோர்களிடம் கூற, அவர்கள் நிச்சயம் முயற்சி செய் என்று கூறி என்னையும் கூடைப்பந்து பயிற்சிக்கு அனுப்பினர். இப்படி தொடங்கிய என் பயணம் இப்போது முழுநேர கூடைப்பந்து வீரராக என்னை மாற்றியுள்ளது.


விளையாட்டுப் பயிற்சி

உங்கள் பயிற்சியாளர் குறித்து கூறுங்கள்...

என்னுடைய ஆரம்பகாலத்தில், அதாவது என் பள்ளிப்பருவங்களில் எனக்கு பயிற்சியாளராக இருந்தவர் ராமசந்திரன். பள்ளி முடிந்து MOP வைஷ்ணவ கல்லூரியில் சேர்ந்தபோது என்னுடைய பயிற்சியாளராக இருந்தவர் சம்பத். இவரால்தான் நான் அதிக அளவில் கூடைப்பந்து போட்டிகளில் கலந்துகொண்டேன். இவர் எப்போதும் என் வாழ்க்கையில் முக்கியப்பங்கு வகிப்பவர். நலம் விரும்பி, சிறந்த பயிற்சியாளர் என்று கூறலாம்.

முதல் போட்டியில் பங்கேற்ற தருணம் எப்படி இருந்தது?

7ஆம் வகுப்பு படிக்கும்போது கூடைப்பந்து ஆடத் தொடங்கினேன் 8ஆம் வகுப்பில்தான் முதன்முதலில் தேர்வு சோதனையில் (Selection Trials) கலந்துகொண்டேன். ஆனால் அதில் நான் தேர்வாகவில்லை. என் அம்மாவும் அந்த தேர்வின்போது என்னோடு இருந்தார். நான் கண்ணீருடன் கலங்கி நின்றகொண்டிருந்த அந்தத் தருணத்தில் சேலத்தைச் சேர்ந்த ஒரு பள்ளியின் பயிற்சியாளரும், பி.டி வாத்தியாரும் என்னிடம் வந்து, “அழாதே. நீ இன்னும் அதிகமாக முயற்சி செய். ரொம்ப சின்ன வயசுதான் உனக்கு. நான் நிச்சயமா சொல்றேன். வருங்காலத்துல கூடைப்பந்து துறையில உன் பெயர் தெரியாத ஆளே இருக்க மாட்டாங்க” என்று ஆறுதல் கூறினார்கள். ‘தோல்வியே வெற்றிக்கு முதற்படி’ என்ற பழமொழியை நினைவூட்டி என்னை ஆற்றியது அவருடைய வார்த்தைகள். 8 ஆம் வகுப்பு ஆண்டு விடுமுறையில் தொடர்ந்து முயற்சி செய்தேன். அப்படி விடாமுயற்சி செய்து 9 ஆம் வகுப்பில் தமிழ்நாடு அளவில் 16 வயது பிரிவில் பங்குபெற்று தேர்வானேன். 10ஆம் வகுப்பு படிக்கும்போது அதே தமிழ்நாடு அளவிலான 16 வயது பிரிவிற்கு கேப்டனானேன்.


தமிழ்நாடு பேஸ்கட் பால் குழுவில் ஸ்ரீவித்யா

நீங்கள் முதல் போட்டியில் பங்கேற்றபோது உங்களுடைய பெற்றோர் என்ன கூறினார்கள்?

இன்றளவும் விளையாட்டுத் துறையை தேர்வு செய்தால் படிக்க மாட்டார்கள், வீணாக போவார்கள் என்ற எண்ணமும் பயமும் பலரிடம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் விளையாட்டுத் துறையை தேர்ந்தெடுத்தால் உறவினர்களே பெற்றோரை தூண்டி விடுவதுண்டு. நான் 11ஆம் வகுப்பு படிக்கும்போது சீனா மற்றும் இலங்கைக்குச் சென்று இந்திய அணிக்காக விளையாடினேன். அப்போது என் உறவினர்கள், “இந்த சிறு வயதில் எதற்கு ஒரு பெண் குழந்தையை தனியாக விளையாட அனுப்புகிறாய்?” என்று கேட்டபோது, என் அம்மா, “எவ்வளவு பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்? 100 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியாவில் என் மகள் தேர்வாகி இந்தியாவிற்காக விளையாடுகிறாள் என்பது மிகுந்த பெருமை அளிக்கிறது. அவளுக்கு பிடித்தது அவள் செய்யட்டும். அவள் பட்ட கஷ்டத்துக்கு தக்க பயன் கிடைத்திருக்கிறது” என்று கூறினார். அன்றிலிருந்து இன்றுவரை எனது பெற்றோர்களின், குறிப்பாக அம்மாவின் தொடர் ஊக்கத்தினால் மட்டுமே என்னால் இந்த நிலையை அடைய முடிந்திருக்கிறது.

கூடைப்பந்து துறை இல்லாவிட்டால் வேறு எந்தத் துறையை தேர்ந்தெடுத்திருப்பீர்கள்?

சிறு வயது முதலே நான் நன்றாக படிப்பேன் என்பதால் டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவும் ஆசையும் இருந்தது. ஆனால் கூடைப்பந்துக்கு நான் தேவை; எனக்கு கூடைப்பந்து தேவை என்று கடவுள் நிர்ணயித்து வைத்துள்ளார்.

கூடைப்பந்துதான் உங்கள் தொழில் என்று கூறியபோது வீட்டில் மறுப்பு தெரிவிக்கவில்லையா?

என்னுடைய பெற்றோரிடமிருந்து எனக்கு முழு சுதந்திரமும் முழு ஆதரவும் கிடைத்திருக்கிறது. போட்டிகள், பயிற்சிகள் முடிந்து வீட்டிற்குச் செல்ல இரவு 10 - 11 மணி ஆகும் நிலையிலும் ஒரு பக்கம் பயம் இருந்தாலும் எந்தவிதமான கேள்விகளும் கேட்காமல் முழுக்க முழுக்க எனக்கு ஆதரவாக மட்டும்தான் இருந்துள்ளனர். நான் காலையில் பயிற்சிக்குச் செல்ல 4.30 - 5.00 மணிக்கு எழுந்திருக்கும்போதே என் அம்மாவும் என்னுடன் எழுந்து நான் தயாராக உதவிசெய்வார். என் அம்மாவை பெருமைப்படுத்துவதும் சந்தோஷப்படுத்துவதும்தான் என்னுடைய பெரிய சந்தோஷமே.


கூடைப்பந்து வீராங்கனை அனிதா பால்துரை

கூடைப்பந்து துறையில் உங்களுக்கு முன்மாதிரியாக திகழ்பவர் யார்?

குழு விளையாட்டான கிரிக்கெட்டுக்கு இருக்கும் புகழ் கூடைப்பந்துக்கு இல்லை. கூடைப்பந்தில் எனக்கு முன்மாதிரியாகவும் என் சகோதரியாகவும் இருப்பவர் அனிதா பால்துரை. தமிழ்நாடு சார்பில் கூடைப்பந்தில் முதல் பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமை இவரைச் சேரும். நானும் அக்காவும் ஒரே அணியில் விளையாடி இருக்கிறோம். அக்காவிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தாலும் அவர் இன்றளவும் கூடைப்பந்து போட்டியில் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறார். இந்த பேரார்வமும் அர்ப்பணிப்பும் எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்தத் துறையில் நீங்கள் சந்தித்த சிரமங்கள் என்ன?

முன்னர் கூறியபடியே முதல் தேர்வில் தோல்வியடைந்திருந்தாலும் பின்னர் பெரும் முயற்சியினால் அடுத்தடுத்த தேர்வில் தேர்ச்சிபெற்று வெற்றி பெற்றேன். கல்லூரி முடித்தவுடன் எனக்கு ரயில்வேயில் பணி நியமனம் கிடைத்தது. தெற்கு ரயில்வேயில் பணிக்கு சேர்ந்து ஒரு வருடத்தில் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இடது கால் தசைநார் மற்றும் மெனிஸ்கஸ் (Ligament and Meniscus) கிழிந்துவிட்டது என்பதால் நிச்சயம் அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டனர். அறுவைசிகிச்சை முடிந்து ஒரு வருடம் முழுமையாக ஓய்வுபெற்று, இப்பொழுது மீண்டும் கூடைப்பந்து ஆடத் தொடங்கியிருக்கிறேன்.


ரயில்வேயில் வேலை மற்றும் முழங்கால் காயம்

உங்கள் எதிர்கால திட்டங்கள் என்ன?

இப்போது எனக்கு 25 வயதாகிறது. இன்னும் 10 வருடங்களுக்கு கூடைப்பந்து விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். விளையாட்டு வாழ்க்கை முடிந்தவுடன் ஒரு பயிற்சியாளராகி பல பெண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. முக்கியமாக வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்களுக்கு காயம் தடுப்பு (Injury Prevention) பற்றி முழுமையாக தெரிவதில்லை. அதற்கு பயிற்சி அளிக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

கிரிக்கெட் போல கூடைப்பந்தை பிரபலமாக்க என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

கிரிக்கெட் விளையாட்டுக்கு பெரு நிறுவனங்கள் அளிக்கும் தொகை மற்ற விளையாட்டுகளுக்கு கிடைப்பதில்லை என்பது ஒரு பெரும் காரணமாக இருக்கிறது. மேலும் கால்பந்து, கைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் லீக்ஸ் இருப்பதுபோல கூடிய விரைவில் கூடைப்பந்திலும் லீக்ஸ் அமைத்து தரப்படும் என்று நம்புகிறேன். லீக்ஸ் வந்துவிட்டால் அது நிச்சயமாக தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடங்களால் பிரபலமாக்கப்படும். அப்போது நிறையப்பேர் இந்த விளையாட்டை விளையாட முன்வருவார்கள்.

Updated On 9 Oct 2023 6:59 PM GMT
ராணி

ராணி

Next Story