இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பல ஆண்டுகளாக நடந்துவரும் தடகளப் போட்டிகளில் இந்தியாவின் பங்களிப்பு என்னவென்று வரலாற்றுப் பக்கங்களை திருப்பிப் பார்த்தால் மிகக் குறைந்த அளவே சாதனைகள் உள்ளன. அந்த சாதனைகளையும் சாதனை புரிந்தவர்களையும் விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்தியாவின் சார்பில் சாதனை புரிந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஈட்டி எறிதல் வீரர் `தங்க மகன்’ நீரஜ் சோப்ரா. 13 வயதிலேயே தடகளத்தில் நுழைந்த நீரஜ், சுமார் 11 ஆண்டுகளாக ஈட்டி எறிதலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். யார் இந்த நீரஜ் சோப்ரா? எங்கிருந்து ஆரம்பித்தது அவரது பயணம்? அவர் நிகழ்த்திய சாதனை என்னென்ன? என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.

நீரஜ் சோப்ராவின் வரலாறு

ரோர் குடும்பத்தைச் சேர்ந்த நீரஜ் ஹரியானா மாநிலத்திலுள்ள பானிபட் நகரில் பிறந்தார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நீரஜ் சிறுவயதில் எந்த விளையாட்டிலும் ஆர்வம் இல்லாமல் மந்தமாக இருந்துள்ளார். அதிகம் வேலை செய்யமாட்டாராம். இப்படி இருந்த நீரஜிற்கு எப்படி ஈட்டி எறிதலின் மீது ஆர்வம் வந்தது? என்று தெரியவில்லை என்று நீரஜின் பெற்றோர் சமீபத்திய பேட்டியில் வேடிக்கையாகக் கூறியுள்ளனர். நீரஜ் சோப்ராவிற்கு இரண்டு சகோதரிகள். நீரஜின் வெற்றிப்பயணத்தில் இரண்டு சகோதரிகளுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. தனது பள்ளிப்படிப்பை BVN பப்ளிக் பள்ளியில் படித்தார் நீரஜ். பள்ளிப்பருவத்தில் படிப்பில் மிக கெட்டிக்காரராக இருந்தார். பஞ்சாப் மாநிலத்தின் பிரபல கல்லூரியான தயானந்தா ஆங்கிலோ வேதிக்கில் படித்தார். இந்த கல்லூரியில்தான் கபில் தேவ், யோக்ராஜ் சிங் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் படித்தனர்.


பெற்றோருடன் நீரஜ் சோப்ரா

தடகள வாழ்க்கை

நீரஜ் சோப்ரா சிறுவயதில் நல்ல உடல் பருமனோடு இருந்ததால் அவரோடு கூட படித்த சிறுவர்கள் இவரை உருவ கேலி செய்தனர். இதனால் மனமுடைந்த நீரஜ் உடம்பை குறைக்க வேண்டும் என்று மடலாடில் உள்ள ஜிம்னாசியம் பள்ளியில் ஜிம்னாஸ்டிக் பயிற்சியில் சேர்ந்தார். ஜிம்னாஸ்டிக்கில் நன்கு பயிற்சி பெற்று உடல் எடையை குறைத்தார். பின் பானிப்பட்டிலுள்ள சிவாஜி மைதானத்தில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதலில் பயிற்சிபெற ஆரம்பித்தார். பயிற்சி செய்து கொண்டிருந்தபொழுது விளையாட்டாக ஈட்டியை எறிந்தார். அது 53 மீட்டர் தூரம் பறந்தது. இந்தியாவின் முன்னாள் ஈட்டி எறிதல் வீரரான அக்ஷய் சௌத்ரி நீராஜின் இந்தத் திறமையை பார்த்து வியந்தார்.


நீரஜ்ஜின் குழந்தைப்பருவ புகைப்படம்

`எந்த பயிற்சியும் கொடுக்காமல் இந்த அளவிற்கு வீசுகிறான் என்றால் முறையாக பயிற்சி கொடுத்தால் மிகச்சிறந்த வீரராக வருவான்’ என்று முதலில் நம்பியவர் சௌத்ரிதான். அதன்பின் நீரஜ் சோப்ராவிற்கு முறையாக பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார் அக்ஷய். பயிற்சிகளின்போது உள்ளூர்ப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து நீரஜ் சோப்ரா மாவட்ட அளவிலான போட்டிகளிலும் பங்கேற்றார். 13 வயதில் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்ற நீரஜ் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். ஒரு வருடம் அக்ஷய் சௌத்ரியிடம் பயிற்சிபெற்ற நீரஜ், அடுத்தக்கட்ட நகர்விற்காக பஞ்சகுவிலுள்ள டவ் தேவி லால் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் சேர்ந்தார். பஞ்சாபின் மிகப்பெரிய அகாடமியான டவ் லாலில் ஈட்டி எறிதலுக்கென்று தனி பயிற்சியாளர் இல்லை.


பயிற்சியின் போது

இந்தியாவின் முன்னாள் தடகள வீரரான நசீம் அஹ்மத்தான் அங்கு பொதுவாக எல்லா விளையாட்டிற்கும் பயிற்சியாளராக இருந்தார். அங்கு ஈட்டி எறிதலுக்கு முறையாக பயிற்சி இல்லாததால் தடையோட்ட பயிற்சியும் பெற்றுக்கொண்டார் நீரஜ். ஆனால் அவருக்கு ஈட்டி எறிதலின் மீதே அதீத ஆர்வம் இருந்தது. ஈட்டி எறிதலில் பயிற்சி மேற்கொள்ளாமல் இருந்தது அவருக்கு பெரும் பாரமாக இருந்தது. இதனால் தானே ஈட்டி எறிதலுக்கான பயிற்சியை ஆரம்பித்தார். அதற்காக உலகின் தலைசிறந்த வீரரான செக் நாட்டின் ஜென் ஸியேஸ்னியின் வீடியோக்களை பார்த்து கற்றுக்கொண்டு, தீவிர பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தார். இவரின் ஆர்வத்தைப் பார்த்த டவ் தேவி லால் அகாடெமியின் பயிற்சியாளர் நசீம் அஹ்மத் அவரை மேலும் ஊக்கமளிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் 55 மீட்டர்கள் வீசிக்கொண்டிருந்த நீரஜ்ஜின் வீசும் தூரம் போகப்போக அதிகமாகிக்கொண்டே போனது. இதன் விளைவாக முதன்முதலில் தேசிய போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது . தான் கலந்துகொண்ட முதல் தொடரிலே தங்கப்பதக்கம் வென்றார்.

சர்வதேச ஆட்டம்

2013 ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டியில் பங்கேற்றார் நீரஜ் சோப்ரா. யூத் ஜூனியர் உலகத் தடகள போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்றார். உக்ரைன் நாட்டில் நடைபெற்ற இத்தொடரில் இந்தியா சார்பாக 147 வீரரர்கள் பங்கேற்றனர். பானிபட் நகரமே நீரஜ் சோப்ராவின் ஆட்டத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தது. ஆனால் அந்த தொடரில் சோபிக்கத் தவறினார் நீரஜ். சற்று மனமுடைந்த நீரஜ், 6 மாதங்கள் இடைவெளி எடுத்துக்கொண்டார்.


ஆரம்பக்கட்ட போட்டிகளில்

பின் மீண்டும் யூத் ஒலிம்பிற்கிற்காக பயிற்சிபெற ஆரம்பித்தார். ஒரு நாளில் 10 மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டதாக டவ் தேவ் லால் அகாடமி பயிற்சியாளர் நசீம் அஹ்மத் சமீபத்திய பேட்டியில் கூறினார். தொடர் பயிற்சியின் பலனாக 2014 ஆம் ஆண்டு நடந்த யூத் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இருப்பினும் நீரஜிற்கு அந்த வெள்ளிப்பதக்கம் பெரிதாக தெரியவில்லை. ஏனென்றால் அவர் குறி வைத்தது தங்கப்பதக்கத்தை. இதனால் வெள்ளிப்பதக்கம் அவருக்கு திருப்தியைக் கொடுக்கவில்லை. இந்தத் தொடரில் அவர் 70 மீட்டர் தூரம் வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிருந்துதான் நீரஜ் சோப்ராவின் எழுச்சி ஆரம்பித்தது. பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை அள்ளினார். தொடர்ந்து தனது ஆதிக்கத்தை உலக அரங்கில் நிரூபித்தார்.

2014 யூத் ஒலிம்பிக்க்கை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு மீண்டும் நடந்த ஜூனியர் உலகத் தடகளத்தில் 81.04 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கம் வென்றார். ஜூனியர் பிரிவில் 81 மீட்டர் தூரம் வீசி உலக சாதனையும் படைத்தார். அதன்பின் அதே ஆண்டில் கேரளாவில் தேசிய விளையாட்டும் நடந்தது. அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய நீரஜ் சோப்ரா அந்தத் தொடரில் பெரும் ஏமாற்றத்தை அளித்தார். அந்தத் தொடரில் ஐந்தாவது இடம் பிடித்து தொடரிலிருந்து வெளியேறினார். இந்தத் தொடருக்கு பின் 2 வருடம் எந்தத் தொடரிலும் நீரஜ் சோப்ரா பங்கேற்கவில்லை. 2 வருடம் கழித்து சவுத் ஏசியன் தொடரில் சீனியர் பிரிவில் பங்கேற்றார். பழைய யுக்தியோடு வராமல் புதிய யுக்தியோடு களமிறங்கினார் நீரஜ். தனது ஓடுதலில் மாற்றம் கொண்டு வந்தார்.


தெற்கு ஆசியப் போட்டியில்
ஓய்வுக்குப் பிறகு கர்ஜித்த சிங்கம்

`அவர் ஈட்டியை பிடித்து ஓடி வரும்பொழுது குதிரை பந்தயத்தில் ஓடி வருவது போல் இருந்தது’ என்று பல பத்திரிகைகள் எழுதின. இந்தத் தொடரில் அவர் வீசிய தூரம் 82.23 மீட்டர். மீண்டும் 2 வருடம் கழித்து தங்கப்பதக்கம் வென்றார். பல பத்திரிகைகள் `சிங்கம் ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் கர்ஜனை செய்துள்ளது’ என்று பாராட்டி எழுதினார்கள். அதே ஆண்டு ஆசிய தடகளத்தில் 85.25 மீட்டர் வீசி மீண்டும் தங்கப்பதக்கம் வென்றார். தொடர் வெற்றி பெற்றுக்கொண்டிருந்த நீரஜ் சோப்ரா மீண்டும் சற்று சறுக்கலை சந்தித்தார். சூரிச் டைமண்ட் லீக்கில் ஏழாவது இடம் பெற்றார். உலக தடகளத்தில் ஆரம்பத்திலே தோற்று வெளியேறினார். இந்த சறுக்கலுக்கு பல கரணங்கள் இருந்ததாக நீராஜின் சுற்று வட்டாரங்கள் தெரிவித்தன. இவரது பயிற்சியாளர் வெர்னர் டேனியல்ஸ்கும் இவருக்கும் இடையே பெரிய பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவரால் உலகத் தொடரில் ஒழுங்காக சோபிக்க முடியவில்லை. இந்த பிரச்சினை பெரிய சர்ச்சையானது. இதனால் நீரஜ் சோப்ராவின் பெயர் கெட்டுப்போனது.


'அர்ஜுனா விருது’ வாங்கிய தருணம்

பல சர்ச்சைகளுக்கு உள்ளான நீரஜ் சோப்ரா மீண்டும் ஈட்டி எறிதலில் பங்கேற்க மாட்டார் என்று பலரும் கருதினர். ஆனால் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு மீண்டும் காமன்வெல்த் போட்டியில் களமிறங்கினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நீரஜ் சோப்ரா இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார். 86.47 மீட்டர் வீசி தங்கப்பதக்கம் வென்றார். உலக அரங்கமே நீரஜை கொண்டாட ஆரம்பித்தது. பின் வரிசையாக பதக்கங்களை குவிக்க ஆரம்பித்தார். உள்ளூர்ப் போட்டிகளிலும் சரி, சர்வதேச போட்டிகளிலும் சரி தொடர் ஆதிக்கம் செலுத்தினார். இதற்கு பின்புதான் 2021 ஒலிம்பிக்கில் 87 மீட்டர் வீசி உலக சாதனை படைத்ததோடு மட்டுமில்லாமல், இந்தியாவிற்காக தங்கப்பதக்கமும் பெற்றுக்கொடுத்தார். இதனால் இந்தியாவின் `தங்க மகன்’ என்று எல்லாராலும் அழைக்கப்பட்டார். பல விருதுகள் மற்றும் பரிசுகள் நீரஜ் சோப்ராவிற்கு கிடைத்தன. அதில் `அர்ஜுன விருது’ குறிப்பிடத்தக்கது.


உலக தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தருணம்

தற்போது புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக தடகளப் போட்டியிலும் 88.85 தூரம் வீசி தங்கப்பதக்கம் வென்றார். மீண்டும் 88.85 மீட்டர் வீசி உலக சாதனை படைத்தார். நீரஜிற்கு தனியாக போட்டியாளர் யாரும் தேவையில்லை. தனது சாதனைகளை தானே முறியடித்து வருகிறார். இவரது சாதனைகளை பாராட்டி பஞ்சாப் அரசு இவருக்கு ஜூனியர் கமிஷனர் பதவி கொடுத்தது. தற்பொழுது மொத்த இந்தியாவும் 2024 ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவின் விளையாட்டை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. அடுத்த ஒலிம்பிக்கில் தங்க மகன் நீரஜ் சோப்ரா பதக்கம் வெல்லவேண்டும் என்பதே இந்தியர்கள் அனைவரது பிரார்த்தனையாக இருக்கிறது.

Updated On 18 Sep 2023 6:52 PM GMT
ராணி

ராணி

Next Story