இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

போரடித்ததால் மதம் மாறிய நடிகர் லிவிங்ஸ்டன்

தமிழ் சினிமாவில், 1980 மற்றும் 90களில் திரைக்கதை எழுத்தாளர், ஹீரோ, குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை என பன்முகத்திறமையாளராக புகழ்பெற்று விளங்கியவர்தான் நடிகர் லிவிங்ஸ்டன். துவக்க காலத்தில் இயக்குநர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், விஜயகாந்தின் முயற்சியால், 1988- ஆம் ஆண்டு வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து ‘சுந்தர புருஷன்’, ‘சொல்லாமலே’, ‘சுயம்வரம்’, ‘பூமகள் ஊர்வலம்’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘எங்களுக்கும் காலம் வரும்’, ‘என் புருஷன் குழந்தை மாதிரி’, ‘வானத்தை போல’ என வரிசையாக ஹீரோ, துணை கதாபாத்திரம் என தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இதற்கிடையில், வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் கால்பதித்த நடிகர் லிவிங்ஸ்டன் பொதிகை, சன் டிவி, ஜீ டிவி, ஆகிவற்றில் ஒளிபரப்பான ‘கண்ணே கலைமானே’, ‘பூவே பூச்சூடவா’, ‘செம்பருத்தி’ உள்ளிட்ட தொடர்களிலும் நடித்து அங்கும் தன்னை மிகச்சிறந்த நடிகராக நிரூபித்து மக்கள் மனங்களில் இடம்பிடித்தார்.


நடிகர் லிவிங்ஸ்டன் அவரது மனைவி ஜெசிந்தாவுடன்

இந்த நிலையில், கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த லிவிங்ஸ்டன், தனது மதத்தில் இருந்து விலகி, தற்போது இந்து மதத்தில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை நடிகர் லிவிங்ஸ்டனே அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள அந்த பேட்டியில், “இத்தனை ஆண்டுகள் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வந்தேன். நீண்ட காலமாக ஒரே மதத்தில் இருந்து எனக்கு போரடித்துவிட்டது. அதனால், நான் இப்போது இந்து மதத்திற்கு மாறியுள்ளேன். எனக்கு கடவுள் கிருஷ்ணரைப் பிடிக்கும். அதனால், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்பில் இணைந்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். நடிகர் லிவிங்ஸ்டனின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன், நெட்டிசன்கள் பலரும் ’எப்படி ஒரு மதம் போர் அடித்து விடும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அப்படியென்றால் இவ்வளவு காலம் உங்கள் மதத்தை நீங்கள் உண்மையாக நேசிக்க வில்லை' என தெரிவித்து விமர்சித்து வருகின்றனர்.

கார்த்திக் சுப்பராஜை அசரவைத்த ரசிகர்

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் ‘ஜிகர்தண்டா’ திரைப்படம். இப்படத்தின் கதையை மையக் கருவாகக் கொண்டு சற்று வித்தியாசமான கதைக்களத்தில், 9 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற பெயரில் இரண்டாம் பாகத்தினை இயக்கி வெளியிட்டார் கார்த்திக் சுப்பராஜ் . ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் போன்ற நடிகர் நடிகைகளை முன்னிறுத்தி கடந்த நவம்பர் மாதம் 10-ஆம் தேதி அன்று வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் சினிமா மீது அதிக ஆர்வம் கொண்ட ராகவா லாரன்ஸிற்கு, அவரின் அபிமான ஹீரோவாக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்ட ஹாலிவுட் பிரபலமான கிளின்ட் ஈஸ்ட்வுட் பற்றி காட்டப்படுவதுடன், அவர் தொடர்பான ஒரு வசனமும் இடம்பெற்றிருக்கும். படத்தில் அவருக்கென்று ஒரு மெகா சைசில் கட் அவுட்டும் வைக்கப்பட்டிருக்கும். இடையிடையே கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் பெயரும் அடிபட்டுக் கொண்டே இருக்கும். படத்தைப் பார்த்தவர்களுக்கு நிச்சயம் 'யார் இவர்?' என்கிற கேள்வி எழுந்திருக்கும்.


இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ரசிகர் ஒருவர் கிளின்ட் ஈஸ்ட்வுட்டிற்கு பகிர்ந்த ட்வீட்

இந்த நிலையில், விஜய் என்ற சினிமா ரசிகர் ஒருவர் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தை பார்த்தது மட்டுமின்றி அப்படம் குறித்து கிளின்ட் ஈஸ்ட்வுட்டிற்கு டேக் செய்து, நான் ஒரு இந்தியன். தமிழ் திரையுலகில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என்ற ஒரு படம் வெளிவந்துள்ளது. இப்படம் தற்போது Netflix என்ற ஓடிடி தளத்தில் பார்க்கக் கிடைக்கிறது. இந்த படம் உங்களுக்கான Tribute -டாகவே பார்க்கிறோம். நீங்கள் இளம் வயதில் இருக்கும் அனிமேஷன் காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக இந்த படத்தினை பாருங்கள் என பதிவு செய்திருந்தார். விஜய் என்ற ரசிகரின் இந்த ட்வீட்டிற்கு பதிலளிக்கும் விதமாக, கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் அதிகாரப்பூர்வமான எக்ஸ் பக்கத்தில், வணக்கம்... கிளின்ட் இந்தப் படத்தைப் பற்றி அறிந்திருக்கிறார். மேலும் அவர் தனது 'Juror 2' என்ற புதிய படம் ஒன்றில் நடித்து கொண்டிருக்கிறார். அதனை முடித்தவுடன் நிச்சயம் இந்த படத்தினை பார்ப்பார். நன்றி என பதிவிடப்பட்டுள்ளது. தற்போது ஒரு தமிழ் ரசிகரின் பதிவிற்கு மதிப்பளித்து கிளின்ட் ஈஸ்ட்வுட் பதிலளித்து போட்டுள்ள இந்த ட்வீட்டை தமிழ் சினிமா ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து ரசிகர் மற்றும் கிளின்ட் ஈஸ்ட்வுட் இடையே நடந்த இந்த உரையாடலை தெரிந்துகொண்ட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், தனது எக்ஸ் பக்கத்தில் ஆச்சரியம் நிறைந்த உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ஹாலிவுட் பிரபலமான கிளின்ட் ஈஸ்ட்வுட் எனது படமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பற்றி அறிந்திருப்பதாகவும், அப்படத்தினை விரைவில் பார்ப்பதாகவும் தெரிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. படத்தைப் பார்த்து விட்டு ஈஸ்ட்வுட் கூறும் கருத்துகளுக்காகக் காத்திருக்க முடியவில்லை. இப்போது நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். இதை சாத்தியப்படுத்திய ரசிகருக்கு நன்றி “ என பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

நரேன் சொன்ன ‘LCU’ ரகசியம்


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் நரேன்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் 'கைதி'. இப்படத்தில் இடம்பெற்றிருந்த அதிரடி ஆக்சன் காட்சிகளும், ட்விஸ்டுகளும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன், படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து 'கைதி 2' திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்ததுடன், நடிகர் கார்த்தி, இயக்குநர் லோகேஷ் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அது தொடர்பான கேள்விகளும் முன்வைக்கப்பட்டன. அப்போதெல்லாம் ‘கைதி 2’ திரைப்படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று ஒருவரை ஒருவர் மாறி மாறி பதிலளித்து வந்தார்களே தவிர, அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் அளிக்கவில்லை. இருந்தும், லோகேஷ் இயக்கத்தில் அடுத்தடுத்து கமல்ஹாசனுடன் ‘விக்ரம்’, மீண்டும் விஜய்யுடன் ‘லியோ’ என வரிசையாக படங்கள் வெளிவந்து, மாபெரும் வெற்றியை பெற்றதுடன் உலக அளவில் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில், லோகேஷ் இயக்கத்தில் 'கைதி', 'விக்ரம்' ஆகியப் படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்த நடிகர் நரேன் 'கைதி 2' திரைப்படம் குறித்த அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நரேனிடம் 'கைதி 2' படம் குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு பதிலளித்து பேசிய அவர், "லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் அதாவது எல்சியூ-வில் அடுத்ததாக வெளியாகப்போகும் படம் 'கைதி 2' தான். ஆனால், அதற்கெல்லாம் முன்னதாக எல்சியூவை கன்னெக்ட் செய்யும் விதமாக ஒரு 10 நிமிட ஷார்ட் ஃபிலிம் ஒன்றை லோகேஷ் இயக்கவுள்ளார். அதில் நானும் நடித்திருக்கிறேன். எல்சியூ-வின் தொடக்கம்தான் அந்த ஷார்ட் ஃபிலிம். அதன் பின் 'கைதி 2' வெளியாகும்". இவ்வாறு நடிகர் நரேன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் லோகேஷ் எடுக்கும் அந்த குறும்படத்தை 3 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

மீண்டும் அஜித்துடன் இணையும் அர்ஜுன்


நடிகர்கள் அர்ஜுன் மற்றும் அஜித்துடன் பிக்பாஸ் ஆரவ் எடுத்துக்கொண்ட புகைப்படம்

நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலேயே நடைபெற உள்ளதாக சொல்லப்படும் நிலையில், சமீபத்தில்தான் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துக்கொண்டு நடிகர் அஜித் சென்னை திரும்பினார். பின்னர் மீண்டும் படப்பிடிப்பிற்காக அஜித் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்ற போது அவருடன் நடிகை திரிஷாவும் உடன் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், இதன் மூலம் அப்படத்தில் நடிகை திரிஷாவும் நடிப்பது உறுதியானது. ஏற்கனவே இப்படத்தில் நடிகர் அஜித்துடன் நடிகைகள் பிரியா பவானி ஷங்கர், ரெஜினா மற்றும் நடிகர் ஆரவ் எனப் பல பிரபலங்கள் நடித்து வரும் நிலையில், தற்போது மீண்டும் புதிதாக ஆக்சன் கிங் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் அர்ஜுனும் இணைந்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், நடிகர் ஆரவ் தனது எக்ஸ் பக்கத்தில் அஜித் மற்றும் அர்ஜூனுடன் இணைந்து ரெஸ்டாரண்ட் ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அஜித் மற்றும் அர்ஜுன் ஒன்றாக இருக்கும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோன்று நடிகர் அர்ஜுன் தன் பங்கிற்கு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு 'இந்த புகைப்படத்தை எடுத்தது யார் என guess பண்ணுங்க' என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவினை கண்ட ரசிகர்கள் அது 'விடாமுயற்சி' படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித் எடுத்த ஃபோட்டோவாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே அஜித் - அர்ஜுன் கூட்டணி ‘மங்காத்தா’ படத்தில் பெரிய அளவில் ஹிட் அடித்ததால், இந்த படத்திலும் நிச்சயம் ஹிட் ஆகி வெற்றி பெறும் என்று அவர்களது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

நாயகியாக 21-ஆம் ஆண்டில் திரிஷா


நடிகை திரிஷா ரசிகர்களுக்காக பகிர்ந்த ட்வீட்

இயக்குநர் அமீர் இயக்கத்தில், சூர்யா, திரிஷா, லைலா ஆகியோரது நடிப்பில், 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் ‘மௌனம் பேசியதே’. இப்படம் வெளியாகி 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால், அதனை கொண்டாடும் விதமாக இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து இயக்குநர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதேபோன்று ஜோடி போன்ற ஒரு சில படங்கள் வாயிலாக துணை நடிகையாக தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்த திரிஷா, அதன் பிறகு அமீரின் ‘மௌனம் பேசியதே’ படம் மூலமாகத்தான் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இதற்கு பிறகு ‘சாமி’, ‘லேசா லேசா’, ‘எனக்கு 20 உனக்கு 18’, ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘ஆறு’, ‘உனக்கும் எனக்கும்’ என தொடர் வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். இதன்பிறகு புதிய நடிகைகளின் வரவுகள் அதிகரித்தாலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டு, தொடர்ந்து அடுத்த தலைமுறை நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தார். அப்படி விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘96’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியையும், புகழையும் பெற்றுத்தந்தது. இதனையடுத்து, மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் இணைந்து ‘பொன்னியின் செல்வன்‘ பாகம் ஒன்று மற்றும் இரண்டில் குந்தவையாக நடித்து உலக அளவில் புகழ்பெற்ற திரிஷா சமீபத்தில் விஜய்யுடன் இணைந்து ‘லியோ’ படத்திலும் நடித்திருந்தார். இவ்விரு படங்களாலும் மீண்டும் ரசிகர்களின் மனதில் அசைக்க முடியாத இடத்தினை பிடித்த திரிஷா தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். மேலும் தற்போதுவரை தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை திரிஷா, இத்தனை ஆண்டுகாலம் நான் இந்த துறையில் வெற்றிகரமாக பயணிக்க உறுதுணையாக இருந்துவரும் தனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

அனிமல் படத்தை விமர்சித்த விஜய் பட ஒளிப்பதிவாளர்


ஒளிப்பதிவாளர் சித்தார்த் நுனி மற்றும் 'அனிமல்' பட போஸ்டர்

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த 1ஆம் தேதி வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம்தான் 'அனிமல்'. ரன்பீர் கபூருடன், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர், பரினிதி சோப்ரா, திருப்தி டிம்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் விமர்சன ரீதியாக சுமாரான படம் என்று சொல்லப்பட்டாலும்... வசூல் ரீதியாக மாபெரும் சாதனையை நிகழ்த்தி வருகிறது. படம் வெளியாகி 13 நாட்களில் 500 கோடியை எட்டியுள்ளது. இந்த நிலையில், இப்படத்தினை கடுமையாக விமர்சித்து தனுஷின் ‘கேப்டன் மில்லர்’, ‘விஜய் 68’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துவரும், சித்தார்த் நுனி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “ ‘அனிமல்’ திரைப்படத்தினை ஹைதராபாத்தில் பார்த்தேன். பெரிதாக கவரும் படியான விஷயங்கள் ஒன்றும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இப்படம் ஆபாசத்தின் உச்சமாக உள்ளது. படத்தின் இறுதியில் மனைவியை பலாத்காரம் செய்வது, திரையரங்கில் படம் பார்த்து கொண்டிருக்கும் ரசிகர்களை நோக்கி மோசமான சைகை காட்டுவது போன்ற காட்சிகள் எல்லாம் அருவருக்கத்தக்க வகையில் இடம்பெற்றுள்ளது. ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை நிறைய பேர் குழந்தைகளுடன் வந்து பார்ப்பது மிகவும் வேதனையாக உள்ளது. எந்த ஒரு சமூக அக்கறையும் இல்லாமல் எப்படி குழந்தைகளை பார்க்க அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. வசூல் ரீதியாக சாதனை படைத்தாலும், சிறந்த படம் என்றெல்லாம் சொல்ல முடியாது”. இவ்வாறு அந்த பதிவில் சித்தார்த் நுனி தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Updated On 25 Dec 2023 7:28 PM GMT
ராணி

ராணி

Next Story