2025 ஜூலை 22-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் ராசிநாதன் சனி பகவான் மூன்றாம் இடத்தில் வக்கர கதியில் இருப்பதால், இந்த வாரம் உங்கள் முயற்சிகளை அதிகப்படுத்துங்கள். சனி காலதாமதத்தைக் குறிப்பதால், வாழ்க்கையில் எதை முதலில் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்துச் செயல்படுங்கள். வருமானங்கள் அதிகமாக இருந்தாலும் செலவுகளும் கூடும். உறவுகளால் நன்மையும், மகிழ்ச்சியும் உண்டு. குறிப்பாக இளைய சகோதர சகோதரிகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். புதிய முயற்சிகள் ஓரளவு வெற்றி பெறும். நம்பியவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். தொடர்பு கொள்ள விரும்புபவர்களுடன் நேரடியாக பேசுங்கள், இடைத்தரகர்கள் வேண்டாம். வேலையில் சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள். தொழிலில் பிரச்சனைகள் இல்லை என்றாலும் தேவையற்ற சங்கடங்களை சந்திக்க நேரிடும். சனி ஐந்தாம் இடத்தைப் பார்ப்பதால் வேலையை விட்டு வெளியேற அல்லது வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது, பொறுமையாக இருங்கள். கலைத்துறையினருக்கு இந்த வாரம் சுமாராக இருக்கும். பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற யூக வணிகங்களில் முதலீடு செய்ய வேண்டாம், பணம் பறிபோக வாய்ப்புள்ளது. யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம், திரும்பி வர வாய்ப்பில்லை. அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். யாருக்கும் ஜாமீன் அல்லது செக்யூரிட்டி கொடுக்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். முருகனையும், துர்க்கையையும் வழிபடுங்கள்.
