இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பாலிவுட் திரையுலகில், தனித்துவமான நடிப்புத் திறமையாலும், வசீகரமான அழகாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை ரவீனா டாண்டன். 1990களில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்த இவர், இந்தி சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அவரது துடிப்பான கண்கள், மனதை மயக்கும் சிரிப்பு, மற்றும் நேர்த்தியான நடிப்பு ஆகியவை இன்றளவும் ரசிகர்களால் போற்றப்படுகின்றன. ஹிந்தி தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ள ரவீனா, தற்போது 24 வருடங்களுக்குப் பிறகு, தமிழ் சினிமாவுக்கு மீண்டும் திரும்புவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அந்த வகையில் ரவீனா டாண்டனின் இந்த வருகை குறித்தும், அவரது திரைப்பயணம் குறித்தும் விரிவாக இந்த தொகுப்பில் காணலாம்.

பாலிவுட்டின் உச்ச நட்சத்திரம்

90-களில் பாலிவுட் திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ரவீனா டாண்டன் முக்கியமானவர். இயக்குநரும், தயாரிப்பாளருமான ரவி டாண்டனின் மகளான இவர், 1991-ஆம் ஆண்டு சல்மான் கானுக்கு ஜோடியாக 'பதா' திரைப்படத்தில் அறிமுகமானார். ரவீனாவின் வசீகரமான முகம், கவர்ச்சியான நடனம் மற்றும் தன்னம்பிக்கை நிறைந்த நடிப்பு ஆகியவை குறுகிய காலத்திலேயே அவரை உச்ச நட்சத்திரமாக உயர்த்தியது. குறிப்பாக, 1994-ஆம் ஆண்டு அக்ஷய் குமாருடன் அவர் நடித்த 'மொஹ்ரா' திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற "தூ சீஸ் படி ஹை மஸ்த் மஸ்த்" மற்றும் "டிப் டிப் பர்சா பானி" போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. இந்த பாடல்களில் ரவீனாவின் துடிப்பான நடன அசைவுகள், பாலிவுட்டின் கவர்ச்சி ராணியாக அவரை நிலைநிறுத்தியது. இதன் பிறகு, பல முன்னணி நடிகர்களுடன் அவர் ஜோடி சேர்ந்து, நகைச்சுவை, காதல், அதிரடி, குடும்பம் என பல்வேறு வகைக் கதைகளில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார். அதில் ஷாருக்கான், சல்மான் கான், அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி, கோவிந்தா உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் நடித்த 'தில்வாலே', 'சமான்', 'கிலாடியோன் கா கிலாடி', 'பர்தே', 'படே மியான் சோட்டே மியான்' போன்ற பல படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன.


ரவீனாவின் 'மொஹ்ரா' மற்றும் 'தமன்' பட காட்சிகள்

இப்படி ரவீனா டாண்டன் தனது நடிப்பு பயணத்தில் கவர்ச்சியான கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுக்காமல், பிற்காலத்தில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். அதில் 2001-ல் அவர் நடித்த 'தமன்' திரைப்படம் அவரது திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பாலியல் வன்முறைக்கு ஆளான ஒரு பெண்ணின் போராட்டத்தையும், ஒரு தாயின் தன்னலமற்ற அன்பையும் வெளிப்படுத்திய இந்த படத்தில் நடித்ததற்காக, அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு, நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வந்த ரவீனா, திருமணத்துக்குப் பிறகும், தாய்மைக்கு பின்னரும் கூட பல நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரது கலை சேவையைப் பாராட்டி, 2023-ல் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தென்னிந்திய சினிமாவில் ரவீனா

ரவீனா டாண்டன் பாலிவுட்டில் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட பல இந்திய மொழிப் படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். ஒவ்வொரு மொழியிலும் தனிப்பட்ட பாணியில் கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததால், தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே இவருக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக தெலுங்கு திரையுலகில் பாலகிருஷ்ணா, வினோத் குமார், நாகார்ஜுனா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமானார். இந்தக் கூட்டணியில் நடித்த திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றதுடன், இவரது நடிப்புக்கும் பரவலான பாராட்டுகள் கிடைத்தன. அதேபோல், கன்னட சினிமாவில், பிரபல நடிகர் மற்றும் இயக்குநரான உபேந்திராவுடன் இணைந்து நடித்த 'உபேந்திரா' திரைப்படம், இவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய ஒரு சிறந்த படைப்பாக அமைந்தது. இது கன்னட திரையுலகில் இவருக்கு ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தந்தது.


'உபேந்திரா' மற்றும் 'ஆளவந்தான்' படங்களில் ரவீனா

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரவீனா டாண்டனின் பயணம், 1994 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜுனுடன் இணைந்து நடித்த ‘சாது’ திரைப்படத்தின் மூலம் தொடங்கியது. பி.வாசு இயக்கிய இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியானது. ஆனால், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதன் பிறகு, 2001 ஆம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த பிரம்மாண்டமான படமான ‘ஆளவந்தான்’ மூலம் மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் தேஜஸ்வினி என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இவர் நடித்தார். இப்படத்தின் கதைக்களம் ரவீனாவைச் சுற்றியே பின்னப்பட்டிருந்ததுடன், தொழில்நுட்ப ரீதியாகவும் பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இருப்பினும், வணிக ரீதியாக இப்படமும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், ரவீனா டாண்டன் தமிழ்த் திரைப்படங்களில் இருந்து படிப்படியாக விலகி, மீண்டும் இந்தித் திரையுலகில் கவனம் செலுத்தத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் அங்கு தயாரிப்பாளராகவும் களமிறங்கி அதிலும் வெற்றி கண்டார்.

‘கே.ஜி.எப் 2’ தந்த திருப்புமுனை

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கன்னடத் திரைப்படமான கே.ஜி.எஃப்: சேப்டர் 2-வில் நடித்ததன் மூலம், தான் ஒரு சிறந்த நடிகை என்பதை ரவீனா டாண்டன் மீண்டும் நிரூபித்தார். நடிகர் யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தத் திரைப்படத்தில், ரவீனா டாண்டன் ரமிகா சேன் என்ற இந்தியப் பிரதமரின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது அவரது நடிப்பு திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நேர்மையையும், அதிகாரத்தையும் வெளிப்படுத்தும் ஒரு அரசியல்வாதியாக, ராக்கி பாயின் சுரங்கத் தொழிலுக்கு எதிராக துணிச்சலான முடிவுகளை எடுக்கும் ஒரு வலிமையான தலைவராக அவர் சிறப்பாக இதில் நடித்திருந்தார். குறிப்பாக, ரவீனா டாண்டனின் கம்பீரமான உடல்மொழியும், வசன உச்சரிப்புகளும் அந்த கதாபாத்திரத்திற்கு மேலும் வலு சேர்த்தன. அதிலும் அவரது கதாபாத்திரம் படத்தின் அரசியல் கோணத்தை வலுப்படுத்தியதோடு, ஒரு பெண் தலைவரின் அதிகாரத்தையும், சமூகப் பொறுப்புணர்வையும் அழுத்தமாகப் பதிவு செய்திருந்தது.


'கே.ஜி.எஃப்: சேப்டர் 2' மற்றும் ‘ஆரண்யக்’கில் ரவீனாவின் உணர்ச்சிமிக்க வேடங்கள்

'கே.ஜி.எஃப்: சேப்டர் 2' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, நடிகை ரவீனா டாண்டன் மீண்டும் இந்தியத் திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக தன் இருப்பை உறுதிப்படுத்தினார். இந்தப் படம் அவருக்கு ஹிந்தி மொழியில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாளம் போன்ற பிற தென்னிந்திய மொழிகளிலும் அதிக வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. மேலும், ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியான ‘ஆரண்யக்’ என்ற குற்றவியல் தொடரில் அவர் ஏற்ற காவல்துறை அதிகாரி கஸ்தூரி துக்ரா கதாபாத்திரமும் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. அந்தக் கதாபாத்திரத்தில் அவரது திடமான நடிப்பு, உணர்ச்சிப்பூர்வமான வெளிப்பாடுகள், குறிப்பாக, ஒரு தாயாகவும், துணிச்சலான அதிகாரியாகவும் அவர் காட்டிய நடிப்பு, ரவீனா டாண்டன் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடிய ஒரு சிறந்த நடிகை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்தது.

மீண்டும் தமிழில் ரவீனா டாண்டன்

இப்படிப்பட்ட நிலையில்தான் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான ரவீனா டாண்டன், கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். நடிகர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் 'லாயர்' என்ற புதிய படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 'ஜென்டில்வுமன்' திரைப்படத்தை இயக்கிய ஜோஷ்வா இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், விஜய் ஆண்டனி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரவீனா டாண்டன் நடித்துள்ள காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. அனுமோல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். நீதிமன்றப் பின்னணியில், ஒரு வித்தியாசமான வழக்கினை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாகி வருகிறது. 'லாயர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 2025-ல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.


விஜய் ஆண்டனியின் 'லாயர்' மற்றும் 'சூர்யா 46' படங்களில் ரவீனா

ஏற்கனவே, ரவீனா டாண்டன் நடிகர் சூர்யாவின் 46-வது படமான 'சூர்யா 46' படத்திலும் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இப்படம் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் 'சூர்யா 46' படத்தை 'சார்' மற்றும் 'லக்கி பாஸ்கர்' படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்குகிறார். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. 'லாயர்' மற்றும் 'சூர்யா 46' ஆகிய படங்கள், ரவீனா டாண்டனுக்கு தமிழ் திரையுலகில் ஒரு புதிய பாதையை உருவாக்கி கொடுக்கும் என திரையுலகினர் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Updated On 5 Aug 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story