இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்தியாவில் பேட்மிண்டன் இந்த அளவிற்கு பிரபலமடைந்து இருப்பதற்கு மிக முக்கிய காரணம் பி.வி. சிந்து என்று சொன்னால் அது மிகையாகாது. பல பதக்கங்களை வென்று இந்தியாவை பேட்மிண்டன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இவர். ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசியப் போட்டி மற்றும் உலக சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல தொடர்களில் வென்று பதக்கங்களை அள்ளியுள்ளார். சிந்து, தான் யாரைப் பார்த்து பேட்மிண்டன் துறையில் ஈடுபட்டாரோ அவரது (கோபி சந்த் ) பயிற்சிக்கூடத்திலேயே சேர்ந்து ஒலிம்பிக் இறுதிப்போட்டி வரை சென்றார். அதுமட்டுமில்லாமல் ஒலிம்பிக் இறுதிப் போட்டிற்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் பி.வி.சிந்து. யார் இந்த பி.வி.சிந்து? அவரை பற்றிய சிறப்பு தொகுப்பை இக்கட்டுரையில் காணலாம்.

பி.வி.சிந்துவின் வரலாறு

பி.வி.ரமணா மற்றும் பி. விஜயா தம்பதிக்கு கடந்த 1995 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 - ஆம் தேதி பிறந்தார் பி.வி.சிந்து. இவரது பெற்றோர் இருவரும் கைப்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள். தந்தை பி.வி.ரமணா கைப்பந்து போட்டியில் அர்ஜூனா விருது பெற்றவர். பி.வி.சிந்து தனது பள்ளிப்படிப்பை ஹைதராபாத்திலுள்ள ஆக்ஸிலியம் மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின் தனது கல்லூரி படிப்பை செயின்ட் அன்ஸ் காலேஜில் முடித்தார். உலகக்கோப்பை கிரிக்கெட்டை மொத்த இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்ப்பது எதார்த்தமானது. ஆனால் மொத்த இந்தியாவையும் நாற்காலியின் முனையில் அமர வைத்து பேட்மிண்டன் போட்டியை பார்க்க வைத்தவர் பி.வி சிந்து.


குடும்பத்தினருடன் பி.வி சிந்து

தனது 6-வது வயதிலேயே கோபிசந்தின் பேட்மிண்டன் விளையாட்டால் ஈர்க்கப்பட்டு விளையாட ஆரம்பித்தார் சிந்து. அவரது ஆர்வத்தை பார்த்த தந்தை ரமணா, பேட்மிண்டன் பயிற்சியாளர் மெகபூ அலியிடம் பயிற்சிக்காக அனுப்பினார். ஆனால் அங்கு சிந்து மிகவும் வயது குறைந்த சிறுமியாக இருந்ததால் அவருடன் விளையாட சரியான ஆட்கள் இல்லை. இதனால் சுவற்றில் கார்க் அடிக்க வைத்து பயிற்சி கொடுத்தார் கெமபூ அலி. இப்படி ஆரம்பித்த சிந்துவின் பேட்மிண்டன் கனவு பள்ளிப் போட்டிகளில் அவருக்கு பல கோப்பைகளை வென்று வர ஊக்கம் அளித்தது. இதையடுத்து சிந்து தான் யாரைப்பார்த்து பேட்மிண்டன் துறையில் ஈடுபட்டரோ அவரது பயிற்சிக்கூடத்திலேயே இணையும் வாய்ப்பு கிடைத்தது. கோபிசந்தின் பேட்மிண்டன் அகாடெமியில் இணைந்தார் சிந்து.


பயிற்சியின்போது பி.வி சிந்து

முதல் சர்வதேச தொடர்

13 வயதுக்குட்பட்ட தேசிய சப் ஜூனியர் பிரிவு, 14 வயதுக்குட்பட்டோருக்கான தேசியப் பள்ளிகள் விளையாட்டுப் போட்டி என அவர் களமிறங்கிய எல்லா இடங்களிலும் வெற்றிவாகை சூடினார். தனது பள்ளிப் பருவத்திலேயே தேசிய அளவில் உயர்ந்தார் சிந்து. இந்திய அளவில் பெரும் முன்னேற்றம் கண்ட பி.வி. சிந்து, சர்வதேச அரங்கில் 2009 - ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்தார். கொழும்பு நகரில் நடைபெற்ற சப்-ஜூனியர் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்தான் அவர் பங்கேற்ற முதல் சர்வதேசப் போட்டி. இந்தப் போட்டியில் அபாரமாக ஆடி வெண்கல பதக்கம் வென்றார். 2010 - ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற பேட்மிண்டன் சேலஞ்ச் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கையோடு, அதே ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற ஜூனியர் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிவரை முன்னேறினார்.


பேட்மிண்டன் பயிற்சியாளர் மெகபூ அலி மற்றும் கோபிசந்த்

சாதனை மேல் சாதனை

2012 -ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய இளையோர் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி, ஜப்பானின் நஷோமி ஒக்குஹாராவை வீழ்த்தி இந்தியா சார்பாக முதல் சாம்பியன் பட்டம் வென்றார். பின் அதே ஆண்டு சீன சூப்பர் தொடரில் லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சீனாவின் லி சூயிரியை அரையிறுதியில் வீழ்த்தியபோது பேட்மிண்டன் உலகமே சிந்துவைத் திரும்பிப் பார்த்தது. 2012- ஆம் ஆண்டில் மட்டும் பேட்மிண்டனில் கோலோச்சிய சீன, இந்தோனேஷியா வீராங்கனைகளைப் பல்வேறு போட்டிகளில் வீழ்த்தி புதிய சாம்பியனாக உருவெடுக்கத் தொடங்கினார் சிந்து. 2013- ஆம் ஆண்டு முதல் 2015- ஆம் ஆண்டுவரை சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினார். குறிப்பாக 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் மக்காவ் ஓபன் பட்டத்தைத் தொடர்ச்சியாக வென்று புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார். இதேபோல 2014- இல் சயீத் மோடி இண்டர்நேஷனல் தொடரிலும் 2015- இல் டென்மார்க் ஓபன் போட்டியிலும் இரண்டாமிடம் பிடித்து நூலிழையில் பட்டத்தைக் கோட்டைவிட்டார்.


தேசிய அளவிலான போட்டிகளில் வென்றபோது

முதல் ஒலிம்பிக் பதக்கம்

2016 ஆம் ஆண்டு சிந்துவுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டின் தொடக்கத்தில் மலேசியன் மாஸ்டர்ஸ் தொடரில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோரைத் தோற்கடித்த சிந்து, ரியோ ஒலிம்பிக் தொடரில் சாதிப்பதற்காகக் காத்திருந்தார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முன் பேட்மிண்டனில் பதக்கம் கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சிந்து சந்தித்த போட்டியாளர்கள் எல்லாருமே கடினமானவர்களாகவே இருந்தார்கள். படிப்படியாக முன்னேறி வந்தவர், இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரினிடம் போராடித் தோற்று, தங்கப் பதக்கத்தை இழந்தார். ஆனாலும், வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தார். ஒலிம்பிக்கில் இளம் வயதில் பதக்கம் வென்ற முதல் இந்தியர், தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை, பேட்மிண்டனில் பதக்கம் வென்ற இரண்டாவது வீராங்கனை என பல பெருமைகளை ஒரே வெற்றியின் மூலம் பெற்றார் பி.வி. சிந்து.


ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தருணங்கள்

தொடரும் ஆதிக்கம்

2022 - ஆம் ஆண்டு நடைபெற்ற காமென்வெல்த் போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவுக்காக தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்து பேட்மிண்டன் உலகில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிரூபித்தார் பி.வி.சிந்து. இப்படி தன் லட்சிய பாதையில் பல்வேறு தோல்விகளை எதிர்கொண்ட போதும் துவண்டுவிடாமல் தன் இலக்கை மட்டுமே உத்வேகத்தோடு தொடர்ந்து பல வெற்றிகளை குவித்து வருகிறார். அத்தோடு இல்லாமல் இன்று ஏராளமான பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளில் சேர்ப்பதற்கு சிந்து ஒரு ரோல் மாடல் என்றால் மிகையாகாது. சிந்து இந்தியாவிற்கு பெருமை மட்டுமல்ல, இந்தியாவின் இளம்பெண்களுக்கான ஒரு வழிகாட்டி நட்சத்திரமும்கூட.

Updated On 30 Oct 2023 6:41 PM GMT
ராணி

ராணி

Next Story