இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஜோதிடம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளித்து ஆன்மிக ஜோதிடர் டாக்டர் சிவஸ்ரீ மணிகண்ட சிவம், ராணி அன்லைனுக்கு அளித்த நேர்காணலின் இரண்டாம் பாகம் உங்கள் பார்வைக்கு...

1. விபரீத ராஜயோகம், சுபமங்கள யோகம், சகட யோகம் என்றெல்லாம் சொல்கிறார்களே... இந்த யோகங்கள் யாருக்கெல்லாம் நன்மை தரும்?

யோகங்கள் என்று பார்க்கும்போது ஜோதிடத்தில் குறைந்தபட்சமாக நான்காயிரத்திற்கும் அதிகமான யோகங்கள் இருக்கின்றன .மனிதனாக பிறப்பதே ஒரு யோகம்தான் . "புல்லாகி புழுவாகி கடைசியாக மனிதனாக உருவெடுக்கின்றோம்". அடுத்தது ஜோதிடத்தை நாம் சரியாக பின்பற்றுவது இரண்டாவது யோகம். யோகங்களில் இதுபோல் நிறைய உண்டு. ஒவ்வொரு ஜாதகத்தையும் நீங்கள் எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக ஏதோவொரு யோகம் இருக்கும். நீங்கள் கேட்ட விபரீத ராஜயோகம் என்பது "ஒருவரது ராசியில் ஆறாம் இடம், எட்டாம் இடம் மற்றும் பன்னிரெண்டாம் இடம் என்று சொல்லுவோம் ". ஆறு என்பது உடல் நலன் பாதிப்பு மற்றும் கடனை குறிக்கும். எட்டாம் இடம் ஆயுள் மற்றும் குழந்தைகளால் ஏற்படும் சிரமத்தை குறிக்கும். பன்னிரெண்டாம் இடம் என்பது விரயத்தை குறிக்கும். இந்த 3 இடங்களிலும் நல்ல கிரகங்கள் உட்கார்ந்தால், அதாவது ஆறாம் இடத்துக்குரிய அதிபதி எட்டாம் இடத்தில் உட்கார்ந்தாலும், பன்னிரெண்டாம் இடத்துக்குரிய அதிபதி எட்டில் உட்கார்ந்தாலும் அல்லது அந்தந்த இடத்துக்குரிய கிரகங்கள் உட்கார்ந்தாலும், பெரும் நல்ல பலன்கள் ஏற்படும். இதனைத்தான் விபரீத ராஜ யோகம் என்று அழைக்கின்றார்கள்.

அடுத்ததாக சகட யோகம் என்பது ஒரு யோகமே அல்ல. அதாவது நாம் போகின்ற போக்கில் நம்மை தட்டிவிடுவதே சகட யோகம் என்று கூறுகின்றார்கள். வந்தால் வாய்ப்பு, போனால் ஒன்றுமில்லை என்பதே சகட யோகம் ஆகும். இதே 6, 8, 12 இல் சந்திரனுடைய பார்வைகள் படும்போது அவர்களுக்கு தர்மசங்கடத்தை உண்டாக்கும். 6, 8, 12 இடங்களில் சந்திரனுடைய பார்வை படும்போது சகட யோகம் ஏற்படுகின்றது. அது நம்மை உயர்த்தியும்விடும் இறக்கியும்விடும். இதனை நாம் நம்பக்கூடாது.


மிக ஏழ்மையில் இருக்கும் ஒருவரை பெரும் பணக்காரராக உயர்த்தக்கூடியதுதான் விபரீத ராஜயோகம்

அடுத்ததாக சுப மங்கள யோகம் என்பது சுக்கிரன் மற்றும் செவ்வாய் 1, 4, 10 ஆகிய இடங்களில் கூட்டணி போட்டால் நூறு சதவீதம் அது சுப மங்கள யோகம் என்று அழைக்கப்படுகின்றது.

2. விபரீத ராஜ யோகத்தால் நிறையபேர் பணக்காரர்களாகி விடுகின்றார்கள் என்று சொல்லப்படுகின்றதே... அது உண்மையா?

உண்மைதான். ஆனால் சிலர், எனக்கு திடீர் விபரீத ராஜயோகம் இருக்கின்றது. நான் ஏன் பணக்காரனாகவில்லை என்று கேள்வி எழுப்புவார்கள். அவர்கள் அதற்குண்டான முயற்சி எடுக்கவில்லை, ஆரம்பிக்கவில்லை என்றுதான் நான் சொல்வேன். அதாவது நமது மனத்திற்குள்ளாக ஒரு "தீ" என்பது அனலாக இருக்கவேண்டும். "நான் இந்த பதவிக்கு வந்தே தீருவேன், நான் இந்த இடத்தை அடைந்தே தீருவேன்" என்ற நம்பிக்கை வேண்டும்.

3. ஜோதிடத்தில் காலசர்ப்ப தோஷம், நாகதோஷம், செவ்வாய் தோஷம் என ஏகப்பட்ட தோஷங்கள் இருப்பதாக சொல்கின்றார்கள். அவை குறித்து கூறுங்களேன்.

ஜோதிடத்தில் எனக்குத் தெரிந்தவரையில் "தோஷம் என்ற ஒன்று கிடையாது". இதனை நாம் முதலில் நம்ப வேண்டும். "தோஷம் என்பது நம்மால் உருவாக்கப்பட்ட வார்த்தைதான்". நமக்கு ஒரு தோஷம் என்று நாம் நம்பி அதன் உள்ளே சென்றுவிட்டால் திரும்பி வெளியே வர முடியாது. நாம் கோவில் கோவிலாக அலைவோம். எல்லா பரிகாரங்களையும் நாடுவோம். இதனால் நமது தோஷம் விலகியதா? இல்லையா என்று பெருங்குழப்பத்திற்கு உள்ளாவோம். உண்மையிலேயே சில நேரங்களில் நமக்கு நேரமிருந்து நாம் சில ஆலயங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது நமக்கு நல்லதோர் உணர்வு ஏற்படும். அன்றைய தினத்திலிருந்து நாம் நன்றாகிவிட்டோம் என்ற மனநிலையை நாம் நமக்குள் கொண்டுவர வேண்டும்.


ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் நாகநாத சுவாமியை வழிபாடு செய்தால் பகவானின் அனுக்கிரகம் கிடைக்கும்

ஜோதிடத்தின் அடிப்படையில் ராகு-கேது தோஷம் என்றால் என்னவென்று பார்ப்போம். "தோஷம் என்ற வார்த்தையை" நாம் சொல்லவேண்டாம். அதனை "பார்வை" என்று சொல்லுவோம். எனக்கு தோஷம் இருக்கிறது என்று சொல்வதை விட ராகு-கேதுவின் வீரியம் அதிகமாக அல்லது குறைவாக இருக்கின்றது என்று மாற்றி சொல்லுவோம். நம்முடைய எண்ணங்களே நம்மை வழி நடத்தக்கூடிய ஒரு அருமையான ஆசானாக இருக்கின்றன. நமது எண்ணங்களை விட யாரும் நமக்கு அதிகமாக நன்மை செய்ய முடியாது. எனவே கால சர்ப்ப வீரியத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், பேரையூர், திருநாகேஸ்வரம், திருப்பாம்பரம், திருக்காளஹஸ்தி, கீழ பெரும்பள்ளம் போன்ற ஸ்தலங்களுக்குச் சென்று நாகநாத சுவாமியை வழிபாடு செய்யவேண்டும். இந்த இடங்களுக்கு ஒருமுறை சென்றால் போதும். நன்றாக பிரார்த்தனை செய்து வழிபாடு செய்தால் பகவானின் அனுக்கிரகம் கிடைக்கும்.

மேலும், பெருமாளையும் துர்க்கையையும் பிரார்த்தனை செய்தால், ராகு-கேது வீரியம் விலகும். விநாயகரை பிரார்த்தனை செய்தால் கேது நமக்கு அனுக்கிரகம் செய்வார். ஞானத்தைக் கொடுப்பார். விநாயகரை நாம் நினைத்துவிட்டால் கேது நமக்கு முன்பாக கைகட்டி நிற்பார். மொத்தத்தில் ராகு-கேதுவின் வீரியத்தை குறைக்கும் சக்தி துர்க்கை, பெருமாள், விநாயகர் ஆகியோருக்கு உண்டு. இந்த மூவரையும் பிரார்த்தனை செய்து, மேற்கூறிய ஸ்தலங்களுக்குச் சென்று வந்தாலே போதுமானது. நீங்கள் பயப்பட வேண்டாம்.


துர்க்கை, பெருமாள், விநாயகரை வழிபட்டால் ராகு-கேது வீரியம் குறையும்

அடுத்ததாக செவ்வாய் தோஷம் என்பது ஜாதகத்தில் 2, 8, 7, 12, 4 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் பார்வையாக, வீரியமாக காணப்படும். அவ்வாறு இருந்தால், நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளும், கோபமும், பயமும், சந்தேகமும் அதிகம் வரும். மேலும் திருமண வாழ்வில் பிரிவு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதேநேரம், கந்தசஷ்டி கவசத்தை அவ்வப்போது சொன்னால், செவ்வாய் நமக்கு கட்டுப்படுவார். முடிந்தால் ஒருமுறை வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று வரவும். உங்களுக்கு செவ்வாய் அனுக்கிரகம் செய்வார் .

4. சிலருக்கு ஜாதகமே இருக்காது, அவர்கள் பிறந்த தேதியும் வருடமும் கூட தெரியாது. இப்படிபட்டவர்களுக்கு நீங்கள் கூறும் ஜோதிட ஆலோசனை என்னவாக இருக்கும் ?

சிலருக்கு தாங்கள் பிறந்த வருடம், தேதி தெரியாவிட்டாலும், ஜாதகமே இல்லாவிட்டாலும் கூட அவர்களுக்கு தேவை ஒரு குருவின் அருளை பெறுவதே. பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடக்கவேண்டும். அவர்களது குல தெய்வத்தை நம்பி நடக்கவேண்டும். இவைகள் இருந்தாலே போதுமானது. ஜாதகம் என்பது தேவையில்லை. மேலும், இந்த வருடத்தில்தான் நான் பிறந்தேன் என்று நாமாகவே சித்தரித்து நமது விதியை எழுதுவதும் தவறு. அப்படி செய்யக்கூடாது. அதை தவிர்ப்பது நல்லது. நமது விதி எல்லாமே மாற்றத்திற்குரியது. மாற்றம் ஒன்றே மாறாதது. நாம் அமைதியாக இருப்பதே நல்லது. எனவே ஜாதகமே தெரியாவிட்டாலும் கூட குருவழிபாடு, பெரியவர்களின் ஆசிர்வாதம், குல தெய்வ வழிபாடு போன்றவை இருந்தாலே போதும். இதனை தவிர்த்து நீங்களாகவே உங்கள் ஜோதிடத்தை கணிக்க வேண்டாம். மேலும் எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்ட ஒன்று என்பதால் ஜாதகம் இல்லையென்று நீங்கள் கவலைப்படவேண்டாம். நீங்கள்தான் கடவுளின் செல்லப்பிள்ளை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் .


குழந்தையின் பிறந்த நேரத்தை வைத்தே ஜாதகம் கணிக்க வேண்டும்

5. சரியான முறையில் ஜாதகம் கணிப்பது எப்படி? ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதும் ஜாதகத்தை கணிக்கவேண்டுமா? அல்லது குழந்தை தன் தாயின் வயிற்றிலிருந்து வெளியே வரும் போது ஜாதகம் கணிக்கவேண்டுமா?

ஒரு குழந்தை இந்த பூலோகத்தில் ஜனனம் ஆகும் நேரத்தை வைத்து கணிப்பதே ஜோதிட கணிப்பு. குழந்தை பிறக்கும் நேரமே ஜோதிட நேரமாகும். இதற்கு விதி என்று பெயர். ஒரு மனிதன் வெளியே வரும்போது மட்டுமே கிரகங்கள் அவனை சூழ்ந்து கொள்கின்றன. அந்த நேரமே விதி லக்னம் என்று எழுதப்படும். முதலில் அந்த ஜாதகரின் ஜாதகத்தில் சந்திரன் நுழைவார். அதனைத் தொடர்ந்து பிற கிரகங்கங்கள் உள்ளே வரும். எனவே ஒருவரின் பிறப்பின் நேரத்தையும், நாழிகையையும் வைத்தே ஜாதகம் எழுத வேண்டும்.

தொடரும்...

Updated On 3 Jun 2024 6:10 PM GMT
ராணி

ராணி

Next Story