இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்திய பெண்கள் கிரிக்கெட் தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதன்முறையாக இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா பெண்கள் அணி 219 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக தஹிலா மெக்ராத் 50 ரன்கள் அடித்தார். பின் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி அபாரமாக ஆடியது. தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா 40 ரன்களும், ஸ்மிரிதி மந்தனா 74 ரன்களும், தீப்தி சர்மா 78 ரன்களும் மற்றும் அறிமுக வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 73 ரன்களும் அடித்து ஆஸ்திரேலியா அணியை அசர வைத்தனர். பின் இரண்டாவது இன்னிங்ஸில் 74 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18 ஓவரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவை இந்தியா வெற்றி கொண்டது. இதில் அறிமுக வீராங்கனையாக களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனக்கான இடத்தை நிலையாக பிடித்து கொண்டார். ஏற்கனவே T20 பேட்டர் தரவரிசையில் 9 ஆவது இடத்தில் இருக்கும் ஜெமிமா டெஸ்ட் போட்டியிலும் சாதிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். யார் இந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ்? அவரது கிரிக்கெட் பயணம் எங்கிருந்து தொடங்கியது என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.


குடும்பத்தினர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ப்ளேயருடன் ஜெமிமா

ஜெமிமாவின் தொடக்கம்

2000 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி மும்பையிலுள்ள பாண்டப்பிள் பிறந்தார் ஜெமிமா. இவருக்கு ஏனோக், எலியா என்று இரு சகோதரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே கிரிக்கெட் வீரர்கள் என்பதால், ஜெமிமாவிற்கு கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்வது, விளையாடுவது எல்லாம் சுலபமாக இருந்தது. 4 வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த ஜெமிமாவிற்கு அவரது தந்தை இவான் ரோட்ரிக்ஸ்தான் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார். ஜெமிமா படித்த செயின்ட் ஜோசப் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருந்தார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு கிரிக்கெட் எந்த அளவிற்கு பிடித்ததோ அதே அளவிற்கு இவருக்கு ஹாக்கி மீதும் ஆர்வம் இருந்தது. இதன்மூலம் U-17 மற்றும் U -19 மஹாராஷ்டிரா ஹாக்கி அணியில் இடம்பிடித்தார். அதன்பின் இவரது குடும்பம் மேற்கு பந்த்ராவில் இடம்பெயர்ந்தது. ஆரம்பத்தில் தனது இரு அண்ணன்களுக்கு பந்து வீசவே மைதானத்திற்கு செல்வாராம், போக போக இவருக்கு கிரிக்கெட் மிகவும் பிடித்து போய் பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் விளையாட ஆரம்பித்தார். பிறகு கல்லூரியில் படிக்கும்போது இந்தியா U-19 அணிக்கு தேர்வாகி அசத்தினார்.


பயிற்சி மற்றும் முதல்தர போட்டிகளில் ஜெமிமா விளையாடியபோது

ஜெமிமாவின் ஆரம்பகால கிரிக்கெட்

தனது 13 வயதில் மாநில அளவிலான U-19 அணிக்கு தேர்வானார். அங்கு சிறப்பாக விளையாடிய ஜெமிமாவிற்கு சாலன்ஜெர் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த தொடர் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. முதல் இரண்டு ஆட்டங்களில் 0, 1 என்று ஆட்டமிழந்த ஜெமிமா ரயில்வேஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் 0 ரன்னில் வெளியேறி அனைவரையும் ஏமாற்றினார். இது அவரது கேரியரில் பெரும் அடியாக விழுந்தது. பிறகு மீண்டும் மாநில அளவிலான U-19 போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். அந்த தொடரில் 376 ரன்கள் குவித்து அசத்தினார். இருப்பினும் அவரால் இந்திய அணிக்குள் நுழைய முடியவில்லை. ஜெமிமா சிறு அணிகளுக்கு எதிராகத்தான் ரன்களை குவிக்கிறார் என்று தேர்வு குழுவினர் குற்றம்சாட்டினர். இதனால் மனமுடைந்த ஜெமிமா மீண்டும் தான் ஹாக்கி விளையாட போவதாக அறிக்கை வெளியிட்டார். இது சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியது. பிறகு தன்னை தேற்றிக்கொண்டு சாலன்ஜெர் கோப்பையில் களமிறங்கினார். முதல் ஆட்டத்தில் குஜராத் அணிக்கு எதிராக 178 ரன்களும், இரண்டாவது ஆட்டத்தில் 202* ரன்களும் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்த தொடரில் 11 ஆட்டத்தில் 1013 ரன்கள் அடித்ததன் மூலம் இந்திய அணிக்குள் நுழைந்தார் ஜெமிமா.


இந்திய கிரிக்கெட் அணிக்காக ஜெமிமா விளையாடிய தருணங்கள்

சர்வதேச தொடக்கம் மற்றும் வெளிநாடு லீக்குகளில் ஜொலித்த ஜெமிமா

2018 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான T20 போட்டியில் அறிமுகமானார். T20 போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரு நாள் போட்டியின் கதவும் இவருக்கு திறந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜெமிமா 2018 ஆம் ஆண்டு T20 உலககோப்பைக்கு தேர்வுசெய்யப்படுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர் ஆனால் ஸ்டாண்ட்பை வீரராகவே தேர்வு செய்யப்பட்டார். இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. அதன்பின்னர் இந்திய அணி உலகக்கோப்பையில் சொதப்பிய பிறகு, மீண்டும் ஜெமிமா அணிக்குள் வந்தார். ஒரு நாள் போட்டிகளில் பெரிதாக சோபிக்காத ஜெமிமா, T20 போட்டிகளில் நிலையான இடத்தை பிடித்து கொண்டார். இதுவரை 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 394 ரன்களும், 80 T20 போட்டிகளில் விளையாடி 1704 ரன்களும் குவித்துள்ளார். சர்வதேச போட்டிகளை விட வெளிநாடு லீக்குகளில்தான் ஜெமிமா சிறப்பாக செயல்பட்டுள்ளார். இங்கிலாந்தில் முதன்முறையாக 2021 ஆம் ஆண்டு "100" போட்டி அதாவது 100 பந்துகள் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. நார்தன் சூப்பர்சார்ஜெர்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட ஜெமிமா, முதல் போட்டியிலேயே 92 ரன்கள் குவித்து அசத்தினார். அதுமட்டுமில்லாமல் அத்தொடரில் 41 ஆவெரேஜ் வைத்து 249 ரன்கள் குவித்தார்.


லீக் போட்டிகளில் ஆடியபோது...

இதன் விளைவாக அடுத்த சீசனிலும் இவரை நார்தன் சூப்பர்சார்ஜெர்ஸ் அணி தக்கவைத்தது. அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு பிக்பாஷ் தொடரில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காகவும், 2022-2023 சீசனில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காகவும் விளையாடினார். அதன்பிறகு பெண்களுக்கான பிரீமியர் லீகில் டெல்லி அணி இவரை 2.20 கோடிக்கு வாங்கியது. அந்த அணிக்காகவும் நல்ல ஃபினிஷிங் செய்து கொடுத்தார் ஜெமிமா. எல்லா தொடர்களிலும் சிறப்பாக செயல்பட்டு வந்த ஜெமிமாவிற்கு தற்போதுதான் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் கிடைத்தது. தன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே 73 ரன்கள் அடித்து அசத்தினார். இதன்பிறகு டெஸ்ட் அணியில் நிரந்தர இடம்பிடித்து இந்தியாவின் அடுத்த மிதாலி ராஜாக மாறுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Updated On 22 Jan 2024 6:36 PM GMT
ராணி

ராணி

Next Story