இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இன்றைய காலக்கட்டத்தில் சித்த வைத்தியம் குறித்து மக்களிடம் ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில், சித்த வைத்தியத்துடன் சேர்த்து சித்த ஜோதிடமும் பார்க்கும் திரு. ராஜசூரியன், ராணி ஆன்லைன் நேயர்களுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். சித்த வைத்தியமும் ஜோதிடமும் வேறுவேறு அல்ல என்றும், இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ், தமிழர்கள், தமிழ்நாட்டின் பாரம்பரியம், அக்காலத்து புலவர்கள் உள்ளிட்டோர் குறித்தும் அவர் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அதனை காண்போம்.


உறங்கி எழுவதும், கோயிலுக்கு சென்றுவருவதும் ஒன்றுதான்! - ராஜசூர்யன்

ஐயா, மக்களின் நல்வாழ்வுக்கு ஜோதிடம் அவசியம் என்று உங்களைப்போன்றோர் பேசுகின்றீர்கள். ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும், ஜோதிடம் பார்க்காதவர்களும் நன்றாகத்தானே இருக்கிறார்கள்?

சாமி கும்பிடுகிறவர்கள் நன்றாக இருப்பார்கள், சாமி கும்பிடாதவர்கள் நன்றாக இருக்கமாட்டார்கள் என்று எங்குமே கற்பிக்கப்படவில்லை. நாங்கள் யாரும் சொல்லவும் இல்லை. இது மக்களாகவே நினைத்துக்கொண்டது. சொல்லப்போனால், இறை சக்தி எங்கும் இறைந்துகிடக்கிறது. "பரவலாக நிறைந்திருப்பது இறைவனின் சக்தி" அல்லது "இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான்".

வான்காந்த ஆற்றல் என்று ஒன்று இருக்கிறது. பஞ்ச பூதங்களை வைத்துதான் உலகம். அதன் அடிப்படையில் பார்க்கும்போது, எல்லாமுமாக இருப்பது இறை. நீராக, காற்றாக, வெளியாக, ஒளியாக என அனைத்துமாக நிறைந்திருப்பது இறை. இந்த இறையின் நிறைதான் நம் மூச்சுக்காற்று. இந்த கருத்துகளை ஆழமாக உள்வாங்கினால், நாமே இறைவனாகிவிடுவோம். தெளிவாக சொல்லவேண்டும் என்றால், சிவனின் ஒருதுளிதான் நம் உயிர். உயிர்ப்புத்தன்மை உடலில் இருக்கும்வரை செயல்களை செய்து கொண்டிருப்போம். உயிர்தன்மை இல்லாதபோது செயலாக்கம் நின்றுவிடும். சிவன் போனப்பிறகு சக்திக்கு வேலையில்லை. அதேநேரம், சிவமே உள்ளே இருந்தாலும், சக்தி இல்லை என்றால் செயல்பட முடியாது. இதுதான் உடல் தத்துவம் மற்றும் உலகத்தத்துவம்.

அதனால்தான் சித்தர்கள் சில கோயில்களை அமைத்தார்கள். கோயில்கள் எல்லாமே, வான்காந்த ஆற்றலை நம்முள் தரும் குவியம். இது சித்தர்களுடைய விஞ்ஞான அறிவு. மெய்ஞானத்தில் இருந்துகொண்டு ஒரு விஞ்ஞான ஆற்றலை உருவாக்கியவர்கள் சித்தர்கள். அதனால்தான் நியைபேர் சொல்வார்கள், கோயிலுக்கு சென்றால் எனக்கு நிம்மதியாக இருக்கிறது என்று. காரணம் அங்கு வான்காந்த ஆற்றல் இருக்கிறது. ஆனால், கோயிலுக்கு செல்வதும் ஒன்றுதான். தூங்குவதும் ஒன்றுதான். தூங்கி எழுந்தால் ஒரு அமைதி கிடைக்கிறது அல்லவா? அது எங்கிருந்து வருகிறது? தூங்கி எழும்போது உங்களுக்குள் வான்காந்த அற்றல் சென்றுவிடுகிறது. தியானம் என்பதும் அதேதான். அதாவது உறங்கும்போது, பல நினைவுகளை உங்களுக்குள் சுமக்காமல் கடந்துவிடுகிறீர்கள். இதுதான் சித்தர்கள் எப்போதும் ஆனந்த நிலையில் இருந்ததற்கு காரணம். சித்தர்கள் கவலைக்குள்ளாகவோ, வேறு சிந்தனைக்குள்ளாகவோ போகவே மாட்டார்கள். அவர்கள் 24 மணி நேரமும் ஒரே சிந்தனையில், இறை சிந்தனையில் இருந்தனர். கண்ணியத்துவமாக இருக்கும்போது புண்ணியத்தை அடையலாம் என்பதுதான் சித்தர்களின் தத்துவம்.

எனவே மக்கள் தங்களுக்குள் வான்காந்த ஆற்றலை செலுத்திக்கொள்ள, தியானம் செய்யலாம், உறங்கலாம் அல்லது கோயிலுக்கு செல்லலாம்.


வள்ளுவனின் திருக்குறளுக்காக வாதாடிய ஒளவை மூதாட்டி!

அப்படியென்றால்... தியானம், உறக்கம், கோயில் ஆகிய 3-ம் ஒன்று தானா?

ஆம். 3-ம் ஒன்றுதான். இது அறிவியல்பூர்வமான விஷயம். கூடுதலாக ஒரு செய்தி சொல்கிறேன். தமிழ் மூதாட்டி ஒளவையை பற்றி. திருக்குறளை வேண்டாம் என்று சொன்ன பாண்டியன் அவையில், அதனை வாதாடிப்பெற்ற பெண்மகள் அவள். இது என்ன, ஒன்றே முக்கால் அடியில் இருக்கு... இதெல்லாம் வேண்டாம் என்று குறளை தூக்கிப்போட்டுவிட்டார்கள். ஆனால் திருக்குறளுக்காக ஒளவைதான் போராடினாள். மன்னா, இது சாதாரண விஷயம் அல்ல. "அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்" என்று மன்னனுக்கு எடுத்துரைத்தாள். ஒளவை மூதாட்டியின் மீது இருந்த மதிப்பின் காரணமாக மன்னர் அதனை ஏற்றுக்கொண்டார். பிறகு அதனை படித்துப்பார்த்த மன்னன், ஆஹா! ஒன்றே முக்கால் அடியில் உலகின் அத்தனையுமே சொல்லிவிட்டாரே வள்ளுவர் என்று திருக்குறளை ஏற்றுக்கொண்டார். ஒளவையினால்தான் நமக்கு திருக்குறள் கிடைத்தது. அப்படிப்பட்ட ஒளவை என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்று. எனவே கோயிலுக்கு சென்றுவருவது நலமே. ஆலயத்திற்கு சென்றுவந்தால், அந்த வான்காந்த ஆற்றல் நமக்குள் பரவி புத்துணர்ச்சியை உருவாக்கி அடுத்து நம் செயல்களுக்கு உற்சாகம் தரும். ஆலயத்திற்கு செல்ல முடியாதவர்கள், தியானத்திலும், உறக்க நிலையிலும் வான்காந்த ஆற்றலை பெற்றுக்கொள்ளலாம்.

ஜோதிடம், ஜாதகம் என்று அது பின்னால் போனாலே பரிகாரம், பலன் என்று பல்வேறு கோயில்களுக்கு ஜோதிடர்கள் போகச்சொல்கிறார்களே ஏன்?

பொதுவாக கோயிலுக்கு போகச் சொல்வதன் காரணமே, அங்கு போகும்போது தேங்காய் உடைப்போம், பழம் படைப்போம் மற்றும் ஏதாவது பிரசாதம் தருவோம். நம் மூலம் பிறருக்கு ஏதோ உணவு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது அல்லவா? தமிழரின் எல்லா விழாக்களையும் பாருங்கள். உணவு முக்கிய இடம் வகிக்கும். ஏனென்றால் உயிர் ஆற்றலை பெருக்கக்கூடியது சாப்பாடுதான். உயிர்வாழ்வதற்கான அடிப்படை தேவைகளில் உணவும் ஒன்று. எனவேதான் கோயில்களில் பிரசாதம் வழங்கப்படுகிறது. மேலும் சில பரிகாரங்களுக்கு, அன்னதானமும் செய்யச் சொல்லப்படுகிறது. அது நல்ல நோக்கம்தான். சில ஜோதிடர்கள் அதனை வியாபார நோக்கத்துடன் அணுகுவது தவறு.


கோயிலுக்கு சென்றால், தேங்காய், பழம், பிரசாதம் உள்ளிட்டவை மூலம் ஏதாவது ஒரு உணவு கிடைக்க வாய்ப்புள்ளது!

அடுத்து பரிகாரம் பற்றி சொல்கிறேன். வாழ்க்கையின் தாத்பரியமே பரிகாரம் செய்வதுதான். காலையில் நாம் எழுந்திருக்கும்போது முகத்தில் எண்ணைவடிந்ததுபோல் அழுக்காக இருக்கும். அந்த அழுக்குகளை அகற்ற பரிகாரமாக தண்ணீரில் முகம் கழுவுவோம். அதற்கு அடுத்து பசி எடுக்கிறது. பசியை போக்க பரிகாரமாக உணவு சாப்பிடுகிறோம். உறக்கமும்கூட பரிகாரம்தான். உடல்சோர்வாக இருக்கும்போது அதனை போக்க, பரிகாரமாக தூங்கி எழுகிறோம். மொத்தத்தில் பரிகாரம் என்பது ஒருவகையாக இயற்கையாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது உடலுக்கான பரிகாரம்.

அடுத்தது உயிர் ஓட்டத்தை எடுத்துக்கொள்வோம். இதுபற்றி திருவள்ளுவர் ஊழ்வினை என்ற அதிகாரத்தில் 10 குறள்கள் எழுதியிருக்கிறார். ஊழ்வினை என்பது முன்ஜென்மத்தை பற்றியது. அவர் சொல்வதுபடி பார்த்தால் ஊழ்வினையால் மனிதன் பாதிக்கப்படுகிறான். அதைத்தான் நாங்கள் ஜோதிடத்திலும் கூறுகிறோம். முன்ஜென்மத்து பாதகங்களை களைய பரிகாரங்கள் சொல்கிறோம்.

மேலும் வள்ளுவர் கூற்றுப்படி, புலால் உண்ணக்கூடாது. தமிழன் என்றால் சைவமாக இருக்க வேண்டும் என்பது என் கருத்தும்கூட. உண்மையில் தமிழன்தான் சைவம். அதனால்தான் புலால் மறுத்தல் என்ற ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு நம் தமிழ் வேதங்கள் என்ன சொல்கிறது என்றால், பிற உயிர்களுக்கு தீங்கிழைக்காதே. பிற உயிர்களைக் கொன்று உண்பது என்பது கொல்லாமை என்னும் அறத்திற்கு எதிரான செயல். புலால் உண்பதை தமிழ் இலக்கியங்கள் பாவமாகவும், தீய செயலாகவும் கூறுகின்றன. மொத்தத்தில் இது மனித நேயம். வேறு ஒன்றும் இல்லை.

தொடரும்...

Updated On 26 Aug 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story