இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ரஜினிகாந்திற்கு வில்லனாகிறாரா பகத்பாசில்?

‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்த் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். ரஜினியின் 170வது படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் மாமன்னன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த அன்பையும், வரவேற்பையும் பெற்ற பகத்பாசில் ஆகியோரிடம் பேச்சவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் மலையாள நடிகையான மஞ்சுவாரியர், தெலுங்கு நடிகர்களான நானி, சர்வானந்த் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

போலி என்கவுண்டர் மூலம் அப்பாவிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட உள்ள இப்படத்தில், ரஜினி ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறன. பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மிகுந்த பொருட்செலவில் உருவாகும் இப்படத்திற்கான படப்பிடிப்பை செப்டம்பர் 19-ஆம் தேதி அன்று தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா விரைவில் சென்னையில் நடக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


ரஜினிகாந்த், இயக்குநர் ஞானவேல் மற்றும் பகத் பாசில்

முத்தையா முரளிதரன் ‘800’

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்திய முதலாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றவர் புகழ்பெற்ற இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இவரின் இந்த சாதனை இதுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை. தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ‘800’ திரைப்படம் தயாராகி வருகிறது. மூவி டிரெயின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ‘கனிமொழி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் இப்படத்தின் டிரெய்லர் செப்டம்பரில் வெளியாகும் நிலையில், படத்தினை அக்டோபரில் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப் புகழ் மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாகவும், மஹிமா நம்பியார் மதிமலராகவும் நடிக்கின்றனர்.


‘800’ திரைப்படம் போஸ்டர்

கும்கி சாயலில் உருவாகும் ‘படைத் தலைவன்’

சகாப்தம், மதுரை வீரன் படங்களைத் தொடர்ந்து விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியன் நடிக்கும் 3-வது படத்தினை வால்டர், ரேக்ளா படங்களை இயக்கிய யு.அன்பு இயக்குகிறார். விஜே கம்பைன்ஸ் சார்பில் ஜகநாதன் பரமசிவம் வழங்கும் இந்தப் படத்துக்கு எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். காட்டு யானைகளின் வாழ்வியலை பின்னணியாக கொண்டு உருவாகி வருவதால் கும்கி படத்தின் சாயலில் படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கேரளக் காடுகளில் நடைபெற்று வந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பினை ஒடிசா, தாய்லாந்து உள்ளிட்ட பகுதிகளின் காடுகளில் நடத்தவும் திட்டமிட்டுள்ளது படக்குழு. இதன் முதல் தோற்றம் மற்றும் ‘படைத் தலைவன்’ என்ற தலைப்பும் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 25 அன்று வெளியிடப்பட்டது. இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம்.எஸ்.பாஸ்கர், யாமினி சந்தர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


‘படைத்தலைவன்’ போஸ்டர் மற்றும் சண்முகப் பாண்டியன்

டாக்டர் பட்டம் பெற்றார் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி

இசைக் கலைஞராக பிரபலம் அடைந்தவர் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி. இவர் தற்போது தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வளர்ந்து வருகிறார். ‘ஆம்பள', ‘தனி ஒருவன்', ‘அரண்மனை 2', ‘இமைக்கா நொடிகள்', ‘கோமாளி' உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதுதவிர ‘மீசையை முறுக்கு’ என்ற படத்தினை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் அவதானித்தார். அதேபோன்று ‘மீசையை முறுக்கு’, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’, ‘சிவகுமாரின் சபதம்’, ‘அன்பறிவு’ ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். இப்படி பன்முகத்திறன் கொண்ட ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி, கோவை பாரதியார் பல்கலைக்கழத்தில் மேலாண்மைப்பிரிவில் ‘இசைத் தொழில்முனைவோர்' என்ற தலைப்பை மையமாக கொண்டு கடந்த 5 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வந்தார். தற்போது ஆராய்ச்சி படிப்பை நிறைவு செய்ததை அடுத்து அதில் முனைவர் பட்டம் அதாவது டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.


பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 38-வது பட்டமளிப்பு விழாவில் ‘ஹிப்ஹாப்’ ஆதிக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி முனைவர் பட்டத்தை வழங்கினார். இந்த துறையில் ஒருவர் டாக்டர் பட்டம் பெறுவது என்பது இந்தியாவிலேயே இதுவே முதல் முறையாகும்.

‘சமந்தா' அருகில் அமர ரூ.2 லட்சமா?

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குஷி’. இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் படத்திற்கான புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா சென்றுள்ள நடிகை சமந்தா, அங்கு நடக்க இருக்கும் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்க பெரும் தொகையை கேட்டுள்ளாராம். இதனை சரிக்கட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் டிக்கெட்டுகளை அச்சடித்துள்ளனர். இதில் நடிகை சமந்தா அருகில் அமர்ந்து நிகழ்ச்சியை பார்ப்பதற்கான டிக்கெட்டின் விலை ரூ.2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். இந்த டிக்கெட்டினை வாங்கவும் கடும் போட்டி நிலவுகிறதாம். இதென்னடா பகல் கொள்ளையா இருக்கு என்ற விமர்சனமும் இணையதளம் முழுக்க பரவி வருகிறது.


நடிகை சமந்தா

உலகக் கோப்பையை அறிமுகம் செய்து வைத்த முதல் இந்திய நடிகை மீனா...

50 ஓவர் கொண்ட உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ளது. 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 நாடுகள் மோதவுள்ளன. 2011-ஆம் ஆண்டு தங்களது சொந்த மண்ணில் நடைபெற்றப் போட்டியில் இந்திய அணி ஐசிசி உலக கோப்பையை கைப்பற்றியது. இதன்பிறகு இந்தக் கோப்பையை வெல்ல 10 ஆண்டுகள் ஆகும். இந்த முறை உலகக்கோப்பைத் தொடர் நம் நாட்டிலேயே நடைபெறுவதால் நிச்சயம் இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்று விடும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், உலகக் கோப்பையை பாரீஸில் நடிகை மீனா அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் இந்த உலகக் கோப்பையை அறிமுகம் செய்யும் முதல் இந்திய நடிகை என்ற பெருமை பெற்றார்.


உலகக் கோப்பையுடன் நடிகை மீனா

Updated On 4 Sep 2023 6:34 PM GMT
ராணி

ராணி

Next Story