இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

வலி மிகுந்த நிஜ சம்பவங்களை வலிமையான சினிமாவாகப் படைத்து கவனம் ஈர்ப்பதில் வல்லவர்கள் மலையாள சினிமா இயக்குநர்கள். அதற்கு எடுத்துக்காட்டுதான் 'மஞ்சும்மல் பாய்ஸ்'. அதே பாணியில், பிளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள 'ஆடு ஜீவிதம்' (The Goat Life) படம் வரும் 28-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக உள்ளது. பென்யாமின் (பென்னி டேனியல்) எழுதிய 'ஆடு ஜீவிதம்' என்ற நாவலை அடிப்படையாக வைத்துதான் இந்தப் படத்தை எடுத்துள்ளனர். இந்நிலையில் இப்படக் கதையின் உண்மை நாயகனும், திரைப்படத்தின் கதாநாயகனும், இயக்குநரும், இசையமைப்பாளரும் படம் குறித்து என்ன தெரிவித்துள்ளனர் என்பதை பார்ப்போம்.

பாலைவனத்தில் தனியாக செத்து பிழைத்தேன்! - 'ஆடு ஜீவிதம்' படத்தின் நிஜ நாயகன்


'ஆடு ஜீவிதம்' படத்தின் நிஜ நாயகன் நஜீப் - இன்றும், அன்றும்

1992 - 1993-ம் ஆண்டுவாக்கில் பிழைப்புக்காக சவுதி அரேபியாவின் ரியாத்துக்குச் சென்று ஆடு மேய்த்த நஜீப் அங்கு அனுபவித்த கொடுமைகள் ஏராளம். 'ஆடு ஜீவிதம்' படம் வெளியாக உள்ளதைத் தொடர்ந்து நஜீப் தனது அனுபவங்களைப் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து வருகிறார். நஜீப் கூறுகையில், "நான் பிழைப்புக்காக அரபு நாட்டுக்குச் செல்ல முடிவு செய்தேன். முதலில் மும்பைக்குச் சென்று அங்கிருந்து விமானத்தில் சவுதி அரேபியாவுக்குச் சென்றேன். ரியாத்தில் இறங்கியதும் அரபுநாட்டைச் சேர்ந்த ஒருவர் என்னை வண்டியில் அழைத்துக் கொண்டு சென்றார். சில மணிநேரம் பயணித்து நாங்கள் சென்றபோது மரங்களையோ, கட்டடங்களையோ பார்க்க முடியவில்லை. வெறும் கட்டாந்தரையை மட்டுமே பார்க்க முடிந்தது. தூரத்தில் நூற்றுக்கணக்கான ஆடுகள் நிற்பதைப் பார்த்தேன். அங்குபோனதுமே சாப்பிடுவதற்கு என்ன செய்வேன் என்று நினைத்து அப்போதே நான் அழத் தொடங்கிவிட்டேன். என்னை அங்கு கொண்டு சென்றுவிட்டவர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். எனக்கு ஆடு மேய்க்கும் வேலை என்பதைப் புரிந்துகொண்டேன். அங்கு எனக்குத் தெரிந்த யாருமே இல்லையே என யோசித்துக்கொண்டிருந்தபோதே முடி, தாடி எல்லாம் வளர்ந்தபடி ஒருவர் கட்டிலில் அமர்ந்திருந்ததைப் பார்த்தேன். அவரைப் பார்த்தவுடன் எனக்கு பயமாக இருந்தது. அவருடன் நானும் ஆடு மேய்க்கத்தொடங்கினேன். ஒருகட்டத்தில் அவரைக் காணவில்லை, இறந்துவிட்டார் என நினைத்தேன். நான் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தேன். அங்கிருந்து தப்பிக்க முடியாது என நினைத்துக்கொண்டிருந்தேன். எனக்குச் சாப்பிட உணவு கிடைக்காமல் ஆட்டுப் பாலைக் கறந்து அப்படியே குடித்துப் பசியாறினேன். குடிப்பதற்கே தண்ணீர் சரியாகக் கிடைக்காது, குளிக்க எப்படிக் கிடைக்கும். குளிக்காமலேயே நாட்களைக் கடத்தினேன். எனக்குத் தலைமுடியும் தாடியும் மீசையும் வளர்ந்து பரதேசி போல் மாறிவிட்டேன். ஒருகட்டத்தில் அங்கிருந்து தப்பி ஓடினேன். ஒன்றரை நாட்கள் ஓடி ஓர் இடத்தை அடைந்தேன். அங்கு கேரளாவைச் சேர்ந்த ஒருவர் ஹோட்டலில் எனக்கு உணவு தந்தார். பாஸ்போர்ட், விசா எல்லாம் ஆட்டு உரிமையாளரிடம் இருந்ததால் என்னை போலீஸார் கைது செய்து இந்தியாவுக்கு அனுப்பினார்கள். மும்பை விமானநிலையத்தில் வந்து இறங்கிய எனக்கு சொந்த ஊர் செல்லப் பணம் இல்லை. அங்கு ஒருவர் டிக்கெட் எடுக்க உதவி செய்ததால் ரயிலில் சொந்த ஊர் திரும்பினேன்".

ரஹ்மான் சார் ஒரு ஜீனியஸ் - ஹீரோ பிரித்விராஜ்


இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவருடன் நடிகர் பிருத்விராஜின் அழகிய தருணங்கள்

"நான் தமிழில் கடைசியாக செய்த படம், 'காவியத்தலைவன்'. இந்த 'ஆடு ஜீவிதம்' திரைப்படம் 16 வருடப் பயணம். 2008ஆம் ஆண்டு இந்தப் படம் பண்ணலாம், அதில் நான்தான் நஜீபாக நடிக்கப் போகிறேன் என்று இயக்குநர் பிளஸ்ஸி என்னிடம் கூறினார். அந்தச் சமயத்திலேயே இயக்குநர் பிளஸ்ஸி பெரிய இயக்குநர். மம்மூட்டி, மோகன் லாலை வைத்து படம் பண்ணியவர். ஆனால், இந்தப் படத்தோட ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கே பத்து வருடம் ஆகிவிட்டது. 2018 ஆம் ஆண்டுதான் தொடங்கினோம். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராகப் பணியாற்ற இரண்டு நபர்களிடம் கேட்டிருந்தோம் முதலில் ரஹ்மான் சார்கிட்ட கேட்டோம். அதற்குப் பிறகு இசையமைப்பாளர் ஹேன்ஸ் ஜிம்மர்கிட்டையும் கேட்டிருந்தோம். ரஹ்மான் சார் ஒரு ஜீனியஸ். முதல் சந்திப்பிலேயே நாங்க இந்தப் படத்துக்காக என்னென்ன விஷயங்கள் ஸ்பெஷலாக பண்ண யோசிக்கிறோம் என்று புரிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜிம்மியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார் பிரித்விராஜ்.

இந்தப் படம் 'மரியான்' மாதிரி இருக்குமா'ன்னு கேட்டாங்க - ஏ.ஆர்.ரஹ்மான்

"நான் இந்தப் படத்தில் கமிட்டாகும் பொழுதுதான் என்னுடைய "99 songs" சொந்தத் திரைப்படத்தை செய்து கொண்டிருந்தேன். இந்த 'ஆடு ஜீவிதம்' பயணம் சீக்கிரம் முடிந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால் 6 வருடம் ஆகிற்று. எல்லோரும் இந்தப் படம் 'மரியான்' மாதிரி இருக்குமா' என்று கேட்கிறார்கள். ஆனால் 'மரியான்' ஒரு புனைவுக் கதை. இந்தப் படம் உண்மையான கதை" என்று விளக்கியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

"நாம பேசக்கூடாது. நம்ம படம்தான் பேசணும்" - இயக்குநர் பிளஸ்ஸி


இயக்குநர் பிளஸ்ஸி மற்றும் பிருத்விராஜ் இடம்பெற்றிருக்கும் 'ஆடு ஜீவிதம்' படத்தின் போஸ்டர்

இந்த திரைப்படத்தைத் தொடங்கும்போது படத்தோட கதாபாத்திரம் மட்டும்தான் என்னிடம் முழுமையாக இருந்தது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் இல்லை. பிரித்விராஜ் எனக்கு தம்பி மாதிரி. இங்க தென் இந்தியாவுல இருந்து நிறையப் பேர் கல்ஃப் நாடுகளுக்கும், சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் வேலைக்கு செல்கிறார்கள். அதனால் பல பேருடைய வாழ்க்கை காணாமல் போகின்றது. அவங்களோட குடும்பம் காணாமல் போகுது. அப்படி ஒருத்தரோட கதைதான் இந்தத் திரைப்படம் என்றும், எவ்வளவு போராட்டங்கள் இருந்தாலும் அதுல ஒரு நம்பிக்கை இருந்தா கண்டிப்பாக வெற்றி அடையலாம்" என்றும் கூறியுள்ளார் படத்தின் இயக்குநர் பிளஸ்ஸி.

Updated On 1 April 2024 6:21 PM GMT
ராணி

ராணி

Next Story