இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி அதற்கான பலன்களைத் தருவார்கள்.அந்த வகையில், நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21ஆம் தேதியான அக்டோபர் 08 அன்று மாலை 3:35 மணிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைகிறார். ராகு பகவான் அஸ்வினி 1ஆம் பாதத்திலிருந்து ரேவதி 4 ஆம் பாதத்திற்கும், கேது பகவான் துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் 2 ஆம் பாதத்திற்கும் மாறுகிறார். இந்த ராகு - கேது பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கு எப்படியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று கணித்து கூறியுள்ளார் ஜோதிடர் ஹரிஹரன் ஷர்மா.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இதுவரை உங்களுக்கு ஜென்மத்தில் ராகுவும் 7ஆம் இடத்தில் கேதுவும் இருந்து உடல் ரீதியாகவும், கணவன் - மனைவி உறவிலும் நிறைய பிரச்சினைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ராகு 12 ஆம் இடத்துக்கும், கேது 6 ஆம் இடத்துக்கும் பெயர்ச்சி அடைகிறார். இது மேஷ ராசிக்கு அள்ளி கொடுக்கும் காலகட்டமாகும். வெளியூர், வெளிமாநில தொடர்பு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உண்டு. இதுவரை திருமணத்தடை ஏற்பட்டவர்களுக்கு திருமணத் தடை நீங்கும். அதேபோல் இதுவரை சந்தான பாக்கியம் கிடைக்காதவர்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நடப்பு தசா புத்தி சரியில்லை என்றால் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் கோயிலுக்கு ராகு கால நேரத்தில் ஒரு முறை சென்று ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்து வந்தால் வரவிருக்கும் பிரச்சினையும், வந்த பிரச்சினையும் சூரியனை கண்ட பனிபோல விலகும்.


ராகு கேது பெயர்ச்சியால் திருமண தடை நீங்கும்

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இதுவரை உங்கள் ராசியில் 12 வது இடத்தில் ராகுவும் 6 ஆம் இடத்தில் கேதுவும் இருந்தனர். தற்போது ராகு 11 ஆம் இடத்திற்கும், கேது 5 ஆம் இடத்திற்கும் வருகிறார். பொதுவாகவே கிரகங்களை இயற்கை சுபர் - இயற்கை அசுபர் என்று இரண்டு வகையாக பிரிக்கலாம். அதேபோல் ஆதிபத்திய ரீதியான சுபர் மற்றும் அசுபர் என்றும் பிரிக்கலாம். அந்த வகையில் சுபர்கள் நல்ல இடத்திலும், அசுபர்கள் கெட்ட இடத்திலும் இருக்க வேண்டும். இந்த காலகட்டங்களில் ராகு 11 ஆம் இடத்தில் வருகிறார். இவர் இருக்கை அசுபர். இவர் 11 ஆம் இடத்தில் வருவதால் இதுவரை தடை தாமதம் ஏற்பட்டிருந்த பொருளாதார பிரச்சினைகள் விலகக்கூடிய காலகட்டமாகும். உங்கள் ராசியில் கேது 5 ஆம் இடத்தில் இருப்பதால் இதுவரை திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு 2024 மே 01 க்குள் குழந்தை பாக்கியம் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. இது தவிர வெளியூர், வெளிமாநிலம் சென்று பணிபுரிய நினைத்தவர்களுக்கு பி.ஆர், விசா கிடைக்கக்கூடிய காலகட்டமாகும். அரசியலில் தொடர்புடையவருக்கு நிச்சயம் வெற்றி காண்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தசா புத்தி சரியில்லாதவர்கள் அருகிலுள்ள விநாயகர் ஆலயத்திற்கு காலையில் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும். வாய்ப்பிருந்தால் கீழப்பெரும்பள்ளத்திலுள்ள தாயாருக்கும் ஈஸ்வரனுக்கும் ஒரு அர்ச்சனையும், தனித்திருக்கிற கேது பகவானுக்கு அபிஷேகமும் செய்தால் வருகின்ற ஒன்றரை ஆண்டும் உங்களுக்கு சாதகமாக அமையும்.


பொருளாதார பிரச்சினைகள் தீரும் ரிஷப ராசி

மிதுனம்

அன்பான மிதுன ராசி அன்பர்களே! இதுவரை உங்களுக்கு ராசியில் 11 ஆம் இடத்தில் இருந்த ராகு பகவான் 10 ஆம் இடத்திற்கும், 5 ஆம் இடத்திலிருந்த கேது பகவான் 4 ஆம் இடத்திற்கும் வந்திருக்கிறார். கேது 4 ஆம் இடத்தில் இருப்பதற்கு மாத்ரு ஸ்தானம் என்று பெயர். இந்த ராகு கேது பெயர்ச்சியில் உங்கள் தாய்க்கு உடல்நல பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது. அதனால் அவரது உடல் நலனில் அக்கறை கொண்டு, ஒரு சிறிய உபாதை ஏற்பட்டாலும் உடனே குடும்ப மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த முறை ஜீவ ஸ்தானத்தில் உங்களுக்கு ராகு வருகிறார். இதுவரை உங்கள் உத்தியோகத்தில் தடுமாற்றமான நிலை இருந்திருந்தால் வரும் 08ஆம் தேதிக்குள் அந்த தடை எல்லாம் நீங்கி நிச்சயம் வேலை நிரந்தரமாகும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ராகுவினால் ஏற்பட்ட மன அழுத்தம், வேலையின்மை போன்ற பிரச்சனைகள் எல்லாம் நீங்கி இந்த ராகு - கேது பெயர்ச்சி நிச்சயம் வெற்றி கிடைக்க கூடிய ஆண்டாக அமைந்திருக்கிறது. மிதுன ராசிக்காரர்களே நீங்கள் அருகிலிருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6 - 7 மணிக்கு சென்று விநாயகருக்கு வெற்றிலை மாலை அல்லது தேங்காய் மாலை போட்டு 11 வாரம் அர்ச்சனை செய்து வந்தால் வரவிருக்கும் பிரச்சினையும் வந்த பிரச்சினையும் நீங்கும்.


மிதுன ராசி அன்பர்கள் உடல்நலனில் அக்கறை கொள்ள வேண்டும்

கடகம்

கடக ராசி அன்பர்களே! இதுவரை உங்களுக்கு ராகு பகவான் 10 ஆம் இடத்திலும், கேது பகவான் 4 ஆம் இடத்திலும் மாத்ரு ஸ்தானத்தில் இருந்தார். இப்போது உங்கள் ராசியில் ராகு பகவான் 9 ஆம் இடத்தில் இருப்பதால் JEE, IIT, NEET எழுதுகின்ற மாணவர்களுக்கு இது பொன்னான காலமாகும். இது தவிர கேது 3 ஆம் இடத்தில் வருவதால் யாருக்கும் வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். நீங்கள் கூறும் அனைத்தும் மற்றவர்களால் தவறுதலாக புரிந்து கொள்ளப்படும். அதனால் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 வரையிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு இந்த ராகு - கேது பெயர்ச்சி பொன்னான காலமாக அமைந்திருக்கிறது. நீங்கள் எதிர்பார்க்கும் பதவிகள் நிச்சயம் கிடைக்கும். இந்த ராகு - கேது பெயர்ச்சியில் ராகுவை போன்று கொடுப்பவனும் இல்லை, கேதுவைப் போன்று கெடுப்பவனும் இல்லை என்பார்கள். இப்போது கேது 3 ல் இருக்கிறார், ராகு 9 ல் இருக்கிறார். அதனால் இந்த பெயர்ச்சி வெற்றியை குறிக்கும் காலமாக இருக்கிறது. நடப்பு தசா புத்திகள் சரியில்லை என்றால் அருகில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று குறைந்தது 7 பிரதோஷங்களுக்கு நந்தி தேவருக்கும், ஈஸ்வரனுக்கும் பால், பன்னீர், இளநீர் அபிஷேகம் செய்து அந்த அபிஷேக திரவியங்களை வாங்கி குடித்து வந்தால் வருகின்ற பிரச்சினை நீங்கும்.


தேர்வு எழுதுகின்ற மாணவர்களுக்கு பொன்னான காலம்

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! கோப குணம் கொண்ட உங்களுக்கு இந்த ராகு - கேது பெயர்ச்சி சற்று தடுமாற்றமான காலங்களே ஆகும். ஏனென்றால் இதுவரை உங்கள் ராசியில் 3 ஆம் இடத்திலிருந்த கேது, 2 ஆம் இடத்திற்கு வருகிறார். இதுவரை திருமண தடை இருந்தவர்களுக்கு, தடை நீங்கும். அதேபோன்று வாதமும், விவாதமும் செய்யாமல், வாக்குறுதிகளை தராமல் இருப்பது நல்லது. ராகு பகவான் 9 ஆம் இடத்தில் இருந்து 8 ஆம் இடத்திற்கு வருவதால் இரண்டாம் தொழில் செய்பவர்களுக்கு மறைமுக வருமானம் வரும். ஆனாலும் இந்த காலகட்டங்களில் நிதானமாக செயல்படுவது நல்லது. உங்கள் ராசியில் 8 ஆம் இடத்திற்கு ராகு மாறுவதால், இந்த ஒன்றரை ஆண்டும் உடல் நலம் சார்த்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தசா புத்தி சரியில்லாதவர்கள் தஞ்சாவூர் மாயவரம் அருகிலுள்ள கீழப்பெரும்பள்ளம் கோயிலுக்குச் சென்று ஒரு முறை கேது பகவான், ஈஸ்வரன் மற்றும் தாயாருக்கும் அபிஷேகம் செய்தால் வருகின்ற பிரச்சினை நீங்கும். இக்கோவிலுக்கு செல்ல இயலவில்லை என்றால் உங்களுக்கு அருகிலிருக்கும் ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று பிரதோஷ வழிபாடு செய்யலாம்.


சிம்மம் - மறைமுக வருமானம் வரும்

கன்னி

கன்னி ராசி அன்பர்களே! உங்களுக்கு இதுவரை 2 ஆம் இடத்திலிருந்த கேது பகவானும், 8 ஆம் இடத்திலிருந்த ராகு பகவானும் ஜென்மத்தில் வருகின்றனர். இதனால் நிச்சயம் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. உடல்நல தொந்தரவுகள் வரக்கூடும். கடந்த கால கட்டத்தில் 2019 ஆம் ஆண்டில் கேதுவும் சனியும் தனுசு ராசியில் இணைந்த காலகட்டத்தில் நுண்ணிய கிரிமியான கொரோனா வைரஸ் பரவியது. அதே போல் இந்த காலகட்டத்திலும் கன்னி ராசிக்காரர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகப்படியான சிறுநீர் தொற்று பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு ஏழாம் இடமான மீனத்தில் ராகு பகவான் இருப்பதால் திருமணமான தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஏமாற்றப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதால், தனியாக தொழில் செய்வது நல்லது. இப்படி பல பிரச்சனைகளிலிருந்து நீங்க 7 சங்கட சதுர்த்திக்கு விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகருக்கு பால், பன்னீர், இளநீர் போன்ற அபிஷேக திரவியங்களை வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்து, அவற்றை குடித்து வந்தால் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். பிரச்சனைகள் எப்போது எப்படி வரும் என்பது என்று தெரியாததால் கன்னி ராசிக்காரர்கள் அனைவரும் கவனமாகவும் மிக மிக எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.


கன்னி - மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

துலாம்

துலாம் ராசி அன்பர்களே! கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீங்கள் பட்ட துன்பத்திற்கெல்லாம் விடிவு கிடைக்கக்கூடிய காலமாக இந்த ராகு - கேது பெயர்ச்சி அமையப்போகிறது . வரும் அக்.08 ஆம் தேதியிலிருந்து அடுத்த ஒன்றரை வருடத்திற்கு வெறும் ஏற்றம் மட்டுமே காணப்போகிறீர்கள். உங்கள் ராசிக்கான ராகு 6 ஆம் இடத்திலும், கேது 12 ஆம் இடத்திலும் வருகின்றனர். இது நிச்சயம் ஒரு சிறப்பான காலகட்டமாகும். வெளியூர், வெளிமாநிலம், வெளிநாட்டுக்கு செல்ல நினைத்த துலா ராசி அன்பர்களுக்கு நிச்சயம் பி.ஆர் மற்றும் விசா கிடைக்கும். அதேபோல் சினிமா துறையிலும், சின்னத் திரையிலும் வாய்ப்புகள் தேடி அலைந்தவர்களுக்கு நிச்சயம் வாய்ப்புகள் கிடைக்கும். இந்த ராகு - கேது பெயர்ச்சியால் பணி நிரந்தரமும், செல்வமும், பெரும் புகழும் கூடும். கேது 12 லும், ராகு 6 லும் இருப்பதால் சில துலாம் ராசிக்காரர்களுக்கு நடப்பு தசா புத்தி நன்றாக இல்லை என்றால் அருகில் இருக்கும் விஷ்ணு துர்க்கைக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் குறைந்தது 11 செவ்வாய்க்கிழமையும் எலுமிச்சை விளக்கேற்றி 9 முறை பிரதக்ஷணம் செய்தால் வருகின்ற பிரச்சினைகளும் வந்த பிரச்சினைகளும் எளிதில் நீங்கும். முடிந்தால் ஒரு முறை திருநாகேஸ்வரம் சென்று வழிபட்டு வந்தால் சிறப்பாக இருக்கும்.


துலாம் - ராகு - கேது பெயர்ச்சியால் பணி நிரந்தரமும், செல்வமும், புகழும் கூடும்

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு கேது பகவான் 12 ஆம் இடத்தில் இருந்தார். இப்போது 11 ஆம் இடத்திற்கு வருகிறார். அதேபோல் ராகு பகவான் இதுவரை உங்கள் ராசியில் 6 ஆம் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்திற்கு வருகிறார். 5 ஆம் இடம் என்பது பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமாகும். இதுவரை விருச்சிக ராசி அன்பர்களுக்கு தங்கள் குலதெய்வத்தை வழிபட முடியாமல் தடங்கல் ஏற்பட்டிருக்கும். ஆனால் இந்த காலகட்டத்தில் அந்த தடைகள் எல்லாம் நீங்கி குலதெய்வத்தை சிறப்பாக வழிபடக்கூடிய காலகட்டமாக அமைந்திருக்கிறது. அதே போல் தாய் தந்தை வழியில் வரவேண்டிய சொத்து பிரச்சினைகள் நீங்கும். ராகு பகவான் குடியிருக்கிற வீடு குருவின் வீடு. அதனால் இந்த ராகு கோதண்ட ராகுவாக இருக்கிறார். ஜோதிடத்தில் கேது பகவான் 11 ஆம் இடத்தில் இருப்பது லாபஸ்தானத்தை குறிக்கிறது. இங்கு லாபம் என்பது இறை தொடர்புடைய மத குருமார்கள், ஜோதிட வல்லுநர்கள், பட்டய கணக்காளர்களுக்கு ஏற்றம் இருக்கக்கூடிய காலகட்டமாகும். இது தவிர கேது 11 ஆம் இடத்தில் இருப்பதால் லாபத்தை அள்ளித் தரக்கூடியதாக அமைந்திருக்கிறது. இன்னும் சிறப்பு என்னவென்றால் உங்கள் ராசியில் 6 ஆம் இடத்திலிருந்த குரு பகவானானவர் 7 ஆம் இடத்திற்கு வந்து உங்கள் ராசியை பார்ப்பதால் திருமண தடைகள் நீங்கும். ஆனால் இந்த விருச்சிக ராசி நேயர்களுக்கு அஷ்டம சனி நடப்பதால் இந்த நடப்பு தசா புத்தி நன்றாக இல்லை என்றால் வீட்டிற்கு அருகில் உள்ள விநாயகரை வழிபடுவது சிறந்தது.


விருச்சிகம் - விநாயகரை வழிபடுவது சிறந்தது

தனுசு

மரியாதையை விரும்பக்கூடிய தனுசு ராசி அன்பர்களே! இந்த ராகு - கேது பயிற்சி உங்களுக்கு சற்று சுமாராக தான் இருக்கும். ஏனென்றால் இதுவரை 5 ஆம் இடத்திலிருந்த ராகு பகவான் 4 ஆம் இடத்திலும், 11 ஆம் இடத்திலிருந்த கேது பகவான் 10 ஆம் இடத்திற்கும் வருகின்றனர். ராகு 4 ஆம் இடத்தில் இருப்பது களத்திர ஸ்தானமாகும். அதனால் ராகுவால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உங்களுடைய தாயார் உடல் நலத்தில் அதீத கவனம் செலுத்த வேண்டும். இந்த காலகட்டத்தில் இதய தொடர்புடைய உபாதைகள் வர வாய்ப்புகள் உண்டு. அதனால் உடனடியாக உங்கள் குடும்ப மருத்துவரை அணுகுவதே சிறந்தது. அதேபோல் ஜீவன ஸ்தானத்தில் கேது 10 ஆம் இடத்தில் இருப்பதால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கேது பகவான் என்பவர் ஞானகாரகன். ஞானகாரகன் பிரச்சினை கொடுத்துவிட்டு தான் தீர்வை சொல்லுவார். அதனால் இந்த காலகட்டங்களில் யாருடனும் வாதம், விதண்டாவாதம் செய்வதை தவிர்ப்பது மிக சிறந்தது. யாருக்கும் வாக்கு கொடுக்காமல் இருப்பதும் நல்லது. இது தவிர இந்த காலகட்டங்களில் வக்கிரமான சனி பகவான் 2 ஆம் இடத்தில் 20.12.2023 அன்று மாறுவதால் நீங்கள் சொல்வது அனைவராலும் தவறுதலாக புரிந்து கொள்ளப்படும். அதனால் தனுசு ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருப்பது மிக அவசியம்.


தனுசு - யாருடனும் விதண்டாவாதம் செய்வதை தவிர்ப்பது சிறந்தது

மகரம்

மகர ராசி அன்பர்களே! நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் தாமதமாக எடுப்பீர்கள். அது சில சமயம் உங்களுக்கு சாதகமாகவும், சில சமயம் பாதகமாகவும் அமையும். இந்த ராகு - கேது பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மறைவு ஸ்தானமான 3 ஆம் இடத்தில் ராகுவும், உயர்கல்வி மற்றும் தகப்பன் ஸ்தானமான 9 ஆம் இடத்தில் கேதுவும் வருகின்றனர். கேது தகப்பன் ஸ்தானமான 9 ஆம் இடத்தில் இருப்பதால் உங்கள் தகப்பனாருக்கு இந்த ஒன்றரை ஆண்டில் உடல்நல பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதனால் தந்தையை நன்றாக கவனித்து கொள்ளவும். இந்த காலகட்டங்களில் இருதய தொடர்புடைய உபாதைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது தவிர IIT, JEE, NEET எழுதக்கூடிய மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடிய காலகட்டமாகும். 3 ஆம் இடத்தில் ராகு இருப்பதனால் கொஞ்சம் நாவடக்கம் தேவை. உங்களுக்கு அதீத தன்னம்பிக்கை தரக்கூடியவர் ராகு. அதே அதீத தன்னம்பிக்கையால் இந்த காலகட்டத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே மகர ராசிக்காரர்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நடக்கின்ற தசா புத்தி நன்றாக இல்லை என்றால் வெள்ளிக்கிழமை தோறும் ராகு கால நேரமான 10.30 - 12 மணிக்குள் நீங்கள் இருக்கின்ற இடத்திற்கு அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யலாம்.


மகரம் - பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு

கும்பம்

அன்பான கும்ப ராசி நேயர்களே! உங்கள் மனதில் என்ன இருக்கிறதென்று உங்களுக்கும் உங்களைப் படைத்த இறைவனுக்கும் மட்டுமே மட்டுமே தெரியும். அவ்வாறு குணம் கொண்ட கும்ப ராசி அன்பர்களுக்கு ராகு 3 ஆம் இடத்தில் இருந்து 2 ஆம் இடத்திற்கும், கேது பகவானானவர் 9 ஆம் இடத்தில் இருந்து 8 ஆம் இடத்துக்கும் வந்திருக்கிறார். இந்த ராகு - கேது பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கும். ராகு வந்திருப்பது குருவுடைய வீடு என்பதால் இந்த ராகு கோதண்ட ராகுவாக ஆகிறார். இதுவரை திருமண தடை ஏற்பட்டவர்களுக்கு குரு மாறுகின்ற காலமான 01.05.2024 முதல் திருமண தடை நீங்கி திருமணம் கைகூடும். இதை தவிர திருமணமாகி நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு இந்த காலகட்டத்தில் கரு உண்டாகும். அதே போன்று 8 ஆம் இடத்தில் ஞானகாரகன் கேது இருப்பதால் வெளியூர், வெளிமாநிலம், வெளிநாட்டில் இருக்கும் அன்பர்களால் நிதி பரிபாலனம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இதை தவிர திடீர் பணவரவுகள், திடீர் லாட்டரி மற்றும் உத்தியோகத்தில் இருந்த தடை மற்றும் தாமதங்கள் அனைத்தும் விலகக் கூடிய கால கட்டமாக இருக்கிறது. கும்ப ராசி நேயர்களுக்கு நடக்கின்ற தசாபுத்தியில் பிரச்சினை இருந்தால் ஒவ்வொரு நாளும் ராகு கால நேரமான அதுவும் குறிப்பாக சனிக்கிழமை ராகு கால நேரமான 9 டு 10.30 மணியளவில் உங்கள் இடத்திற்கு அருகிலுள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று ஈஸ்வரனுக்கு அர்ச்சனை செய்து கொண்டு வந்தால் வருகின்ற பிரச்சினையும், வர இருக்கின்ற பிரச்சினையும் மறையும்.


கும்பம் - திடீர் அதிர்ஷ்டம்

மீனம்

கடைசி ராசியான மீன ராசி அன்பர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ராகு பகவானானவர் 2 ஆம் இடத்திலும், கேது பகவானானவர் 8 ஆம் இடத்திலும் இருந்து அள்ளி கொடுத்திருந்தார். இந்த ராகு - கேது பெயர்ச்சியால் ராகுவானவர் உங்கள் ராசிக்கு வருகிறார். கேது பகவானானவர் 8 ஆம் இடத்திற்கு வருகிறார். இதுவரை திருமண தடை ஏற்பட்டவர்களுக்கு, திருமணத்தடை விலகியும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு வம்ச விருத்தியும் இக்காலகட்டத்தில் நடக்கும். அதேபோன்று 01.05.2024 அன்று 2 ஆம் இடத்திலிருந்த குரு பகவானானவர் 3 ஆம் இடத்திற்கு வருகிறார். அப்படி வரும்போது அவர் உங்களுடைய 7 ஆம் வீட்டை 5 ஆம் பார்வையாக பார்க்கிறார். குரு பகவான் வீட்டில் ராகு இருப்பதால் இவர் கோதண்ட ராகு ஆகிறார். இப்போது குருவின் மூலம் அபரிமிதமான பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. இந்த காலகட்டத்தில் அரசியல் மற்றும் அரசியல் தொடர்புடையவர்களுக்கு இது ஏற்றமான காலகட்டமாகும். இதுவரை அரசியலில் பதவி கிடைக்காதவர்களுக்கு நிச்சயம் பதவி கிடைக்கும் அதேபோன்று கூட்டுத் தொழில் செய்யக்கூடிய அன்பர்களுக்கு 01.05.2024 க்கு பிறகு குரு பகவானானவர் உங்களுடைய 7 ஆம் இடமான கேதுவின் வீடான கன்னியை பார்க்கிறார். கன்னியை பார்க்கும்போது உங்களுடைய கூட்டுத் தொழில் ஏற்றமாக இருக்கும். ஆனால் 01.05.2024 வரை எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மீன ராசி அன்பர்களுக்கு நட க்கின்ற தசா புத்தி சரியில்லை என்றால் ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீ காளஹஸ்திக்கு சென்று ஒரு முறை உங்கள் ஜென்ம நட்சத்திரம் இல்லாத நாளன்று அங்குள்ள பாதாள பிள்ளையார் மற்றும் தாயார் ஞானபிரசன்னாம்பிகையை வணங்கி அர்ச்சனை செய்து வந்தால் இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக அமையும்.


மீனம் - நிச்சயம் பதவி கிடைக்கும்

Updated On 16 Oct 2023 7:32 PM GMT
ராணி

ராணி

Next Story