இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமான சித்த வைத்தியம் மீண்டும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அவசர கதியான இன்றைய உலகில், தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், ஆரோக்கியத்தில் மனிதம் கோட்டைவிட்டு வரும்நிலையில், சித்தர்கள் அருளியுள்ள வாழ்க்கை முறை என்பது மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்றும், சித்த ஜோதிடத்தின் மகிகை குறித்தும் ராணி ஆன்லைனுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார், சித்த வைத்திய ஜோதிடர் ராஜசூரியன். அதனை பார்க்கலாம்...


சித்த வைத்தியர்களுக்கு ஜோதிடமும் தெரிந்திருக்க வேண்டும் - ராஜசூரியன்

சித்த வைத்திய ஜோதிடர் என்று கூறிக்கொள்ளும் தங்களுக்கும், தற்போதுள்ள சித்த வைத்தியர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

சங்க காலம் தொட்டு சித்த வைத்தியனுக்கு ஜோதிடம் தெரியும். ஜோதிடம் என்பது பெரிய விஷயமல்ல. நவகோள்களின் சாரம்தான் ஜோதிடம். இன்றைய நட்சத்திரம் என்ன? திதி, நேரம் உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவ்வளவுதான். ஆனால் இன்று மக்கள் என்ன நினைத்துக்கொள்கிறார்கள் என்றால், ஜோசியன் என்றாலே பரிகாரம் சொல்பவன், பணம் பிடுங்குபவன், அந்தக் கோயிலுக்கு போ... இந்த கோயிலுக்கு போ... என்று சொல்கிறவன் என நம் ஆட்கள் நிப்பாட்டிவிட்டார்கள். இது வெட்கக்கேடானது. ஆனால் இதுமட்டுமே ஜோதிடம் அல்ல. சோதிக்க சோதிக்க திடம்தான் ஜோதிடம். எல்லாமே ஆய்வுதான். நாளும் கோளும் அறிந்து, நோய் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை முறைகளை சொல்வதே என் பணி. நோய் வந்துவிட்டால் எளிய வைத்தியங்கள் மூலம் அதனை குணப்படுத்தவும் வழி சொல்வேன். வாசி, நாடி பிடித்து உடலின் தன்மை குறித்து சித்த வைத்தியர்கள் சொல்லிவிட வேண்டும். எனக்கு சித்த வைத்தியமும் தெரியும், சித்த ஜோதிடமும் தெரியும். ஆனால் இன்றைய காலகட்டத்தில், சித்த வைத்தியர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் பெரும்பான்மையானவர்களுக்கு சித்த ஜோதிடம் தெரிவதில்லை. சித்த ஜோதிடம் தெரியவில்லை என்றால், சித்த வைத்தியம் பார்க்க முடியாது என்பதே நிதர்சனம்.

உதாரணத்திற்கு, உங்கள் நாடியை நான் பிடித்துப் பார்க்கும்போது உங்களுக்கு வாத நாடி அதிகம் ஓடுகிறது என்றால், அது சனியின் தன்மை அதிகம் என்பதை குறிப்பதாக அர்த்தம். அதற்கேற்ப நான் உங்களுக்கு மருந்தை கொடுக்க வேண்டும். ஆனால், ஒருவேளை இன்று சனிக்கிழமையாக இருந்தால், நான் உங்களுக்கு மருந்தை கொடுக்கமாட்டேன். ஏனென்றால், சனியின் தன்மை வாதம். அன்றைய தினம் உங்களுக்கு நான் மருந்துகொடுத்தால் எந்த பலனும் ஏற்படாது. எனவேதான் சித்த வைத்தியனுக்கு ஜோதிடமும் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

சித்த ஜோதிடமும், சித்த மருத்துவமும் வேறு வேறு இல்லை. இரண்டும், ஒன்றுடன் ஒன்று இணைந்ததே. ஆனால் இன்று நிறையபேர், இரண்டையும் பிரித்து, தனித்தனியாக பிசினஸ் ஆக்கிவிட்டார்கள். என் கருத்தைக் கேட்டு நிறைய ஜோதிடர்களும், சித்த வைத்தியர் என்று தங்களை கூறிக்கொள்பவர்களும் என்னை திட்டவும் செய்யலாம். ஆனால், நான் உண்மையை சொல்கிறேன்.


நாடி பிடித்து பார்ப்பதென்றால், அதிகாலையில் வெறும் வயிற்றில் பார்க்க வேண்டும் - ராஜசூரியன்

ஒரு மனிதனுக்கு பிற்காலத்தில் வரப்போகும் நோயை முன்கூட்டியே உங்களால் சொல்ல முடியுமா?

சொல்ல முடியும், ஆயிரம் சதவீதம் சொல்ல முடியும். அனைத்தும் 12 கட்டத்திற்குள் அடக்கம். மேலும் நாடி பிடித்துப் பார்க்கிறோம்... நாடி பிடித்துப் பார்க்கும்போதே உங்கள் உடலின் தற்போதைய தன்மை தெரிந்துவிடும். அதனை குணப்படுத்த முடியுமா? முடியாதா என்றும் தெரிந்துவிடும். அதனை வைத்தே எதிர்கால நோய்களையும் கூறிவிடலாம்.

ஆனால் நாடி பிடித்துப் பார்ப்பது என்பது, அதிகாலையிலேயே பார்த்துவிட வேண்டும். காலையில் உடலில் ஓடுவது பித்த நாடி. பித்த நாடி முடிவடைவதற்குள் மொத்த நாடியையும் பார்த்துவிட வேண்டும். அப்போதுதான் உடலில் உள்ள பிரச்சனைகளை சரியாக சொல்ல முடியும். மேலும் நாடி பார்க்கும்போது நீங்கள் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் இருக்க வேண்டும். அத்துடன் தண்ணீரை தொட்டிருக்கக் கூடாது என்பது மிக மிக முக்கியம். ஒருவேளை நீங்கள் தெரியாமல் தண்ணீரை தொட்டுவிட்டால் கூட, நாடி மாறிவிடும். அவ்வாறு ஆகிவிட்டால் நாடியை பிடித்துப் பார்த்து எதுவும் சரியாக சொல்ல முடியாது. எனவேதான், நாடி பார்க்க வேண்டும் என்றால், காலையில் எழுந்தவுடனேயே சித்த வைத்தியரிடம் ஓடிவிட வேண்டும்.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால், சித்த வைத்தியம் பார்க்க காலையில்தான் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் இன்று பெரும்பாலான சித்த மருத்துவர்கள் மாலையில்தான் நோயாளிகளைப் பார்க்கிறார்கள். அதெப்படி?

அப்படிப்பட்டவர்களை நான் கடுமையாக கண்டிக்கிறேன். அது முறையான சித்த வைத்தியம் இல்லை. ஏதோ ஒரு அனுமானத்தில் மட்டும்தான் அவர்களால் வைத்தியம் சொல்ல முடியும். அனுமானம் என்பது ஏற்கனவே அறிந்த ஒரு தகவலை அடிப்படையாகக் கொண்டு, முழுமையற்ற தகவல்களிலிருந்து ஒரு புதிய முடிவை ஊகித்து சொல்வது. அவ்வாறு அனுமானத்தின்பேரில் வைத்தியம் பார்த்தால், நோயாளிக்கு நோய் எப்படி குணமாகும்? பிறகு எப்படி மக்கள் சித்த வைத்தியத்தை நம்புவார்கள்?


சில ராசியினர் திருப்பதி போகக்கூடாது; ஆனால் அனைவரும் ஸ்ரீரங்க பெருமாளை தரிசிக்கலாம் - ராஜசூரியன்

நான் ஜோதிட ஆராய்ச்சியாளராக இருப்பதால், வாதம், கபம், பித்தம் ஆகியவற்றை பார்த்து ஒரு முடிவுக்கு வருவேன். ஒருவரின் நாடியை பிடித்துப் பார்க்கும்போது, கபக்கூறு சரியாக ஓடவில்லை என்றால், உங்கள் தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதா என நான் கேட்பேன். உடனே நீங்கள் என்னை பயங்கர பெரிய ஆள் என்று நினைத்துக்கொள்வீர்கள். ஆனால் இது அனைத்தும் சித்தர்கள் சொல்லிக் கொடுத்ததுதான். ஒருவருக்கு கபம் பாதிக்கப்பட்டிருந்தால், கண்டிப்பாக அவரின் தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும். ஒன்றை வைத்துக்கொண்டே இருவருக்கு பலன் சொல்ல முடியும். மேலும் பெண்களின் வலது கையை பிடித்து அவரது தந்தைக்கும், இடது கையை பிடித்து அவரின் தாய்க்கும் பலன் சொல்ல முடியும். இவை அனைத்தும் சித்தர்கள் சொல்லியதுதான். சித்தர்கள் பல அரிய விஷயங்களை அள்ளித்தந்து சென்றுள்ளனர். அதனை நாம் சரியாக பருக மட்டுமே வேண்டும். அவ்வளவுதான். எனவேதான் சித்த வைத்தியன், ஜோதிடம் அறிந்திருக்க வேண்டும் என்று கூறுகிறேன். சித்தர்களின் முறையை நாம் முழுமையாக பின்பற்றினால், மனிதனை எந்த நோயில் இருந்தும் காப்பாற்ற முடியும்.

அந்த வகையில், நல்ல சித்த வைத்திய ஜோதிடர்கள் இன்றைய காலத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் மக்கள் அவர்களை தேடிச்சென்று சிகிச்சை பெறும்போது, அவர்களின் சொல்லை அப்படியே கேட்க வேண்டும். சிலரை, இரவு நேரத்தில் வெளியே செல்லக்கூடாது என்று சித்த வைத்தியர்கள் சொல்வார்கள். மேலும் சில மருந்துகளை குறிப்பிட்ட தினத்தில், குறிப்பிட்ட நேரத்தில்தான் சாப்பிட வேண்டும் என்றும் சொல்வார்கள். அவர்கள் சொல்லும் அனைத்திற்கும் நிச்சயம் எதோ ஒரு பின்னணி இருக்கும். அதனை நோயாளிகள், சிறிதும் மாற்றம் இன்றி அப்படியே பின்பற்ற வேண்டும். அப்போதுதான் 100 சதவீத பலன் கிடைக்கும். உடல்நிலையும் சரியாகும்.

உங்களிடம் சிகிச்சைக்கு வந்தால் மருத்துவமும் சொல்வீர்கள்.. பரிகாரமும் சொல்வீர்களா..?

பரிகாரத்தில் பல அற்புதங்கள் இருக்கின்றன. ஆனால் நிறையபேர் தெரியாமல் செய்து கொண்டிருக்கின்றனர். எல்லோரும், சாய்ந்த பக்கமே சாயும் செம்மறி ஆடு கூட்டம்போல் இருக்கின்றனர். ஒருவிஷயத்தை ஒருவர் செய்துவிட்டால், அதையே அனைவரும் செய்ய முயல்கின்றனர். உதாரணத்திற்கு, ஒருவர் திருப்பதி சென்று பலன் அடைந்தார் என்றால், அனைவரும் திருப்பதிக்கு படையெடுப்பார்கள். ஆனால் அனைவரும் திருப்பதிக்கு சென்றால் நல்ல பலன் கிடைக்காது. மேலும் சில ராசிக்காரர்களுக்கு திருப்பதி சென்றால் தீய பலன்கள் கூட ஏற்படலாம்.


8 வார வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கம் சென்றுவந்தால், திருமணம் நடந்தேறிவிடும்

அப்படியா? யாரெல்லாம் திருப்பதிக்கு போகக் கூடாது?

எந்த ராசியினருக்கு எல்லாம் சந்திர திசை நடக்கிறதோ, அவர்கள் அனைவரும் தாராளமாக திருப்பதிக்கு சென்றுவரலாம். சந்திர திசை நடக்காத சில ராசியினர் திருப்பதிக்கு போகக் கூடாது. துலாம், விருச்சிகம் உள்ளிட்ட சில ராசியினர், குறிப்பிட்ட சில காலங்களில் திருப்பதிக்கு செல்லவே கூடாது. ஆனால் அவர்கள் ஸ்ரீரங்க பெருமாளை தரிசிக்கலாம். மேலும் ஒரு முக்கிய விஷயத்தை இங்கு நான் பதிவு செய்கிறேன். திருமணம் ஆகவேண்டி காத்திருப்பவர்கள், தொடர்ந்து 8 வாரம் வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் சென்றுவர வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரமாவது கோயிலில் இருக்க வேண்டும். இதனை செய்தால், கண்டிப்பாக திருமணம் நடந்துவிடும். 8-வது வாரத்திற்குள் நிச்சயதார்த்தமாவது நடந்து முடிந்துவிடும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, திருமணம் நடக்கும்.

ஸ்ரீரங்கத்தை பூலோக சொர்க்கம் என்று முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். ஏனென்றால், ஆண் பெண் இணைவை அந்த இடம் உருவாக்கும். அதனால்தான் அது பூலோக சொர்க்கம். அங்கு சென்றால் காதல் வெற்றிபெறும். இவையெல்லாம் உண்மை.

Updated On 9 Sept 2025 10:34 AM IST
ராணி

ராணி

Next Story