சித்த வைத்திய ஜோதிடர் திரு. ராஜசூரியன், ராணி ஆன்லைனுக்கு அளித்துள்ள பேட்டியின் முதல் பாகத்தை கடந்த வாரம் பார்த்த நிலையில், இந்த வாரம் இரண்டாம் பாகத்தை பார்ப்போம். இதில், சித்தர்கள் குறித்தும், மெஞ்ஞானத்தில் வாழ்ந்த சித்தர்கள் விஞ்ஞானம் குறித்து சொல்லியுள்ள கருத்துகள் குறித்தும், சித்தர்கள் வழிகாட்டிய பிரசன்ன ஜோதிடம் குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்கள் அடங்கியுள்ளன. கோள்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்தும் திரு. ராஜசூரியன் பேசியுள்ளார். அவை உங்களுக்காக...
மெஞ்ஞானத்தில் இருந்துகொண்டு விஞ்ஞான அளவியலை சொன்னவர்கள் சித்தர்கள்!
சித்த வைத்திய முறையில் புலால் உண்ணக்கூடாதா? சில வைத்தியர்கள் வெள்ளாட்டுக்கறி சாப்பிடலாம் என்கிறார்களே?
ஆம். புலால் உண்ணக்கூடாது. சித்த வைத்திய நெறிகள் சைவத்தை தான் வலியுறுத்துகின்றன. ஏன்.. ஆங்கில மருத்துவர்களிடம் சென்றாலும், சிலவற்றுக்கு சைவ உணவைத்தான் வலியுறுத்துவார்கள். ஃபேட்டி லிவர் பிரச்சனை உள்ளவர்கள் ஆட்டுக்கறி உண்பதை தவிர்க்க வேண்டும் என்றுதான் அறிவுரை கூறுவார்கள். உணவு விஷயத்தில் நடுநிலையோடு ஆராய்ந்து பேச வேண்டும். ஒருவேளை நீங்கள் மாலத்தீவில் எங்கோ மாட்டிக்கொண்டீர்கள் என்று உதாரணத்திற்கு வைத்துக்கொள்வோம். அங்கு சாப்பிடுவதற்கு சைவம் கிடைக்கவில்லை என்றால், உயிர்வாழ என்ன கிடைக்கிறதோ, அதனை சாப்பிட்டுக்கொள்ளலாம். மற்றபடி சித்த வைத்திய முறை, சைவ உணவைத்தான் வலியுறுத்துகிறது.
சித்த வைத்தியர்கள் சிலர் புலால் உணவை பரிந்துரைக்கிறார்களே? எப்படி?
அவ்வாறு சொல்பவர்கள் சித்த வைத்தியர்களே இல்லை. அப்படிப்பட்டவர்களிடம் செல்லாதீர்கள். சித்த மருத்துவத்தில் எங்குமே மாமிசம் சாப்பிடு என்று அறிவுறுத்தப்பட்டது இல்லை. மேலும் எந்த சித்த நூலிலும் புலால் உணவு குறித்து சொல்லப்பட்டது இல்லை. உலகப் பொதுமறையாம் திருக்குறளை தந்த திருவள்ளுவரும் கூட புலால் உண்ணக்கூடாது என்றுதான் சொல்லியுள்ளார்.
ஏன், நம் முறையை பாருங்களேன்... சைவ சித்தாந்த முறைதான் தமிழனின் முறை. இதிலேயே சைவம் என்று வந்துவிட்டது... பார்த்தீர்களா! "தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்று சொல்கிறோம் அல்லவா! இது சைவ மரபில் காலம்காலமாகப் போற்றப்பட்டு, தமிழ் சைவத்தின் பெருமையை நிலைநிறுத்தும் ஒரு மந்திரச் சொல்லாகத் திகழ்கிறது.
போகர் சித்தர் எழுதியுள்ள சப்த காண்டத்தில், கோள்களை பற்றி தெளிவாக கூறியுள்ளார் - ராஜசூரியன்
ஜாதகம், ஜோதிடம் எல்லாம் பார்த்து, பரிகாரம் செய்தால்தான் நன்றாக வாழ முடியுமா?
அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. ஜாதகம், ஜோதிடம் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் அவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து, பரிகாரம் செய்தால்தான் நன்றாக இருப்போம் என்று சொல்வது உண்மையில்லை. "செய்யும் தொழிலே தெய்வம். திறமைதான் நமது செல்வம். கையும் காலுமே உதவி, கொண்ட கடமையே நமக்கு பதவி". அவ்வளவேதான்... இதுதான் வாழ்க்கை தத்துவம். இப்போது சொன்னவற்றை யாரெல்லாம் பின்பற்று வாழ்கிறார்களோ, அவர்களுக்கு பரிகாரமும் தேவையில்லை, எதுவும் தேவையில்லை. கோள்கள் நல்ல விதத்தில் அமைந்தவர்கள், மேற்கூறியபடி, செய்யும் தொழிலே தெய்வம், உழைப்பே உயர்வு என்று வாழ்க்கையை நல்லபடி நடத்தி செல்வார்கள். கோள்கள் சரியாக இல்லை என்றால், அதனை சரி செய்யவே பரிகாரங்கள் தேவை.
சித்தர்களில் போகர் சித்தர், சப்த காண்டம் என்ற நூலை எழுதியிருக்கிறார். அதில் அவர், கோள்களே மனிதனின் வாழ்வை ஆக்கிரமிப்பதாக கூறுகிறார். உதாரணத்திற்கு, மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், அமாவாசை, பொளர்ணமி தினங்களில் மிகவும் அக்ரோஷமாக இருப்பார்கள். ஏனென்றால், அந்த திதிகள் வேலை செய்கின்றன. இந்த பூமியை கோள்கள் ஆட்டிப்படைக்கின்றன என்பதற்கு இதெல்லாம் எடுத்துக்காட்டு.
ஒரு குழந்தை பிறந்து, அம்மாவின் தொப்புள் கொடி துண்டிக்கப்பட்டவுடன், அந்தக் குழந்தைக்கான கோள்களின் ஆதிக்கம் தொடங்கிவிடம். கோள்களின் சுழற்சியை வைத்துதான், நம் சிந்தனை, எண்ண ஓட்டம், செயலாக்கம் போன்றவை நிர்ணயிக்கப்படும். அதனால்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையான சிந்தனை மற்றும் செயலாக்கம் இருக்கிறது. உங்களுக்கு பிடிப்பது எனக்கு பிடிக்காது, எனக்கு பிடிப்பது உங்களுக்கு பிடிக்காது... இதற்கெல்லாம் அடிப்படை காரணம், பிரபஞ்சவெளியில் இருக்கும் கோள்களின் ஆதிக்கம்தான். இதையெல்லாம் சித்தர்கள், தங்கள் அறிவு கூர்மையால் அறிந்தார்கள். ராசி என்பது உடல், லக்கனம் என்பது உயிர் என்று கணித்தார்கள். ஆனால், உடலும் உயிரும் தனித்தனி. ஏனென்றால். எப்போது வேண்டுமானாலும் உடலைவிட்டு உயிர் பிரியலாம். இதைப்பற்றி பேசிக்கொண்டே போகலாம். நேரத்தை கருத்தில் கொண்டு நான் ஷார்டாக சொல்லுகிறேன். கோள்களுக்கு தகுந்தபடிதான் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் சத்தியமான உண்மை. இவற்றை பற்றியெல்லாம் தெரியாதவர்கள்தான், ஜாதகம், ஜோதிடம் பற்றி குறை சொல்வார்கள். உண்மை அறிந்தவர்கள் தவறாக பேசமாட்டார்கள்.
பிரசன்ன ஜோதிடத்தில் சோழி பிரசன்னம் உள்பட பல்வேறு பிரிவுகள் உள்ளன - ராஜசூர்யா
ஒருவரை ராசி ரீதியாகவோ, லக்கன ரீதியாகவோ, எட்டாம் வீட்டிற்கு உரிய கோள் வழிநடத்துகிறது என்றால், அவர் திடீரென காணாமல் போதல், அவர் பொருள் காணாமல் போதல், களங்கம், பிரச்சனை வருதல் உள்ளிட்டவை எல்லாம் நிச்சயமாக நடந்தே தீரும்.
உங்களின் கூற்றுபடி, மனிதனின் வாழ்க்கை என்பது ஜாதகம், ஜோதிடத்தின் அடிப்படையிலேயே சென்று கொண்டிருக்கிறது. ஆனால், சிலருக்கு தாங்கள் பிறந்த நாளே தெரிவதில்லை. அவர்கள் எல்லாம் எப்படி ஜாதகம் பார்ப்பார்கள்?
அவர்களுக்கும் ஜாதகம் பார்க்கலாம். இந்த இடத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கடவுள் இல்லை என்று சொல்கிறவனுக்குதான் ஒரு பயம் இருக்கும். ஒருவேளை இருந்தாலும் இருக்குமோ எனற ஒரு சிந்தனையும் ஓடிக்கொண்டிருக்கும். இது இயற்கையாக தோன்றுவதுதான். அதுமாதிரிதான் ஜாதகமும், ஜோதிடமும். எல்லாருமே ஜாதகம் பார்க்கிறார்களே, நமக்கு மட்டும் இல்லையே, என்ன செய்வது என்று கேள்வி எழும்.
அப்படிப்பட்டவர்களுக்காகவே சித்தர்கள் சொல்லி வைத்துள்ளதுதான் பிரசன்ன ஜோதிடம். பிரச்சன்னம் பார்ப்பது. "பிரசன்னம்" அற்புதமாக வேலை செய்யும். பிறந்த நேரம், தேதி, வருஷம் தெரியாதவர்கள், ஜாதகம் இல்லாதவர்கள், தங்கள் ஜாதகத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஏக்கம் இருந்தால், ஜோதிடர்களை அணுகலாம். ஜோதிடர்களிடம் அவர்கள் பேசுகிறார்கள் அல்லவா, ஐயா, எனக்கு ஜாதகம் இல்லை. எனக்கு பலன் சொல்ல முடியுமா என்று கேட்கிறார்கள் அல்லவா... அந்த கேட்கும் நேரம்தான், அவர்களின் ஜாதகம். அந்த நேரத்தை வைத்துதான் அவர்களுக்கு பலன் சொல்ல வேண்டும். இதற்கு பெயர்தான் பிரசன்னம். இது பொய்யாகாது. இந்த பிரபஞ்சத்தின் மீது சத்தியமாக சொல்கிறேன்... பிரசன்னம் பார்த்து பலன் சொல்வது, பொய்க்கவே பொய்க்காது.
பிரசன்னத்தில், பூர்வ ஜென்ம கர்மாவை பற்றி மட்டும் பேச முடியாது. ஆனால், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் தெளிவாக கணிக்க முடியும். உறுதியாக சொல்ல முடியும். ஆயிரம் சதவீதம் அடித்து சொல்லலாம். எனவே ஜாதகம் இல்லாதவர்கள், பிரசன்ன ஜோதிடம் பார்த்துகொள்ளலாம். அதுவும் பிரசன்னத்தில் நல்ல அனுபவம் உள்ள ஜோதிடர்களை அணுகினால், அவர்களால் உங்கள் வாழ்க்கையை துல்லியமாக கூற முடியும்.
மனிதனின் வாழ்க்கை கோள்களின் சுழற்சி பிடியில்தான் அடங்கியுள்ளது - ராஜசூரியன்
இவர் நல்ல ஜோதிடர், நல்ல சித்த வைத்தியர் என்பதை மக்கள் எவ்வாறு தெரிந்துகொள்வது?
யாரையுமே நல்லவர்கள் என்று நாம் சொல்ல முடியாது. ஏனென்றால், உங்களுக்கு தெரிந்த ஒருவர், ஒரு மருத்துவரை நல்ல மருத்துவர் எனக் கூறி, அவரிடம் செல்ல உங்களை பரிந்துரைக்கிறார் என்று வைத்துக்கொள்ளுவோம். அவரிடம் சிகிச்சை பெற்ற நிறையபேர் நன்கு குணமாகியும் இருப்பார்கள். ஆனால், அவரின் மருத்துவம் உங்களுக்கு சரியாக இருந்திருக்காது. உடனே நீங்கள் அவரை குறை சொல்வீர்கள். அந்த மருத்துவரால் 10 பேர் நல்ல பலன் அடைந்திருப்பார்கள். ஆனால் ஒருவர் இரண்டுபேர் குறை சொல்லதான் செய்வார்கள். அப்படித்தான் ஜோதிடர்களும். நமக்கு சரியாக சொல்கிறார்களா என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தக்கொள்ள முடியும். நாம் யாருக்கும் சான்று அளிக்க முடியாது. நம் அறிவுதான் நல்ல சித்த மருத்துவரையும், நல்ல ஜோதிடரையும் தீர்மானிக்க வேண்டும். மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
தொடரும்...
