இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் பல சர்வதேச வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டாலும், பல உள்நாட்டு வீரர்களும் அதிக கவனத்தை ஈர்த்தனர். குறிப்பாக ராபின் மின்ஸ், மணிமாறன் சித்தார்த், சுஷாந்த் மிஸ்ரா உள்ளிட்ட பல வீரர்கள் கவனத்தை ஈர்த்தாலும், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சமீர் ரிஸ்வி அனைவரது கவனத்தையும் பெற்றார். சென்னை அணி அவரை ரூ.8.4 கோடி கொடுத்து வாங்கியது. UPT20 லீக் மற்றும் U-23 இந்தியா என்று அனைத்து போட்டிகளிலும் அசத்தியதன் மூலம் ஐபிஎல் தொடருக்கு வந்துள்ளார் சமீர் ரிஸ்வி. யார் இந்த சமீர் ரிஸ்வி? எங்கிருந்து அவரது கிரிக்கெட் பயணம் தொடங்கியது? என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.

யார் இந்த சமீர் ரிஸ்வி?

ஓர் இரவில் பணக்காரர் ஆன கதைகளை சினிமாக்களில் பார்த்திருப்போம். அதுபோல மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போயுள்ளார் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சமீர். 2003 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி மீரட்டில் பிறந்தார் சமீர். சிறுவயதிலிருந்தே கிரிக்கெட்டின் மீது அலாதி காதல் கொண்டிருந்த சமீருக்கு, அவரது கிரிக்கெட் வாழ்க்கை கரடுமுரடான பாதையில்தான் தொடங்கியது. சமீர் ரிஸ்வியின் அக்கா கணவரான தன்கீப் அக்தர், கிரிக்கெட்டில் பெரிய ஆளாக வர வேண்டும் என்று நினைத்து தோற்றுப்போனார். சமீர் ரிஸ்வியின் தந்தை ஹசீன் ரிஸ்வி தனது மருமகன் தன்கீப் அக்தரை அவர்களது வீட்டிற்குள் நுழையவே கூடாது என கட்டுப்பாடு விதித்தார். அதற்கு காரணம், தன்கீப் அக்தர் ஒரு தோல்வியுற்ற கிரிக்கெட் வீரராக அறியப்பட்டார்.


சமீரின் குடும்பத்தினர் - சமீரின் ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கை

ஆனால் தன்கீப் அக்தர் தனது மருமகன் சமீர் ரிஸ்வியின் திறமையைக் கண்டு, அவர் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவரது தந்தை ஹசீன் ரிஸ்வி மிகவும் பயந்தார். அவரையும் தோல்வியுற்ற கிரிக்கெட் வீரனாக தன்கீப் அக்தர் மாற்றி விடுவரோ என்கிற அச்சம் அவருக்கு இருந்தது. இந்நிலையில் தனது மாமாவின் கனவிற்கு ஒருபடி அருகில் தற்போது வந்துள்ளார் சமீர். 14 வருட கடின உழைப்பிற்கு பிறகு தற்போது ஐபிஎல் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

UPT20 லீக் மற்றும் சயீத் முஷ்டாக் அலி தொடரில் அசத்திய சமீர் ரிஸ்வி

சமீர் ரிஸ்வி ரஞ்சிப் போட்டியில் வெறும் இரண்டு ஆட்டங்களில்தான் விளையாடி இருக்கிறார். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சமீர் ரிஸ்வி, தமிழகத்தில் நடத்தப்படும் TNPL தொடர் போல உத்தரப்பிரதேசத்தில் நடத்தப்படும் லீக் மூலமாக வெளியே தெரிந்தார். கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணி கேப்டனாக இருக்கும் சமீர் ரிஸ்வி, சமீபத்திய UP டி20 லீக்கில் 9 இன்னிங்ஸ்களில் 189 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 455 ரன்கள் குவித்துள்ளார். ஒரு போட்டியில் அதிரடியாக 59 பந்துகளில் 122 ரன்களை அடித்தது உட்பட அதில் இரண்டு சதங்களும் அடக்கம். அந்த சீசனில் மட்டும் 35 பவுண்டரிகளையும், 38 சிக்ஸர்களையும் விளாசி மற்ற அணிகளை கலங்கடித்தார் சமீர். நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரிலும் 18 சிக்ஸர்களை அடித்துள்ள சமீர், உ.பி அளவிலான கிரிக்கெட் தொடர்களில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்று அறியப்படுகிறார். வலதுகை பேட்ஸ்மேனாக அதிரடியாக ஆடி, குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு எதிராக இவர் விளையாடும் விதம் ஐபிஎல் அணிகளை கவரவே, ரூ.8.4 கோடிக்கு சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.


UPT20 லீக் மற்றும் சயீத் முஷ்டாக் அலி தொடருக்கான பயிற்சியின்போது

U-23 இந்திய அணியில் அசத்திய சமீர் ரிஸ்வி

23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உத்தரப்பிரதேச அணியின் தேர்வு நடைபெற்றது. இதில் ரிஸ்வி பங்கேற்றதால் பஞ்சாப் அணி அழைத்தபோது அவரால் செல்ல முடியவில்லை. 23 வயதுக்குட்பட்டவர்களுக்கான முதல் ஒருநாள் போட்டியில் உத்தரப்பிரதேச அணி சார்பாக விளையாடிய சமீர் ரிஸ்வி ராஜஸ்தானுக்கு எதிராக 65 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார். இதேபோன்று அந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் 50 பந்துகளில் 84 ரன்கள் அடித்தார். அந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை சமீர் ரிஸ்வி பெற்றார். இதன்மூலம் சமீர் ரிஸ்வி அனைத்து ஐபிஎல் அணிகளின் கவனத்தையும் ஈர்த்தார். சமீர் ரிஸ்விக்கு சுழல் பந்து வீசவும் தெரியும். சுரேஷ் ரெய்னா, சமீர் குறித்து சிஎஸ்கே அணியிடம் தெரிவித்திருக்கலாம் என்று பல கிரிக்கெட் நிபுணர்கள் கூறிவருகின்றனர்.

சமீர் ரிஸ்வி குறித்து கிரிக்கெட் பிரபலங்களின் கருத்து

சமீர் ரிஸ்வி குறித்து முன்னாள், இந்நாள் வீரர்கள் ஐபிஎல் ஏலத்துக்கு முன்பே கூறியது...

ரவிச்சந்திரன் அஸ்வின்

தனது யூடியூப் பக்கத்தில் அஸ்வின் பேசுகையில், "சமீர் ரிஸ்வி என்கிற உத்தரப்பிரதேச வீரர் நடந்து முடிந்த உ.பி லீகில் மிகச் சிறப்பாக ஆடியிருக்கிறார் என்றும், குறைந்தபட்சம் 3 - 4 கோடிக்காவது அவரை அணிகள் ஏலத்தில் எடுக்கும்" என்றும் கணித்திருந்தார்.


U-23 இந்திய அணியில் சமீர் விளையாடியபோது

சுரேஷ் ரெய்னா

ஒரு பேட்ஸ்மேனாக சமீர் ரிஸ்வி வித்தியாசமான அணுகுமுறை கொண்டவர். லக்னோ அணிக்காக ஆடினால் அவர் இன்னும் நம்பிக்கையுடன் ஆடுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியிருந்தார்.

அபினவ் முகுந்த்

"ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கவுள்ள சிலர், சமீர் ரிஸ்வி குறித்து என்னிடம் புகழ்ந்து பேசினார்கள். ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடும் அவரின் யுக்தியை வைத்து அவரை 'வலது கை ரெய்னா' என்றார்கள். எனவே பல அணிகளும் அவரை ஏலத்தில் எடுக்க போட்டி போடலாம்" என்று கிரிக்கெட்டர் அபினவ் முகுந்த், ஏலத்துக்கு முன்பே கூறியிருந்தார்.

சுனில் ஜோஷி

"அவரிடம் அந்தத் திறமை எப்போதும் இருந்தது. அவர் ரஞ்சி டிராபியில் அறிமுகமானபோது, அவர் இளமையாக இருந்தார். ஆனால் என்னை நம்புங்கள், அவர் தயாராக இருக்கிறார் என்று மக்கள் சொன்னார்கள். அதன்பிறகு, அவர் தனது ஆட்டத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார். இந்த உயர்வு அதிர்ச்சியளிக்கிறது. ஆனால் எனக்கு ஆச்சரியம் இல்லை” என்கிறார் உத்தரப்பிரதேசத்தின் தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் சுனில் ஜோஷி.


2024 ஐபிஎல்லுக்கு சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்ட சமீர்

தன்கீப் அக்தர் (சிறு வயது பயிற்சியாளர் மற்றும் சமீரின் மாமா)

“ரோகித் சர்மாவே சமீரின் முன்மாதிரி. சிரமமின்றி ஆடும் ரோகித்தின் பேட்டிங்குக்கு ரசிகன் ஆனார் சமீர். அவர் அவ்வப்போது தனது ஃபுல் ஷாட், ரோகித் போல் இருக்கிறதா இல்லையா என்று கேள்விகளைக் கேட்டு என்னை எரிச்சலூட்டுவது வழக்கம். எந்த ஒற்றுமையும் இல்லை, ஆனால் அவர் ரோகித்தைப் போல பேட்டிங் செய்வதாக நினைத்துக் கொள்கிறார். அவர் சிஎஸ்கே அணிக்கு போவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. காரணம் எம்.எஸ்.தோனியிடம் மூன்று மாதங்கள் இருந்தாலே, அவர் நிறைய கற்றுக்கொண்டு சிறந்த கிரிக்கெட் வீரராக மாறுவார்” என்கிறார் தன்கீப் அக்தர்.

சென்னை அணியில் சாதிப்பாரா சமீர் ரிஸ்வி?

இவரை அனைவரும் இந்தியாவின் வலது கை சுரேஷ் ரெய்னா என்றுதான் அழைக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இப்பொழுது சென்னை அணியில் அம்பதி ராயுடுவின் இடம் காலியாகத்தான் உள்ளது. அதை சமீர் நிரப்புவாரா? பிறகு சென்னை அணியின் ஜாம்பவான் சுரேஷ் ரெய்னாவை போல் வருவாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Updated On 1 Jan 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story