இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

2023 ஆம் ஆண்டிற்கு பை பை சொல்லவிட்டு, தற்போது புதிய ஆண்டான 2024-ஐ வரவேற்றுள்ளோம். புதிதாக பிறந்திருக்கும் இந்த ஆண்டில் நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றிப்படிக்கட்டுகளாக அமைய வேண்டும் என்றுதான் அனைவரும் ஆசைப்படுவோம். அது சாதாரண மனிதர்களின் வாழ்க்கைக்கு மட்டும் அல்ல, அவர்களை சந்தோஷப்படுத்தும் திரைத்துறைக்கும் பொருந்தும். அந்த வகையில், கடந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கமே விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ என ஆரம்பித்து வெற்றிமாறனின் ‘விடுதலை’ பாகம் ஒன்று, ‘பொன்னியின் செல்வன்’ பாகம் 2, ரஜினியின் ‘ஜெயிலர்’, தனுஷின் ‘வாத்தி’, சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’, கவினின் ‘டாடா’, மணிகண்டனின் ‘குட் நைட்’ , மீண்டும் விஜய்யின் 'லியோ' என சூப்பர்ஹிட் படங்களாக வெளிவந்து தமிழ் திரையுலகிற்கு ஒரு வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது. அது போலவே, பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டும் தமிழ் சினிமாவிற்கு சிறப்பானதொரு ஆண்டாக அமைந்திட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அப்படி 2024-ல் அதிக எதிர்பார்ப்போடு வெளிவரவுள்ள படங்கள் என்னென்ன? அவற்றில் எந்தெந்த ஹீரோக்களின் திரைப்படங்கள் எப்படிப்பட்ட தாக்கங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது? என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ரஜினியின் ‘லால் சலாம்’


ரஜினிகாந்தின் ’லால் சலாம்’ பட காட்சிகள்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் ’லால் சலாம்’. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதோடு, விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக இணைந்துள்ளனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று முடிந்துள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12-ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் வரும் ரஜினிகாந்த், ஸ்டைலான தாடி மற்றும் கருப்பு கண்ணாடியுடன் வந்து ரசிகர்களை வசீகரித்த நிகழ்வு அவரது ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. 28 ஆண்டுகளுக்கு முன் நடித்த பாட்ஷா படத்திற்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்த் முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் இப்படம் கூடுதல் கவனம் பெறுகிறது. பொதுவாகவே நடிகர் ரஜினிகாந்த் மீது ஆன்மீகவாதி, பாஜக ஆதரவாளர் என்ற பிம்பம் இருந்து வரும் நிலையில், ’லால் சலாம்’ படத்தில் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் எந்த மாதிரியான மனநிலை மாற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த போகிறது என்ற எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’


இருவேறு வித்தியாசமான தோற்றங்களில் நடிகர் தனுஷ்

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம்தான் 'கேப்டன் மில்லர்'. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் தனுஷுடன், பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் முடிவடைந்து ரன்னிங் டைம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் உள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் ‘கேப்டன் மில்லர்’ படம் தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், விரைவில் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படம், வரலாற்று பின்னணியில் முழு நீள ஆக்சன் படமாக உருவாகியுள்ளதால் நடிகர் தனுஷின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்திகேயனின் ‘அயலான்’


சிவகார்த்திகேயனின் 'அயலான்' பட போஸ்டர்

'மாவீரன்' வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் 'அயலான்'. நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ள இப்படத்தை இயக்குநர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சயின்ஸ் ஃபிக்‌ஷன் காமெடி ஜானரில் உருவாகி உள்ள இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. பின்னர் 2018 ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கி 2021 ஜனவரி வரை நடைபெற்றது. பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் 2022 நவம்பர் மாதத்தில் தொடங்கி நடைபெற்ற நிலையில், தற்போது வெளியீட்டிற்கான இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சுமார் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தின் இரண்டாவது பாடலான ‘அயலா அயலா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. மேலும் கடந்த 26-ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் சிவகார்த்திகேயன், படத்தின் இயக்குநர் ஆர். ரவிக்குமார், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஜெயம் ராஜேஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியவில்லை என்று கூறி 2024 பொங்கல் வெளியீடாக தள்ளிவைக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ‘அயலான்’ படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தின் வருகையை, சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

விக்ரமின் ‘தங்கலான்’


'தங்கலான்' படத்தில் மாறுபட்ட காட்சிகளில் நடிகர் விக்ரம்

கோலார் தங்க வயலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பா.ரஞ்சித் இயக்கியுள்ள திரைப்படம்தான் ‘தங்கலான்’. எப்போதும் ஒரு கதைக்காக அதிகம் மெனக்கெடும் நடிகர் விக்ரம், 'பொன்னியின் செல்வன்' படத்திற்குப் பிறகு, இப்படத்திற்காக தனது உடலை அதிகம் வருத்தி 28 கிலோ வரை எடை குறைத்து நடித்துள்ளார். ‘தங்கலான்’ உலகில் இருந்து சக்தி வாய்ந்த ஒரு விஷயத்துக்கு தயாராகுங்கள் என 2023 ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து, நடிகர் விக்ரமின் 57வது பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி அன்று படப்பிடிப்பிற்கு முன்னதாக ஒவ்வொருவரும் தயாராகும் நிகழ்வுகளை மேக்கிங் வீடியோவாக படக்குழு வெளியிட்டது. அதில் ஷூட்டிங் ஸ்பாட்டில் விக்ரம் காட்சிக்கு தயாராவது, பா.ரஞ்சித் காட்சியை விளக்குவது, செட் போடும் பணிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன. இந்த பதிவை பார்த்த இருதரப்பு ரசிகர்களும் நிச்சயம் வரலாற்றில் பேசும் படமாக ‘தங்கலான்’ அமையும் என்று கொண்டாடும் அளவுக்கு அவர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. இதனால் நாளுக்கு நாள் ‘தங்கலான்’ படத்தின் மீதான அறிவிப்பும், அதன் மீதான எதிர்பார்ப்பும் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில், நவம்பர் 2ஆம் தேதி அன்று இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. அந்த டீசரில் ஒட்டுமொத்த திரையுலகமே மிரண்டுப் போகும் படியான சண்டைக் காட்சிகளும் , போர்க் காட்சிகளும் இடம்பெற்றிருந்ததை பார்க்கும் போது பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களுக்கு இணையாக மிகப்பிரம்மாண்டமாக இப்படத்தை எடுத்துள்ளார்களோ என்று என்ன வைக்கும் படியாக இருந்தது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜனவரி மாதம் 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று படம் வெளியாக உள்ளதால் விக்ரம் ரசிகர்கள் அந்த நாளுக்காக மிகவும் ஆவலுடன் காத்துள்ளனர்.

விஜய் 68


'விஜய் 68' பட பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்பட காட்சிகள்

'லியோ' படத்தின் வெற்றிக்குப்பிறகு, நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். 'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய்யுடன் நடிகர்கள் பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல் அமீர், நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்திரி என பலர் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் மைக் மோகன் என அறியப்படும் சீனியர் நடிகரான மோகன் வில்லன் கதாபாத்திரத்திலும், மலையாளத்தில் தற்போதும் முன்னணி நடிகராக உள்ள ஜெயராமும் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய் இரட்டை வேடம் ஏற்று நடிக்க உள்ளதாகவும், அதில் ஒரு வேடத்திற்கு ஜோடியாக சினேகாவும், இன்னொரு வேடத்திற்கு மீனாட்சி சவுதிரியும் நடிக்கும் நிலையில், இவர்களுடன் லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். விஜய்யின் சமீபத்திய படங்களான 'வாரிசு', 'லியோ' படங்களைப் போலவே, 'தளபதி 68' படத்திலும் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் குவிந்து வருகிறது. அதன்படி சமீபத்தில் மாளவிகா ஷர்மா இணைந்த நிலையில், அடுத்ததாக , ரம்யா கிருஷ்ணன் படக்குழுவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களை தவிர வெங்கட் பிரபுவின் ஃபேவரைட் லிஸ்டில் இருக்கும் அவரது தம்பி பிரேம்ஜி அமரன், வைபவ் மற்றும் அரவிந்த் உள்ளிட்டோரும் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், தாய்லாந்து ஆகிய இடங்களில் நடைபெற்று, தற்போது துருக்கி மற்றும் இஸ்தான்புல்லை தொடர்ந்து இலங்கை வரை சென்று படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு 'கோட்' (Goat) என படக்குழு தலைப்பு வைக்க திட்டமிட்டுள்ளது. மேலும் புத்தாண்டு ஸ்பெஷலாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட படக்குழு தயாராகி வருவதாகவும் சொல்லப்படுகிறது. எது எப்படியாகினும் படம் எப்போது வெளியாகப்போகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில், எப்படியும் இந்த ஆண்டு மத்தியில் வெளியாகிவிடும் என்று விஜய் மற்றும் வெங்கட் பிரபு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’


'இந்தியன் 2' படத்தில் கமலின் இருவேறுபட்ட புகைப்படங்கள்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. ‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பல தடைகளை கடந்து எப்போது ரிலீஸ் ஆகும் என அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து ஒருபுறம் காத்திருக்க, படம் 2024 ஏப்ரல் அல்லது ஜூன் மாதத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

அஜித்தின் ‘விடாமுயற்சி’


‘விடாமுயற்சி’-யில் நடிகர் அஜித் குமார்

நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த ஆண்டு மே மாதம் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக படக்குழுவினரும் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர். ஏற்கனவே படத்தில் அஜித்துடன் நடிகை திரிஷா, பிரியா பவானி ஷங்கர், ரெஜினா மற்றும் நடிகர் ஆரவ் என பல பிரபலங்கள் இணைந்திருந்த நிலையில், சமீபத்தில் அக்குழுவில் ஆக்சன் கிங் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் அர்ஜுனும் இணைந்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், நடிகர் ஆரவ் தனது எக்ஸ் பக்கத்தில் அஜித் மற்றும் அர்ஜூனுடன் இணைந்து ரெஸ்டாரண்ட் ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலானது. ஏற்கனவே அஜித் - அர்ஜுன் கூட்டணி ‘மங்காத்தா’ படத்தில் பெரிய அளவில் ஹிட் அடித்ததால், இந்த படத்திலும் நிச்சயம் ஹிட் ஆகி வெற்றி பெறும் என்று அவர்களது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளது மட்டுமின்றி மிகப்பெரிய எதிர்பார்ப்பிலும் காத்துள்ளனர்.

சூர்யாவின் ‘கங்குவா’


‘கங்குவா’ படத்தில் நடிகர் சூர்யாவின் தோற்றம்

சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானி நடிக்க, இவர்களுடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட பலர் நடித்து வருகின்றனர். ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஒன்றாக இணைந்து தயாரித்து வரும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளைப்போன்று உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளது. படம் எப்போது திரைக்கு வரும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், எப்படியும் 2024 மத்தியில் திரைக்கு வந்து சூர்யாவின் ரசிகர்களை குஷிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அருள்நிதியின் ‘டிமாண்டி காலனி 2’


‘டிமாண்டி காலனி 2’-ல் நடிகர் அருள்நிதியின் மாறுபட்ட காட்சிகள்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் திகிலை கிளப்பிய படமாக வெளியானதுதான் ‘டிமான்ட்டி காலனி’. மு.க.தமிழரசு தயாரிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தினை மீண்டும் 7 ஆண்டுகள் கழித்து இரண்டாவது பாகமாக உருவாகியுள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். அருள்நிதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்க, ஒயிட் லைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே எப்படியும் இந்த ஆண்டில் வெளிவந்து வெற்றிபெறப்போகும் படங்களில் மிக முக்கியமான படமாக 'டிமான்ட்டி காலனி 2' இருக்கும் என்ற நம்பிக்கை அருள்நிதியின் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘வேட்டையன்’

‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் த.செ. ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ரானா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியதை அடுத்து நெல்லை, மும்பை, சென்னை என பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. சிறிது நாட்கள் இடைவெளிவிட்டு தொடங்கப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது. இந்த ஷெட்யூலோடு ரஜினியின் போர்ஷன்கள் முடிக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது. மேலும் ஜனவரி மாத இறுதிக்குள் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு 2024 ஏப்ரலில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் ரஜினியின் அடுத்த வேட்டைக்காக அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.


சூப்பர் ஸ்டாரின் 'வேட்டையன்' தோற்றம்

இப்படங்களை தவிர 'ஸ்டார்' , 'லவ்வர்' என பல சிறிய பட்ஜட் படங்களும் ரசிகர்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்த வரிசை கட்டி நிற்கின்றன. இருப்பினும் தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களில் பெரும்பாலும் குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த 2024-ல் வெளியாகும் அனைத்து படங்களும் வெற்றிபெற நாம் வாழ்த்துவதோடு, நிச்சயம் வரவிருக்கும் புது படங்கள் தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புவோம்.

Updated On 8 Jan 2024 6:39 PM GMT
ராணி

ராணி

Next Story