இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்திய கால்பந்து கழகத்தில் வருடந்தோறும் ஏராளமான கால்பந்தாட்ட போட்டி தொடர்கள் நடத்தப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் மிக முக்கியத் தொடர்களாக ரசிகர்களும், விளையாட்டு வீரர்களும் அதீத ஆர்வம் காட்டும் போட்டிகள் என்ற வரிசையில் பார்த்தால் ‘டுராண்ட் கோப்பை’, ‘ரோவர்ஸ் கோப்பை’, ‘கலிங்கா கோப்பை’, ‘சந்தோஷ் கோப்பை’ என இன்னும் பல உள்ளன. இதில் தலைச்சிறந்த மிக முக்கியக் கோப்பைத் தொடராக கருதப்படுவது எதுவென்றால் அதுதான் “சந்தோஷ் கோப்பை”. அப்படிப்பட்ட இந்த கோப்பையை தமிழக அணி இதுவரை வெல்ல முடியாதது ஏன்? என்பது இதுவரை புலப்படாத ஒன்றாகவே உள்ளது. அது குறித்த சில தகவல்களை இங்கே காணலாம்.

கோப்பைக்கான போட்டி வடிவம்

வருடந்தோறும் நடக்கும் இந்த கால்பந்துத் தொடரின் வடிவம் ஆண்டுக்கு ஒருமுறை பல்வேறு மாற்றங்களின் அடிப்பையில் மாறிக்கொண்டே வருகிறது. விளையாட்டின் வடிவம் என்று குறிப்பிட்டுப் பார்த்தால் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து முன்னூறுக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு அதிலிருந்து தகுதிச்சுற்றுகளின் கீழ் தேர்வு செய்யப்படுவர். தகுதிச்சுற்றில் பங்குபெறும் அணிகள், மூன்று அல்லது நான்கு அணிகள் கொண்ட எட்டுக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பிறகு அதில் வெற்றி பெறும் அதாவது அதில் முதலிடம் பெரும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி செல்வர். மேலும் அடுத்த சுற்றில் தகுதி சுற்றுப் போட்டிகளில் விளையாடத் தேவைப்படாத, முன்னுரிமை பெற்ற நான்கு அணிகளும் இணைந்து காலிறுதி சுற்றுக்கான நிலையை எட்டும்.

போட்டியில் உள்ள பன்னிரண்டு அணிகளும் மூன்று அணிகள் கொண்ட நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, அதில் வெற்றி பெறும் அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்த அரை இறுதிப் போட்டியும் சரி, இறுதிப் போட்டியும் சரி ஒருமுறை மட்டுமே விளையாட பெரும் வகையில் அமைந்துள்ளது. இப்போட்டிகளில் தேவை ஏற்பட்டால் அதிகப்படியான நேரம், கோல்டன் கோல் என்று சொல்லக்கூடிய பொன் இலக்கு, பெனால்டி போன்ற முறைகளில் முடிவு எடுக்கப்படும்.


சந்தோஷ் கோப்பை மற்றும் கால்பந்துப் போட்டி

கோப்பைக்கான தொடக்கம்

இந்த சந்தோஷ் கோப்பைத் தொடர் என்பது 1941 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கப்பட்ட ஒரு கால்பந்து தொடர் ஆகும். ‘சந்தோஷ்’ என்பதற்கான பெயர் காரணம் குறித்து பார்த்தால் சந்தோஷ் என்றொரு இடம் வங்கதேசத்தில் உள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்தவர் தான் இந்திய கால்பந்தின் புகழ்பெற்ற நபரான, முன்னாள் மகாராஜா சர் மன்மத நாத் ராய் சவுத்ரி. இவர் ஈஸ்ட் பெங்கால் கால்பந்து கிளப்பின் முக்கிய உறுப்பினர்களுள் ஒருவராகவும், பல ஆண்டுகளாக IFA வின் தலைவராகவும், வங்காள கால்பந்து அமைப்பின் தலைவராகவும் இருந்திருக்கிறார். அவரின் நினைவாகத்தான் இந்த பெயர் அந்த கோப்பைக்கு வைக்கப்பட்டுள்ளது.


இந்திய கால்பந்தில் புகழ்பெற்ற முன்னாள் மகாராஜா சர் மன்மத நாத் ராய் சவுத்ரி

கோப்பையை அதிகம் தட்டிய முதல் மூன்று அணிகள்

சந்தோஷ் கோப்பைகான போட்டியில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கால்பந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடுவர். இப்போட்டியில் 31 அணிகள் இணைந்து விளையாடும். வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த சந்தோஷ் டிராபியை அதிக முறை வென்ற அணி என்றால் அது மேற்கு வங்காள அணி தான். 32 முறை முதல் இடத்தை பிடித்து கோப்பையை தன்வசப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல் 1947- 1952, 1975-1980, 1993-1998 என்கிற ஆண்டுகளில் தொடர்ந்து மேற்கு வங்காள அணி தொடர் வெற்றியை பெற்றுள்ளது. மேலும் இந்தியாவிலேயே அதிகளவில் சந்தோஷ் கோப்பையை தட்டிய அணியாகவும் உள்ளது. இரண்டாவதாக பஞ்சாப் அணி 8 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. மூன்றாவது இடத்தில் சர்வீஸ் அணியும், கேரளா அணியும் ஒன்றையொன்று கோப்பையை ஒரே எண்ணிக்கையில் வென்றிருக்கிறது. இந்த நான்கு அணிகள் சந்தோஷ் கோப்பை வரலாற்றில் அதிகளவில் வெற்றக் கோப்பையை எட்டிப்பிடித்த அணிகளாகும்.


மேற்கு வங்காள அணி மற்றும் பஞ்சாப் அணி

தமிழக கால்பந்து அணியின் பங்கு

இந்திய கால்பந்தின் வளர்ச்சி ஒரு புறம் இருக்க, நாளுக்கு நாள் நமது தமிழ்நாட்டு கால்பந்து விளையாட்டு வீரர்களின் வளர்ச்சியும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. ஐ.எஸ்.எல், ஐ-லீக் போன்ற இந்தியாவின் மிக முக்கிய கோப்பைத் தொடர்களில் நமது தமிழ்நாட்டு இளைஞர்கள் துணிந்து விளையாடி வருகின்றனர். தேர்ந்த விளையாட்டு வீரர்களை கொண்ட அணியாக நமது தமிழ்நாட்டு அணி இருந்தாலும் ஏனோ தெரியவில்லை இதுவரை சந்தோஷ் கோப்பை மட்டும் அவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. தமிழக கால்பந்து அணியில் இருந்து, இந்திய அணிக்காக விளையாடும் அளவிற்கு தகுதிப் பெற்ற வீரர்கள் பலர் உள்ளனர். ஆனால், அவர்களில் ஒரு சிலரை சந்தோஷ் கோப்பைக்கு இதுவரை தேர்வு செய்யப்படாததும் பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது. 80 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடக்கும் இந்த போட்டித் தொடரில், தேர்ந்த விளையாட்டு வீரர்களை நமது தமிழக அணியில் இருந்தும், ஒரு முறைக்கூட வெற்றியை எட்டிப் பிடிக்க முடியாதது ஏன் என்பதுதான் இன்று வரை புரியாத ஒன்றாகவே உள்ளது.


ஐ.எஸ்.எல், ஐ-லீக் போட்டியில் தமிழக கால்பந்து அணி

வெற்றியை எட்டிப் பிடிக்க முடியாததற்கான காரணம் என்ன?

தமிழகத்தைச் சேர்ந்த சக விளையாட்டு வீரர்கள் இடத்தில் இது தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்ட போது தமிழகத்தை பொறுத்த வரையில் சந்தோஷ் கோப்பைக்குரிய முக்கியத்துவம் என்பது இன்றளவும் சரிவர வழங்கப்படுவதில்லை. தேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்புகள் அளிக்காமல், சிபாரிசின் பேரில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாக வருத்தம் தெரிவித்தனர். மேலும் திறமை உள்ள இளைஞர்கள் பலர் தகுதிச்சுற்றுக்கு முன்னேறினாலும் அடுத்தக்கட்டதில்

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நீக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். சென்னை ஐ-லீக் குறித்த கேள்விக்கும் பதிலளித்த வீரர்கள் 2018ல் இருந்து போட்டி நடக்காமல் இருப்பது பல விளையாட்டு வீரர்களின் வாழ்வை கேள்விக்குறியாகிறது. சென்னை லீக் நடந்தால் சந்தோஷ் கோப்பைக்கான தகுதிச் சுற்றுகளில் நடக்கும் குளறுபடிகளுக்கு வாய்ப்பு கூட இருக்காது என்றும் கூறினார்.


தமிழக அணி வீரர்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள்

2023-2024க்கான கோப்பைத் தொடர்

இந்த ஆண்டுக்கான சந்தோஷ் டிராபி தொடங்க உள்ளது. அதற்காக, தமிழக அணி வீரர்களுக்கான தகுதிச் சுற்று செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்கியது. தமிழகத்தை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 300க்கும் அதிகமான கால்பந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த தகுதிச்சுற்று நிறைவடைந்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றிருந்த நிலையில், சர்ச்சைகளின் அடிப்படையில் தகுதிச் சுற்று மீண்டும் முதலில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை தேர்ந்த விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று சக போட்டியாளர்கள் எதிர்பார்ப்பதோடு நம்பிக்கை வார்த்தை அளிக்கின்றனர். மேலும் அவ்வாறு நடந்தால் இந்த ஆண்டு நிச்சயம் சந்தோஷ் கோப்பை தமிழகத்தை வந்தடைவது எளிதானதாக இருக்கும் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் தமிழக கால்பந்து சந்தோஷ் கோப்பை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜே.மோசஸ் டேவிட் ராஜ் தனது முகநூல் பக்கத்தில் தமிழக அணியின் சந்தோஷ் கோப்பைக்கான தகுதிச்சுற்றுகளில் நடந்து வரும் குளறுபடிகள் குறித்த வீடியோ மற்றும் பதிவை பதிவிட்டுள்ளார்.

தமிழக கால்பந்து சந்தோஷ் கோப்பை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜே.மோசஸ் டேவிட் ராஜ்


Updated On 2 Oct 2023 6:36 PM GMT
ராணி

ராணி

Next Story