நடிகர் அஜித் நேற்று முன்தினம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி வெளியானதுதான் தாமதம், பல்வேறு வதந்திகள் சுழல ஆரம்பித்துவிட்டன. ஆனால் ஒருவழியாக நடிகர் அஜித் உடல்நலம் தேறி இன்று காலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் அவரது ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.

"விடாமுயற்சி அஜித்"

துணிவு திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித், மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்னும் வெளியிடப்படாத நிலையில், படத்தில் நடிப்பவர்கள் பற்றிய தகவல் மட்டும் இணையத்தில் வெளியானது. திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். அர்ஜுன், பிக்பாஸ் ஆரவ், ரெஜினா கெஸாண்ட்ரா போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் 15-ம் தேதி அஸர்பைஜான் நாட்டில் தொடங்கவுள்ளது.


விடாமுயற்சி படத்தின் டைட்டில் போஸ்டரில் இடம்பெற்ற நடிகர் அஜித்தின் தோற்றம்

மருத்துவமனையில் அனுமதி

விடாமுயற்சி படப்பிடிப்பு சூழலுக்கு இடையேதான் அஜித் குமார் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காகவே அனுமதிக்கப்பட்டதாக அஜித் தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்த தகவல் வெளியான சிறிது நேரத்திலேயே, சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் வேகமாக பரவின. அஜித்துக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதனை அகற்ற சுமார் 4 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் அஜித்துக்கு ஏற்கனவே அடிபட்ட முதுகு தண்டுவட பகுதியில் ஏதோ பாதிப்பு இருப்பதும் தற்போது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இப்படி பரவிய தகவல்களால், அஜித்தின் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.


வெளிநாட்டு படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்

இதனைத்தொடர்ந்து அஜித் தரப்பில் இருந்து மீண்டும் விளக்கம் அளிக்கப்பட்டது. அஜித்துக்கு மூளையில் கட்டி இருப்பதாக சொல்லப்படுவதில் உண்மையில்லை. அவர் வழக்கமான உடல் பரிசோதனை மேற்கொண்டபோது காதுகளுக்கு கீழ் இருந்து மூளைக்கு செல்லக்கூடிய நரம்பு ஒன்றில் வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டு, உடனடியாக சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அதுவும் அரை மணிநேரம் மட்டுமே நடந்ததாகவும், தற்போது அஜித் நல்ல உடல்நலத்தோடு இருப்பதாகவும், அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா கூறினார். அனைத்துக்கும் மேலாக அஜித்தின் மனைவி ஷாலினி நேற்று மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் "He is well" என்றொரு ட்வீட்டை பதிவிட்டு, அஜித் நலமுடன் இருப்பதாக தெரிவித்து, ரசிகர்களை ஆஸ்வாசப்படுத்தினார்.

மருத்துவமனையிலிருந்து அஜித் டிஸ்சார்ஜ்

இந்நிலையில் மருத்துவமனையில் ஓய்வு எடுத்துவந்த நடிகர் அஜித் இன்று காலை சுமார் 5 மணியளவில் தன்னுடைய வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்த தகவலை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அஜித் முழு உடல்நலம் பெற்றுவிட்டதாகவும், மருத்துவமனையில் நேற்று ஓய்வில் இருந்த அவரை பல திரைப்பட இயக்குநர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாகவும், அவர்களுடன் அஜித் பேசி மகிழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


மேலாளர் சுரேஷ் சந்திரா மற்றும் நடிகர் அஜித்

வதந்திகளை நம்பாதீர்கள்

அஜித் முழு உடல்நலன் பெற்று வீடு திரும்பிவிட்ட நிலையில், வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று சுரேஷ் சந்திரா கேட்டுக்கொண்டுள்ளார். அஜித்துக்கு மூளையில் கட்டி, தொடர்ந்து ஐசியு-வில் கண்காணிப்பு, படப்பிடிப்புகள் ரத்து, மூன்று மாதம் ஓய்வு என பரவிவரும் எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம் என்றும், அடுத்த வாரம் அஸர்பைஜான் நாட்டில் நடக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பில் அஜித் கண்டிப்பாக கலந்துகொள்வார் என்றும் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.

Updated On 9 March 2024 8:45 AM GMT
ராணி

ராணி

Next Story