இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்தியாவில் தற்போது நடந்து வரும் 2024 ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜனவரி 12ஆம் தேதி தொடங்கியது. இத்தொடரின் லீக் போட்டியில் உத்தரப்பிரதேசம் மற்றும் பெங்கால் அணிகள் மோதின. கான்பூரில் தொடங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்கால் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து களமிறங்கிய உத்தரப்பிரதேசம் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 60 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய அணியை இந்திய அணியின் நட்சத்திர வேகபந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் புரட்டி எடுத்தார். அந்த இன்னிங்ஸில் மட்டும் ௮ விக்கெட்டுகளை சாய்த்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதற்கு முன் இறுதியாக 2018 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார் புவனேஸ்வர். ஷார்ட்டர் ஃபார்மட்டில் மட்டும் விளையாடி வந்த புவனேஸ்வர் குமார் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாடி வருவது ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை தந்துள்ளது. மீண்டும் இந்திய அணிக்கு புவனேஸ்வர் குமார் திரும்புவாரா? மீண்டும் இந்திய அணிக்கு ஆஸ்தான பவுலராக மாறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


உத்தரப்பிரதேச அணிக்காக முதல்தர போட்டிகளில் புவனேஸ்வர் குமார் விளையாடியபோது

புவனேஸ்வரின் ஆரம்பகாலம்

பிப்ரவரி 5, 1990 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள மீரட் நகரில் பிறந்தார் புவனேஸ்வர். இவர் லுஹாரி என்னும் கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை கிரண் பால் சிங் மாவி உதவி கமிஷ்னராக மீரட் நகரில் வேலை செய்து வந்தார். அதனால் இவரது குடும்பம் மீரட் நகருக்கு இடம் பெயர்ந்தது. இவரது தாயார் இந்திரேஷ் மாவி. இவர்தான் புவனேஸ்வர் என்ன செய்தாலும் ஊக்குவிப்பாராம். புவனேஸ்வர் குமார் படிப்பிலும் கெட்டிக்காரர். ஆரம்பத்தில் படிப்பில்தான் இவருக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளது. ஆனால் சிறுவயதில் மிகவும் சோம்பேறியாக இருந்துள்ளார். அவரின் உடற்பயிற்சிக்காகவே புவனேஸ்வரை விக்டோரியா கிளப்பில் கிரிக்கெட் பயிற்சியில் சேர்த்துவிட்டார். ஆரம்பத்தில் கிரிக்கெட்டில் பெரிதும் ஆர்வமில்லாமல்தான் இருந்திருக்கிறார் புவனேஸ்வர். ஜவகர் ஸ்ரீநாத்தின் பந்துவீச்சால் வெகுவாக ஈர்க்கப்பட்டு பந்துவீச தொடங்கியிருக்கிறார். இவருக்கு ரேகா அதனா என்கிற சகோதரியும் இருக்கிறார். இவர்தான் புவனேஸ்வரை மைதானத்திற்கு தினமும் அழைத்து செல்வாராம். அதனாலேயே அக்கா என்றால் புவனேஸ்வருக்கு மிகவும் பிடிக்கும் என்று சமீபத்திய பேட்டியில் கூறினார். புது பந்தில் எப்படி வீச வேண்டும் என்று முதன்முதலில் இவருக்கு கற்றுக்கொடுத்தவர் விக்டோரியா கிளப்பின் பந்துவீச்சு பயிற்சியாளர் சஞ்சய். இவர்தான் புவனேஸ்வருக்கு புதுப்பந்தை எப்படி ஸ்விங் செய்யலாம் என்று கற்றுக்கொடுத்து இருக்கிறார். அதன்பின் 2007 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச ரஞ்சி அணியில் தேர்வானார். தனது 17 வயதில் ரஞ்சி கிரிக்கெட்டில் தேர்வாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அதுமட்டுமில்லாமல் முதல் தர போட்டியில் சச்சின் டெண்டுல்கரை முதன்முறையாக டக் அவுட் ஆக்கிய பெருமை இவரையே சேரும். 2008 -2009 ரஞ்சி சீசனில் 35 விக்கெட்களை அள்ளினார். இதன்மூலம் ஐபிஎல் தொடரின் கதவு திறந்தது.


பெங்களூரு - புனே - ஹைதராபாத் ஐபிஎல் அணிகளில் புவனேஸ்வர்

ஐபிஎல் தொடரில் அசத்தல்

ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. பெங்களூரு அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஜெஸ்ஸி ரிடெரின் காயம் காரணமாக அணிக்குள் வந்தார் புவனேஸ்வர். இரண்டு சீசன்கள் பெங்களூரு அணியிலிருந்த புவி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும்தான் விளையாடினர். பிறகு 2011 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்காக எடுக்கப்பட்டார். இரண்டு சீசன் அந்த அணிக்காக ஆடிய புவனேஸ்வர் 31 போட்டிகளில் 24 விக்கெட்களை சாய்த்து மூன்று முறை 3 விக்கெட் ஹால் எடுத்தார். அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். அங்கிருந்துதான் புவனேஸ்வர் குமாரின் ஆதிக்கம் தொடங்கியது. 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் வெல்வதற்கு பெரும் உதவியாக இருந்தார். அதுமட்டுமில்லாமல் 23 விக்கெட்களை அள்ளி ஊதா நிற தொப்பியும் வென்றார். பிறகு மீண்டும் அடுத்த சீசனில் அந்த தொப்பியை 26 விக்கெட்டுகள் எடுத்து தக்க வைத்துக்கொண்டார். அந்த தொடரில் பஞ்சாப்பிற்கு எதிராக 5 விக்கெட்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடிய தருணங்கள்

சர்வதேச பயணம்

பந்துவீச்சில் மட்டுமல்ல பேட்டிங்கிலும் ஓரளவு கை கொடுக்கும் புவனேஸ்வர், 2012 டிசம்பர் 25 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான T20 போட்டியில் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகளை சாய்த்து முத்திரை பதித்தார். அதுமட்டுமில்லாமல் முக்கியமான மூன்று பேட்ஸ்மேன்களை (நசீர் ஜாம்ஷெட், அஹ்மத் ஷெஹஸாத் மற்றும் உமர் அக்மல்) வெளியேற்றினார். ஆனாலும் அந்த ஆட்டத்தில் இந்திய அணி தோற்றது. அங்கிருந்து அவரது சர்வதேச பயணம் தொடங்கியது. T20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட புவனேஸ்வர் ஓடிஐ அணிக்கும் தேர்வு செய்யப்பட்டார். ஓடிஐ போட்டிகளில் தனது முதல் பந்திலேயே ஹபீசின் விக்கெட்டை இன்ஸ்விங் பந்தின் மூலம் ஆட்டமிழக்க செய்தார். அந்த பந்தை பற்றி இன்றுவரையம் கிரிக்கெட் ஆர்வலர்கள் புகழ்ந்து பேசி வருகின்றனர். பின் பிப்ரவரி 22 ஆம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் புவனேஸ்வர். பந்துவீச்சில் சற்று தடுமாறிய புவி அந்த டெஸ்டில் பேட்டிங்கில் கைகொடுத்தார். தோனியுடன் இணைந்து 9 ஆவது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு 140 ரன்கள் சேர்த்தார். இன்றளவிலும் 9 விக்கெட்டிற்கு சேர்த்த அதிகபட்ச ரன்னாக அது உள்ளது. பிறகு இரண்டாவது டெஸ்டில் பந்துவீச்சில் கலக்கினார். முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்சில் மூன்று விக்கெட்டும் எடுத்து அந்த டெஸ்டில் மொத்தம் 6 விக்கெட்களை எடுத்து அசத்தினார். அதன்பிறகு 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையில் பயங்கரமாக செயல்பட்டு " டீம் ஆஃப் தி டோர்னமெண்ட் " அணியில் இடம்பிடித்தார். பிறகு இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான மூன்று அணிகள் பங்கேற்கும் போட்டியில் 12 விக்கெட் எடுத்து அசத்தினார். அதன்பிறகு சிறந்த டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஆகவும் புவி இருந்தார். அதுமட்டுமில்லாமல் மூன்று ஃபார்மட்டிலும் 5 விக்கெட்களை எடுத்த முதல் இந்தியர் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரரானார். அதன்பிறகு 2015 ஆம் ஆண்டு உலககோப்பைக்கு தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டின்போது ஏற்பட்ட காயங்கள்

காயத்தால் வாய்ப்புகளை தவறவிட்ட புவனேஸ்வர்

புவனேஸ்வர் குமாருக்கு பெரும் அவஸ்தையாய் இருந்தது அவருடைய காயங்கள்தான். அதனாலேயே அவரால் இந்திய அணியில் நீடித்து நிலைக்க முடியவில்லை. குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் நன்றாக செயல்பட்டிருந்தாலும் அவருடைய காயங்களினால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். அதனாலேயே இந்திய அணியில் உள்ளே வெளியுமாய் இருந்தார். அதுமட்டுமில்லாமல் புவனேஸ்வருடைய பலமே பந்தை ஸ்விங் செய்வதுதான். ஆனால் தனது பந்தை கூடுதல் ஸ்விங் செய்வதை விட்டுவிட்டார் புவனேஸ்வர். இதனால் அவரது பந்துவீச்சை எதிரணியினர் எளிதாக அடிக்க ஆரம்பித்துவிட்டனர். ரொம்ப நாள் கழித்து மீண்டும் அதாவது 5 வருடங்களுக்கு பிறகு ரஞ்சி கிரிக்கெட் விளையாடும் புவி ஒரே இன்னிங்ஸில் 8 விக்கெட்களை அள்ளினார். இதனால் இந்திய ரசிகர்கள் மீண்டும் இந்திய அணிக்கு புவனேஸ்வர் குமார் திரும்புவார் என்று எதிர்பார்க்கின்றனர். ரசிகர்களின் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Updated On 5 Feb 2024 6:54 PM GMT
ராணி

ராணி

Next Story