இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(06.04.1975 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

விஜயா ஸ்டூடியோவில் ஒரு தெலுங்குப் படத்தில் நடித்துக்கொண்டு இருந்த லெட்சுமியுடன் "ராணி" நிருபர் பேசிக்கொண்டு இருந்தார்!. அப்போது லெட்சுமியின் காதில் கிடந்த தோடு கழன்று கீழே விழுந்தது!. அதைப் பார்த்துவிட்டு, அருகே நின்ற சந்திரகலா தன் காதில் கிடந்த தோடை கழற்றி லெட்சுமிக்குக் கொடுத்தார்!

உடனே லெட்சுமி "பார்த்தீர்களா, சார்! தமிழ் நடிகைகளுக்கும், பிறமொழி நடிகைகளுக்கும் இடையே எவ்வளவு வேறுபாடு இருக்கிறது என்று!. தமிழ் நடிகைகள் ஒருவருக்கு ஒன்று என்றால், எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்கள்! சந்திரகலாவைப் பாருங்கள்! என் காதுத் தோடு உடைந்துவிட்டது என்பது தெரிந்ததும், தன் தோட்டை எனக்குக் கொடுத்துவிட்டார்!. இப்படியான உதவியை தமிழ் நடிகைகளிடம் எதிர்பார்க்க முடியாது" என்றார், லெட்சுமி.


சட்டக்காரி திரைப்படத்தில் நடிகை லெட்சுமி

மேலும் தொடர்ந்து, "பிற மொழிப் படங்களில் நடிக்கும்போது, நாங்கள் எந்தவித பாகுபாடும் இன்றி பழகுகிறோம், சாப்பிடுகிறோம். உதவி செய்வதிலும் அப்படியே! தமிழ்ப்பட உலகில் பெரிய நடிகை சாப்பிடும்போது, சின்ன நடிகைகள் சாப்பிட்டாலே, பெரும் போர் நிகழ்ந்துவிடும். இப்படிப்பட்ட நிலை ஒழிய வேண்டும்" என்றார், லெட்சுமி, காரசாரமாக!.

"இதனால்தான் நீங்கள் தமிழ்ப் படங்களில் நடிப்பது இல்லையோ?" என்று நிருபர் கேட்டதற்கு, ''அப்படி இல்லை, இப்பொழுது "ரோஜாவின் ராஜா'' படத்தில் நடித்து வருகிறேன். வேறு இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறேன்" என்றார்.


இரு வெவ்வேறு தோற்றங்களில்

''பம்பாய் பக்கம் போனீர்களே! படங்களில் நடிக்கிறீர்களா?" என்று நிருபர் கேட்டார்.

"இந்தி ‘சட்டைக்காரி'க்குப் பிறகு 6 இந்திப் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறேன். 'சட்டைக்காரி' படம் முடிந்துவிட்டது! விரைவில் வெளிவரும்” என்று லெட்சுமி தொவித்தார்.

Updated On 15 July 2024 6:13 PM GMT
ராணி

ராணி

Next Story