இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தனது மகளுக்கு வெகு பிரம்மாண்டமாக திருமணத்தை முடித்துள்ளார். இந்த திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் திரைத்துறை மட்டுமல்லாமல் முதலமைச்சர், அமைச்சர்கள் உட்பட அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் தாண்டி ஒரு ஜோடி இன்றுவரை சமூக ஊடகங்களில் மிகவும் ட்ரெண்டாகியிருக்கின்றது. கடந்த ஆண்டு தனது மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகக் கூறி விவாகரத்து வழக்கு தொடர்ந்திருக்கும் ஜெயம் ரவியும், பாடகி கெனிஷாவும் ஒரே மாதிரி உடையணிந்துகொண்டு வந்ததுதான் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த ஃபோட்டோக்கள் வலம்வந்துகொண்டிருந்தபோதே அடுத்து ரிசப்ஷனுக்கும் ஜோடியாக கைகோர்த்துக்கொண்டு வந்த ஃபோட்டோக்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களை இன்றுவரை ஆக்கிரமித்திருக்கின்றன. இதனையடுத்து ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்று அறிக்கை வெளியிட, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியிருந்தார் கெனிஷா. ஆர்த்தி மற்றும் கெனிஷாவுக்கு இடையேயான சொற்போர் சோஷியல் மீடியா போராக மாறிய சமயத்தில், யாரும் எதிர்பாராத விதமாக, தனது மொத்த குமுறலையும் அறிக்கையாக வெளியிட்டார் ரவி மோகன். அதன் விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

திடீர் விவாகரத்து அறிவிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சி!

நடிகர் ஜெயம் ரவி தனது நீண்டகால தோழியான ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமாரும் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என்பதால் இவர்களுடைய திருமணம் 2009ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த காதல் ஜோடிக்கு இரண்டு மகன்கள் பிறந்தபிறகும் பொதுவெளிகளில் காதலை வெளிப்படுத்துவதும், எப்போதும் ஒன்றாக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுமாக இருந்தனர். குறிப்பாக, ஆர்த்திதான் தனக்கு எல்லாமே என்று கூறும் ஜெயம் ரவியை பார்த்து, காதலித்தால் இப்படி காதலிக்கவேண்டும் என்று பலர் பொறாமைப்பட்டனர். இப்படி சுமார் 18 அண்டுகள் அழகான பந்தத்தில் இருந்த இவர்கள்மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை. ஜெயம் ரவி திடீரென ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி அறிக்கை வெளியிட்டார். அதில், நீண்ட யோசனைக்கு பிறகு மனைவி ஆர்த்தியுடனான திருமண பந்தத்தில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்திருப்பதாகவும், அந்த முடிவை எளிதில் எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார். மேலும் தன்னை சார்ந்தவர்களின் நலனுக்காக இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். இந்த அறிக்கையைத் தொடர்ந்து சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த முடிவு இருவரின் சம்மதத்துடன் எடுக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். ஆனால் ஆர்த்தி ரவியோ அதற்கு மறுப்பு தெரிவித்து ஓரிரு நாட்களுக்கு பிறகு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், விவாகரத்து என ரவி எடுத்திருக்கும் முடிவானது தனது கவனத்திற்கு வராமலும், தனது ஒப்புதல் இல்லாமலும் எடுக்கப்பட்டதாகவும், தனது 18 வருட வாழ்க்கையின் கௌரவம் மற்றும் கண்ணியத்தை இந்த அறிக்கைமூலம் இழந்துவிட்டதாகவும் கூறினார். மேலும், தனது கணவரிடம் மனம்விட்டு பேசவும், அவரை சந்திக்கவும் சமீபகாலமாக பல்வேறு முயற்சிகளை எடுத்ததாகவும், ஆனால் அதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். இது ரவியின் சொந்த முடிவு மட்டுமே என்றும் குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்டதல்ல என்றும் கூறியிருந்தார்.


விவாகரத்து அறிவிப்புக்கு முன்பு மனைவி ஆர்த்தியுடன் ஜெயம் ரவி

சமூக ஊடகங்களில் பேசுபொருளான ரவி - ஆர்த்தி தம்பதி!

கடந்த 2 ஆண்டுகளில் திரைத்துறையைச் சேர்ந்த பல தம்பதிகள் அடுத்தடுத்து தங்களது விவாகரத்து குறித்து அறிவித்தபோதிலும் ரவி - ஆர்த்தி தம்பதியின் விவாகரத்தானது பெரும் சர்ச்சையாகவே பேசப்பட்டது. ரவியின் குடும்பத்தைவிட ஆர்த்தியின் குடும்பம் மிகவும் வசதியானது என்பதால் இவர்களது குடும்ப விஷயங்களில் ஆர்த்தியின் அம்மா சுஜாதாவின் தலையீடு அதிகமாக இருந்ததாகவும், மேலும் அவர்களுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் ரவியை ஹீரோவாக வைத்து படம் எடுத்துவிட்டு நஷ்ட கணக்கு காட்டி அவருக்குரிய சம்பளத்தை ஏமாற்றியதுமே ரவி இந்த முடிவு எடுக்க காரணம் என்று சொல்லப்பட்டது. இதனால் ரவி மன அழுத்தம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்துவருவதாகவும், அதற்கேற்றார்போல் ஆர்த்தியும் அன்பு என்ற பெயரில் அவரை டார்ச்சர் செய்து கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நினைப்பதாகவும் சொல்லப்பட்டது. அந்த நேரத்தில்தான் பாடகி கெனிஷாவின் பெயரும் அடிபட்டது. கோவாவைச் சேர்ந்த பாப் பாடகி கெனிஷா என்பவருடன் ரவிக்கு பழக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் அந்த பெண்ணுடனான தொடர்பால்தான் ரவி, ஆர்த்தியிடம் இருந்து விலக நினைப்பதாகவும் ஆர்த்திக்கு நெருக்கமானவர்கள் தரப்பிலிருந்து சொல்லப்பட்டது. இதுகுறித்து ரவியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, கெனிஷா ஒரு அங்கீகாரம் பெற்ற தெரபிஸ்ட் எனவும், இருவரும் சேர்ந்து ஒரு ஹீலிங் சென்டர் தொடங்கவிருப்பதாகவும் கூறினார். அந்த நேரத்தில் கெனிஷாவிடம் எடுக்கப்பட்ட பேட்டியிலும், தனக்கும் ரவிக்குமான நட்பு என்பது தொழில்முறை சார்ந்தது மட்டும்தான் என்றும், அவர் தனது நல்ல நண்பர், வாடிக்கையாளர் அவ்வளவுதான் என்றும் கூறினார். மேலும் அவர்கள் விவாகரத்துக்கு தன்னை காரணமாக காட்டுவது முற்றிலும் பொய் என்று கூறியதுடன், அந்த விவகாரத்தில் தன்னை இழுக்கவேண்டாம் என்றும் கூறியிருந்தார். இதனிடையே குடும்ப நல நீதிமன்றம் ஆர்த்தி மற்றும் ரவியை சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்துமாறு அறிவுறுத்தியிருந்தது. இருந்தாலும் ரவி அதற்கு ஒத்துழைத்ததாக தெரியவில்லை.


ஆர்த்தியுடனான பிரச்சினைக்கு நடுவே கெனிஷா பிரான்சிஸுடன் புதிய உறவில் ரவி மோகன்

சொற்போரில் ஆர்த்தி ரவி - கெனிஷா பிரான்சிஸ்

விவாகரத்து அறிவிப்புக்கு முன்பிருந்தே தனது படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைய, இனிமேல் தன்னை ஜெயம் ரவி என்று அழைக்கவேண்டாம் என்றும், ரவி மோகன் என்று அழைக்குமாறும் அறிக்கை வெளியிட்டார். ரவி மோகன் முழுக்க முழுக்க சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் என்று சொல்லப்பட்ட நிலையில், கடந்த வாரம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்திற்கு தனது தோழி கெனிஷாவுடன் வந்து பரபரப்பை கிளப்பினார். அதுவும் இருவரும் ஒரே நிறத்தில் உடையணிந்துகொண்டு, கையை பிடித்தபடி வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி மிகவும் ட்ரெண்டாகின. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டார். அதில், “கடந்த ஒரு வருடமாக மௌனத்தை ஒரு விரதமாகவே மேற்கொண்டு வருகிறேன். இதற்கு காரணம், நான் பலவீனமானவள் என்பது அல்ல. என் பேச்சைவிட என் குழந்தைகளின் அமைதியான வாழ்க்கை மிகவும் முக்கியம். என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், பழிச்சொற்கள், வசைகள் அனைத்தையும் மௌனமாகவே தாங்கிக்கொண்டேன். என் பக்கம் உண்மையும் நியாயமும் இருந்தாலும் தந்தை மற்றும் தாய் இருவரிடையே யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் குழந்தைகளுக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான்.

இப்போது உலகம் பார்க்கும் நாடகங்கள் வேறு, நடந்த உண்மை முற்றிலும் வேறு. எங்கள் விவாகரத்து வழக்கு இன்னும் சட்டப்பூர்வமாக நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் 18 வருடங்களாக நான் காதலுடனும், நம்பிக்கையுடனும் கைகோர்த்து நடந்த ஒரு மனிதன் என் கைகளை மட்டுமல்ல தன் பொறுப்புகளிலிருந்தும் கைகழுவி சென்றிருக்கிறார். என் குழந்தைகள் சிந்தும் கண்ணீரை என் கைகள்தான் துடைத்துக்கொண்டிருக்கின்றன. இன்று அவர் புதிதாக முளைத்தவர்களுடன் புதியதொரு உறவை உருவாக்கிக்கொண்டிருப்பதால் பழைய உறவு வெறும் செங்கல் சுவர் போல் காட்சியளிக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார். ஆர்த்தியின் இந்த பதிவுக்கு திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களிலும் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவைத் தொடர்ந்து தனது மகன்களுடன் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படத்தையும் ஆர்த்தி பகிர்ந்திருக்கிறார். ஆர்த்திக்கு தைரியம்கூறும்விதமாக பலரும் ஆதரவு பதிவுகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


கெனிஷாவுடன் கைகோர்த்துவந்த ரவி - ஆர்த்தி ரவி

கடுப்பை ஏற்றிய கெனிஷாவின் பேட்டி!

ஆர்த்திக்கு ஆதரவு பெருகிவரும் நிலையில், கெனிஷா பிரான்சிஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “மன அமைதியை கொடுக்கும் பெண்களால் மட்டுமே ஆண்கள் ஈர்க்கப்படுவார்கள். அவர்களுடைய இதயமும் அங்குதான் போகும். அந்த பெண்ணின் கரிசனம் வெறும் பாவனையாக இருக்காது. அது ஒரு பெரிய சக்தியாக இருக்கும். அவள் அவனுடைய வலிமையுடன் போட்டிபோடவில்லை. ஆனால் அதை சமன்செய்கிறாள். இப்படி இருக்கும்போது இருவரும் அவரவர் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்” என்று பதிவிட்டிருந்தார். இது பலரின் கோபத்துக்கும் அவரை ஆளாக்கியது. அதற்கு முன்பு அவர் அளித்த பேட்டியிலும் தனக்கு இரண்டு சோல்மேட் இருப்பதாக கூறியிருந்தார். அதில் ஒருவர் நெருங்கிய தோழி என்றும், மற்றொருவர் கோபமே படமாட்டார் என்றும் கூறியிருந்தார். அந்த உறவை பற்றி மேலும் கூறுகையில், அவர்களுக்கிடையேயான புரிதல் என்பது வேறு லெவலில் இருப்பதாகவும், பாதுகாப்பு, மரியாதை எல்லாம் கிடைப்பதுடன், அந்த உறவு எந்த பிரச்சினையும் இல்லாமல் சுலபமாக போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அந்த நபர் யார் என்று கேட்டதற்கு பெயரை குறிப்பிடவில்லை. இந்நிலையில் அது ரவி மோகன்தான் என இப்போது நெட்டிசன்கள் அவரை கடுமையாக சாடி வருவதுடன், அவர்மீதிருந்த மரியாதை போய்விட்டதாகவும், அவரிடம் இதை எதிர்பார்க்கவில்லை எனவும் கூறிவருகின்றனர். ஆர்த்திக்கு ஆதரவாக நடிகை குஷ்பு, ராதிகா போன்றோர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


ஆர்த்தி மற்றும் கெனிஷா குறித்து ரவி மோகன் வெளியிட்ட அறிக்கை

இந்நிலையில் தனது மௌனம் தவறாக புரிந்துகொள்ளப்படுவதாக ரவி மோகன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், சமீபத்திய பொது தோற்றங்களின் அடிப்படையில், பொய்யான குற்றச்சாட்டுகளால் பொதுவெளியில் அவதூறு செய்யப்படுவதாகவும், திருமண வாழ்க்கையிலிருந்து விலகினாலும் குழந்தைகளைவிட்டு விலகமாட்டேன் எனவும் கூறியிருக்கிறார். மேலும் நிதி ஆதாயத்திற்காகவும், அனுதாபத்திற்காகவும் தனது மகன்கள் கருவிகளாக பயன்படுத்தப்படுகிறார்கள் எனவும், அவர்களை பார்க்க அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறியிருக்கிறார். தனது முன்னாள் மனைவி மற்றும் அவரது குடும்பத்தை தனக்குள்ள எல்லாவற்றையும் கொடுத்து ஆதரித்ததாகவும், ஆனால் அவர்களுடைய சுபாவத்தை அறிந்து குடும்ப வாழ்க்கையிலிருந்து விலக அதிக வலிமை தேவைப்பட்டது என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அதில் குறிப்பாக, கெனிஷா பற்றி பேசியுள்ள ரவி, முதலில் தோழியாக அறிமுகமான கெனிஷா, இப்போது துணையாக மாறியிருப்பதாகவும், தன் வாழ்க்கையில் ஒளியை கொண்டுவந்தவர் அவர்தான் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இவ்வளவு நாட்கள் முதுகில் குத்தப்பட்டதாகவும், இப்போது நெஞ்சில் குத்தப்பட்டிருப்பதாகவும் இத்தனை நாட்கள் ஆர்த்தியின் குடும்பம் தன்னை பொன் முட்டையிடும் வாத்தாக பயன்படுத்தியதாகவும் ரவி கூறியிருக்கிறார். மேலும், ஆர்த்தி தன்னை கணவனாக மதிக்கவே இல்லை என்றும், கடந்த 5 வருடங்களாக, தன் பெற்றோருக்கு ஒரு பைசா கூட தன்னால் கொடுக்கமுடியவில்லை என்றும், சினிமா துறையில் இருப்பவர்களுக்கு உண்மை தெரியும் என்றும் அறிக்கையில் ரவி மோகன் குறிப்பிட்டுள்ளார்.

Updated On 20 May 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story