நாளை வெளியாகவுள்ள தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 108 வது படமான 'பகவந் கேசரி ' திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை நாக்ஸ் ஸ்டூடியோஸ் பெற்றுள்ளது.

சென்னையைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனமான நாக்ஸ் ஸ்டூடியோஸ் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் நாக்ஸ் ஸ்டூடியோஸ் அதன் முதல் வெளியீடாக பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால், மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படமான 'பகவந்த் கேசரி'யின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. இத்திரைப்படம் நாளை முதல் தமிழகத்தின் பல முக்கிய தியேட்டர்களில் திரையிடப்படுகின்றது. முழுக்க முழுக்க நடிகர் பாலகிருஷ்ணாவிற்கே உரிய அதிரடி ஆக்சன் படமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது .


இந்த படம் நாளை வெளியிடப்படுவதையொட்டி தெலுங்கு தேச கட்சியின் பிரமுகர்களும், அவரது ரசிகர்களும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த படத்திற்காக ஆந்திரா மட்டுமல்லாது நடிகர் பாலகிருஷ்ணாவின் ஒட்டுமொத்த ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் ஆந்திர சட்டசபையில் விசிலடித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் பால கிருஷ்ணா இந்த படத்திலும் ஒரு கலக்கு கலக்குவார் என தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், நாக்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தனது பெயரிடப்படாத, தமிழில் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது. மேலும் நாக்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தினர் கூறுகையில் தரமான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட சிறந்த திரைப்படங்களை தமிழ் ரசிகர்களுக்கு வழங்குவதே எங்களது நோக்கம் என்றும், நாக்ஸ் ஸ்டூடியோவின் இதர திரைப்படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.


Updated On
ராணி

ராணி

Next Story