இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்தியாவில் ஒரு சாதாரண இளைஞன் இந்திய கிரிக்கெட்டில் நுழைய வேண்டுமென்றால் பல அரசியல் சூழலை சந்தித்தாக வேண்டும். ரஞ்சி, சையத் முஸ்தாக் அலி மற்றும் விஜய் ஹசாரே என்று பல முதல்தர போட்டியில் நன்றாக செயல்பட்டாலும் இந்திய அணிக்கு தேர்வாக முடியாமல் பல இளைஞர்கள் தவித்து வருகின்றனர். அப்படி ரஞ்சி, சையத் முஸ்தாக் அலி, விஜய் ஹசாரே, துலீப் கோப்பை என்று அனைத்து தொடரிலும் ஜொலித்து, கடந்த 5 வருடங்களாக இந்திய அணியின் கதவை தட்டி கொண்டே இருக்கிறார் சர்ஃபராஸ் கான் . தற்போது மும்பை அணிக்காக ஆடிவரும் சர்ஃபராஸ் கான் 5 வருடங்களாக இந்திய அணியின் அழைப்பிற்காக காத்துக்கொண்டிருந்தார். தற்போது அந்த கனவு நினைவாகியுள்ளது. இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுலிற்கு பதிலாக இந்திய அணியில் இணைந்துள்ளார். 5 வருட காத்திருப்பிற்கு தற்போதுதான் பலன் கிடைத்திருக்கிறது. 2-வது டெஸ்டில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? வாய்ப்பு கிடைத்தால் விசாகப்பட்டினத்தில் சாதனை படைப்பாரா ? யார் இந்த சர்ஃபராஸ் கான் ? என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.


இளம்வயது மற்றும் தந்தை - சகோதரருடன் சர்ஃபராஸ் கான்

சர்ஃபராஸ் கானின் ஆரம்ப காலம்

22 அக்டோபர் 1997 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார் சர்ஃபராஸ் கான். இவரது குடும்பம் உத்தரப் பிரதேசத்திலுள்ள அசங்கார்ஹ் நகரிலிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தவர்கள். இவரது தந்தை நவுஷாத் கான், ஆசாத் மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்ததால் சர்ஃபராஸிற்கு கிரிக்கெட் மீது ஆர்வம் வந்தது. அதனால் சிறுவயதிலிருந்தே கிரிக்கெட்டில் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார் சர்ஃபராஸ். தனது 7 வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த சர்ஃபராஸ் 4 வருடங்கள் பள்ளிக்கு போகவில்லை. கிரிக்கெட் மீது பைத்தியமாக இருந்துள்ளார். மழை நேரத்தில் இவரால் ஆசாத் மைதானத்திற்கு செல்ல முடியாமல் போனதால் தந்தையிடம் அடம்பிடித்து வீட்டிற்கு பின்னால் சிந்தெட்டிக்கால் ஆன மேட்டை வைத்து பயிற்சி எடுத்துள்ளார். அதன்பிறகு மும்பையில் பிரபலமான ஹாரிஸ் ஷீல்டு தொடரில் சச்சினின் சாதனையை முறியடித்தார். ரிஸ்வி ஸ்ப்ரிங்பீல்டு பள்ளி அணிக்காக விளையாடிய சர்ஃபராஸ், 421 பந்துகளில் 439 ரன்கள் அடித்தார். இதில் 56 பௌண்டரிகள், 12 சிக்ஸர்கள் அடங்கும். அதுமட்டுமில்லாமல் தனது 15 வயதில் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார். 13 வயதுக்கு உட்பட்டோருக்கான தொடரில் விளையாடி கொண்டிருக்கும் போது இவருக்கு Bone டெஸ்ட் எடுக்கப்பட்டது. அப்பொழுது 15 வயது நிரம்பிய இவர் 13 வயத்துக்குட்பட்டோருக்கான அணியில் விளையாடியதால் சிறிது காலம் தடையிலிருந்தார். அதன்பிறகு மீண்டும் பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் விளையாட ஆரம்பித்தார்.


முதல்தர போட்டிகளில் சர்ஃபராஸ் கான்

சர்ஃபராஸ் கானின் முதல்தர போட்டி சாதனைகள்

ஹாரிஸ் ஷீல்டு தொடரில் நன்றாக விளையாடியதன் மூலம் இவருக்கு தென் ஆஃப்ரிக்கா U-19 அணிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த தொடரின் முதல் போட்டியில் 66 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். இதில் 17 பௌண்டரிகள், 1 சிக்ஸரும் அடங்கும். இதை பார்த்த அப்போதைய U-19 பயிற்சியாளர் பரத் அருண் இவர் கண்டிப்பாக இந்திய அணியில் விளையாடுவார். இவர் ஆடும் விதம் ஸ்டைலிஷாக இருக்கிறது என்று பாராட்டினார். அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு U-19 உலகக்கோப்பையில் தேர்வானார். 16 வயது சிறுவனாக விளையாடிய சர்ஃபராஸ், அந்த தொடரில் 6 போட்டிகளில் 211 ரன்கள் குவித்து சராசரி 70.33 வைத்திருந்தார். அந்த உலகக்கோப்பையில் இந்திய அணி 5-ம் இடம் பிடித்து தொடரைவிட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது. பிறகு மீண்டும் 2016 ஆம் ஆண்டு U-19 உலகக்கோப்பைக்கு தேர்வானார். அந்த தொடரில் 355 ரன்கள் குவித்து சராசரி 71 வைத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இன்று U-19 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக அரைசதம்(7) அடித்தவர் சர்ஃபராஸ் கான்தான். இதன்பின் இவருக்கு பெங்களூரு அணியிலிருந்து அழைப்பு வந்தது. அதன்பிறகு ரஞ்சி கிரிக்கெட்டில் 2015 சீசனில் 11 இன்னிங்சில் 535 ரன்கள் குவித்தார். அந்த சீசனில் அதிகபட்சமாக 155 ரன்கள் அடித்தார். அதன்பின் தொடர்ச்சியாக ஒவ்வொரு சீசனிலும் 700 ரன்களுக்கு மேல் அடித்தார். சராசரி 84 வைத்திருந்தார். 2019-20 ரஞ்சி சீசனில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். உத்தரப் பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதல் முச்சதத்தை அடித்தார்.


பெங்களூரு - பஞ்சாப் - டெல்லி ஐபிஎல் அணிகளுக்காக விளையாடியபோது

ஐபிஎல்-லில் அறிமுகம்

2014 ஆம் ஆண்டு U-19 உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதால் ஐபிஎல்லில் பெங்களூரு அணிக்காக 5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். 17 வயதில் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக அறிமுகமானார். அந்த போட்டியில் 7 பந்துகளில் 11 ரன்கள் அடித்தார். அதன்பிறகுதான் சர்ஃபராஸ் கான் விஸ்வரூபம் எடுத்தார். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 21 பந்தில் 45 ரன்கள் குவித்து பெங்களூரு அணி அதிக ஸ்கோரை எட்ட உதவியாக இருந்தார். இந்த இன்னிங்ஸ் முடிந்து பெவிலியன் திரும்பும் பொழுது கோஹ்லி தலைகுனிந்து வணங்கினார். 2015 சீசனில் 5 ஆட்டங்களில் 111 ரன்கள் குவித்து 156 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். அடுத்த சீசனில் காயம் காரணமாக இவரால் பங்கேற்க முடியவில்லை. அதன்பின் 2018 ஆம் ஆண்டு பெங்களூரு அணியில் 4 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். ஆனால் அந்த சீசனில் 7 ஆட்டங்களில் வெறும் 55 ரன்கள் மட்டுமே அடித்து படுபயங்கரமாக சொதப்பினார். இதனால் பெங்களூரு அணி இவரை கழட்டிவிட்டது. பிறகு பஞ்சாப் அணிக்காக 2.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அந்த தொடரில் 180 ரன்கள் அடித்தார். அதிகபட்சமாக கொல்கத்தாவிற்கு எதிராக 67 ரன்கள் அடித்தார். ஐபிஎல்லில் இருந்ததால் இவருக்கு சர்வதேச வாய்ப்பும் வந்து கொண்டே இருந்தது. பிறகு டெல்லி அணிக்காக 2022-ல் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.


இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தேர்வான சர்ஃபராஸ் கான்

சர்வதேச அழைப்பு

ஐபிஎல் தொடர்களில் சொதப்பி வந்தாலும், ரஞ்சி உள்ளிட்ட அனைத்து முதல்தர போட்டியிலும் சிறப்பாக ஆடி வந்தார் சர்ஃபராஸ் கான். சராசரி கிட்டத்தட்ட 90 வைத்திருந்தார். பிசிசிஐ-யின் கதவை தனது சதங்களின் மூலம் தட்டி கொண்டே இருந்தார். பிசிசிஐ இவரை ஃபிட்னெஸ் காரணமாக ஒதுக்கி வைத்துக்கொண்டே வந்தது. கடைசியாக 5 வருட உழைப்பிற்கு பிறகு சர்வதேச அழைப்பு வந்திருக்கிறது. விசாகப்பட்டினத்தில் தொடங்கும் இரண்டாவது டெஸ்டில் களமிறங்கி சர்ஃபராஸ் சதம் அடிப்பாரா? மற்றும் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Updated On 12 Feb 2024 6:17 PM GMT
ராணி

ராணி

Next Story