பதவி பறிப்பு மசோதா... எந்த மாநில முதல்வர் & அமைச்சர்கள் மீது அதிக வழக்கு?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்துள்ள 130ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதா 2025, சட்டமாக மாறினால் எந்தெந்த அரசியல் தலைவர்கள் பதவியில் இருந்து நீங்குவார்கள் என்பது குறித்து இங்கு காணலாம்.;

Update:2025-09-02 00:00 IST
Click the Play button to listen to article

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கிய சட்டத்திருத்த மசோதா ஒன்றை மக்களவையில் தாக்கல் செய்தார். அதாவது குற்றம் சாட்டப்பட்டு ஒரு அமைச்சரோ அல்லது எம்பியோ, ஏன் முதலமைச்சராகவே இருந்தாலும் 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்கள் பதவி விலக வேண்டும் அல்லது அவர்களின் பதவி தானாகவே பறிக்கப்படும். இதுதான் அந்த மசோதா. இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காரணம் இந்த மசோதா எதிர்க்கட்சியை மையப்படுத்தியே கொண்டுவரப்பட்டதாக பல தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர். அப்படி இந்த மசோதா சட்டமாக நிறைவேறினால் யார் யாருடைய பதவி பறிபோகும் என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.


நாடாளுமன்றத்தில் பதவி பறிப்பு மசோதாவை தாக்கல் செய்த அமித்ஷா

130ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதா 2025...

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் கடைசிநாளான ஆகஸ்ட் 20 ஆம் தேதியன்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 மசோதாக்களை தாக்கல் செய்தார். அவை அரசியலமைப்பு (130வது திருத்த) மசோதா 2025, யூனியன் பிரதேச அரசு(திருத்த) மசோதா 2025, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019 திருத்த மசோதா. இதில் 130ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதாவின் படி, குறைந்தது 5 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் வழக்குகளில், மத்திய-மாநில அமைச்சர்களோ, முதலமைச்சரோ, பிரதமரோ கைதாகி, 30 நாட்கள் பிணையில் வராமல் காவலில் இருந்தால், 31ஆவது நாள் அவர்கள் பதவி விலக வேண்டும். இல்லையெனில், அவர்களை குடியரசு தலைவரோ ஆளுநர்களோ பதவி நீக்கம் செய்யலாம். கைதாகும் நபர்கள் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளிக்காவிட்டாலும், அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள்.

அதேபோல மசோதாவின் விதிகளின் கீழ், சம்பந்தப்பட்ட அமைச்சர் சிறையிலிருந்து வெளியே வந்ததும் மீண்டும் நியமிக்கப்படுவற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. காவலில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட முதலமைச்சரோ அல்லது அமைச்சரோ குடியரசுத் தலைவரால் முதலமைச்சராகவோ அல்லது அமைச்சராகவோ நியமிக்கப்படுவதை இந்த துணைப்பிரிவில் உள்ள எதுவும் தடுக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை பழிவாங்க புதிய மசோதா வழிவகுக்கும் - அபிஷேக் சிங்வி

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

இந்த மசோதாவை மத்தியமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்யும்போதே எதிர்க்கட்சிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுப்பட்டனர். காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால், 2010 ஆம் ஆண்டு சோராபுதீன் ஷேக் என்கவுன்டர் வழக்கில் உள்துறை அமைச்சர் கைது செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமித்ஷா, கைது செய்யப்படுவதற்கு முன்பே பதவியை ராஜிநாமா செய்ததாக தெரிவித்தார். மேலும் பதவி பறிப்பு மசோதாவின் நகல்களை கிழித்து அவரது முகம் நோக்கி எறியப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. குற்றச்சாட்டு நிருபீக்கப்படும்வரை ஒருவர் நிரபராதிதான் என இந்தியச் சட்டமே கூறும் நிலையில் மத்திய அரசு இப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் மசோதாவை எதிர்ப்பது ஏன்?

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அமலாக்கத்துறை பல்வேறு மாநில அமைச்சர்கள், ஒரு சில முதலமைச்சர்கள் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த தடுப்புச் சட்டத்தின் கீழான அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையின்போது, 30 நாட்கள் வரை ஜாமின் வழங்காமல் இருக்க முடியும். இதனால் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா சட்டமாக மாறினால் புலனாய்வு அமைப்புகளின் கைகள் ஓங்கும். இவற்றை கட்டுப்படுத்தும் ஆளும் மத்திய அரசு அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பிரிதிநியின் அதிகாரம் கேள்விக்குள்ளாகும். இது மத்திய அரசுக்கு கட்டற்ற அதிகாரத்தை தரும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. அண்மைக்காலமாகவே உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தும், அபராதம் தெரிவித்தும் வருவதை இங்கு நினைவுகூரலாம். இந்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்வி தனது எக்ஸ் பக்கத்தில், “எதிர்க்கட்சிகளை நிலைகுலையச் செய்ய சிறந்த வழி, ஒருதலைபட்சமாகவே செயல்படும் மத்திய புலனாய்வு அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சி முதல்வர்களை கைது செய்வதாகும். தேர்தலில் அவர்களை தோற்கடிக்க முடியாமல் போனாலும்கூட இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் அவர்களை அப்புறப்படுத்திவிடலாம் என்பது பாஜகவின் திட்டம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


மத்திய அரசின் பதவி பறிப்பு மசோதாவிற்கு மு.க.ஸ்டாலின், மம்தா கண்டனம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோரும் இந்த மசோதாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த மசோதாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், "இது கருப்பு நாள். இந்த மசோதா கருப்பு மசோதா. வளர்ந்து வரும் சர்வாதிகாரிகள் இப்படித்தான் போக்கை தொடங்குவர். இந்தியாவையும் சர்வாதிகாரத்தில் மூழ்கடிக்க முயற்சிக்கின்றனர். வாக்கு திருட்டு விவகாரத்தை திசை திருப்புவதற்காகவே இப்படியான ஒரு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது. அரசியல் எதிரிகள் மீது பொய் வழக்குகளை போட்டு சிறையில் அடைத்து பதவிகளை பறிப்பது என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிகளை எந்தவித நீதிமன்ற விசாரணையும் இல்லாமல் பறிப்பது என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது” என்று சாடியுள்ளார். 

மம்தா பானர்ஜி, "மத்திய அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 130வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை நான் கண்டிக்கிறேன். இது சூப்பர்- எமர்ஜென்சிக்கும் மேலான ஒருபடி. இது இந்தியாவின் ஜனநாயக சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு வழியாகும். இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சிக்கு சாவு மணி அடிப்பதாக இந்த கொடூர நடவடிக்கை உள்ளது” என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் காங்கிரஸின் மூத்த தலைவர் சசி தரூர் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நீங்கள் 30 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டால், அமைச்சராக தொடர முடியுமா? இது பொது அறிவு சார்ந்த ஒன்று. இதில் தவறு இருப்பதாக எதுவும் எனக்குத் தெரியவில்லை. இந்த மசோதாவை நாடாளுமன்றக் குழு ஆய்வுக்கு அனுப்புவது நல்ல விஷயம்தான். குழுவுக்குள் விவாதம் நடத்துவதுதான் ஜனநாயகத்துக்கு நல்லது என்று நினைக்கிறேன். ஆகையால், விவாதத்தை நடத்துவோம்” என்றார்.

இதனிடையே இந்த சட்டத்திருத்த மசோதா தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, சிறைக்கு சென்றால் கனவுகள் அனைத்தும் சிதைந்து விடும் என்பதால், புதிய மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதாக விமர்சித்துள்ளார். அதிகாரத்தில் இருப்பவர்கள் சிறையில் இருந்து கொண்டு ஆட்சியை நடத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரி கட்சித்தலைவர்கள் ஊழல் செய்ததால் இந்த மசோதாவை எதிர்க்கின்றனர் என்று கூறினார்.


நீண்ட நாட்கள் சிறையில் இருந்தும் பதவியை தொடர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், செந்தில் பாலாஜி 

மத்திய அரசு கூறுவது என்ன?

தற்போது இருக்கும் சட்டங்களின்படி அமைச்சர்கள் அல்லது முதலமைச்சர்கள் கைது செய்யபட்டால் அவர்கள் அந்தப் பதவியில் நீடிப்பதை தடை செய்வதற்கு எந்த வழிவகையும் இல்லை. மக்கள் பிரதிநிதிகள் (எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள்) கைது செய்யப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர்களுக்கு 2 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலான தண்டனை வழங்கப்பட்டால் மட்டுமே அவர்களின் பதவி பறிபோகும் என மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் சொல்கிறது. இதற்கு உதாரணமாக கூற வேண்டுமானால் கைதான பிறகும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியில் நீடித்தார். அதுபோல செந்தில் பாலாஜியும் இலாகா இல்லாத அமைச்சராக பதவியை தொடர்ந்தார். இதுபெரும் சர்ச்சைக்குள்ளானது. இதனால் இந்த சட்டம் அவசியம் எனக்கூறுகிறது ஆளும் மத்திய அரசான பாஜக.

யார் யாருடைய பதவி எல்லாம் பறிபோகும்?

ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் அறிக்கைகள், 46% எம்.பி.க்கள் மற்றும் 45% எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகக் கூறுகின்றன. மேலும் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு 15.4% ஆகவும், எந்த குற்றமும் சுமத்தப்படாத வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு 4.4% ஆகவும் உள்ளது என்றும் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் 39 எம்பிக்களில் 11 பேர்மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளன. இந்திய அளவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் எம்பிக்களின் மீது அதிக வழக்குகள் உள்ளன. கட்சி ரீதியாக பாஜகவின் 240 எம்பிக்களில் 63 பேர்மீது குற்ற வழக்குகள் உள்ளன. காங்கிரஸின் 100 எம்பிக்களில் 32 பேர் மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளன. ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் 4 எம்பிக்களின் மீதும் தீவிர குற்ற வழக்குகள் உள்ளன.


உத்தரப்பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான எம்பிக்கள் மீது வழக்குகள் நிலுவை

இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றபட்டு, ஒருவேளை இவர்கள் கைது செய்யப்பட்டால் இவர்களின் பதவிகள் பறிபோகும் வாய்ப்புகள் உள்ளன.  மேலும் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிக்கியுள்ள சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர், ஒருவேளை கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறை வைக்கப்பட்டால் அவர்கள் பதவியும் பறிபோகும் வாய்ப்புள்ளது. 

எந்த முதலமைச்சர் மீது அதிக வழக்கு?

முதலமைச்சர்கள் என்று எடுத்துக்கொண்டால், நாட்டிலேயே அதிகமான வழக்குகள் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மீது உள்ளதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவர் மீது, இதுவரை 89 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாம். இதனால், இந்த மசோதாவில் மிகப்பெரிய அபாயத்திற்கு ஆளாகும் நபராக அவரது பெயரே அடிபடுகிறது. 


அதிக வழக்குகள் கொண்ட தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மகாராஷ்ட்ரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இமாச்சலப்பிரதேச முதலமைச்சர் சுக்வீந்தர் சிங், சிக்கிம் முதலமைச்சர் பிஎஸ் தமாங், பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த்மன்சிங், ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா உள்ளிட்டோர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்