இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

எத்தனையோ பேர் சினிமாவில் பெரிய ஹீரோ ஆகிவிட வேண்டும் என்ற கனவுகளோடு முயற்சி செய்யும் வேளையில், ஏதாவது ஒரு சிறிய ரோலில் கேமரா முன்பு வந்துவிடமாட்டோமா என ஏங்குவோரும் நிறையப்பேர் இருக்கிறார்கள். இப்போது டெக்னாலஜி அதிகமாகிவிட்டதால் எந்த துறையும் எட்டாத தூரத்தில் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்புவரை சினிமா என்பது நிறையப்பேரின் கனவு. அந்த கனவை நனவாக்க சொந்த ஊரைவிட்டு வீட்டிற்கு தெரியாமல் பொய் சொல்லிவிட்டு சென்னைக்கு ஓடிவந்தோர் எத்தனைப்பேர் இங்கு இருக்கிறார்கள். அதில் பலரின் வாழ்க்கை திசைமாறி போய்விட்டாலும் ஒருசிலர் தங்களது விடாமுயற்சியால் சாதித்து காட்டி இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர்தான் நடிகர் சென்ராயன். அவருடனான ஒரு சுவாரஸ்ய உரையாடல்...

சினிமாதான் வாழ்க்கை என நீங்க முடிவு பண்ணின தருணம் எது?

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பக்கத்திலிருக்கிற தர்மத்துப்பட்டி என்ற சின்ன கிராமம்தான் என்னுடைய ஊரு. தர்மத்துப்பட்டி பக்கத்திலிருக்கிற சில்லமரத்துப்பட்டி என்ற கிராமத்துல இரண்டு தியேட்டர்கள் இருக்கும். அம்மா, அப்பா ரெண்டு பேரும் வேலைக்கு போயிருவாங்க. நான் பள்ளிக்கூடத்துக்கு போறப்போ அப்பா செலவுக்கு கொடுக்குற காசுல நான் டிக்கெட் எடுத்துட்டு பக்கத்து ஊர் தியேட்டருக்கு போய் படம் பார்ப்பேன். அந்த தியேட்டர்கள்ல பெரும்பாலும் பழைய படங்களைத்தான் ரீரிலீஸ் செய்வாங்க. அப்படி எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள அதிகம் பார்த்து பார்த்து எனக்கும் நடிப்பு ஆசை வந்துருச்சு. பொங்கல், தீபாவளி சமயங்கள்ல எங்க ஊர்ல சின்ன சின்ன நாடகங்கள் போடுறப்போலாம் எனக்கு நடிக்கவே தெரியலேன்னாலும் மேடை ஏறிடுவேன். அப்போ ஊர்மக்கள் கொடுக்கிற கைதட்டு, பாராட்டு எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. ஒருகட்டத்துல ஊர்க்காரங்க நிறையப்பேர் ‘மெட்ராஸுக்கு போ, அங்க நடிக்கிறதுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்’ன்னு சொன்னாங்க. அவங்க பேச்சை கேட்டு நானும் மெட்ராஸுக்கு வந்தேன். அப்போ இருந்து 19 வருடங்களா இன்னும் போராடிட்டுத்தான் இருக்கேன். கூடிய சீக்கிரத்துல ஜெயிச்சுருவேன்.

ஒருமுறையாவது இவருடன் நடிச்சிடணும்னு நீங்க ஆசைப்படுற ஒரு நடிகர் யார்ன்னு சொல்லுங்க?

ரஜினி சார் மற்றும் கமல் சார்கூட நடிக்கணும்னு ஆசை இருக்கு. பிக் பாஸ்ல கலந்துகிட்டப்போ கமல் சார் என்னை தோளில் தட்டிக்கொடுத்து பாராட்டினாரு. ஆனா ரஜினி சாரை பார்த்து மட்டும்தான் இருக்கேன். லோகேஷ் கனகராஜ் சார் இயக்கிட்டு இருக்க படத்துல நடிக்க இப்போ பேச்சுவார்த்தை போய்ட்டு இருக்கு. சீக்கிரத்துல நடக்கும்னு நம்புறேன்.


'பொல்லாதவன்' படத்தில் சென்ராயனின் துணை வில்லன் கேரக்டர்

பிக் பாஸ்ல கலந்துக்குற வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைச்சுது?

பிக் பாஸ் ஒன்னிலேயே கலந்துக்க அழைப்பு வந்துச்சு. ஆனா எனக்கு அது என்ன மாதிரியான ஷோன்னு கேள்வி இருந்ததுனால நான் வரலன்னு சொல்லிட்டேன். எனக்கு பதிலாத்தான் பரணி போனார். அந்த ஷோவுடைய வெற்றியை பார்த்த அப்புறம் ரெண்டாவது சீசன்ல நானே கேட்டு கலந்துக்கிட்டேன். சிலர் பிக் பாஸ் போய்ட்டு வந்த அப்புறம் வாய்ப்புகள் கிடைக்கலேன்னு சொல்வாங்க. ஆனா எனக்கு அந்த நிகழ்ச்சி ஒரு மைல்கல்லாத்தான் அமைஞ்சுது. அதன்மூலமா கிடைச்ச பட வாய்ப்பாலதான் நான் வெளிநாட்டுக்கும் போய்ட்டு வந்தேன்.

என்ன மாதிரியான கேரக்டர்ல நடிக்கணும்னு உங்களுக்கு ஆசை இருக்கு?

எனக்கு காமெடியனா நடிக்கத்தான் ஆசை. வெற்றிமாறன் சார் முதல்ல என்னை ஒரு காமெடியனாத்தான் அறிமுகப்படுத்தினாரு. ‘ரௌத்திரம்’ படத்துலதான் வில்லன் ரோல் கிடைச்சுது. அதனால நல்ல பாராட்டும் கிடைச்சுது. இப்ப நான் ஒரு வில்லனா? காமெடியனா? இல்ல குணச்சித்திர நடிகனானு தெரியாது. ஆனா சென்ராயன் ஒரு டைரக்டரோட ஆர்டிஸ்ட்னு பெயர் வாங்கி இருக்கேன். இப்போதைக்கு அப்படியே நடிக்கப்போறேன். எனக்குன்னு ஒரு நேரம் வரப்போ காட்டுவேன்.

வெற்றிமாறன் பத்தி சொல்லுங்க...

ஒரே ஒரு வார்த்தைதான் சொல்லமுடியும். வெற்றிமாறன் சார் எனக்கு குலசாமி. அவர் இல்லேனா நான் இல்ல. ஆரம்பத்துல இதே சென்னைல நான் செருப்புகூட இல்லாம நடந்து போயிருக்கேன். முதல்ல அவர்தான் ஒரு ஷார்ட் ஃபிலிம் பார்த்து எனக்கு வாய்ப்பு கொடுத்தாரு. இப்ப வரைக்கும், ‘நான் உன்னை உருவாக்கிட்டேன். உனக்கு றெக்கை வந்திருச்சு. அதை வெச்சு நீ மேல பற. உனக்கு ஏதாவது தேவைன்னா என்னை வந்து பாரு’ன்னுதான் சொல்லிருக்காரு.


'ஒண்டிக்கட்ட’ படத்தில் நகைச்சுவை கலந்த குணச்சித்திர வேடத்தில் நடித்தபோது

உங்கள மாதிரி சினிமாதான் வாழ்க்கைன்னு நினைச்சு ஊர்ல இருந்து சென்னைக்கு வரவங்களுக்கு உங்களுடைய அட்வைஸ் என்ன?

இப்ப இருக்க பசங்க எல்லாரும் நல்லா படிச்சு இருக்காங்க. வீட்லயே நான் டைரக்ஷன் பண்ணப்போறேன் இல்ல நடிக்கப்போறேன்னு சொல்லிட்டு, அப்பா, அம்மாவோட க்ரெடிட் கார்டு, பைக், லேப்டாப்லாம் எடுத்துட்டுத்தான் வர்றாங்க. ஆனா நாங்க அப்படி கிடையாது. எங்க அப்பா, அம்மா தொழில் வேற. சினிமானு சொன்னாலே அது பணக்காரங்க பண்ணுற வேலைன்னு சொல்லிட்டு இருந்தாங்க. அதனாலேயே பொய் சொல்லிட்டு இங்க ஓடி வந்தோம். ஆனா இப்ப இருக்க பசங்க அறிவாளியா இருக்காங்க. அவங்களுக்கு நான் சொல்லுறது ஒன்னுதான். சைடுல ஏதாவது ஒரு பிசினஸ் இல்ல வேலைய வெச்சுக்கிட்டு ட்ரை பண்ணா ஈஸியா இருக்கும்.

சரத்குமார் சாரை பார்த்துதான் சினிமாவுக்கு வந்ததா கேள்விப்பட்டோமே!

சரத்குமார் சாரை பார்த்துதான் சினிமாவுக்கு வந்தேன்னு இல்ல. ஆனா அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். உடம்பை ரொம்ப நல்லா பராமரிப்பாரு. ஃபுட் இவ்ளோதான், டயட், ஜிம்முன்னு இருப்பாரு. அவரை மாதிரியே உடம்பை கொண்டுவரணும்னு நானும் ஆரம்பத்துல ஜிம்முக்கு போனேன். ஒரு வாரமா ஜிம்மை தேடி ஒருவழியா கண்டுபிடிச்சு ஜிம்மிலேயும் சேர்ந்துட்டேன். முதல் நாளே மாஸ்டர் சில எக்சர்ஸைசுகளை பண்ண சொன்னாரு. அவர் பத்து கவுண்ட்ஸ் பண்ண சொன்னா நான் இருபதா பண்ணினேன். வெளியே வந்தப்போ முன்னாடி சில டப்பாக்களை வெச்சிருந்தாங்க. அது என்னனு கேட்டதுக்கு புரோட்டீன் பவுடர்னு மாஸ்டர் சொன்னாரு. தினமும் பால்ல ஒரு ஸ்பூன் போட்டு கலக்கி குடிக்கணும்னு சொல்லிவிட்டாரு. அங்க இருந்ததுலயே பெரிய டப்பாவை காசு குடுத்து வாங்கிட்டு வந்தேன். ஆர்வத்தோட உச்சத்துல ஒரு ஸ்பூனுக்கு பதிலா 6 ஸ்பூன் போட்டு கலக்கி குடிச்சேன். அன்னைக்கு நைட்டே பயங்கரமான காய்ச்சல். பக்கத்துல இருந்த டம்ளரைக்கூட என்னால எடுக்க முடியல. ஒரு மாசம் கஷ்டப்பட்டு குணமானதுக்கு அப்புறம், ஜிம் போலாம்னு நினைச்ச எண்ணத்தையே கைவிட்டுட்டேன். அடுத்து டான்ஸ் கிளாஸ் போனேன். மாஸ்டர் ஒன்னு சொன்னா நான் ஒன்னு பண்ணுனேன். கிட்டத்தட்ட மூணு மாசம் கழிச்சு மாஸ்டர் என்னை கூப்பிட்டு நான் டான்ஸ்தான் சொல்லிக் கொடுக்கிறேன். ஆனா நீங்க வார்ம்-அப்தான் பண்றீங்கன்னு சொல்லிட்டார். எனக்கு டான்ஸும் செட் ஆகலன்னு நான் புரிஞ்சுகிட்டேன். அதுக்கு அப்புறம் டைரக்டர் சொல்ற கேரக்டர் மட்டும் பண்ணலாம், ஒரு ஸ்டேஜுக்கு அப்புறம் வேற ட்ரை பண்ணலாம்னு அப்படியே விட்டுட்டேன்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் முன்பு சென்ராயன் பேசிய நெகிழ்ச்சி தருணங்கள்

‘மூடர்கூடம்’ படம் பத்தி சொல்லுங்க...

‘மூடர்கூடம்’ படத்துல மொத்தம் நாலு ஹீரோ இருந்தோம். ஆனா எனக்குத்தான் நிறைய காமெடி டயலாக்ஸ், ரியாக்‌ஷன்ஸ் இருந்துச்சு. அதுக்கு டைரக்டர் நிறைய கஷ்டப்பட்டார். அதே அளவுக்கு என்னையும் வெச்சு செஞ்சுட்டார். எதுக்குத்தான் இந்த படத்துல கமிட்டானோம்னு அப்போ யோசிச்சேன். படம் வந்ததுக்கு அப்புறம் நிறைய பெரிய ஆட்கள் எல்லாம் போன் பண்ணி வாழ்த்துனாங்க. கன்னடம், தெலுங்கு திரைப்படங்கள்ல நடிக்கிற வாய்ப்புகூட வந்துச்சு. ‘சிறந்த நகைச்சுவை நடிகர்’ விருதும் அந்த படத்துக்கு கிடைச்சுது. ஷூட்டிங் அப்போ கோபப்பட்டு நான் போயிருந்தா இப்ப இருக்க வாழ்க்கை எனக்கு கிடைச்சு இருக்காது.

‘கூத்து பட்டறை’க்கு போன அனுபவம் இருக்கா?

ஆரம்பத்துல கூத்து பட்டறைக்கு போலாம்னு யோசிச்சு இருக்கேன். ஆனா அங்க ஃபீஸ் அதிகம். என்கிட்ட அவ்ளோ வசதி இல்ல. அந்த சமயத்துல கூத்து பட்டறைல இருந்து வந்த ஜெயராமன்னு ஒரு நண்பர் எனக்கு இருந்தார். அவர்தான் என்னோட வாத்தியார்னே சொல்லலாம். அவர் சொல்லி கொடுத்தது இப்ப வரைக்கும் உதவியா இருக்கு.

உங்களுடைய வாழ்க்கைல மறக்கமுடியாத ஒரு நபர் பத்தி சொல்லுங்க!

உனக்கு இது பண்றேன், அது பண்றேன்னு சொல்லிட்டு முன்னாடி நிறையப்பேர் வந்தாங்க. முதுகுல மட்டும் இல்ல, முகத்துலயும் மூக்குலயும் குத்திட்டு போய்ட்டாங்க. இப்ப ஒருத்தர் தெய்வம்போல கிடைச்சு இருக்காரு. நான் ஒரு மடங்கு பண்ணினா, எனக்கு நூறு மடங்கு பண்ணுவாரு. அவரை இங்க அறிமுகப்படுத்துறதுல எனக்கு மகிழ்ச்சி. அவர் பேரு காதர்.


’மூடர்கூடம்’ படத்தில் காமெடி ஹீரோவாக நடித்தபோது

குடும்பத்துடைய சப்போர்ட் எவ்வளவு இருக்கு?

என்னுடைய மனைவி எப்போமே சொல்வாங்க, ‘நீ கண்டிப்பா ஜெயிப்ப. ஆனா அதுக்கான நேரம் எப்போ வரும்னு தெரியாது. அதுவரைக்கும் உன்னையும் நம்ம குடும்பத்தையும் நீதான் பார்த்துக்கணும். என்னால முடிஞ்ச உதவியை செய்யுறேன்’னு சொன்னாங்க. இப்ப வரைக்கும் ஆதரவா இருக்காங்க.

அடுத்தடுத்த படங்கள் பத்தின அப்டேட்ஸ் கொடுக்க முடியுமா?

கிட்டத்தட்ட 16 படங்கள் வெயிட்டிங்ல இருக்கு. ஏப்ரல்ல ‘ஃபைண்டர்’ படம் ரிலீஸ் ஆச்சு. நல்ல வரவேற்பும் கிடைச்சுது. அடுத்து ‘லாபர்’, ‘குருவிக்காரன்’, ‘ரிவால்வர் ரீட்டா’, லாரன்ஸ் மாஸ்டர்கூட ‘புல்லட்’, ‘அக்னி சிறகுகள்’, பிரபுதேவா மாஸ்டர்கூட இன்னொரு படம்னு வரிசையா வரப்போகுது.

உங்களுக்கு பிடிச்ச சீன் எது?

‘திருவிளையாடல்’ படத்துல நாகேஷ் சார் நடிச்ச, எனக்கில்ல... எனக்கில்லன்ற சீன் ரொம்ப பிடிக்கும். நான் நடிச்சதுல எதுன்னு எப்படி சொல்லமுடியும்? ஒரு தாய்க்கு 12 குழந்தைகள் இருந்தா 12 பேரையுமேதான் பிடிக்கும். ஒருத்தரை மட்டும் எப்படி உயர்வா சொல்லுவாங்க? அதுமாதிரித்தான் சினிமாவும். நான் நடிச்ச எல்லா படங்களுமே சூப்பர் படங்கள்தான்.


’மெட்ரோ’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த சென்ராயன்

நீங்க நடிச்சதுலயே கடினமான ரோல் ஏதாவது இருக்கா?

பொதுவா எனக்கு காமெடி பண்ணுறது கஷ்டமா இருக்கும். டயலாக்ஸ் எல்லாம் கேட்டு, டைமிங்ல அதை நடிச்சு முடிக்கிறது கொஞ்சம் கஷ்டம். வில்லன்னா நிறுத்தி நிதானமா சீன் எடுப்பாங்க. அதே காமெடியனா பண்ணுறப்ப, மனசுல என்ன சோகம் இருந்தாலும் அதை வெளியே காட்டாம, டயலாக்கை கரெக்டா ரியக்‌ஷனோட பேசணும். அதுக்கு பழகிட்டு இருக்கேன்.

மூடர்கூடம் படம் மாதிரி ‘பாடி ஷேமிங்’ நிஜ வாழ்க்கையிலேயும் நடந்திருக்கும். அதை எப்படி ஃபேஸ் பண்ணீங்க?

நான் நடிகனாக ட்ரை பண்ணிட்டு இருந்தப்போ பஸ்லதான் போவேன். ஒருமுறை அப்படி போனப்போ ‘பிக்பாக்கெட் பிக்பாக்கெட்’ன்னு பஸ்ல ஒரு கலவர சத்தம். அங்க இருந்த ஒரு பொண்ணு நான்தான் திருடன்னு என்னை கைகாட்டிருச்சு. நானே காசு இல்லாம நின்னுட்டு இருந்தேன். அப்புறம் அங்க இருந்தவங்க என்னை செக் பண்ணிட்டு விட்டுட்டாங்க. சிலர் வேணும்னே பேசுவாங்க. ஆனா அவங்கள பார்க்குறது நமக்கு வேலை இல்ல. அந்த மாதிரியான ஆட்கள் அதே இடத்துலதான் இருப்பாங்க. நாம் ஜெயிக்குறதுக்கான வேலையை மட்டும் பார்க்கணும். முன்னேறி போயிட்டே இருப்போம்.

Updated On 13 May 2024 6:03 PM GMT
ராணி

ராணி

Next Story