இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

(28-08-1983 தேதியிட்ட 'ராணி' இதழில் வெளியானது)

பிரபுக்கு முதல் விமர்சகர் அவருடைய அம்மாதான்! அப்போது அப்பா? "என் நடிப்பு உலக வழி காட்டி, நல்ல ஆலோசகர்" என்று சொன்னார், பிரபு. பிரபுவிடம் கேட்ட கேள்வியும், கிடைத்த பதிலும் வருமாறு:-

நிரு: நீங்கள் புதுப்படம் ஒப்புக் கொள்வதற்கு முன், உங்கள் தந்தை சிவாஜி கணேசனிடம் ஆலோசனை கேட்பது உண்டா?

பிரபு: என் அப்பாவை சில சமயங்களில் பார்ப்பதற்கே 15 நாள், 20 நாள் ஆகிவிடும். நான் வெளிப்புறப் படப்பிடிப்பில் தங்கியிருக்கும் பொழுது, அப்பா சென்னையில் படப்பிடிப்பில் இருப்பார். நான் சென்னைக்கு வரும்பொழுது, அப்பா வெளியூருக்குப் போய்விடுவார், அப்பா வீட்டில் இருக்கும்பொழுது, அவருடைய ஆலோசனைப்படியே புதுப்படங்களை ஏற்றுக் கொள்வேன். அப்பா இல்லாதபோது, சித்தப்பா கவனித்துக் கொள்வார். அப்பா வீட்டில் இருக்கும் பொழுது. அவரிடம் ஆசி பெறாமல் யாரும் வெளியே செல்லமாட்டோம்.


அப்பா சிவாஜி மற்றும் அம்மா கமலாவுடன் பிரபு

ஆலோசனை

நிரு: உங்கள் தந்தை தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஆலோசனை சொல்லுவது உண்டா?

பிரபு: நிறையச் சொல்லுவார். தயாரிப்பாளர், டைரக்டரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும். என்பதை, சின்னக் குழந்தைக்கு சொல்லித் தருவது போல எனக்கு சொல்லித் தருவார்.

நிரு: எப்படி நடிக்க வேண்டும் என்று பயிற்சி அளிப்பது உண்டா?

பிரபு: சிக்கலான பாத்திரங்களை ஏற்கும்பொழுது, அதை எப்படி செய்வது என்று அப்பாவிடம் கேட்பேன், குறிப்பிட்ட காட்சியில் முகபாவம் எப்படி இருக்க வேண்டும்; எந்தக் கோணத்தில் நிற்க வேண்டும்; நடை எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு பயிற்சி அளிப்பார்.


நடிகர் பிரபு மனைவி மற்றும் குஷ்புவுடன்

மனைவி

நிரு: நீங்கள் காதல் காட்சிகளில் நடிகைகளுடன் நெருங்கி நடிப்பதைப் பற்றி உங்கள் மனைவி விமர்சனம் செய்வது உண்டா?

பிரபு: அதுபற்றி என் மனைவி என்னிடம் எதுவும் பேசுவது இல்லை. கலைக் குடும்பத்தைச் சேர்ந்த அவளுக்கு எது அசல்; எது போலி என்பது தெரியும். எனவே, சினிமாவில் போடும் வேடத்தைப் பற்றி அவள் எதுவும் சொல்லுவது இல்லை மிகவும் அமைதியானவள்.

நிரு: உங்கள் நடிப்பைப் பற்றி வீட்டில் யாரும் விமர்சிப்பது உண்டா?

பிரபு: நான் நடித்த படம் வெளிவந்ததும். அதைப் பார்த்துவிட்டு முதல் விமர்சனம் கொடுப்பவர் என் அம்மாதான். சின்னம்மா, அக்கா சாந்தி ஆகியோரும் எனது படத்தில் உள்ள நிறை குறைகளை என்னிடம் நேரடியாகக் கூறுவார்கள். 'சின்னஞ் சிறுசுகள்' என்ற படத்தில், கடைசியில் நான் இறந்து போவதாக காட்சியை அமைத்து இருந்தார்கள். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்து, "இறந்து போகும். காட்சியில் ஏன் நடித்தாய்?" என்று வீட்டில் எல்லோரும் கேட்டார்கள்.


நடிகர் பிரபு

உடல் பயிற்சி

நிரு: உடல் கனத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள என்ன செய்கிறீர்கள்?

பிரபு: முன்பு குதிரை சவாரி செய்து வந்தேன். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் தொடர்ந்து செய்ய முடியவில்லை. இப்பொழுது தினமும் படப்பிடிப்பு இருப்பதால், அதுவே, நல்ல பயிற்சி ஆகிவிடுகிறது. அத்துடன் சாப்பாட்டை கொஞ்சம் குறைத்துவிட்டேன்.

நிரு: நீங்கள் அம்மா பிள்ளையா? அப்பா பிள்ளையா?

பிரபு: இரண்டு கண்ணில் எது வேண்டும் என்று கேட்கிறீர்கள். எனக்கு இரண்டு கண்ணும் தேவை. எந்தக் கண்ணையும் நான் குத்திக்கொள்ள மாட்டேன்.



தந்தை சிவாஜி மற்றும் படக்குழுவினருடன் பிரபு

அரசியல்

நிரு: உங்களை கட்சி விழாக்களுக்கு தொண்டர்கள் அழைப்பது உண்டா?

பிரபு: நான் எந்தக் கட்சியிலும் இல்லை. என் ரசிகர்களும் கட்சி சார்பு உடையவர்கள் அல்ல. எனவே, என்னை யாரும் அழைப்பது இல்லை. அப்படியே அழைத்தாலும். நான் கலந்துகொள்ள மாட்டேன் என்பது அவர்களுக்குத் தெரியும். எனக்கு அரசியலைப் பற்றி எதுவும் தெரியாது. அப்பாவைப் பார்க்க வரும் அரசியல்வாதிகளையும் நண்பர்களையும் மட்டுமே தெரியும்.

Updated On 18 Sep 2023 6:48 PM GMT
ராணி

ராணி

Next Story