இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

வானொலியில் ரேடியோ ஜாக்கியாக இருந்து தற்போது வெள்ளித்திரையில் இயக்குநராக வளர்ந்துள்ள பாப் சுரேஷ், தன்னைப்பற்றியும், தனது திரை அனுபவம் பற்றியும் ராணி ஆன்லைன் நேயர்களுக்கு அளித்த நேர்காணலின் இரண்டாம் பாகத்தை காணலாம். இதில் தனக்குப்பிடித்த நடிகர் நடிகையர், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் பற்றியெல்லாம் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகராக வர விரும்புபவர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

தற்போது விஷுவல் மீடியா மட்டுமே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி ஹிட்டடித்துள்ளது. காரணம் சினிமா, சீரியல், மீடியா ப்ரொமோஷன் போன்றவைகளுக்கு விஷுவல் மீடியா தேவைப்படுகின்றது. மேலும் விளம்பரம் இல்லாமல், ப்ரொமோஷன் இல்லாமல் எந்தவொரு நிகழ்வையும் நாம் செய்யமுடியாது. ப்ரொமோஷன் மற்றும் விளம்பரம் இரண்டுமே அழிக்கமுடியாத ஒன்றாகும். எனவே தற்போது விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பை படிப்பவருக்கு வேலைவாய்ப்பு என்பது பரந்து விரிந்துள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவும் (AI ) இதில் ஒரு அங்கமாக இணைந்துள்ளதால், மீடியா தறையில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.


எனக்குப் பிடித்த இசையமைப்பாளர்கள் - பாப் சுரேஷ்

தொலைக்காட்சியில் பிரபலம் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இப்படி வர விரும்பும் நபர்கள் முதலில் நடிப்பை கற்றுக் கொள்ளவேண்டும். அது மட்டுமன்றி இயக்குநர் என்கிற திறனை தன்னுள் வளர்த்துக் கொள்ளவேண்டும். தொலைக்காட்சிகளை பொறுத்தவரையில் எளிதாக வேலைவாய்ப்புகளை பெறலாம். ஆனால் சினிமாவை எடுத்துக் கொண்டால் படத்தை இயக்குவதும் நடிப்பதும்தான் கடினமான ஒன்று. இதில் அவ்வளவு எளிதாக வேலைவாய்ப்புகள் கிடைப்பது அரிதான ஒன்று. அப்படி ஒரு ஹிட் கிடைத்தால் நீங்கள் பெரும் வளர்ச்சியை காண முடியும். மொத்தம் இருக்கின்ற 24 மீடியா துறைகளில் எல்லாவற்றுக்குமே வேலைவாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் நடிப்பு, இயக்குநர் துறைகளில் மட்டுமே மன அமைப்பு (மைண்ட்செட்) என்பது தேவைப்படுகிறது. ஒரு இலக்கை நிர்ணயித்துவிட்டு ஒரு நல்ல இயக்குநரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தாலே கூட இதில் பெரிய வெற்றியை நம்மால் பெற முடியும். ஆனால் மும்பை அளவிற்கு நாம் இன்னும் வரவில்லை. காரணம் சினிமாவில் அந்தந்த பணிகளுக்குரிய ஊதியம் வழங்குவதில் பெரும் சிக்கல் இங்கே உள்ளது.

குறும்படம் மற்றும் சினிமாவை இயக்கவிரும்பும் இளைய தலைமுறையினருக்கு நீங்கள் கூற விரும்பும் அறிவுரை?

இதற்கு தேவையானது, ஒரு நல்ல சரியான குழு அமைவதுதான். அடிப்படையாக நாம் பார்ப்போமானால் ஒரு இயக்குநர், சொந்தமாக கேமரா வைத்திருக்கும் ஒரு கேமராமேன், ஒரு எடிட்டர் என இருக்கவேண்டும். அதிலும் அவர்களில் எவரேனும் நடிகராக இருந்தால்கூட எளிதாக ஒரு குறும்படத்தை எடுத்துவிடலாம். இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால் ஒரு நண்பர்கள் குழுவில் ஒரு இயக்குநர், ஒரு கேமராமேன், ஒரு நடிகர், ஒரு எடிட்டர், ஒரு இசையமைப்பாளர் போன்றோர் இருப்பார்களானால் குறும்படம் எடுப்பது என்பது எளிதான காரியமாகும்.


மிகவும் பிடித்த திரைக்கதை தயாரிப்பாளர்கள் சுஜாதா & மெளலி - பாப் சுரேஷ்

உங்களுக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்கள் யார்?

எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான். இவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம் சிறுவயது முதலே ராஜா சாரின் பாடல்களைதான் கேட்டு வளர்ந்தோம். ஒரு இருபது வருட காலம் அவர் இசையே மேலோங்கியிருந்தது. அதன்பின்னர் ஒரு புதிய இசை அலையாக வந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அவர்களுக்கு பிறகு ஒரு பெரிய இடைவெளி இசையுலகில் ஏற்பட்டது. அதன் பின்னர் வந்த எல்லா இசையமைப்பாளர்களுமே இவர்களது இசையையே பிரதிபலித்துள்ளனர். ஆனால் தற்போதுள்ள சூழலில் இசையமைப்பாளர் அனிருத் கலக்கிக் கொண்டிருக்கின்றார்.

உங்களுக்குப் பிடித்த திரைக்கதை தயாரிப்பாளார் யார்?

நம்ம ஊரில் திரைக்கதை தயாரிப்பாளார்கள் என்றதுமே என் நினைவுக்கு வருபவர் திரைக்கதை எழுத்தாளர் சுஜாதாதான். அவரளவிற்கு யாரும் இன்று இல்லை என்றுதான் நான் சொல்வேன். அவரின் புத்தகங்களை, அதுவும் அவருடைய அறிவியல் சார்ந்த கதைகளை நான் நிறைய படித்துள்ளேன். ஒரு இயக்குநர் ஒருவரியில் கதை ஒன்றைச் சொன்னால், அந்தக் கதைக்கேற்ப திரைக்கதையை தயாரிப்பதில் சுஜாதா ஒரு நிபுணர் என்றே நான் சொல்வேன்.

நடிகரும் இயக்குநருமான மௌலி குறித்து கூற முடியுமா?

அவர் ஒரு சிறந்த மேடை கலைஞர். பல படங்களுக்குத் திரைக்கதை அமைத்துள்ளார். சீரியசான விஷயத்தைக்கூட அழகாக காமெடியாகச் சொல்லிவிட்டு சென்றுவிடுவார். அவர் குறைந்த அளவு படங்களே இயக்கியிருந்தாலும், அவரது படங்கள் எல்லாம் மலையாள படங்களை போன்று யதார்த்தமாக இருக்கும். இப்போதைய தலைமுறையினருக்கு அவர் ஒரு பெரிய முன்னுதாரணம் ஆனவர்.


பாப் சுரேஷுக்கு பிடித்த நடிகர் ரஜினிகாந்த் - நடிகை ஸ்ரீதேவி

இப்போதுள்ள நடிகர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார்?

சூப்பர்ஸ்டார்.ரஜினிகாந்த் மிகவும் பிடிக்கும். எனக்கு அவர் மிகச்சிறந்த உத்வேகமும் உதாரணமும் ஆனவர். அதேபோன்று வட இந்திய நடிகரான ஷாருக்கான், ஆங்கிலப்பட நடிகர் வில்ஸ்மித் ஆகியோரையும் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் இவர்கள் எல்லோருமே எங்கேயோ இருந்து வந்து இந்த கடினமான துறையில் முன்னணியில் உள்ளனர். ஒரு பஸ் நடத்துனராக வேலை செய்து நண்பர் கொடுத்த பணத்தில் சென்னைக்கு வந்து நடிப்பு பயின்று இன்று ரஜினிகாந்த் நம்பர் 1-ஆக உள்ளார். அதே போன்றுதான் நடிகர் ஷாருக்கும் டெல்லியில் இருந்து மும்பைக்கு வந்து பெரிய ஆளாகியுள்ளார். அதே போன்றுதான் ஆங்கிலப்பட நடிகர் வில்ஸ்மித்தும். எனவே இவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.

உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகை யார்?

எனக்கு மிகவும் பிடித்த நடிகை என்றால் அது ஸ்ரீதேவிதான். அவர் இந்தியா முழுவதும் கலக்கிய ஒரு நல்ல நடிகை. 70-களில் இங்கேயும் 80-களில் தெலுங்கு திரைப்பட துறையிலும், பின்னர் இந்தி திரைப்பட துறையிலும் கலக்கியவர். இப்போதுள்ள நடிகைகளில் ராஷ்மிகா மந்தனா பிடிக்கும். தேசிய அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகின்றார். அவர் தெற்கிலிருந்து வடக்கிற்குசென்று பாலிவுட்டில் கலக்கி புகழ் பெற்று வருகின்றார். அவர் நடிக்கும் கதாபாத்திரங்களும் சூப்பராக உள்ளது. புஷ்பா திரைப்படம் 2-ல் கூட அவர் நல்ல கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

தற்போதைய தமிழ் நடிகர்களில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?

எனக்கு நடிகர் ரஜினிகாந்துக்கு பிறகு நடிகர் அஜித் குமாரை மிகவும் பிடிக்கும். அவரும் எனக்கு ஒரு நல்ல முன்னுதாரணம். காரணம் உடலில் பல பிரச்சனைகள் இருந்தாலும், சில நேரங்களில் தோல்வி படங்களை கொடுத்தாலும், அவர் சொல்லும் அந்த ஆங்கில வாக்கியமான "IF AND WILL BUT NOT YOUR LIFE" என்பது எனக்கு பிடிக்கும். இந்த வாக்கியத்தை நானும் அடிக்கடி உச்சரிப்பேன். பில்லா படத்திற்கு முன்னர் அவர் சில தோல்வி படங்களைக் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் கேட்டதற்கு அவர் உச்சரித்த வார்த்தைகள்தான் அவை. அதே போன்று அவர் பல பெரிய திரைப்பட வாய்ப்புகளை தவறவிட்டும் இருக்கின்றார். மேலும் எனக்கு நடிகர் சியான் விக்ரமும் மிகவும் பிடிக்கும். காரணம் அவர் நீண்ட போராட்டத்திற்கு பின்னரே வெற்றி பெற்றார். தமிழ் ஹிட் பட இயக்குநர் ஸ்ரீதரின் திரைப்படத்தில் அறிமுகமானாலும்கூட விக்ரமால் வெற்றியை உடனடியாக தொட முடியவில்லை. அதன்பின்னர் டப்பிங் கலைஞராக நடிகர் பிரபு தேவாவிற்கு குரல் கொடுத்தும், பல போராட்டங்களை சந்தித்தும் ஒரு வெற்றிகரமான பெரிய நடிகராகிவிட்டார். அவரும் எனக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றார்.


தற்போதுள்ள நடிகர்களில் அஜித் & விக்ரம் பிடிக்கும் - பாப் சுரேஷ்

உங்களது நடிப்பை பார்த்துவிட்டு உங்களை பாராட்டிய நடிகர் நடிகைகள் யார்?

நான் "தமிழும் சரஸ்வதியும்" சீரியலில் நடித்தபோது என் காமெடியை எல்லோருமே ரசித்தனர். பாராட்டும் கைதட்டலும் பெற்றேன். அதேபோன்று எனது திரைப்படமான "இரவின் கண்கள்" படம் பார்த்துவிட்டும் எனது நண்பர்கள் என்னை பாராட்டினார்கள்.

நீங்கள் தவறவிட்ட நடிப்பு வாய்ப்புகள் உண்டா?

நிச்சயம் உண்டு. நான் கல்யாண வீடு சீரியலில் நடிக்க ஒப்பந்தமானவுடன் ZEE தொலைக்காட்சியிலிருந்து ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்து ஆடிஷனில் கலந்துக்கொண்டு தேர்வாகியும்கூட என்னால் அந்த சீரியலில் நடிக்க முடியவில்லை. காரணம் என்னை கல்யாணவீடு சீரியலில் தக்கவைத்துக்கொண்டதால் என்னால் அதில் நடிக்க முடியாமல் போயிற்று. அதன்பிறகு அந்த தொலைக்காட்சி சீரியல் வெகு பிரபலமாகி ஹிட்டானது. அதேபோன்று சன் தொலைக்காட்சியிலும் என்னை நடிக்கக் கூப்பிட்டு என்னால் போக முடியவில்லை. அந்த சீரியலும் பெரிய அளவில் ஹிட்டானது. அதேபோன்று இப்போது நான் கதாசிரியராக வேலை செய்திருக்கும் படத்தில் என்னுடைய எதிர்மறை சைக்கோ வில்லன் போன்ற கதாபாத்திரத்திற்கு ஏற்றவகையில் வசனம் எழுதி வைத்திருந்தேன். அனால் படப்பிடிப்பிற்கு இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பைக் விபத்தில் எனக்கு கைகளில் காயம் ஏற்பட்டது. கை முறிவு ஆனதால் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது. எனக்கு பதிலாக வேறொரு நடிகர் அந்த கதாபாத்திரத்தில் நடித்து அந்த கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்த்தார்.


சினிமாவில் செட்டிலாக நீண்டகாலமாகலாம் - பாப் சுரேஷ்

உங்களது வீட்டில் உங்களது நடிப்பை பார்த்துவிட்டு எப்படி பாராட்டுவார்கள்?

என் திருமணம் காதல் திருமணம் என்பதால் நான் திருமணத்திற்குள் நுழையும்போதே எல்லாவற்றையும் என் மனைவியிடத்தில் தெரிவித்துவிட்டுதான் நடிப்பிற்குள் வந்தேன். அதே போன்று சினிமாவில் நன்கு செட்டிலாக கால நேரம் ஆகும் என்பதும் என் மனைவிக்குத் தெரியும். சில நேரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம் வருமானம் கிடைக்கும். சில நேரங்களில் ஒன்றுமில்லாதிருக்கும் அந்த சூழலையும் அவள் நன்கு புரிந்து கொண்டிருக்கின்றாள். எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கின்றது. எனவே எனது நடிப்பு, இயக்கம் என எல்லாவற்றையும் என் மனைவி பாராட்டுவாள்.

Updated On 10 Jun 2025 10:46 AM IST
ராணி

ராணி

Next Story