2025 ஜூலை 15-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் ராசிநாதன் குரு பார்ப்பதால் இயல்பாகவே தெய்வ அனுகூலம் உண்டு. சோம்பேறித்தனத்தைத் தவிர்த்து, சுறுசுறுப்பாகவும், ஆக்டிவாகவும் இருங்கள். எந்த வேலையையும் தள்ளிப்போடாதீர்கள். உங்கள் முயற்சி ஸ்தானத்தில் ராகு குருவுடன் இருப்பதால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் வேகமாகச் செயல்படுங்கள். உங்கள் லட்சியத்தை எப்படி அடைவது என்று இந்த வாரம் திட்டமிடுங்கள். அப்படிச் செய்தால் மட்டுமே பெரிய அளவில் வெற்றிபெற முடியும். உயர் கல்வியில் சிறிய தடை ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே கல்வியில் கவனம் செலுத்துங்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வேலையைப் பொறுத்தவரை, உங்கள் சேவை ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதுடன், சனி பார்ப்பதால் ஏதாவது ஒரு வேலை நிச்சயம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கும், நேர்காணலில் பங்கேற்றவர்களுக்கும் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பதவி உயர்வுக்கும் வாய்ப்புகள் உண்டு. பணப் பலன்கள் சுமாராக இருக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் எவ்வளவு முயற்சி எடுக்கிறீர்களோ அவ்வளவு நல்லது. வியாபாரம் பெரிய அளவில் லாபகரமானதாக இருக்காது, லாபம் அடுத்தவர்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் இந்த வாரம் பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். லாபம் கிடைப்பது போலத் தோன்றினாலும், கைக்கு வருவது குறைவு. பெருமாள் ஸ்தலங்களையும், சிவன் கோயில்களையும் வழிபடுங்கள்.
