இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்திய அணியில் பல நல்ல ஃபீல்டர்கள் இருந்தாலும் இந்தியாவின் தலைசிறந்த ஃபீல்டர் என்றால் அது சுரேஷ் ரெய்னா தான். 20 ஆம் நூற்றாண்டில் இந்திய அணியின் ஃபீல்டிங் தரத்தை உயர்த்தியதில் பெரும் பங்கு சுரேஷ் ரெய்னாவிற்கும் உண்டு. கிரிக்கெட்டின் மூன்று ஃபார்மட்டிலும் சதமடித்த முதல் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தான். 2008 முதல் 2016 வரை இந்திய அணியின் மிடில் ஆர்டர் தூணாக செயல்பட்டார். உலகின் தலைசிறந்த ஃபீல்டரான தென் ஆப்பிரிக்காவின் ஜோண்ட்டி ரோட்ஸ் தற்போதைய காலகட்டத்தில் சுரேஷ் ரெய்னா தான் சிறந்த ஃபீல்டர் என்று பாராட்டியுள்ளார். ஐபிஎல் தொடரில் 11 ஆண்டாக தனது ஆதிக்கத்தை செலுத்தினார். இதன்மூலம் ரசிகர்கள் இவரை மிஸ்டர் ஐபிஎல் என்றும், சின்ன தல என்றும் செல்லமாக அழைக்கின்றனர். ஆனால் இவரது கிரிக்கெட் வாழ்க்கை பல ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. சுரேஷ் ரெய்னாவின் கிரிக்கெட் பயணம் எங்கிருந்து தொடங்கியது? அவர் சந்தித்த பிரச்சினைகள் என்னென்ன என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.


ரெய்னாவின் குடும்பம் மற்றும் ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்க்கை

சுரேஷ் ரெய்னாவின் ஆரம்ப காலம்

27 நவம்பர் 1986 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள முராத் நகர் என்கிற இடத்தில் பிறந்தார் சுரேஷ் குமார் ரெய்னா. இவரது குடும்பத்தினர் காஷ்மீர் மாநிலத்திருந்து உத்தர பிரதேசத்திற்கு இடம் பெயர்ந்தவர்கள். இவரது தந்தை ராணுவத்தில் பணிபுரிந்ததால் சிறிது காலம் காஷ்மீரில் இருந்தனர். காஜியாபாடிலுள்ள போர்டிங் ஸ்கூலில் தனது பள்ளிப்படிப்பை படித்தார். பிறகு கிரிக்கெட்டின் மீதுள்ள காதலால் தனது 14 வயதில் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த ரெய்னா, காஜியாபாட்டிலுள்ள குரு கோபிந்த் சிங் ஸ்போர்ட்ஸ் கல்லூரியில் இணைந்தார். அங்கு மாவட்டம் மற்றும் டிவிஷனல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு U-16 உத்தர பிரதேச அணியின் கேப்டனானர். அதுமட்டுமில்லாமல் தனது 15 வயதில் இந்தியா U-19 அணிக்கு தேர்வாகி இலங்கை மற்றும் இங்கிலாந்து தொடருக்கு தேர்வானார். குறிப்பாக இங்கிலாந்தில் நடந்த U-19 தொடரில் இரண்டு அரைசதம் அடித்தும் அசத்தினார்.பின் தனது 16 வயதில் உத்தர பிரதேச அணிக்காக ரஞ்சி தொடரில் விளையாடினார். தொடர் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 2004 ஆம் ஆண்டு U-19 உலகக்கோப்பைக்கு தேர்வானார். அதுமட்டுமில்லாமல் 2005 ஆம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் ஸ்காலர்ஷிப் மூலம் ஆஸ்திரேலியா சென்று 6 மாத காலம் பயிற்சி செய்தார். இங்கிருந்து தான் ரெய்னாவின் பெயர் உலகம் முழுவதும் தெரிய ஆரம்பித்தது.


முதல் போட்டி - முதல் டி20 சதம் - 2011 உலகக் கோப்பை கால் இறுதி - அரை இறுதி போட்டிகளில்

ரெய்னாவின் சர்வதேச தொடக்கம்

2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக தனது முதல் சர்வதேச போட்டியை விளையாடினார் ரெய்னா. ஆனால் அந்த போட்டியின் முதல் பந்திலேயே முத்தையா முரளிதரனிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அதன்பின் இந்திய அணியில் உள்ளே வெளியே என்று இருந்த சுரேஷ் ரெய்னா 2009 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் 409 ரன்கள் குவித்து இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்தார். 2010 ஆம் ஆண்டு T-20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 101 ரன்கள் அடித்து அசத்தினார். இந்தியாவிற்காக T-20 போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்கிற சாதனைக்கும் சொந்தக்காரரானார். அதுமட்டுமில்லாமல் இந்திய அணிக்காக மூன்று பார்மட்டிலும் சதமடித்த முதல் இந்தியரும் சுரேஷ் ரெய்னா தான். இதன்மூலம் 2011 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆரம்ப போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இவர் அடித்த 34, அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த 36 ரன்களும் இந்திய அணி கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. உலகக்கோப்பை முடிந்த கையோடு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கேப்டனாகவும் ரெய்னா செயல்பட்டார்.


ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய போது...

ஐபிஎல்லில் ஆதிக்கம்

2007 ஆம் ஆண்டு T-20 உலகக்கோப்பைக்கு பிறகு T-20 போட்டிகள் பிரபலமடைய ஆரம்பித்தது. அப்பொழுது தான் ஐபிஎல் தொடர் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. 2008 ஐபிஎல் ஏலத்தின் பொது சென்னை அணி சுரேஷ் ரெய்னாவை 1.6 கோடிக்கு வாங்கியது. அங்கு இருந்துதான் ரெய்னாவின் ஆதிக்கம் ஆரம்பித்தது. ஐபிஎல் தொடர் ஆரம்பித்து தொடர்ச்சியாக 7 சீசன்களில் 400 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே வீரர் சுரேஷ் ரெய்னாதான்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதுகெலும்பாக திகழ்ந்தார். அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரில் 5528 ரன்கள், பந்து வீச்சில் 25 விக்கெட்டுகள் மற்றும் 109 கேட்ச்கள் என அசத்தியிருக்கிறார் சுரேஷ் ரெய்னா. குறிப்பாக 2014 ஆம் ஆண்டு குவாலிபியர்-2 போட்டியில் பஞ்சாபிற்கு எதிராக 25 பந்தில் 87 ரன்கள் அடித்து கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஐபிஎல்லில் தனது தொடர் ஆதிக்கத்தினால் மக்களிடையே "மிஸ்டர் ஐபிஎல்" என்றும்,சென்னை ரசிகர்களிடையே "சின்ன தல " என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார் சுரேஷ் ரெய்னா.


ரெய்னாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்பட்ட சரிவு

ரெய்னாவின் வீழ்ச்சி

2013 வரை இந்தியாவின் அடுத்த கேப்டன் என்று கருதப்பட்ட சுரேஷ் ரெய்னா திடீரென்று தனது ஃபார்மை இழந்தார். குறிப்பாக பந்து வீச்சாளர்கள் இவரது பலவீனத்தை கண்டுபிடித்து விட்டனர். ஸ்பின்னர்களை நொறுக்கி எடுக்கும் ரெய்னா வேக பந்துவீச்சாளர்களின் ஷார்ட் பாலில் அவுட் ஆக ஆரம்பித்தார். இது அவரது கிரிக்கெட் பயணத்திற்கு பெரும் பாதகமாக அமைந்து விட்டது. இவரால் கடைசி வரை ஷார்ட்பாலில் இருந்து மீள முடியவில்லை. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அணியிலிருந்து சுரேஷ் ரெய்னா ஓரம்கட்டப்பட்டார். 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின் இந்திய அணியில் உள்ளே வெளியே என்று இருந்த ரெய்னா, 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியிலிருந்து மொத்தமாக வெளியேறினார். அதுமட்டுமில்லாமல் 2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் சுரேஷ் ரெய்னாவை வாங்க முன்வரவில்லை.


தோனி மற்றும் ரெய்னா இடையேயான நட்பு

தோனி - ரெய்னா நட்பு

ரெய்னாவின் கிரிக்கெட் பயணத்தில் தோனியின் பங்களிப்பு அதிகம். இந்திய அணியிலும் சரி, சென்னை அணியிலும் சரி ரெய்னாவிற்கு பக்கபலமாக இருந்தார் மகேந்திர சிங் தோனி. பல ஆட்டங்களில் ரெய்னா சொதப்பினாலும் அவரை தோனி எப்பொழுதும் அணியில் எடுப்பார். ஒருமுறை யுவராஜ் சிங், ரெய்னா-தோனி நட்பை விமர்சித்தார். "தோனிக்கு பிடித்தமான வீரர் என்றால் அது ரெய்னா தான்" என்று கூறினார். தோனியின் வெற்றி பயணத்திலும் ரெய்னாவின் பங்களிப்பு அதிகம். 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ரோபி மற்றும் ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை அணி.. அதில் நான்கு முறை ரெய்னாவின் பங்களிப்பு மகத்தானது. இவர்களின் கிரிக்கெட் பயணம் முடிவு வரை ஒன்றாக இருந்தது. 15 ஆகஸ்ட் 2020 ஆம் ஆண்டு இருவரும் இணைந்து சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றனர்.


டி10 லீக் - ரோடு சேஃப்டி - ஆம்ஸ்டெர்டாம் நகரில் ரெய்னாவின் உணவகம்

ஓய்வுக்கு பின் சுரேஷ் ரெய்னா

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ரோடு சேஃப்டி உலகத் தொடரில் விளையாடினார். பின் T-10 தொடரில் டெக்கான் க்ளாடியேட்டர்ஸ் அணிக்காகவும், அமெரிக்காவில் நடந்த T-10 தொடரில் கலிஃபோர்னியா நயிட்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார் ரெய்னா. அதுமட்டுமில்லாமல் தற்போது நெதர்லாந்து நாட்டில் ஆம்ஸ்டெர்டாம் நகரில் இந்திய உணவகம் ஒன்றை திறந்துள்ளார். பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராகவும் செயல்படுகிறார். இந்தியாவில் தோனி கோலிக்கு பின் ரெய்னாவிற்கு தான் அதிக ரசிகர்கள் உண்டு. பேட்டிங்,பௌலிங்,பீல்டிங் என்று மூன்றிலும் சிறப்பாக விளங்கிய ரெய்னா இன்னும் சிறிதுகாலம் கிரிக்கெட் விளையாடிருக்கலாம் என்பது ரசிகர்களின் ஆசையாக இருந்தது.

Updated On 27 Nov 2023 6:41 PM GMT
ராணி

ராணி

Next Story