இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

‘புஷ்பா: தி ரைஸ் பார்ட் 1’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள படம் ‘புஷ்பா 2 : தி ரூல்’. 3 வருட இடைவெளிக்கு பிறகு மிக பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படம் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், ‘புஷ்பா’ திரைப்படம் கடந்து வந்த பாதை குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

‘புஷ்பா’ நிகழ்த்திய சாதனை

பிரபல தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘புஷ்பா தி ரைஸ் பார்ட் 1’. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இவர்கள் தவிர முக்கிய கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக பகத் ஃபாசில், சுனில், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்தும், அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், செம்மரம் கடத்துபவராகவும் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றி மிரட்டியிருந்தார். குறிப்பாக ஒரு பான் இந்தியா படமாக வெளிவந்த இப்படத்தின் பாடல்கள், ஆக்சன் காட்சிகள் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, இந்திய அளவிலும் கவனம் பெற்றன. இதில் கூடுதலாக நடிகை சமந்தா ஆடிய ‘ஊ சொல்றியா’ பாடல் சில சர்ச்சைகளை சந்தித்தாலும், படத்தின் புரொமோஷனுக்கு மிகப்பெரிய அளவில் கைக்கொடுத்தது. சொல்லப்போனால் இந்த பாடலை திரையில் பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் அன்று திரையரங்கு நோக்கிவந்த கதையும் உண்டு.


‘புஷ்பா தி ரைஸ் பார்ட் 1’ திரைப்படத்தில் புஷ்பாவாக நடிகர் அல்லு அர்ஜுன்

இப்படி பக்கா மாஸ் மசாலா படமாக 2021 டிசம்பர் 17ஆம் தேதி வெளிவந்த ‘புஷ்பா : தி ரைஸ் பார்ட் 1’ திரைப்படம் தெலுங்கு தவிர தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. கொரோனா காலத்தில் வெளியான படம் என்றாலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உலகளவில் சுமார் ரூ.393 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதில் குறிப்பாக இந்தி டப்பிங் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பியது. பாகுபலிக்கு பிறகு இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி ரூ.100 கோடி வசூலித்த இரண்டாவது படம் என்ற பெருமையையும் பெற்ற ‘புஷ்பா’, அந்த ஆண்டு ஹிந்தியில் வெளியான ’சூரியவன்ஷி’ மற்றும் ’83’ ஆகிய படங்களுக்கு நிகரான வரவேற்பை பெற்று பாலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சமூக வலைத்தளங்களிலும் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் துவங்கி சினிமா பிரபலங்கள் வரை பலரும் அன்று அல்லு அர்ஜுனின் வித்தியாசமான மேனரிசத்தை இமிடேட் செய்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தனர். அதுமட்டுமின்றி மிகப்பெரிய தொகைக்கு ஓடிடியில் இப்படம் விற்பனை ஆனதை அடுத்து ஓடிடியிலும் ‘புஷ்பா’ திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதில் கூடுதல் சிறப்பாக இந்தியாவை கடந்து ரஷிய மொழியிலும் 'டப்' செய்து அந்நாட்டில் கிட்டத்தட்ட 700-க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியான இப்படம் அங்கும் வசூல் சாதனை புரிந்தது. இதன் மூலம் ஒரே படத்தில் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்து தேசிய அளவில் நட்சத்திர அந்தஸ்து பெற்றார் அல்லு அர்ஜுன்.


'ஏ சாமி' பாடல் காட்சியில் ராஷ்மிகா மந்தனாவுடன் அல்லு அர்ஜுன்

தேசிய விருதும், சர்ச்சையும்

என்னதான் ‘புஷ்பா : தி ரைஸ் பார்ட் 1’ திரைப்படம் வெளியானபோது வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை புரிந்திருந்தாலும், அதன் கதை பழைய பாணியில் இருப்பதாக கூறி சில விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆனால், அல்லு அர்ஜுனின் நடிப்பு மற்றும் பாடி லாங்குவேஜ் மட்டும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. குறிப்பாக தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணம் பீகார், ஒடிசா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் புஷ்பாவை தங்களில் ஒருவராக பார்த்தார்கள். அல்லு அர்ஜுனின் ஆக்ரோஷமும், கோபமும் அவர்களுக்கு மிகவும் பிடித்துபோனது. அதன் வெளிப்பாடாக ஓடிடியை கடந்து இணையத்தில் இப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்து வெளிவந்தபோது அதுவரை எந்த படத்திற்கும் கிடைக்காத மிகப்பெரிய வரவேற்பு புஷ்பா திரைப்படத்திற்கு கிடைத்தது. இப்படி வட இந்தியர்களிடம் கிடைத்த ஏகோபித்த வரவேற்பு காரணமாகவோ என்னவோ கடந்த ஆண்டு நடைபெற்ற 69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில் யாருமே எதிர்பார்க்காத வகையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு அல்லு அர்ஜுனும், சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு தேவி ஸ்ரீ பிரசாத்தும் தேர்வு செய்யப்பட்டனர்.


2021ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அல்லு அர்ஜுன் பெற்ற தருணம்

இருப்பினும் ‘புஷ்பா’ படத்தில் வரும் கதாநாயகன் ஒரு சமூக விரோதி மற்றும் கடத்தல்காரனாக சித்தரிக்கப்பட்டிருகிறார், அப்படி இருக்கும்போது இத்தகைய கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகருக்கு தேசிய விருது வழங்குவது சரியானதா என்ற கேள்வி எழுந்தது. இந்த சர்ச்சையான முடிவிற்கு பல டோலிவுட் பிரபலங்களே தங்களது வருத்தங்களை பதிவு செய்திருந்தனர். சிலர், இந்த விருது வழங்கல் முடிவு சரியானது அல்ல என்று கூறியதோடு, இதுபோன்ற படங்கள் இளைஞர்களின் மனதில் தவறான எண்ணங்களை விதைக்கும் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா 2 : தி ரூல்’ படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் நடந்துவர தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த இவ்விழாவில் புஷ்பா படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அல்லு அர்ஜுனுக்கு 2021ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுக்கப்பட்டது. விழாவிற்கு தன் மனைவி சினேகா ரெட்டியுடன் வந்திருந்த அல்லு அர்ஜுன் விருதை பெற்ற பிறகு, இந்த தருணம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நிகழ்வு எனவும், தான் உண்மையிலேயே இதற்காக பெருமை அடைவதாகவும் தெரிவித்திருந்தார். இதில் கூடுதல் சிறப்பாக தேசிய விருது பெற்ற முதல் தெலுங்கு பட ஹீரோ என்கிற வரலாற்று சாதனையையும் அல்லு அர்ஜுன் அப்போது நிகழ்த்தினார்.


'புஷ்பா' 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீ லீலாவுடன் நடிகர் அல்லு அர்ஜுன்

பாலிவுட்டில் சாதனை படைக்குமா..?

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘புஷ்பா 2 : தி ரூல்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. முதல் பாகம் வெளியாகி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் இரண்டாம் பாகம் உருவாகிவந்த அதேவேளையில், படம் குறித்த புது புது அப்டேட்கள் வெளிவந்து ரசிகர்களை குதூகலப்படுத்தின. அதில் குறிப்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான க்ளிம்ப்ஸ் வீடியோ, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. அந்த வீடியோவில், நீண்ட நாட்களாக தேடப்பட்டு வரும் புஷ்பா, காட்டில் புலிக்காக வைக்கப்பட்டிருக்கும் கேமராவில் சிக்குவதுபோல் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் வெளிவந்திருந்த அந்த க்ளிம்ப்ஸ் வீடியோவை அடுத்து, பெரியளவில் எந்த அப்டேட்டும் இல்லாமல் புஷ்பா படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்தது. இந்த சமயத்தில்தான் கடந்த ஏப்ரல் மாதம் ‘புஷ்பா 2 : தி ரூல்’ படத்தின் டீசர் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது. படத்தின் நாயகனான அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான அந்த டீசரில் அல்லு அர்ஜுன் வித்தியாசமான பெண் வேடத்தில் வந்து மாஸாக ஆக்சன் செய்து ரணகளம் செய்திருந்தார். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி படம் வெளிவர இருப்பதாக அப்போதே அறிவிக்கப்பட்டது.


பெண் வேடத்தில் வித்தியாசமாக வந்து அசத்திய அல்லு அர்ஜுன்

இந்நிலையில்தான் இம்மாதம் 17ஆம் தேதி ஞாயிறு மாலை பாட்னாவில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் ‘புஷ்பா 2 : தி ரூல்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. 2.48 நிமிடங்கள் ஓடும் அந்த ட்ரெய்லரில் புஷ்பா தனது கடத்தல் நெட்வொர்க்கை எவ்வாறு நிர்வகிக்கிறார். அடர்ந்த காடுகளில் நடைபெறும் கடத்தல் செயல்பாடுகள், பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகள் போன்ற காட்சிகள் மாஸாக இடம் பெற்றிருந்தன. குறிப்பாக புஷ்பா மற்றும் எஸ்.பி. யாக வரும் பகத் ஃபாசிலுக்கு இடையேயான மோதல், புஷ்பா - ஸ்ரீவள்ளிக்கு இடையேயான காதல் காட்சிகள், ‘புஷ்பானா பேர் இல்ல... பிராண்டு..’, ‘புஷ்பான்னா ஃபயர் இல்ல... வைல்டு ஃபயர்..’ போன்ற வசனங்கள் அழுத்தமாக படமாக்கப்பட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன. முன்னதாக ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன், நாயகி ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், ஒளிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்று இருந்தனர். பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில், லட்சக்கணக்கான ரசிகர்கள் முன் மேடை ஏறிய அல்லு அர்ஜுன், ரசிகர்களின் கைத்தட்டலுக்கு நடுவே, தனது உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், ‘புஷ்பா 2 : தி ரூல்’ படத்திற்காக நாங்கள் மிகவும் உழைத்துள்ளோம், இந்த படம் உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.


‘புஷ்பா 2 : தி ரூல்’ படத்தின் ட்ரெய்லர் காட்சியில் பகத் ஃபாசிலுடன் அல்லு அர்ஜுன்

பொதுவாகவே எந்த ஒரு பான் இந்தியா படமாக இருந்தாலும், அதன் ட்ரெய்லர் வெளியீடு மற்றும் முதல் புரொமோஷன் பணிகள் தங்களது சொந்த மாநிலத்திலிருந்தே துவங்கும். ஆனால் ‘புஷ்பா 2 : தி ரூல்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு துவங்கி முக்கிய புரொமோஷன் பணிகள் அனைத்துமே வட இந்தியர்களை டார்கெட் செய்தே மேற்கொள்ளப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. காரணம் முந்தைய ‘புஷ்பா : தி ரைஸ் பார்ட் 1’ திரைப்படம் தென் மாநிலங்களை விட வடமாநிலங்களில்தான் அதிக வசூல் சாதனையை செய்தது என்பதால்தானம். அந்த வகையில் ‘புஷ்பா 2 : தி ரூல்’ திரைப்படம் முந்தைய ‘பாகுபலி’ சாதனையை முறியடித்து பாலிவுட் பாக்ஸ் ஆஃபீஸை அடித்து நொறுக்கும் என்பதே படக்குழுவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அவர்கள் நினைத்தது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Updated On 2 Dec 2024 12:46 PM GMT
ராணி

ராணி

Next Story