இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்தியாவில் ஆண்கள் கிரிக்கெட்டிற்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கின்றார்களோ அதற்கு நிகராக பெண்கள் கிரிக்கெட்டிற்கும் தற்போது ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். முன்பெல்லாம் பெண்கள் கிரிக்கெட்டில் முக்கியமான தொடர்களை மட்டும் பார்த்த இந்திய ரசிகர்கள் தற்போது பெண்கள் கிரிக்கெட்டில் சிறு சிறு தொடர்களை கூட பார்த்து ரசித்து வருகின்றனர். இது பெண்கள் கிரிக்கெட்டின் மார்கெட்டை நன்கு உயர்த்தியுள்ளது. இதனால் பிசிசிஐ-ற்கும் வருவாய் அதிகரித்துள்ளது. இதன்விளைவாக பெண்களுக்கான பிரீமியர் லீக் போட்டி தொடங்கப்பட்டது. அதிலிருந்து பல பெண்கள் இந்திய அணிக்கு விளையாடினர். அப்படி பிரீமியர் லீக்கில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரிச்சா கோஷ். இவர் பெண்களுக்கான பிரீமியர் லீக் வருவதற்கு முன்னரே இந்திய அணியில் விளையாடியிருந்தாலும், அணியில் உள்ளே, வெளியே என்று இருந்தார். இந்த தொடருக்கு பின்தான் நன்கு பிரபலமானார். இந்திய அணியில் மிடில் ஆர்டரில் இறங்கி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இந்த ரிச்சா கோஷ் யார்? அவரது கிரிக்கெட் பயணம் எங்கிருந்து தொடங்கியது என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.


குடும்பத்தினர் மற்றும் தோழியுடன் ரிச்சா கோஷ்

யார் இந்த ரிச்சா கோஷ்?

செப்டம்பர் 28, 2003 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்திலுள்ள சில்லுக்குரி என்கிற நகரத்தில் பிறந்தார். கிரிக்கெட்டில் சிறுவயதிலிருந்தே ஆர்வமிருந்த ரிச்சாவிற்கு அவரது தந்தைதான் கிரிக்கெட் ஆசையை விதைத்தார். ஆரம்பத்தில் ஆண்களுடன்தான் விளையாட ஆரம்பித்திருக்கிறார் ரிச்சா. இவரது தந்தை மனபேந்திர கோஷ் ஆரம்பத்தில் கிளப் கிரிக்கெட் விளையாடி பிறகு அம்பயராக இருந்து வந்ததால், மேற்கு வங்கத்தில் எங்கு கிரிக்கெட் போட்டி நடந்தாலும் ரிச்சாவை அழைத்து செல்வாராம். இதனால் ரிச்சாவிற்கு கிரிக்கெட் என்பது வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. ரிச்சாவின் கிரிக்கெட்டிற்காக அவரது குடும்பம் கொல்கத்தாவிற்கு இடம் பெயர்ந்தது. 10 வயதில் தனது கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்தார் ரிச்சா. பிறகு, தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார். இதனால் பெண்கள் அணியின் U - 19 அணிக்கு தேர்வானார்.


ரிச்சாவின் ஆரம்பகால கிரிக்கெட்

ரிச்சாவின் கிரிக்கெட் பயணம்

தனது 11 வயதில் பெங்கால் அணியின் U-19 அணிக்கு தேர்வானார். அங்கிருந்து தொடங்கி 2018 ஆம் ஆண்டிற்கான பெங்கால் அணியின் சிறந்த வீராங்கனை என்கிற விருதையும் வென்றார். இவரின் கிரிக்கெட் பயணத்திற்கு மிகவும் உந்துதலாக இருந்தவர் இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் சீனியர் வீராங்கனையான ஜூலன் கோஸ்வாமி. ரிச்சாவுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வாங்கி கொடுத்து ஊக்கமளித்துள்ளார். அதன்பிறகு தனது 13 வயதில் U-23 பெங்கால் அணிக்கு தேர்வாகி அசத்தினார். இதன்மூலம் இவருக்கு மகளிர் சாலென்ஜெர் ட்ராஃபியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. மிடில் ஆர்டரில் களமிறங்கும் ரிச்சா, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும் தன்மை கொண்டவர். அதிக நீளமான சிக்ஸர்களை அடிக்க கூடியவர். இதனால் இந்திய தேர்வு குழுவினரின் பார்வை இவர் மீது விழுந்தது. இந்திய அணியும் பல விக்கெட் கீப்பர்களை முயற்சி செய்து சோர்ந்து போயிருந்த நேரத்தில், ரிச்சாவின் அதிரடி ஆட்டத்தை சோதித்து பார்க்க விரும்பியது.


இந்திய அணிக்காக ரிச்சா விளையாடிய தருணங்கள்

சர்வதேச தொடக்கம்

2020 ஆம் ஆண்டு பெண்களுக்கான T20 உலகக்கோப்பையில் அறிமுகமானார் ரிச்சா. ஆரம்பத்தில் சற்று தடுமாற்றமாகவே ஆடினார் ரிச்சா. பிறகு மகளிர் சாலென்ஜெரில் விளையாடி 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஓடிஐ போட்டிகளில் அறிமுகமானார். அதன்பிறகு சீனியர் விக்கெட் கீப்பர் தான்யா ஹோப்புக்கு பதிலாக இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடித்தார். பின்பு 2022 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிராக 26 பந்துகளில் 50 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். ஓடிஐ போட்டிகளில் ஒரு இந்திய வீராங்கனையின் அதிவேக அரைசதம் இதுவாகும். அதன்பிறகு ரிச்சா கோஷிற்கு சறுக்கல் ஆரம்பித்தது. வங்கதேச அணிக்கு எதிரான அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் கழட்டிவிடப்பட்டார். அதோடு நிற்காமல் காமன்வெல்த் போட்டிகளிலிருந்தும் கழட்டிவிடப்பட்டார். மீண்டும் 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்ட பொழுது, தான்யா ஹோப்பிற்கு பதில் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்தார். முதல் T20 போட்டியில் 20 பந்துகளில் 36 ரன்களும், இரண்டாவது போட்டியில் 13 பந்துகளில் 26 ரன்களும், மூன்றாவது போட்டியில் 19 பந்துகளில் 40* ரன்களும் அடித்து அசத்தினார். இதன்பிறகே T20 உலகக்கோப்பையில் இடம்பிடித்தார்.


ஆர்.சி.பி - லண்டன் ஸ்பிரிட் - ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் விமென் அணிகளுக்காக விளையாடியபோது

லீக் போட்டிகளில் அசத்திய ரிச்சா கோஷ்

சர்வதேச தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த ரிச்சா, இங்கிலாந்தில் நடத்தப்படும் ஹண்ட்ரட் தொடரில் லண்டன் ஸ்பிரிட்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். அங்கு விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் இந்தியாவில் ஐபிஎல் தொடர் முடிந்ததும் பெண்களுக்கென தனி லீக் போட்டி நடக்கும். இதில் ட்ரையல் பிளாஸ்ஸிர்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். பிறகு பிக் பாஷ் தொடரில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து லீக் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். அதனை தொடர்ந்து பெண்களுக்கான பிரீமியர் லீக் போட்டி 2022 ஆம் ஆண்டு தொடங்கியது. பெங்களூரு அணிக்காக 1.08 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். தற்போது இந்திய அணியிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் ரிச்சா கோஷ் இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் எதிர்காலமாக இருப்பாரா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

Updated On 15 Jan 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story