இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

விழாக்கள் என்றாலே ஆடைக்கும், அணிகலன்களுக்கும், தலை அலங்காரத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். முடி இருப்பவர்கள் பலவிதமான ஹேர் ஸ்டைலில் கலக்குவார்கள். ஆனால், முடி இல்லாதவர்களும், வெள்ளை முடி இருப்பவர்களும், வழுக்கை இருப்பவர்களும் நம்மால் எப்படி விதவிதமான ஹேர் ஸ்டைல் செய்ய முடியும் என்று கவலையில் இருப்பார்கள். அப்படி கவலை கொள்ளாமல் எளிமையான முறையில் கருகருப்பான முடியை எப்படி இயற்கையாக பெறலாம்? வெள்ளை முடியை எப்படி மறைக்கலாம்? மற்றும் சிம்பிளான ஹேர் டை, இந்த முடி பிரச்சினைக்கு எப்படி சிறந்த தீர்வு அளிக்கும்? என்பதை விளக்குகிறார் அழகு கலை நிபுணர் வசுந்தரா.

தேவையான பொருட்கள்:

மருதாணி பொடி - 200 கிராம்

நெல்லிக்காய் பொடி - 15 கிராம்

கறிவேப்பிலை பொடி - 15 கிராம்

வெந்தய பொடி - 15 கிராம்

புளித்த தயிர் - 15 எம்.எல்

எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு


மருதாணி, நெல்லிக்காய், வெந்தயப் பொடிகளை கலத்தல் - பொடியில் தயிர் சேர்த்து கலக்குதல்

செய்முறை:

முதற்கட்டமாக ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அவற்றுடன் நெல்லிக்காய் பொடி, கறிவேப்பிலை பொடி, வெந்தயப் பொடி ஆகிய மூன்று பொடிகளையும் ஒன்றாக சேர்த்து கிளற வேண்டும். கிளறிய அந்த பொடிகளோடு புளித்த தயிர் சேர்த்து மீண்டும் கிளற வேண்டும். அடுத்ததாக எலுமிச்சை சாறு, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும். இறுதி கட்டமாக தேவையான வெதுவெதுப்பான தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். பேஸ்ட் அல்லது டை பதத்திற்கு வந்த பின் 5 நிமிடங்கள் கழித்து கைகளில் கையுறைகளை போட்டுக்கொண்டு தலைமுடியை சிறு சிறு பகுதிகளாக பிரித்து தலை முடியிலும், வேர்க்கால்களிலும் படும்படி தலை முழுவதும் தடவ வேண்டும். குறிப்பாக அதிக வெள்ளை முடிகள் இருக்கும் பகுதியிலும் வழுக்கை இருக்கும் பகுதியிலும் கவனம் செலுத்தி கொஞ்சம் அதிகமாக தடவிக்கொள்ளலாம். இந்த டையை நமக்கு நாமே தடவிக்கொள்ளலாம் அல்லது வேறொருவரையும் தடவ சொல்லலாம். இதை தலை முழுவதும் தடவிய பின்னர் குறைந்தபட்சம் அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கலாம். இதை வாரத்திற்கு ஒரு நாள் அல்லது 10, 15 நாட்களுக்கு ஒருமுறை செய்யலாம்.

ஹென்னா டையின் பலன்கள்:

மருதாணி பொடி - தலைக்கு குளிர்ச்சி தருவதோடு உடம்பின் சூட்டை தனித்து உடலை குளிர்ச்சியாக்கும். இதில் ஆன்டி - மைக்ரோபியல், ஆன்டி - ஃபங்கல் மற்றும் ஆன்டி - இன்ஃப்ளமேட்டரி தன்மை நிறைந்திருப்பதால் இது தலையில் வரும் கட்டி மற்றும் பொடுகுகளை நீக்கும். குறிப்பாக தலைமுடிக்கு அடர் சிவப்பு நிறத்தை கொடுக்கும். டை தயார் செய்யும்போது தரமான மருதாணி பொடியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வீட்டில் மருதாணி இலை இருந்தால் அதை அப்படியே பறித்து பயன்படுத்தக்கூடாது. பறித்த மருதாணி இலையை வெயிலில் நன்றாக காய வைத்து அரைத்த பிறகே பயன்படுத்த வேண்டும்.


சுடுதண்ணீர் சேர்த்து கலக்குதல் - ஹேர் டையை தலையில் தடவுதல்

நெல்லிக்காய் பொடி - முடியை கருக்க வைக்கும். இதை ஹென்னாவுடன் சேர்க்கும் போது அதிக சிவப்பு நிறத்தை கொடுக்கும். இதில் வைட்டமின் - சி நிறைந்திருப்பதால் தலையில் ஆன்டி - மைக்ரோபியல் மற்றும் ஆன்டி - ஃபங்கல் வேலையை சிறப்பாக செய்யும்.

கறிவேப்பிலை பொடி - முடி வளர்வதற்கு பெரிதும் உதவும். வெள்ளை முடி எளிதில் வராமல் இருக்க உதவி செய்யும். இதை நாம் வீட்டிலேயே வெயிலில் காயவைத்து அரைத்து பயன்படுத்தலாம்.

வெந்தய பொடி - இதில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதை டையில் பயன்படுத்துவதால் முடி மென்மையாக இருக்கும். முடி எளிதில் நுரைக்கும். அடர்த்தியாக வளரும். டை செய்ய பயன்படுத்தும்போது வெந்தயத்தை வறுத்து அரைத்து பயன்படுத்த வேண்டும்.

தயிர் - புளித்த தயிரில் லாக்டிக் அமிலம் நிறைந்திருப்பதால் இது உச்சந்தலைக்கு நல்லது. தலைமுடிக்கு சிறந்த கண்டிஷனர்.

இப்படி பல நன்மைகள் கொண்ட இப்பொடிகளை எல்லாம் ஒன்றாக சேர்த்து டையாக பயன்படுத்துவதன் மூலம் தலைமுடி உதிர்வது குறைந்து, அடர்த்தியான, நீளமான, கருமையான முடி வளரும்.

Updated On 25 Dec 2023 7:23 PM GMT
ராணி

ராணி

Next Story