இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

2024ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. எல்லோருக்குமே இந்த ஆண்டு எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு எந்த அளவிற்கு இருக்கிறதோ, அதே அளவிற்கு பயமும் இருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஜோதிடர்களிடம் கணித்து தெரிந்திருப்போம். இந்நிலையில் இந்திய அளவில், தமிழ்நாடு அளவில், அரசியலில் மற்றும் சினிமாவில் நிலைமை எப்படி இருக்கும் என்பது குறித்த பொதுவான பலன்களை கணித்து வழங்குகிறார் பிரம்மஸ்ரீ ராம்ஜி பரமஹம்சர்.

2024ஆம் ஆண்டு எப்படியிருக்கும்?

கால புருஷ தத்துவத்தின்படி மேஷத்தில் குரு இருக்கிறார். கும்பத்தில் சனி ஆட்சிபெற்று அமர்ந்திருக்கிறார். இதனால் நாட்டில் நீதி, நேர்மை, நியாயம் எல்லாம் தலைதூக்கி இருக்கும். அதாவது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிதான் நாட்டை ஆளுகிறார் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக பதியும்படியான சூழல்கள் அமையும். ‘சனி கொடுத்தால் எவர் தடுப்பார்?’ என்பார்கள். சனி ஒரு நீதிமான் என்பதால் சிறுதவறுக்குக்கூட தண்டனை உடனடியாக கொடுக்கப்படும். சிந்தனை, தத்துவம் அடிப்படையிலான புரட்சிகரமான அரசியல் உருவாகும். மாநிலத்தை பொருத்தவரை நாடாளுமன்ற தேர்தலில் திமுக 35க்கும் அதிகமான சீட்டுகளை பெறும். ஒன்றிய அரசை பொருத்தவரை இந்தியா கூட்டணி மம்தா பானர்ஜியை பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தால் போட்டி சூடுபிடிக்கும்.


2024 -இல் சனி ஆட்சி

புதிய கட்சிகளுக்கு சாத்தியமுள்ளதா?

புரட்சிகரமான கட்சிகள் உருவாகும். கம்யூனிசம் அதிகரிக்கும். பொதுவுடமை சிந்தனைகள் அதிகமாகும். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியே இல்லாமல் போகும். ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இணைந்தால் மட்டுமே அதிமுகவுக்கு எதிர்காலம் இருக்கும். பிஜேபியின் வளர்ச்சி அபாரமாக இருக்கும். தேமுதிக கட்சி, விட்ட இடத்தை பிடிக்கும். மூன்றாவது பெரிய கட்சியாக வர வாய்ப்பிருக்கிறது. இரண்டாவது பெரிய கட்சியாக நாம் தமிழர் உருவாகும். முதல் கட்சியாக திமுக அசையாமல் இருக்கும்.

கட்சியை வெளிப்படையாக தொடங்குவாரா விஜய்?

ஏற்கனவே தொடங்கிவிட்டார். இதுகுறித்து அவர் அறிவித்தும்விட்டார். அடுத்து அவருடைய கொள்கைகள் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். நிர்வாகிகளை நிர்ணயிக்க வேண்டும். விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஜெயிக்கும். ஆனால் முதலமைச்சர் ஆகும் யோகம் விஜய்க்கு கிடையாது. அதற்கு அவர் கடினமாக உழைக்கவேண்டும். 2031 தேர்தலில் விஜய்க்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன.


விஜய் மக்கள் மன்றம் விழாக்களில் நடிகர் விஜய்

2024-இல் இயற்கை சீற்றங்கள் எப்படி இருக்கும்?

2023-ஐ விட அதிகமாக இருக்கும். சனி ஆட்சி என்பதால் நீரின் பெருமையை உணரவைக்க நீரினால் அடித்து தண்டனை கொடுப்பார். 2024 கடினமான ஆண்டாக இருக்கும். மர்ம காய்ச்சல் ஒன்று பரவி, அதனால் கை, கால், மூட்டுகளில் பிரச்சினை ஏற்படும். இதுதவிர கனடா, ஒன்டாரியோ போன்ற குளிர் பிரதேசங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும். தமிழ்நாட்டை பொருத்தவரை ஊட்டி, குன்னூர், நீலகிரி போன்ற பகுதிகளில் நிலநடுக்கம், நிலச்சரிவு போன்றவைகளால் விபத்துகள் ஏற்படும். அதேபோல் உத்தரகாண்டிலும் பெருமளவில் பாதிப்புகள் உருவாகும்.

மழை, வெள்ளத்தை பொருத்தவரை இந்த ஆண்டு நன்றாக அப்டேட் ஆகிவிடுவார்கள். எனவே மழையை எளிமையாக எதிர்கொண்டுவிடலாம். கொரோனா இதுவரை அழியாமல் இருக்க காரணமே ராகு 4 கேந்திர பலங்களை பெற்றிருப்பதுதான். ராகுவானது மீனம், தனசு, கன்னி அல்லது மிதுனத்தில் இருந்தால் நுண்ணலை மற்றும் நுண் கிருமிகளால் பிரச்சினை அதிகமாக இருக்கும். மீனத்தில் இருக்கும் ராகுவால் நுண் கிருமிகள் அதிகமாக உருவாகும். இதனால் மர்ம காய்ச்சல்கள் அதிகமாக பரவும். இதனால் உயிரிழப்புகள் குறைவு என்றாலும் மூட்டு, ஜவ்வு மற்றும் சதைகளில் வீக்கம் ஏற்பட்டு அவதிகள் உண்டாகும்.


இயற்கை சீற்றங்கள்

இந்த ஆண்டு எந்தெந்த ஹீரோக்கள் முன்னிலை வகிப்பார்கள்?

‘ஜெயிலர்’ படத்திற்கு பிறகு மிகப்பெரிய வசூலை புதிய படத்தில் ரஜினிகாந்த் எட்டுவார். விஜய் மற்றும் அஜித் இருவருமே கடக ராசிக்காரர்கள். இருவரும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தாலும் தங்கள் நிலையை தக்கவைத்துக் கொள்வார்கள். கமலின் திரைப்படங்கள் சூப்பராக வெற்றிபெறும்.

இந்த ஆண்டு யாருடைய கை ஓங்கும்? ஆண்களா? பெண்களா?

ஆண்களுக்குத்தான் சக்திமிகுந்த ஆண்டாக இருக்கும். இருப்பினும் இந்த ஆண்டின்மீது அதீத எதிர்பார்ப்பை வைக்கவேண்டாம். ஏனென்றால் இந்த ஆண்டிற்கு ‘குரோதி’ வருடம் என்று பெயர். குரோதி என்றால் பகை என்று அர்த்தம். இந்த வருடத்தில் மாரி பொய்க்கும். திருட்டு பயம் அதிகரிக்கும். மக்கள் நிம்மதியற்று இருப்பர். இதேபோலத்தான் 2020-ஆம் ஆண்டை சார்வரி வருடம் என்றனர். அந்த வருடத்தில் ‘புத்திரரும் மற்றவரும் இறப்பார்கள்’ என்று எழுதியிருந்தது. அதேபோல் கொரோனா வந்தது. அதேபோல் 2024ஆம் ஆண்டு மோசமான வருடம்தான். ஆண்கள், பெண்கள் அனைவருமே கஷ்டப்படுவார்கள். சாமானிய மக்கள் பொருளாதாரத்திற்காக பாடுபடுவார்கள்.


2024 இல் பொருளாதாரத்தின் நிலை

பொருளாதாரம் எப்படி இருக்கும்?

பொருளாதார நிலைமை இன்னும் கடினமாக இருக்கும். சனி இருப்பதால் சிக்கன செலவுகள் அதிகமாகும். பார்த்து பார்த்துதான் செலவு செய்ய நேரிடும். படாடோபம், ஆட்டம் போடுபவர்களை அடக்கி வைப்பார் சனி.

Updated On 22 Jan 2024 6:38 PM GMT
ராணி

ராணி

Next Story