இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நிறையபேரின் காலைவேளை ஜோதிடத்துடனேயே ஆரம்பிக்கிறது. இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என தெரிந்துகொள்வதில் பெரும்பாலானோருக்கு ஆர்வம் உள்ளது. அத்துடன் டாரட் கார்டு ரீடிங், யோகங்கள், பரிகாரங்கள், குலதெய்வங்கள், சாமுத்ரிகா சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம் உள்ளிட்ட ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான சந்தேகங்களும் மக்களுக்கு உண்டு. இதுகுறித்த சந்தேகங்களுக்கு எல்லாம், ராணி ஆன்லைனுக்கு விளக்கம் தந்து பேட்டியளித்துள்ளார் ஆன்மிக ஜோதிடர் டாக்டர் சிவஸ்ரீ மணிகண்ட சிவம்.

1. ஐயா, இவன் யோகக்காரன் அல்லது அதிர்ஷ்டக்காரன் என்று சொல்கின்றார்களே? யோகத்திற்கும் அதிர்ஷ்டத்திற்கும் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா?

ராணி நேயர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். இந்த நிகழ்ச்சியை வியூவர்ஸ் எல்லாம் பார்க்கிறார்கள். நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அதிர்ஷ்டம் வேண்டும். அந்த அதிர்ஷ்டத்தை பயன்படுத்துபவர்கள் யோகக்கார்கள். இதுதான் உண்மையான விஷயம். பொதுவாக பிறப்பின் காலத்தில் கிரகங்கள் உச்சம் பெற்றிருக்க வேண்டும். ஐந்து கிரகங்கள் உச்சம் பெற்றிருந்தால் அவர்கள் நாட்டின் ஜனாதிபதியாகக் கூட ஆவார்கள். அப்படி ஆனதாக ஜோதிட வரலாறுகள் உண்டு. குறைந்தது மூன்று அல்லது இரண்டு கிரகங்கள் உச்சம் பெற்றிருந்தால், அந்த ஜாதகக்காரர் "VIP"-யாக வருவார். விரல்விட்டு எண்ணக்கூடிய விஐபி-கள் வரிசையில் அவர் வந்தே தீரவேண்டும். இதனை தவிர்த்து அதிர்ஷ்டம் என்பது என்னவென்றால் "அது இஷ்டத்திற்குதான் வரும் நம்ப இஷ்டத்திற்கு போகாது. அப்போது நாம் என்ன செய்யவேண்டும் என்றால், "பாசிட்டிவாக சில விஷயங்களை நினைக்க ஆரம்பிக்கவேண்டும்". அப்படி நினைக்க ஆரம்பித்தால் "அதிர்ஷ்டம் வரும் ". சிலரிடம் நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் என்று கேட்டால், அதற்கு அவர்கள் "ஏதோ இருக்கின்றேன் " என்று சொல்வார்கள். என்ன இப்படி சொல்கின்றீர்கள் என்று கேட்டால், மனசு சரியில்லை என்று சொல்வார்கள். இந்த மனது எப்போது நல்லதாகும்? அது தானாகவே நன்றாக ஆகாது. சூழ்நிலை எதுவாக இருந்தாலும் அதை ஆனந்தமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்போது அதிர்ஷ்டம் என்பது தானாக தேடிவர ஆரம்பிக்கும். அதே அதிர்ஷ்டத்தை பின்தொடர்ந்தால், யோகம் தானாகவே வரும். "ஜோதிடத்தை பொறுத்தவரை யோகம் என்பது கிரகங்கள் உச்சம் பெற்றிருப்பதே ஆகும். "ஐந்து கிரகம் உச்சம் பெற்று இருந்தால் யோகம். மூன்று கிரகம் உச்சம் பெற்று, இரண்டு கிரகங்கள் ஆட்சி பெற்றிருந்தால் கண்டிப்பாக யோகம். அந்த யோகக்காரர்கள் வெகு சுலபமாக மிக உயர்ந்த நிலைக்கு வரமுடியும்.


ராசிபலன், எண் கணிதம், ஓலைச்சுவடி, சோழி பிரசன்னம் என ஜோதிடத்தில் பல்வேறு முறைகள் உள்ளன

2. இந்த கேள்வி எந்த ஜோதிடரையும் புண்படுத்துவதற்காக அல்ல. அதேநேரம் மக்கள் சில போலி ஜோதிடர்களிடம் சிக்கிக்கொள்கின்றனர். எனவே நல்ல ஜோதிடரை அடையாளம் காணுவது எப்படி?

இருண்ட மனதோடு இருக்கக்கூடிய ஒரு மனிதனை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டியதுதான் ஒரு ஜோதிடரின் வேலை. "ஒரு மனிதன் தன்னம்பிக்கையே இல்லாமல் வருகின்றான், சார் எனக்கு கல்யாணமே நடக்கவில்லை? நடக்குமா சார்? குழந்தை பிறக்குமா? நான் வேலைக்கு போவேனா? வேலையில் ப்ரோமோஷன் கிடைக்குமா? எனக்கு ஒன்னுமே புரியவில்லை சார் என்று சொல்லும்போது, ஒரு ஜோதிடரின் வேலை அவனுடைய ஜோதிடத்தை ஆராய்ந்து அவனுக்கு ஜோதியை(வெளிச்சத்தை) உண்டாக்க வேண்டும். இதனால்தான் ஜோதிடத்தில் முதல் வார்த்தையே(ஜோதி) இதைச் சொல்லுகின்றது. ஒருவர் எதற்காக ஜோதிடரை பார்க்க செல்கிறாரோ, அற்கான விடையை ஜோதிடர் கொடுத்தே தீரவேண்டும். அப்போதுதான் ஜோதிடரை பார்க்க சென்றவருக்கு வெளிச்சம் நிச்சயம் கிடைக்கும்.

மனிதனுடைய மனதில் இருக்கக்கூடிய இருளை அகற்றுவதற்குத்தான் ஜோதிடம் இருக்கிறது. "ஜோதிடம்" என்ற வார்த்தையின் முதல் பாதியான ஜோதி என்றால் வெளிச்சம். இரண்டாம் பாதி வார்த்தை "இடம்" என்று வரும். இடம் என்றால் "venue" என்று சொல்வார்கள். வெளிச்சமான இடத்திற்கு வந்தால் வாழ்க்கைக்கு விடை கிடைக்கும் என்று சொல்வதே ஜோதிடம். அதேபோல இந்த ஜோதிடத்தை எல்லோருமே கற்றுக் கொள்ளமுடியுமா என்றால், கற்றுக்கொள்ள முடியும். ஆனால் ஜாதக ரீதியாக இரண்டாம் இடத்தில், குரு "வாக்கு ஸ்தானம்" பெற்றிருக்க வேண்டும். வாக்கு ஸ்தானம் என்றால், சொல்லும் சொல் பலிக்க வேண்டும்.

3. வேதாந்த ஜோதிடம், நாடி ஜோதிடம், எண் கணித ஜோதிடம், சோழி பிரசன்னம் உள்ளிட்ட ஜோதிட முறைகளில் எதை பின்பற்றுவது நலம்?

என்னை பொறுத்தவரை, நான் என்ன படிக்கவேண்டும் என்று நான்தான் தீர்மானம் செய்ய வேண்டும். என்னிடத்தில் ஜாதகம் பார்க்க வருபவர்கள் என் மகன் என்ன படிப்பான்? என்று கேட்பார்கள். உடனே நான் அந்த பையனையை, பெண்ணையோ அழைத்து பேசுவேன். மேலும், பிள்ளைகளுக்கு முதலில் என்ன ஆசை இருக்கிறதென்று கேளுங்கள், உங்கள் ஆசையை பிள்ளைகள் மேல் திணிக்காதீர்கள் என்று சொல்வேன். மற்றொரு பக்கம், நான் சொல்கின்ற படிப்பின்மீது அவர்களுக்கு ஆசை இருக்கிறதா என்று பாருங்கள், இல்லாவிட்டால் அதற்கான வழியை கொண்டு வாருங்கள், ஒன்பதாவது பத்தாவது படிக்கும்போதே அவர்களை அந்த வழிக்கு கொண்டுவந்துவிட்டால், அவர்களுடைய ஜாதகம் சரியாகப் போகும். இதே போன்றதுதான் ஜோதிட முறைகள். ஜோதிடத்தில் வகைகள் என்று எடுத்துக் கொண்டால் ஏராளமாக உண்டு. நாடி ஜோதிடம், கிளி ஜோதிடம், பிரசன்ன ஜோதிடம், பக்க்ஷி சாஸ்திரம் என நிறைய ஜோதிடங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் எந்த ஜோதிடத்தை யார் பார்க்கின்றார்கள் என்பதைவிட, நமக்கு என்ன பிடிக்கின்றது என்பதை ஆராய்ந்து, அந்த வழியில் செல்ல வேண்டும். முதலில் நமது மனதுக்கு அது பிடிக்கவேண்டும். அப்போதுதான் கடவுள் நமக்கு வழி காட்டுகின்றார் என்று அர்த்தம். அதனால் தான் ஜோதிடம் என்பது பெரிய கடல். மொத்தத்தில் ஜோதிடம் என்பது, மனிதனை ஒரு விழிப்புணர்வு நிலைக்கு கொண்டு வரவேண்டும். எனவேதான், மற்றவர்களுக்கு விமோச்சனம் கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான இடம் ஜோதிடம் என்று சாணக்கியர் எழுதி வைத்துள்ளார்.


மச்சங்களை வைத்தும், உடலின் தோற்றத்தை வைத்தும் சொல்லப்படுவதே சாமுத்ரிகா லட்சணம்

4. அடுத்ததாக, சாமுத்ரிகா லட்சணம் என்றால் என்ன? சிலருக்கு மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் என்று சொல்கின்றார்கள். சிலரோ மச்சம் இருந்தும் அதிர்ஷடமின்றி இருக்கின்றார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும் உயர்ந்து நிற்க காரணம் என்ன?

சாமுத்ரிகா லட்சணம் என்பது ரொம்ப சிம்பிள். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, நமது வாழ்க்கையில் நாம் கண்ணாடி முன் நின்றோமானால் நம்மை நமக்கே பிடித்திருந்தால் நமக்கு "சாமுத்ரிகா லட்சணம்" வந்துவிட்டது என்று அர்த்தம். காலையில் எழுந்து கண்ணாடி முன் நின்று நம் முகத்தை பார்க்கும்பொது "ஆஹா நான் அழகாக இருக்கின்றேனே!" என்று நினைத்தால் சாமுத்ரிகா லட்சணம் வந்துவிட்டது என்று பொருள். மேலும் உதட்டுக்கு மேல் மச்சம் இருந்தால் அவர்களுக்கு அதிக கோபம் வரும். அதே போன்றுதான் மற்ற இடங்களில் உள்ள மச்சம் குறித்தும் மச்ச சாஸ்திரத்தில் விளக்கம் உள்ளது. இது நூறு சதவீதம் உண்மை. மச்சம் என்பது என்னவென்றால், அது நமக்குள் ஒரு தியரியை உண்டாக்கும். ஒரு நம்பிக்கையை உண்டாக்கும். என்னுடைய குணாதிசயங்களை உண்டாக்கும். ஆனால் அதனை சரியாக சாஸ்திரம் படித்தவர்களிடத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். அது தெரியாமல் அதற்குள் செல்லக் கூடாது. சாமுத்ரிகா லட்சணத்தை நாம் பின்பற்ற விரும்பினால் நாம் வசீகரமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

பொதுவாக ஸ்ரீமன் நாராயணன் கோயிலுக்கு சென்றால், ஒரு திவ்வியமான அம்சம் ஏற்படும். பெருமாளுக்கு நிறைய ஆபரணங்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்டவற்றை போட்டிருப்பார்கள். இது பார்ப்போருக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கும், இதுதான் சாமுத்ரிகா லட்சணம். அத்துடன் அம்பாள் குடியிருக்கக்கூடிய இடத்துக்கு பெயர்தான் சாமுத்ரிகா லட்சணம். பொதுவாக தூய்மான உடையணிந்து, பண்பான அலங்காரம் செய்திருந்தால், சாமுத்ரிகா லட்சணம் தானாகவே வரும். அதில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது. இதுதான் உண்மை.


ஜாதகத்தில் ராகு உச்சத்தில் இருக்கும்போது "கோதண்ட ராம யோகம்" அமையும்

5. புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் உயரத்தில் இருப்பதற்கு காரணம் "கோதண்ட ராம திசை" என்று சொல்லப்படுகின்றதே? கோதண்ட ராம திசை என்றால் என்ன?

கோதண்டம் என்றால் என்ன? வில், அம்பு சேர்ந்தது கோதண்டம். ராமனுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ராகு என்ற கிரகம் நெப்டியூன் என்று சொல்லப்படுகின்றது. பொதுவாகவே ராகு திசை நடந்தாலோ அல்லது ராகு புத்தி நடந்தாலோ இவர்களுக்கு கண்டிப்பாக விஐபி ஆகக்கூடிய அந்தஸ்து ஏற்படும். ஏனென்றால் இவர்கள் நீதிமன்றம், போலீஸ் ஸ்டேஷன் போன்றவற்றையெல்லாம் சந்திக்கக் கூடிய கட்டாயம் ஏற்படும். இப்போது நீங்கள் சொன்ன விஐபி-க்கள் எல்லாம் நீதிமன்றம், காவல் நிலையம் உள்ளிட்டவற்றை பார்த்திருப்பார்கள். அது வெளியில் அவ்வளவாக தெரியாது. பப்ளிசிட்டி மட்டுமே தெரியும். ஜாதகத்தில் ராகு உச்சத்தில் இருக்கும்போது இந்த கோதண்ட ராம யோகம் கண்டிப்பாக அமையும். ரொம்ப சிம்பிளாக சொல்ல வேண்டுமானால், ராகு கேது உச்சம் பெற்றிருந்தால் அவர்களுக்கு மேலும் யோகம் உண்டாகும்.


கிளி ஜோதிடம் போன்றதுதான் டாரட் கார்டு ரீடிங்

6. டாரட் கார்டு முறை என்றால் என்ன? டாரட் கார்டு ரீடிங், எதனை அடிப்படையாகக் கொண்டது?

இதனை நான் உங்களுக்கு இரண்டு உதாரணங்களின் மூலம் சொல்லமுடியும். நம்ம ஊரில் பக்க்ஷியை வைத்து, அதாவது ஒரு கிளியை வைத்து ஒரு அட்டையை எடுக்கச் சொல்வார்கள். கிளி ஒரு அட்டையை ஜோசியரிடம் எடுத்து கொடுக்கும். கிளி ஜோசியக்காரர் ஒரு நெல்லைக் கையில் வைத்திருப்பார். அந்த நெல்லை கிளியிடம் காட்டிக் கொண்டேயிருப்பார். அவர் நெல்லை மாற்றும்போது அந்த கிளி ஒரு அட்டையை எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டுப் போய்விடும். இதே போன்றுதான் டாரட் கார்டிலும் நடக்கின்றது. இந்த முறை இங்கிருந்து கற்றுக்கொள்ளப்பட்டதுதான்.

தொடரும்...

Updated On 27 May 2024 6:39 PM GMT
ராணி

ராணி

Next Story