எண்களின் அடிப்படையில் ஒருவரின் எதிர்காலத்தை கணிக்கும் முறைதான் நியூமராலஜி. இது ஒரு வகை ஜோதிட முறையாகும். பிறந்த தேதி, மாதம், ஆண்டு ஆகிய எண்களின் அடிப்படையில், குறிப்பிட்ட மனிதரின் குணாதிசயங்கள், எதிர்கால நிகழ்வுகள், அதிர்ஷ்ட எண்கள் உள்ளிட்டவை நியூமராலஜி மூலம் கணிக்கப்படுகின்றன. ஆனால், நியூமராலஜி ஜோதிடம் என்பது எந்த அளவுக்கு உண்மையானது? அதனை நம்பலாமா? உள்ளிட்ட கேள்விகள் பெரும்பாலானோர் இடத்தில் இருக்கும். அந்த கேள்விகளுக்கு எல்லாம் விடையளித்துள்ளார் அடிமுடி சுவாமிகள் சுந்தரராஜன் அவர்கள். நியூமராலஜி தொடர்பாக, ராணி ஆன்லைன் நேயர்களுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலின் தொகுப்பை காணலாம்.
இரட்டையர்களில் ஒருவருக்குதான் ஜாதகம் பலிக்கும் - நியூமராலஜி துல்லியமானது கிடையாது!
ராசி, நட்சத்திரத்தின் அடிப்படையில் ஒருபுறம் ஜோதிடம் பார்க்கப்படும் நிலையில், நியூமராலஜி என்பது உண்மையா?
நியூமராலஜி என்பது உண்மைதான். ஆனால், முழுமையா என்று கேட்டால் இல்லை. உண்மைக்கும், முழுமைக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும். 1 முதல் 9 எண்களை வைத்து பார்க்கப்படுவது நியூமராலஜி. 9 பெருக்கல் 9 என்பது 81. நியூமராலஜி என்பது இந்த 81 குணாதியங்களை வைத்து வகைப்படுத்தப்படுகிறது. உலக மக்கள் அனைவருமே இந்த 81 வகை குணாதியங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு கணிப்புகள் சொல்லப்படுகின்றன. ஆனால் ஜாதகம் என்பது வேறு. நவகிரகங்களின் அடிப்படையில் பார்க்கப்படும் ஜாதகத்தில், ஒரு ஜாதகத்தைப்போன்றே அச்சு அசலாக ஒரு ஜாதகம் வருவதற்கு 4 யுகங்கள் ஆகும். ஒரு முறை வந்த காம்பினேஷனிலேயே, மீண்டும் கிரகங்கள் வருவதற்கு 4 யுகங்கள் ஆகும். எனவே நியூமராலஜியை துல்லியமானது என்று சொல்லிவிட முடியாது. அதேபோல்தான், ராசியை மட்டும் வைத்து பார்க்கப்படும் ஜாதகமும், துல்லியமானது கிடையாது. ராசி, நட்சத்திரம், லக்கனம் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கப்படும் ஜாதகமே முழுமையானது என்று சொல்லலாம். முழுமையானது என்றால் 100 சதவீதம் என்று சொல்ல முடியாது. 99 சதவீதம் மட்டுமே கணிக்க முடியும். ஏதாவது ஒன்றை கடவுள் ரகசியமாக வைத்துவிடுவார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இரட்டை பிறவிகளில், ஒரு குழந்தைக்கு மட்டுமே ஜாதகம் கூற முடியும். ஒரு குழந்தைக்கு மட்டுமே ஜாதகம் பலிக்கும்.
நியூமராலஜி, எத்தனை சதவீதம் உண்மை?
நியூமராலஜி என்பது வாழ்க்கையில் ஒரு அங்கம். ஒருமுறைதான் அதனை பார்க்க முடியும். பிறந்த தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றை வைத்து ஒருமுறை பார்த்துவிட்டோம் என்றால், அதன்பிறகு அதில் பார்ப்பதற்கு ஒன்றுமே இல்லை. ஆனால் ஜாதகம், அப்படி கிடையாது. தினமும் நேரம், காலம், தசா புத்திகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. கிரகப் பெயர்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. எனவே ஜாதகம் என்பதை, தினம் தினம் பார்க்க வேண்டிய அவசியம்கூட ஏற்படலாம். எனவே ஜாதக கணிப்பு, 99 சதவீதம் சரியாக இருந்தால், நியூமராலஜி கணிப்பு, 90 சதவீதம் சரியாக இருக்கலாம்.
விஜய டி.ராஜேந்தர் என்று பெயரை மாற்றியதால் செல்வாக்கை இழந்தார் - அடிமுடி சுவாமிகள்
நியூமராலஜிபடி, பெயர்களில் ஆங்கில எழுத்துகளை மாற்றுவதன் மூலம் வாழ்க்கையில் மாற்றம் இருக்குமா? பலன் இருக்குமா?
பலன் இருக்கிறது. பெயரை சரியான எழுத்துகளின் அடிப்படையில் மாற்றினால் உடனடியாக மாற்றங்கள் நிகழும். நானும்கூட என் பெயரை அவ்வாறு மாற்றி வைத்துள்ளேன்.
பிரபலங்கள் யாராவது பெயரை மாற்றி, மாற்றம் நிகழ்ந்துள்ளதா?
வை கோபால்சாமி என்று இருந்தார். அவர் தனது பெயரை வைகோ என்று மாற்றிக்கொண்டார். 17-ஆம் எண்ணில் பெயர் வந்தது. அதன்பிறகு அவரது செல்வாக்கு சரிந்தது. பெயர் மாற்றிக்கொள்கிறேன் என்று, சிலர் தவறாகவும் செய்துவிடுகின்றனர். சரியாக பார்த்துவைத்தால் நல்லவிதமாக மாற்றம், வளர்ச்சி உள்ளிட்டவை ஏற்படும். இதுவே தவறாகிவிட்டால், அனைத்தும் தவறாக சென்றுவிடும். உதாரணத்திற்கு, டி.ராஜேந்தர், ஓஹோ என்று இருந்தார். ஆனால் விஜய டி.ராஜேந்தர் என்று எப்போது தனது பெயரை அவர் மாற்றினாரோ, அப்போதே செல்வாக்கை இழந்துவிட்டார்.
விஜய என்பது வெற்றியை தானே குறிக்கிறது? அதனால்தானே நிறைய பேர் தங்களுடைய பெயர்களில் விஜய் என்பதை சேர்த்துக்கொள்கின்றனர்?
அப்படி கிடையாது. விஜய் என்பது வெற்றியை குறித்தாலும், அதனுடன் மற்றவையும் ஒத்துப்போக வேண்டும். விஜய், மக்களால் விஜய் என்று மட்டும் உச்சரிக்கப்பட்டவரை, அறியப்பட்டவரை வெற்றிகரமாக இருந்தார். எப்போது ஜோசப் விஜய் என்று உச்சரிக்கப்பட்டாரோ, அப்போதே குழப்பம்தான். நடிகர் அருண்குமார் என்று இருந்தவர், தனது பெயரை அருண் விஜய் என்று மாற்றிக்கொண்டார். சில நல்ல படங்களை அவர் கொடுத்தாலும், பெரிய அளவில் அவரின் வாழ்க்கை மாறவில்லை. நேமாலஜி மட்டும் பார்த்தால் இப்படித்தான் ஆகும். நியூமராலஜி, நேமாலஜி, சவுண்டாலஜி உள்ளிட்டவற்றை ஒருங்கிணைந்து பார்த்து பெயரை மாற்றினால் நன்மை ஏற்படும்.
பெயரை மாற்றினால் தலைவிதி மாறிவிடுமா?
மாறும். நம்மை பிறர் அழைப்பதை வைத்து அனைத்தும் வேறுபடும். சிலர் நம்மை மேடம், சார் என்று அழைப்பார்கள், சிலர் வா, போ என்று அழைப்பார்கள், சிலர் முழுமையாக பெயரை சொல்லி கூப்பிடுவார்கள். சிலர் ஷார்ட்டான பெயரில் கூப்பிடுவார்கள். இவ்வாறு வெவ்வேறு இடங்களில் நாம் அழைக்கப்படுவதை பொறுத்து நம் மரியாதை, வளர்ச்சி உள்ளிட்டவை வேறுபடும். சிலருக்கு வீட்டில் நல்ல மரியாதை இருக்கும். காரணம், வீட்டில் அழைக்கப்படும் பெயர் அப்படி இருக்கலாம். சிலருக்கு வெளி இடங்களில் மட்டும்தான் நல்ல மாரியாதை இருக்கும், வீட்டில் சுத்தமாக மதிக்கமாட்டார்கள். காரணம் வெளியில் நாம் அழைக்கப்படுவது, நமது பெயர் உச்சரிக்கப்படுவது நல்ல விதமாக இருக்கலாம். அதனை பொறுத்து பலன் அமைகிறது.
நியூமராலஜிபடி பெயரை மாற்றிய ஜோசப் விஜய் மற்றும் அருண் விஜய்?
ஜாதகத்தில் வருவதை போல, அந்தந்த எழுத்துகளில்தான் பெயரை வைக்க வேண்டுமா?
ஆமாம். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்துகளில் பெயர் வைத்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். சப்தம் என்பதே மந்திரம் தானே. அப்படி இருக்கையில் குறிப்பிட்ட நட்சத்திரத்திற்கு என்று உள்ள எழுத்துகளின் ஒலி வாழக்கையை மாற்றும். நட்சத்திர எழுத்தில் பெயர் வைக்கப்படவில்லை என்றால், வாழ்க்கை குழப்பமாக இருக்கும்.
சிலர், இதனை எல்லாம் நம்பாமல், பின்பற்றாமல் ஏதோ ஒரு பெயரை வைக்கிறார்களே?
அவர்கள் எல்லாம், அவர்கள் பாட்டுக்கு வாழ்ந்து சென்றுவிடுவார்கள். நல்லபடியாக அவர்களால் வாழ முடியாது.
பிறப்பு எண், விதி எண் பற்றி கூறுங்களேன்...
எந்த தேதியில் பிறக்கிறோமோ, அது பிறப்பு எண். பிறந்த தேதி, மாதம், ஆண்டு ஆகிய மூன்றையும் கூட்டி வருவது விதி எண். பிறப்பு எண்ணுடன், விதி எண் ஒத்துப்போகிறதா என்று பார்த்தே நியூமராலஜியில் ஜோதிடம் கணிக்கப்படும். பிறப்பு எண்ணும், விதி எண்ணும் ஒன்றாகவே இருந்தால், வாழ்க்கை ஒருமாதிரி இருக்கும். இதுவே வெவ்வேறாக இருந்தால், வேறு விதமாக இருக்கும்.
எண்களிலேயே எந்த எண் சூப்பர்? அல்டிமேட் நம்பர் எது?
நியூமராலஜியில் அதிர்ஷடம் தரக்கூடிய எண் 6-ஆம் நம்பர். நவகிரகங்களில் சௌபாக்கியத்தையும், சுகபோகத்தையும் தரக்கூடியது சுக்கிரன். சுக்கிரன் என்பது 6-ஆம் எண். சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் பெயர்களில், U, V, N ஆகிய எழுத்துகளில் ஏதோ ஒன்று இருந்தால் சிறப்பாக இருக்கும். அதனால்தான் நிறையபேர் தங்கள் பெயர் V-யில் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சுக்கிரனின் ஆதிக்கம் வேண்டும் என்பதற்காகத்தான் V. இதுவே எண் 3, குருவை குறிக்கும். 3-ம் எண்ணின் ஆதிக்கம் கொண்டவர்கள், அரசு, ஆன்மிகம், பொருளாதாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள்.
நியூமராலஜியில் அதிர்ஷடம் தரக்கூடிய எண் "6"
நியூமராலஜி என்பது நாடுகளுக்கு நாடு வேறுபடும் நிலையில், நாம் எந்த நியூமராலஜியை பின்பற்றுகிறோம்?
நாம் இந்தியாவில் பின்பற்றுவது, வெஸ்டர்ன் நாடுகளில் பின்பற்றப்படும் நியூமராலஜிதான். அவர்கள் முதன்முதலில், நியூமராலஜியை கணித்தபோது. வரிசையாக ஜாடிக்களை வைத்து, அதில் விதைகளை போட்டு வளர்த்துள்ளனர். அவற்றில், எண் 8 ஜாடியில் வளர்ச்சி குறைவாக இருந்துள்ளது. 6-ஆம் எண் ஜாடியில் வளர்ச்சி நன்றாக இருந்துள்ளது. எனவே, அவர்கள் அதிர்ஷ்டமான எண்ணாக 6-ஐ வைத்துள்ளனர். அதற்கேற்ப தங்கள் பெயர்களில் U, V எழுத்துகளை சேர்த்துக்கொள்கின்றனர். மேலும், வெளிநாடுகளில் நம்பர் எட்டுடன் 13-ஆம் நம்பரையும் அதிர்ஷ்டம் இல்லாத எண்ணாக கருதுகின்றனர். குறிப்பாக 13-ஆம் நம்பரை ஆபத்தான எண்ணாக பார்க்கின்றனர். இதையேதான் இந்தியாவிலும் பின்பற்றுகிறோம். சீனாவில் மட்டும் வேறுவிதமான நியூமராலஜி பார்க்கப்படுகிறது.
